பட மூலம், Groundviews

மட்டக்களப்பின் புனித மைக்கலில் உள்ள அமெரிக்க யேசு சபை மிசனரியில் பணியாற்றுவதற்காக 1940களில் இலங்கை வந்த அமெரிக்கன் மிசனரியைச் சேர்ந்தவர்களில் ஒருவரே அருட்தந்தை ஹரி மில்லர். அந்த குழுவைச் சேர்ந்தவர்களில் இறுதியாக உயிர் வாழ்ந்தவரான அவர் டிசம்பர் 31 திகதி மட்டக்களப்பில் காலமானார். இந்த மிசனரியைச் சேர்ந்தவர்கள் யுத்தகாலத்தில் மட்டக்களப்பு மக்களிற்கு மிகவும் பலம் சேர்த்தார்கள். 1990இல் விடுதலைப் புலிகள் தமிழ் – முஸ்லிம் மோதல்களை ஊக்குவித்தவேளை – அரசாங்கமும் அதனால் பயன் பெறநினைத்த காலப்பகுதியில் அருட்தந்தை ஈயுஜினே ஹெபேர்ட் காணாமல்போனார் (ஹெபேர்ட்டின் இறுதிக்காலங்கள்- UTHR (J) அறிக்கை3). உண்மையில் இவ்வாறான மோதல்களை 1985இல் முதலில் ஊக்குவித்தது ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கமே. கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் காடையர்களை காத்தான்குடிக்கு கொண்டு சென்று வன்முறைகளில் அந்த அரசாங்கம் ஈடுபடுத்தியது.

தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும் தாங்கள் விரும்பாமலேயே மோதலில் சிக்கிக்கொண்ட முஸ்லிம் மக்கள் குறித்து அருட்தந்தை மில்லர் அனுதாபம் கொண்டிருந்தார், அவர்கள் விடயத்தில் நேர்மையாக நடந்துகொண்டார். முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை அருட்தந்தை மில்லர் கேள்விப்பட்டிருப்பார். ஆனால், அவர் தனது நடுநிலைமையை கைவிடவில்லை. விடுதலைப் புலிகளுடைய ஆதரவாளர்களின் போலித்தனத்தை அவர் நேரடியாக பார்த்ததுடன் அவர்களின் குற்றங்களிற்காக அவர்களை விசாரணை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தார். அரச படையினர் தொடர்பாகவும் அவர் தொடர்ச்சியாக இதேநிலைப்பாட்டை பின்பற்றியதுடன் அவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இறுதிமுயற்சி செய்தார். எனினும், அது வெற்றியளிக்கவில்லை (UTHR (J)அறிக்கைகள் 7 மற்றும் 8 பார்க்க). சட்டத்தின் ஆட்சியின்றி சமாதானம் இல்லை என அவர் உறுதியாக நம்பினார்.

ராஜன் ஹூலின் ‘முறிந்த பனை’ மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களுடன் 1990களில் UTHR ஆரிற்கு காணப்பட்ட தொடர்புகளை பின்வருமாறு விபரிக்கின்றது

1990இன் பிற்பகுதியில் மட்டக்களப்பு பல படுகொலைகளையும் காணாமல் ஆக்கப்படுதலையும் எதிர்கொண்டது. 1991 பெப்ரவரியிலேயே எங்களால் மட்டக்களப்பிற்குச் செல்ல முடிந்தது.

