கடந்த தசாப்தத்தின் கடைசி வருடத்தை கடந்திருக்கிறோம். இந்த கடைசி வருடத்தில் இலங்கை பல திருப்புமுனையான சம்பவங்களைச் சந்தித்திருக்கிறது. திரும்பிப் பார்ப்போமானால், முதலிம் நமது நினைவுக்கு வருவது ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட இந்தக் கொடூர தாக்குதலில் 200இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல நூற்றுக் கணக்காணவர்கள் காயமடைந்தார்கள். இந்தச் சம்பவத்தின் பின்னர் சிறுபான்மையினருக்கு எதிராக நாட்டின் சில பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட இனக்கலவரங்களினால் முன்னெப்போதுமில்லாத அச்சவுணர்வை முஸ்லிம் சமூகத்தினர், அகதிகள் எதிர்கொண்டார்கள். குறிப்பாக, முஸ்லிம் பெண்களின் ஆடை அணியும் உரிமை மீது அரசாங்கம் விதித்திருந்த தடையினால் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாதளவுக்கு வீடுகளுக்குள் முடங்கியிருந்தார்கள்.
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 6 மாதங்கள் நிறைவுறும்போது அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையும் வெளியானது. “2019 இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலையும் 2020இல் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையும் நோக்காகக் கொண்டு வன்முறைச் சம்பவங்கள் மற்றும் இனக்கலவரங்கள் தூண்டப்பட்டனவா?” என்று அறிக்கையின் 80ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு உள்ளடக்கப்பட்டிருந்த அதேநேரம், நவம்பர் மாதம் சிங்கள பெளத்த அடிப்படைவாதத்தை மூலதனமாகக் கொண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுகிறார்.
2019, போர் நிறைவுற்று ஒரு தசாப்த நிறைவையும் சந்தித்திருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு மாதம் கழித்து மே 18 நினைவுகூரப்பட்டது. ஆயுத ரீதியாக போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டாலும் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் போர் இடம்பெறுவதை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆயுதச் சிதைவுகளை உடலில் சுமந்த வண்ணம் தினமும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரமாக கொண்டு சென்று கையால் ஒப்படைத்த பிள்ளைகளுக்கு, குடும்பத்தினருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் 1000 நாட்களுக்கு மேலாக மக்கள் இன்னும் வீதிகளில் போராடி வருகிறார்கள்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கை தொடர்பாகவும் மாற்றம் கவனம் செலுத்தியிருந்தது.
“நாங்கள் என்னவோ எஸ்டேட்டுக்கு, கம்பனிக்கு உழைச்சு குடுப்பது போலத்தான் இருக்கு. நாங்க செய்யும் வேலைக்கு 1000 ரூபா கூட போதாது. ஆனாலும், இப்போதைக்கு 1000 ரூபா கிடைச்சாலே போதும்” என்று கூறிய சரஸ்வதிக்கள் ஏமாற்றப்பட்டதும் 2019ஆம் ஆண்டில்தான். 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடாத்தி வந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 700 ரூபா அடிப்படை சம்பளத்தை நிர்ணயித்து அப்போதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதேவேளை, கிட்டத்தட்ட ஒரு வருட பிரயத்தனத்தின் பலனாக, 2019 மார்ச், பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கும் சந்தா பணத்தொகையை தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி வெளிக்கொணர முடிந்தது. அவை கொண்டிருக்கும் அங்கத்தவர்கள் எண்ணிக்கை, ஒருவரிடம் பெற்றுக் கொள்ளும் சந்தா பணம் என்பவற்றையும் வெளிப்படுத்த முடிந்தது.
2019ஆம் ஆண்டு மாற்றம் தளத்தில் வெளியான 10 கட்டுரைகளை தேர்ந்தெடுத்து கீழே தந்திருக்கிறோம்.
- போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள் – 30 வருடங்களாக நீடித்த கொடூர போரினுள் சிக்குண்டு தினம் தினம் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள். காயப்பட்ட நேரமே செத்திருந்தால் இந்த நரக வேதனையை ஒவ்வொரு நாளும் அனுபவிக்க நேர்ந்திருக்காதே என்று ஒவ்வொரு நாளும் அவஸ்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் இவர்கள். அவர்கள் பற்றிய பதிவிது.
- ஒரு கேள்வி, இரு மனிதர்கள், ஒரே வலி – 30 வருடங்களுக்கு முன்னர் இராணுவம் கொண்டு சென்ற தங்களுடைய உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் இன்னும் அவர்களது வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள தாய்மார்களின், மனைவிகளின், பிள்ளைகளின், சகோதர சகோதரிகளின் வலியுணர்வுக்கும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த உறவுகளின் வலியுணர்வுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பதிவுசெய்த புகைப்படக் கட்டுரை.
- மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக – மரணதண்டனை மீண்டும் அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்திருந்த தீர்மானத்திற்கு எதிராக கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன முன்வைத்த கருத்துகள்.
- சரஸ்வதியின் ஒருநாள் கதை (VIDEO) – மாதா மாதம் தவறாமல் சந்தாப் பணம் செலுத்தும் தொழிற்சங்கங்கள் நிச்சயமாக 1000 ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் சரஸ்வதி பற்றிய பதிவு.
- நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை – உண்மையைக் கண்டறிந்து கொள்வதற்கான உரிமையை சம்பந்தப்பட்டவர்களுக்கு மறுத்திருக்கும் திருகோணமலை மாணவர் ஐவர் படுகொலை பற்றிய பதிவு.
- முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட சீர்திருத்தத்தை ACJU தடுப்பது ஏன்? – முஸ்லிம் தனியார் சட்டத்தில் பல வருடங்களாக நடைபெற்று வருகின்ற சீர்திருத்த முன்னெடுப்புக்களை அ.இ.ஜ. உலமா திசைமாற்றுவதற்கான முயற்சிகளை பல தீவீரவாத பிற்போக்கு சிந்தனையுடைய அமைப்புக்களுடன் சேர்ந்து செய்கின்றமை தொடர்பான பதிவு.
- RTI: அம்பலமானது தொழிற்சங்கங்களின் சந்தா விவரம், கணக்கறிக்கையை தரமறுத்த தொழில் திணைக்களம் – இதுவரை வெளித் தெரியாமல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாப் பணம் தொடர்பான தகவல்கள் அம்பலமாகிய கட்டுரை.
- பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா, நாளை? – இஸ்லாத்தின் பெயரில் பயங்கரவாதிகள் செய்த பயங்கரவாத நடவடிக்கையின் காரணமாக ஏன் அமைதியான முறையிலான முஸ்லிம் பெண்களது தனிப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு அல்லது விட்டுக் கொடுப்புகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்பது தொடர்பாக ஆராயும் கட்டுரை.
- திகனை கலவரம்: ஒரு வருடம் (VIDEO) – கண்டி திகனை பகுதியில் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட ஜெய்னுடீன் மொஹம்மட் நியாஸ் அன்று நடந்தவற்றை விவரிக்கிறார்.
- அருட்தந்தை மில்லரை நினைவுகூருதல் – அருட்தந்தை மில்லர் பற்றி நினைவுப் பகிர்வு.