17. போர்குற்றங்களுக்கோ, மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்கோ, சித்திரவதை, காணாமலாக்கப்படல், பாலியல் வல்லுறவு போன்ற கூட்டு மொத்தமான மனித உரிமை மீறல்களுக்கோ பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது.

6.13  போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, திட்டமிட்டுக் காணாமலாக்கல், வன்புணர்ச்சி போன்ற தீவிர மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கான மன்னிப்பு சட்டவிரோதமானதும் ஏற்றுக்கொள்ளப்படாதவையுமாகும்.

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனை செயலணி வெளியிட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள 2 பரிந்துரைகளே மேலே காணப்படுகின்றன.

2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரணை அளிக்கப்பட்ட, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காகப் பிரேரிக்கப்பட்ட பொறிமுறைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு 2016ஆம் ஆண்டு ஜனவரி பிற்பகுதியில் சிவில் சமூகத்தைச் சேர்ந்த 11 பேரை உள்ளடக்கிய கலந்தாலோசனைக்கான செயலணி இலங்கை பிரதமரால் நியமிக்கப்பட்டது. இந்தச் செயலணியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை 2017 ஜனவரி 3ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் கையளிக்கப்பட்டது.

மனித உரிமை மீறல் விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடங்கிய கலப்பு நீதிமன்றமே பொருத்தமானது என்று செயலணி அதில் குறிப்பிட்டிருந்தது.

தாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தனர். அத்துடன், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கும், போர் வெற்றி வீரர்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதி, நல்லிணக்கம் மற்றும் இந்த ஆட்சியிலாவது நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த பாதிக்கப்பட்டவர்களின் கரிசனைகளை இலங்கை அரசாங்கம்​ உடனடியாகவே புறந்தள்ளியிருக்கிறது.

உள்நாட்டு நீதிப் பொறிமுறைக்குள் காணாமல்போன தனது உறவுக்கு, கொலைசெய்யப்பட்ட தனது உறவுக்கு இனியெப்போதும் நீதி கிடைக்கப்போவதில்லை என்று பெரும்பாலானவர்கள் இறுதிக்காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நடத்தி என்ன நடக்கப்போகிறது என்ற மனநிலை அவர்களிடம் எழுமளவுக்கு நல்லாட்சி பிரதி உபகாரம் செய்துகொண்டிருக்கிறது.

இவ்வாறான மனநிலையில் இருக்கும் பலரில் கேதீஸ்வரனின் தாயாரும் ஒருவர். யாரிடம் போய் கேட்பது நீதியை? அப்படிக் கேட்கப் போனால் இவனுக்கும் (இளைய மகன்) ஏதாவது நடந்துவிட்டால்…? – கேதீஸ்வரின் தாயார் கேட்கும் இதே கேள்விகள்தான் உறவுகளின் நினைவுகளை நெருப்பாய் சுமந்திருப்பவர்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

6 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட கேதீஸ்வரன் தேவராஜா பற்றி அறிந்து கொள்ள யாழ்ப்பாணம் குடத்தனைப் பகுதிக்குச் சென்றேன். குடத்தனை, முடிவில்லாத வெள்ளை மணலைக் கொண்ட பாலை வனம். பார்க்க அழகாக இருக்கும் இந்த வெள்ளை மணல் தனக்காகப் போராடிய கேதீஸ்வரனை இறுக்கப் பிடித்து வைத்திருக்கிறது, அவனது எச்சத்தையும் அள்ளிக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில்.

###

Adobe Spark இன் ஊடாக தாயாரிக்கப்பட்டுள்ள கேதீஸ்வரன் தேவராஜா தொடர்பான பதிவை இந்த லிங்கை கிளிக் செய்வதன் ஊடாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.

கேதீஸ்வரன்