மட்டக்களப்பு பல்கலைகழகம் மீண்டும் இயங்க ஆரம்பித்திருந்தது. எங்களை வரவேற்ற ரபீந்திரநாத்தும் ஜெயசிங்கமும் சிறீதரனுடன் ஒரே காலப்பகுதியில் பேராதனை பல்கலைகழகத்தில் கல்விபயின்றவர்கள். இவர்கள் 1989இல் இடம்பெற்ற ராஜனி திராணகம நினைவுநிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ரபீந்திரநாத் பின்னர் துணைவேந்தராக பதவி வகித்தவர், 2006ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கருணா குழுவினால் கடத்தப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார். நாங்கள் 1991ஆம் ஆண்டு சந்தித்தவர்களிடம் 1990 செப்டம்பர் ஐந்தாம் திகதி கிழக்கு பல்கலைகழக வளாகத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 159 அகதிகள் குறித்த விபரங்கள் இருந்தன. அவர்களின் உதவியுடன் மட்டக்களப்பின் பல பகுதிகளையும் சேர்ந்த பல்கலைகழக மாணவர்களுடன் நாங்கள் பேசினோம். அன்சார் (நான் பெயரை சரியாக சொல்கிறேன் என நினைக்கின்றேன்) என்ற திறமை மிக்க கணிதப்பாட மாணவன்  எங்களை காத்தான்குடி மசூதிகளில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இரு படுகொலைகள் காண்பிக்க அழைத்துச்சென்றான். கொல்லப்பட்டவர்களின் மனைவிகளையும் நாங்கள் பின்னர் சந்தித்தோம்.

மெதடிஸ்ட் தேவாலயத்தை சேர்ந்த அருட்தந்தை அருள்ராஜ் நாங்கள் ஏறாவூரிற்கு செல்வதற்கு உதவினார். அங்கும் படுகொலைகள் இடம்பெற்றிருந்தன. இதன் பின்னர் இராணுவம் முஸ்லிம் ஊர்காவல் படையினரைப் பயன்படுத்தி தமிழர்களைப் படுகொலை செய்தது. (அறிக்கை 07 பார்க்க)

மீண்டும் நாங்கள் 1991 ஜூலை மாதம் மட்டக்களப்பிற்கு சென்றவேளை மட்டக்களப்பு சமாதான குழுவின் அருட்தந்தை ஹரி மில்லரைச் சந்தித்தோம். காணாமலாக்கப்பட்டவர்களை பதிவு செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சியில் மட்டக்களப்பு சமாதான குழுவினர் ஈடுபட்டுவந்தனர். மேலும், கிழக்கு பல்கலைக்கழக படுகொலைகளுக்குப் பின்னர் இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலைகளிற்கு நீதி கிடைக்கச்செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் – சத்துருக்கொண்டானில் 200 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தப்படுகொலைகளின் போது உயிர் தப்பிய ஒரேயொரு நபர் மட்டக்களப்பு சமாதான குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். விசாரணைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் சர்வதேச மன்னிப்புச்சபைக்கு வாக்குறுதியளித்தது. எனினும், இராணுவம் பின்னர் புல்டோசர்களை அனுப்பி ஆதாரங்களை அழித்தது.

நாங்கள் பின்னர் அருட்தந்தை யோசப்மேரி, அவரது இரட்டை சகோதரரான அல்பொன்சே மேரி ஆகியவர்களுடன் நண்பர்களானோம். அவர்கள் சமஸ்டிக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள். அவர்கள் மட்டக்களப்பு கிராமங்களின் மூலைமுடுக்கெல்லாம் அறிந்து வைத்திருந்தனர். அந்தப் பகுதிகள் அவர்களுடன் ஆழமாக பின்னிபிணைந்திருந்தன. தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்த விடயத்தில் மிகவும் உறுதியானவர்களாக காணப்பட்ட அவர்கள் விடுதலைப் புலிகளின் தவறுகள் வெளிக்கொணரப்படவேண்டும் என விரும்பினார்கள்.

1991இல் இராணுவம் கொக்கட்டிச்சோலையின் மகிழடித்தீவில் ஒரு படுகொலையில் ஈடுபட்டது. அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் காணப்பட்ட போதிலும் நாங்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு அப்பகுதிக்குச் செல்வது பயனளிக்க கூடிய விடயம் என அருட்தந்தை ஜோசப் மேரி எண்ணினார், அவருடன் இணைந்து நாங்கள் மேற்கொண்ட முதல் பயணம் இது.

