“நேற்று வேலை கொஞ்சம் கஷ்டம், வேலி கட்டுவதுதான். அங்கும் இங்குமாக நடந்துகொண்டே இருக்கவேண்டுமல்லவா. அதனால், அதோ அங்கு தெரிகிறதே, என்னுடைய கால்தான் அது, வெடித்துவிட்டது. இந்தக் கால்… பரவாயில்லை… என்ன கொஞ்சம் வலிக்கிறது, அவ்வளவுதான்…” – உறுதியான, காலுக்கு இதமான, பொருத்தமான கால் ஒன்று இல்லாத குறை கிருஷ்ணப்பிள்ளை ரகுவேந்தனின் குரலில் தெரிகிறது.

தோட்டம் துப்பரவாக்கும் கூலி வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ரகுவேந்தன் மிதிவெடியொன்றில் சிக்கி தனது வலது காலை இழந்திருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை அங்கவீனம் என்று யாரிடமும் கையேந்தாமல் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் தன்னால் முடிந்த கூலி வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.

இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் தங்களுடைய முன்னரங்குகளில் பாதுகாப்புக்காகவும் எதிரிகளை இலக்குவைத்தும் மிதிவெடிகளைப் புதைத்திருந்தார்கள். வடக்கில் – வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிழக்கில் – திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அநுராதபுரம், பொலனறுவை, புத்தளம் என அனைத்து பகுதிகளிலும் இரு தரப்பினராலும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. வடக்கு கிழக்கில் 1.5 மில்லியன் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கடந்த 2002ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்டிருந்ததாக 2012ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த தேசிய மிதிவெடிச் செயற்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் மொன்டி ரணதுங்க பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளால் எத்தனை மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியாததால் மிதிவெடி அகற்றும் பணி கடினமாகியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இருந்தபோதிலும் 2002ஆம் ஆண்டிலிருந்து 2017 டிசம்பர் இறுதி வரை 7,34669 மிதிவெடிகள் மீட்கப்பட்டிருப்பதாக தேசிய மிதிவெடிச் செயற்பாட்டு நிலையம் தெரிவிக்கிறது.

போர் முடிவடைந்து 9 வருடங்களை அண்மிக்கின்ற நிலையில் மிதிவெடி அபாயம் காரணமாக இன்னும் தங்களுடைய வயல் காணிகளுக்கு, விவசாய நிலங்களுக்கு, மீன்பிடி இறங்குதுறைகளுக்கு போக முடியாமல் மக்கள் உறவினர்களுடைய காணிகளிலும், கூலி வேலைகளையும் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் பிரிவு உட்பட மனிதாபிமான மிதிவெடி அகற்றும் நிறுவனங்களான ஹாலோ ட்ரஸ்ட் (HALO Trust), மெக் (Mines Advisory Group), டேஸ் (DASH), சார்ப் (SHARP) போன்றன மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டில் மிதிவெடி அபாயமற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய மிதிவெடிச் செயற்பாட்டு இயக்கம் தெரிவிக்கிறது.

“நான் காயமடைந்ததன் பின்னர் எங்கும் நடமாடுவதற்கு பயமாகத்தான் இருந்தது. இப்போது அந்தப் பயம் கொஞ்சம் அகலத் தொடங்கினாலும் நிலத்தைக் கொத்தும்போது ஏதாவது வித்தியாசமான சத்தமொன்று கேட்டுவிட்டால் ஒரு கணம் அப்படியே இதயம் நின்றுவிடும். நடப்பது நடக்கட்டும் என்று மறுகனமே வேலையைப் பார்ப்பேன். பிள்ளைகள் சாப்பிட்டாக வேண்டுமே…” என்கிறார் ரகுவேந்தன்.

கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் நேரடியாக SHORTHAND ஊடாகவும் கட்டுரையை மேலும் படிக்கலாம்.

ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, “போர் முடிந்து 7 ஆண்டுகள்: திரும்பும் திசையெல்லாம் வெடிபொருட்கள்