பட மூலம், Selvaraja Rajasegar

முள்ளிவாய்க்காலில் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றோடு ஒரு தசாப்தமாகின்றது. 5 வருட போர் நிறைவின்போது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய நினைவுகள், போரின் பெயரால் இராணுவம் அபகரித்து வைத்திருக்கும் அம்பாறை பாணம, சாஸ்த்ரவல காணிகளுக்குச் சொந்தக்காரர்களான சிங்கள மக்களின் குரல்கள், போரில் அகப்பட்ட சிறுவர்களின் உளவியல், வடக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், அரசியல் கைதி நிமலரூபன் படுகொலை, சமூகத்தில் பெண் போராளிகள் புறக்கணிப்பு, நிரந்தர காயத்திற்கு உள்ளானவர்களின் நிலை, நிலக்கண்ணி வெடியில் சிக்குண்டு காலை இழந்தவர், வெடிபொருட்களோடு வாழும் மக்கள், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல், போர் வலயத்தில் 2009 மே மாதம் 15 வரை மக்களுக்கு செய்தி வழங்கிய பத்திரிகையாளர் சிவதர்ஷன், இயற்கை வளத்துக்காகப் போராடி படுகொலையான கேதீஸ்வரன், நுண்கடன் வழங்கும் நிதிநிறுவனங்களின் அத்துமீறலால் தற்கொலை வரை சென்ற பெண்கள் என மாற்றம் களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களைப் பதிவுசெய்திருந்தது. இந்தப் பிரச்சினைகள் கடந்த அரசாங்கத்தைப் போன்றில்லாமல் மாறிவந்த அரசாங்கமோ மக்களுடன் மென் தன்மையைக் கையாளுவதன் மூலம் மறக்கடிப்புச் செய்யும் அரசியலில் ஈடுபட்டுவருகிறது. மக்களுடைய பிரச்சினைகள் அதே புள்ளியிலேயே தேங்கி நிற்கின்றன.

இந்த 10 வருட காலப்பகுதியில் மாற்றம் வெளியிட்ட கட்டுரைகளுள் சிலவற்றை மீள பதிவு செய்கிறோம்.


5 வருட போர் நிறைவு தொடர்பாக “முடிவுறாத யுத்தம்” என்ற பெயரில் வெளியான சிறப்புப் பக்கம்


5 வருட போர் நிறைவில் வெளியான சிறப்பு கட்டுரைப் பகுதி


உறவுகளும் நினைவுகளும்

நான்:

“அம்மா, உங்க கிட்ட காணாமலாக்கப்பட்ட மகன்ட (மகள், கணவர், சகோதரர், பேரப்பிள்ளை) நினைவா ஏதாவது பொருள் இருக்கா? அவர் பயன்படுத்தின ஏதாவது?”

அம்மா (அப்பா, மனைவி, சகோதரி, அம்மம்மா):

“இருக்குதய்யா… பத்திரமா வச்சிருக்கன். அவன் காயப்பட்டு இரத்தமாகியிருந்த சேர்ட் மட்டும்தான் இருக்கு. அத கழுவி மடிச்சி வச்சிருக்கன்.”

“இருக்கு தம்பி. மூத்த தம்பி பாவிச்ச கெமரா ஒன்டு இருக்கு. சின்ன தம்பியின்ட சீப்பொன்டும், இவரின்ட சேர்ட்டும் இருக்கு தம்பி.”

360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்?”

அவரது வெள்ளைப் பையில் காணாமலாக்கப்பட்ட பேரனுடைய படமும் ஆவணங்களும் நிறைந்திருக்கின்றன, முறைப்பாடுகள், அழைப்புக் கடிதங்கள், அனுப்பிய கடிதங்கள் என்று பல்வேறுபட்ட கடிதங்கள் நிறைந்திருக்கின்றன. போராட்டம் நடத்தப்படும் அலுவலகம் எங்கும் அந்தப் பையுடனேயே அழைந்து திரிகிறார்.


அசையாமல் ஆக்கிரமிப்பில்

கனகராயன்குளத்திலிருந்து பரந்தன் வரைக்கும், அங்கிருந்து முல்லைத்தீவு வழியாக கொக்கிளாய் வரைக்கும் பிரதான பாதையின் அருகில், தமிழ் மக்களது சொந்தக் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளை Storymapஇன் ஊடாக Google Street View இன் உதவியுடன் கூகள் மெப்பில் படங்களுடன் பதிவினை மேற்கொண்டிருக்கிறோம்.