1991 ஜூன் 2ம் திகதி அப்பகுதிக்குள் ஊருடுவிய விடுதலைப் புலிகள் படகுத்துறையிலிருந்து இராணுவத்தினருக்கு உணவுவிநியோகம் செய்யும் டிரக்டர் மீது தாக்குதலை மேற்கொண்டனர், இதில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் பின்னர் குறிப்பிட்ட பகுதிக்குள் பெருமளவில் நுழைந்த இராணுவத்தினர் நூற்றுக்கும் அதிகமானவர்களை படுகொலை செய்ததுடன், ஆறு பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதுடன், பல வீடுகளை சூறையாடி தீக்கிரையாக்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். ஜோசப் மேரி எங்களை அந்த கிராமத்தின் தலைவரான வீரசிங்கம் என்பவரிடம் அழைத்து சென்றார். அவரிற்கு அங்கு என்ன நடைபெற்றது என்பது குறித்த விபரங்கள் தெரிந்திருந்தன. அந்தச் சம்பவங்கள் எவ்வாறு ஆரம்பித்தன என்பதை வெளிப்படையாக முழுமையாக தெரிவிக்காத வீரசிங்கம் யார் இதனைச் செய்தார்கள் எனத் தெரியவில்லை, பலர் சீருடையில் நடமாடுவதால் யார் இதனைச் செய்தார்கள் என தெரிவிக்க முடியவில்லை என குறிப்பிட்டார். அவ்வேளை மதகுரு என்ற அடிப்படையில் ஜோசப் மேரிக்கு உள்ள அதிகாரத்தை நாங்கள் நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வீரசிங்கம் உண்மையை தெரிவிக்காமல் மழுப்புகின்றார் என்பதை உணர்ந்த அருட்தந்தை வீரசிங்கம் உண்மையை சொல் என கண்டிப்பான குரலில் உத்தரவிட்டார். வீரசிங்கத்தின் சொற்திறன் அத்துடன் இடைநடுவில் நின்றது. அதன் பின்னர் வீரசிங்கம் அமைதியான தவறுக்கு வருந்துகின்ற குரலில் இவ்வாறு தெரிவித்தார்,

விடுதலைப்புலிகளே இராணுவத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர், அதன் பின்னர் அவர்கள் இங்கிருந்து தப்பியோடி தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர், அவர்கள் இரண்டு தடைவை துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டிருந்தால் இராணுவத்தினர் வந்திருக்கமாட்டார்கள், எனினும், அடுத்த நாள் விடுதலைப் புலிகள் மீண்டும் வந்து வீடியோக்களை எடுத்தனர் என அவர் தெரிவித்தார்.

இந்தப் படுகொலைக்கான காரணமாக விடுதலைப் போராட்டம் என்ற ஒற்றை அம்சம் காணப்பட்டது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்களைக் கொலைசெய்வது  கொள்கையடிப்படையில் ஏற்றுக்கொள்ளகூடிய விடயம். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இவ்வாறான கொலைகள் காரணமாக அவர்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், பிரச்சாரங்களிற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். அந்தப் பகுதியில் சமாதான குழுவினர் எவற்றை பார்த்திருப்பார்கள் என இலகுவான முடிவிற்கு வரமுடியும். அவர்கள் படுகொலைக்கான ஆதாரங்களை பார்த்திருப்பார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் செய்தமைக்கான ஆதாரங்களை அவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்காது.

அந்தப் பகுதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரியொருவர் போதிய பயிற்சியற்ற கிராமத்து இளைஞர்கள் காரணமாகவே அந்தப் படுகொலைகள் இடம்பெற்றன என எங்களுக்குத் தெரிவித்தார். ஆனால், இந்தப் படுகொலைகள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டன என்பதே உண்மை. தாடி வைத்திருந்த, கழுத்தில் சிவப்பு துணி கட்டியிருந்தவர்கள் இதனைச்  செய்தார்கள். இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட பத்து புளொட் உறுப்பினர்களிடமிருந்து முன்கூட்டியே ஆயுதங்கள் அகற்றப்பட்டன (அறிக்கை 8 பார்க்க).

