படம் மூலம், Getty Images
மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன, “மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம், காணாமல்போனோர் குறித்து ஆராய அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது, 70 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன, நட்டஈடு வழங்கும் அலுவலகம், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும், 2015ஆம் ஆண்டு ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” போன்ற உறுதிமொழிகளை வழங்கியிருந்தார் (21.3.2018).
இழப்பீடு வழங்கும் அலுவலகத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் நிறுவப்பட்டு அதன் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். அதில் பல குறைப்பாடுகள் இருப்பதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் கூறிவருகின்றார்கள். “OMP சட்டம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கத்தை தணிப்பதற்காக நிறைவேற்றப்பட்டிருப்பினும் அவர்களின் முறைப்பாட்டோடு தொடர்பான செயல்களில் ஈடுபட்டோரின் பெயர்களைக் கூட வெளிப்படுத்த அனுமதி வழங்காது அவர்களைப் பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட சட்டமாகவே தென்படுகின்றது” என்று காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழுக்கள் இரண்டுக்கு செயலாளராக இருந்த எம்.சி.எம். இக்பால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நிறைவேற்றப்படவிருக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அடக்குமுறை மேற்கொள்ள, அச்சுறுத்தல் விடுக்க, சித்திரவதை செய்ய வழங்கப்படவிருக்கும் அனுமதிப் பத்திரம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறிவருகின்றன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முன் விதிமுறைகளுக்கு ஏற்ப உள்ளனவா என்பதை ஆராய்வதற்கு சட்டமூலத்தை தங்களுடைய கவனத்திற்கு கொண்டுவர பிரதமர் நடவடிக்கை வேண்டும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகமவும் கூறியிருந்தார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று கூறினாலும், “வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்” என்ற விடயம் எந்த வகையிலும் தம்மைக் கட்டுப்படுத்தாது என இலங்கை அரசாங்கம், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக வெளிப்படுத்திவருகிறது. தாங்கள் உள்நாட்டு நீதிப் பொறிமுறை ஒன்றின் ஊடாகவே விசாரிக்கவிருப்பதாகவும், அதற்கேற்ற வகையில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் கூறிவருகிறார்கள்.
இலங்கையின் கட்டமைப்புகள், உண்மையைக் கண்டறிந்து நீதியை வழங்குவதற்கான எண்ணத்தைக் கொண்டிராதமையால், அமைகின்ற எந்தவொரு கலப்புப்பொறிமுறையும் எமக்கான நீதியைப் பெற்றுத் தராது என தமிழ் சிவில் சமூக அமைப்பினர் கூறிவருகிறார்கள். குறிப்பாக, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பு இலங்கை நீதித்துறையால் வழங்கப்பட்ட குமாரபுரம் மற்றும் ரவிராஜ் வழக்குகளின் தீர்ப்புகள், இலங்கை நீதித்துறையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழமையை உறுதிப்படுத்துகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
பொறுப்புக்கூறல் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் அரசாங்கத்துக்கும் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. போர் முடிவுற்று 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறிவந்த நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசத்தை ஏமாற்றிவருகிறது. கடந்த மூன்று வருட காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக போர்க்குற்ற விசாரணை தொடர்பாக தெரிவித்து வருகின்ற கருத்துக்களை காலவரிசை (Timeline) ஊடாக பதிவுசெய்திருக்கிறோம். கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும், இங்கு கிளிக் செய்வதன் ஊடாகவும் அதனைப் பார்க்கலாம்.