“யுத்தம் இல்லை, எமது நிலத்தில் எதற்கு பயிற்சித் தளம்”

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறிய வீடொன்றில் தனது பெரியம்மாவின் குடும்பத்துடன் தற்போது 3 பிள்ளைகள், கணவருடன் வாழ்ந்துவரும் 41 வயதான ரத்னமாலி, தனது பூர்வீக நிலத்தில் எவ்வாறு வாழ்ந்தார் என்பது குறித்தும், இப்போது நிலமின்றி, சொந்தங்கள் இன்றி, பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் இவ்வாறு தனது கதையைக் கூறுகிறார்.


ஆறு வருடங்கள் கடந்தும் ஆறாத காயங்கள்

ஆட்சிக்கு வந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்த ‘யுத்த வெற்றி தினம்’ என்ற நாமத்தில் கொண்டாடாமல் ‘படை வீரர் நினைவு தினம்’ என்ற பெயரில் மே 19 இராணுவ அணிவகுப்புடன் யுத்த வெற்றி தினமாக மாத்தறையில் நடத்தினர். இரண்டுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை. மறுபக்கம் யுத்தத்தை வெற்றிகொண்ட மஹிந்த ராஜபக்‌ஷ தனது பரிவாரங்களுடன் தனியாக தனது பழைய நாமத்துடன் கொண்டாடினார். இன்னொரு பக்கம் ஜாதிக ஹெல உறுமய.


“நாங்களும் இலங்கை பிரஜைகள்தான்”

“மாதம் 13,000 கட்டனும். இப்போ அரியஸா 60,000 கிட்ட வந்திருக்கு. சிலநேரம் அரியஸ்னால தூக்கினமோ தெரியாது. ஆட்டோ கைவிட்டுப் போயிருச்சென்டா வாழ்க்கையே சரி… அது இருக்கிறதாலதான் ஹொஸ்பிட்டலுக்கு எல்லாம் பொய்ட்டு வாறன். திருப்பி எடுக்கக்கூடிய வல்லமையும் எங்ககிட்ட இல்ல. சாப்பாடு இல்லையென்டா பிச்சை எடுத்தாவது சாப்பிடலாம். வருத்தமென்டா கிளிநொச்சிக்குதான் போகனும். ஆட்டோ இல்லாம கஷ்டம்.”


போர் முடிந்து 7 ஆண்டுகள்: திரும்பும் திசையெல்லாம் வெடிபொருட்கள்

“இதுல அன்றைக்கு ஒருக்கா குப்பைய கொழுத்தினம், அந்தா அவ்விடத்தில… ரெண்டு ஷெல் வெடிச்சது. நாங்க இந்த மரத்துக்கு கீழால ஒழிச்சி இருந்தனாங்கள். பிள்ளைகள் எல்லாம் ஸ்கூல் போயிட்டினம். நெருப்பு வச்சதனாலதான் ஷெல் வெடிச்சது. சர்ரென்று காட்டுப் பக்கம்தான் போனது. மூன்டாவதும் வெடிக்கப்போகும்போது இவர் அத எடுத்துட்டார்.”


அந்நாள் பெண் போராளிகள் இந்நாள்

“றோட்டால நான் கண்தெரியாத ஒருத்தர் போரென்டா கூடி நக்கலும் நையாண்டியும்தான். நான் போகேக்க, தூஷனத்தால கதைச்சுக் கொண்டு போவினம். அந்த தூஷனத்த சொல்ல கூட முடியாது. சில பேர், நாங்க பிரம்போட போகேக்க சில வார்த்தைகள பாவிப்பினம். குருடுகள், அதுகள் இதுகள் என கதைச்சிக்கிட்டு போவினம்” என்று கூறும் அவர், “ஆமிக்காரரும் இங்கால போறது வாரதுதானே, அவங்க எங்கள கண்டுட்டு பாவம் என்டு போவாங்க” என்றும் கூறுகிறார்.