பின்னர் நாங்கள் மீண்டுமொருமுறை அங்கு சென்றவேளை அருட்தந்தை மில்லர், சில தமிழ் மதகுருமார் எங்கள் அறிக்கை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர், அதற்கான காரணங்களை கோரியுள்ளனர் எனத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தொடர்பில் கிறிஸ்தவ தேவாலயம் பிளவுபட்டுள்ளமை எங்களிற்குத்  தெரியும். இதன் காரணமாக விடுதலைப் புலிகளிற்கு ஆதரவளித்த சில மதகுருமார்கள் தாங்களே கிறிஸ்தவ தேவலாயம் போன்று, மக்களின் சார்பில் பேசுவது போன்று பேசினார்கள். நான் தெரிவித்த அனைத்தும் எங்கள் அறிக்கையில் துல்லியமாக சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர்களுக்குத் தெரிவித்ததாக அருட்தந்தை மில்லர் தெரிவித்தார். எங்களை போலவே அவரும் விடுதலைப் புலிகள் குறித்து சில கருத்துக்களை கொண்டிருந்தார். எங்களுடனான அவருடைய தொடர்புகள் தொடர்ந்தன. நாங்கள் ஒரே மனோநிலையில் இருப்பது குறித்து மகிழ்ச்சிகொண்டிருந்தோம்.

மட்டக்களப்பின் சமாதான குழு படையினரின் அட்டுழியங்கள் குறித்து பெருமளவு தகவல்களை சேகரித்திருந்தது. அம்பாறை குறித்த பெருமளவு தகவல்களை பெறுவதும் சாத்தியமாகியிருக்கும். எனினும், 1995 இல் சந்திரிகா குமாரதுங்க நியமித்த விசாரணை ஆணைக்குழு உண்மைகளை அம்பலப்படுத்துவதற்கு எதனையும் செய்யவில்லை. சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த மேஜர் ஜெனரல் அல்லது பிரிகேடியர் தர அதிகாரி எவரும் விசாரிக்கப்படவில்லை. அரச படையினரால் இழைக்கப்பட்ட பெருமளவு குற்றங்கள் குறித்து பக்கச்சார்ப்பற்ற முறையில் விசாரணைகளை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்தின் திறன் குறித்து நம்பிக்கையீனமே ஏற்படுகின்றது.

எங்கள் விடுதலைப் போராட்டம் பொதுமக்களின் உயிர்கள் குறித்து அக்கறையை வெளிப்படுத்தியிருந்தால், அவர்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்தியிருந்தால் நாங்கள் இராணுவத்தைச் சேர்ந்த ஓரிரு அதிகாரிகளின் நடவடிக்கைகளை பாராட்டவேண்டிய நிலையேற்பட்டிருக்காது என சிறிதரன் ஒரு முறை பதில் அளிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஆனால், எங்கள் போராட்டம் ஒழுக்காற்று செயற்பாடுகளை பொறுத்தவரை மிகவும் கீழ்நிலைக்கு இறங்கியிருந்தது, பெரும் பழிவாங்கலை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களை திட்டமிட்டு  முன்னெடுப்பதன் மூலம் பிரச்சார வெற்றி மற்றும் தங்கள் அமைப்பிற்கு மேலும் உறுப்பினர்களை உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் இடம்பெற்றன. மக்களைப் பாதுகாப்பவர்கள் என தங்களை தாங்களே அழைத்துக்கொண்டவர்கள் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை தூண்டுதலிற்கு உட்படாமல் உயிர்களை பாதுகாக்கக்கூடிய ஒரு சில அதிகாரிகளே எங்களிற்கான ஒரேயொரு பாதுகாப்பாக காணப்பட்டனர். நாங்கள் அவ்வாறான நடவடிக்கைகளை பாராட்டுவதுடன் ஏனைய அதிகாரிகளிடமிருந்து அவ்வாறான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே சரியானதாகும்.

“Remembering Fr. Miller” என்ற தலைப்பில் கலாநிதி ராஜன் ஹூல் கொழும்பு ரெலிகிராப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.