நிமலரூபன்: சித்திரவதை மாரடைப்பான கதை

நிமலரூபன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன். சிலர் அவ்வாறே திருப்திகொள்கின்றனர். ஆனால், அவனும் ஒரு மனிதன், அவனுக்கென ஒரு வாழ்க்கை இருந்துள்ளது. அவன் மீது அன்புகாட்டவென உறவுகள் இருந்துள்ளன. இலங்கையில் வாழும் ஏனைய மக்களைப் போன்றே எதிர்கால வாழ்க்கை தொடர்பான எதிர்பார்ப்புகளை சுமந்துகொண்டு அதனை வெற்றிகொள்வதற்கு முயன்ற ஒருவன். சீமேந்து கற்களினூடாக, கிராமசேவகர் பரீட்சை, எழுதுவிளைஞர் பரீட்சை, தொழில்நுட்பக் கல்லூரியினூக நிமலரூபன் தன் வாழ்க்கையைத் தேடினான். சீட், மணல் மூலம் வாழ்க்கையைப் புதுப்பிக்க முயற்சித்தான்.


பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)

பொறுப்புக்கூறல் விடயத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கும் நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் அரசாங்கத்துக்கும் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. போர் முடிவுற்று 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறிவந்த நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசத்தை ஏமாற்றிவருகிறது. கடந்த மூன்று வருட காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக போர்க்குற்ற விசாரணை தொடர்பாக தெரிவித்து வருகின்ற கருத்துக்களை காலவரிசை (Timeline) ஊடாக பதிவுசெய்திருக்கிறோம்.


அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…

“என்ட புள்ளய தள்ளிக்கொண்டு போனானா? மண்வெட்டியால தூக்கி அள்ளிக்கொண்டு போனானா? காயப்பட காயப்பட எவ்வளவு பேர தூக்கினவங்க. ஆனா என்ட புள்ளய அப்படியே  தெருவில போட்டுட்டு வந்திட்டமே… நெஞ்சே வெடிக்குது… தூக்கியெண்டாலும் பார்க்காம வந்திட்டம். தூக்கியிருந்தாலும் மனம் ஆறியிருக்கும். பாவி நான்… புள்ளய இப்படி வளர்த்திட்டு நாய மாதிரி போட்டுட்டு வந்திட்டேனே… யாரும் என்ட புள்ளய தூக்க வரல்ல. நான் அந்த இடத்திலேயே செத்திருந்திருக்கலாம்.”


கேதீஸ்வரன்: 6 வருடங்களாக மறுக்கப்படும் நீதி

“10, 15 நிமிடங்கள் இருக்கும், அறையில் இருந்தவன் ஏதோ தேடிக் கொண்டிருந்தான். மேசையின் ஓரத்தில் இருந்த லெப்டொப் கீழே விழுந்து பாரிய சத்தமொன்று கேட்டது. இரண்டு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் சத்தமும் கேட்டது. என்ன நடந்தது என்றே தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.”


கொள்ளைப் போகும் மீன் வங்கி

2015ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் அனுமதியின்றி, தங்களின் பேச்சு நடத்தாமல் 32இலிருந்து 78ஆக தென்னிலங்கை மீனவர்களுக்கான அனுமதி பத்திரம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா குறிப்பிடுகிறார். ஆனால், தற்போது 500இற்கும் மேற்பட்ட அனுமதியற்ற படகுகள் வந்திருப்பதாகவும் கூறுகிறார்.


மிதிவெடி அச்சத்திலிருந்து மீளாத ரகுவேந்தன்

“வெயில், மழை, பதுங்கு குழி, வெட்டை வெளி, காடு, இடுப்பு வரை தண்ணீர், துப்பாக்கிச் சூடு, ஷெல் வீச்சு என கடந்து காப்பாற்றிய என் பிள்ளை இறந்துவிட்டது. காய்ச்சல் வந்திருந்த பிள்ளைக்கு எங்குபோய் மருந்து வாங்குவது? கொடுப்பதற்கு கைவசம் மருந்து எனும் பெயரில் ஒன்னுமே இருக்கவில்லை. எப்படியாவது காப்பாற்றி அந்தப் பக்கம் கொண்டு போய்ச் சேர்த்துவிடுவோம். அங்குபோய் வைத்தியம் பார்க்கலாம் என்று எண்ணியிருந்த எங்களுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிச்சம். யாரை நாங்கள் குற்றம் சொல்லவது?” 


கையேந்தும் கலாசாரத்தை தந்துவிட்டுப்போன 2009

“இதோ இந்த வீட்டில்தான்… இறக்கும்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறாள். அவளுக்கு பெரிய வயதும் இல்லை தம்பி, மூன்று பிள்ளைகளையும் எங்களால் வளர்க்க முடியாது என்பதால் இருவரை கிறிஸ்தவ தேவாலயமொன்றால் நடத்தப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்த்திருக்கிறோம். ஒருவரை மட்டும் நாங்கள் வளர்த்துவருகிறோம்.”