பட மூலம், The Morning
நாங்கள் இப்பொழுது நவம்பர் 16ஆம் திகதி நாட்டில் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் புயல் வேகத்தில் இடம்பெற்றுவரும் ஒரு கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கின்றோம். இந்தத் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், நாடெங்கிலும் தேர்தல் களம் அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலவரங்களுக்கு மத்தியிலேயே அழிவுகரமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஆறு மாத கால நிறைவை நாங்கள் அண்மையில் நினைவுகூர்ந்தோம். இத்தாக்குதல்களின் போது 250க்கு மேற்பட்ட உயிர்கள் பழியானதுடன், அதிலும் பார்க்க அதிக எண்ணிக்கையினர் காயமடைந்திருந்தார்கள். அதன் விளைவாக, நாடெங்கிலும் பரவலான விதத்தில் இனக்கலவரங்களும், மதக்கலவரங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இந்த ஆறு மாத கால நிறைவு தினத்திற்கு இரு தினங்களுக்குப் பின்னர், இந்த விடயங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு, விடயங்களை கண்டறிவதற்கென நியமனம் செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு கடும் விமர்சனங்களுடன் கூடிய அதன் 272 பக்க அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட அதே தினத்தன்று எனது டுவிட்டர் பக்கத்தில் இந்த முடிவுகள் தொடர்பாக எனது கருத்துக்களை முன்வைத்திருந்தேன். இந்தக் கட்டுரை அங்கு குறிப்பிடப்பட்டிருந்த ஒரு சில இழைகளிலிருந்து கட்டியெழுப்பப்படுகின்றது. மேலும், நாட்டின் கள யதார்த்த நிலைமைகள் பல்வேறு விதமான சிக்கல்களையும், சவால்களையும் எடுத்துக் காட்டி வரும் வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் நான் அண்மையில் மேற்கொண்ட ஒரு விஜயத்தின் மூலம் இக்கட்டுரைக்கான மேலதிக தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முடிவுகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு வழிகோலிய பல்வேறு காரணிகளை நாடாளுமன்ற தெரிவுக்குழு மிகவும் விரிவான விதத்தில் கலந்துரையாடுகின்றது. மேலும், அதற்குப் பல்வேறு தரப்பினர் பொறுப்பேற்க வேண்டியவர்களாக இருந்து வருகின்றார்கள் என்பதனையும் அது குறிப்பிடுகின்றது. தனிநபர்களின் பெயர்களை குறிப்பிடுவதன் மூலம் மட்டும் நின்றுவிட்டமை குறித்து சிலர் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள். ஆனால், இங்கு நாங்கள் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, இது வெறுமனே ஒரு நாடாளுமன்ற செயன்முறையாகவே இருந்து வருகின்றது; ஒரு குற்றவியல் விசாரணையாக இருந்து வரவில்லை. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பல வருடங்களுக்கு முன்னரேயே இதற்கான நிகழ்வுகள் உருவாகிக் கொண்டு வந்துள்ளன என்ற விடயத்தை கச்சிதமாகவும், மிகவும் கவனமான விதத்திலும் இந்த அறிக்கை முன்வைக்கின்றது. தற்போதைய அரசாங்கத்திலும், முன்னைய அரசாங்கத்திலும் பதவி வகிக்கும், பதவி வகித்த ஒரு சிலர் நாட்டில் அதிகரித்து வந்த தீவிரவாதத்தை அறிந்திருந்தார்கள் என்ற விடயத்தையும், அவற்றை கண்காணித்து வந்தார்கள் என்ற விடயத்தையும் அறிக்கையில் குறிப்பிடப்படும் இந்தப் பூர்வாங்க நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. மேலும், இந்தத் தாக்குதல்களை தணிப்பதற்கோ அல்லது தடுப்பதற்கோ போதியளவிலான வழிமுறைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனையும் அறிக்கை குறிப்பிடுகின்றது. மேலும், இது தொடர்பான முதலாவது புலனாய்வுத் தகவல்கள் ஏப்ரல் 04ஆம் திகதி கிடைத்திருந்த போதிலும், உடனடியாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிடும் அந்த அறிக்கை, அரச புலனாய்வுச் சேவைகளின் பணிப்பாளர் மீது இதற்கான பழியைச் சுமத்துகின்றது. மேலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு அரசாங்கத்திலும், பாதுகாப்புத் துறையிலும் இருக்கும் பலரை குறைகூறுவதுடன், பன்முகத் தரப்புக்களால் இழைக்கப்பட்ட தவறுகள் குறித்து கலந்துரையாடுகின்றது. இந்த அறிக்கை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உச்சமட்ட அமைப்பான தேசிய பாதுகாப்புச் சபையையும் (NSC) உள்ளடக்கிய விதத்தில் தற்போதைய பாதுகாப்புச் சட்டகத்தை பரிசீலனை செய்கின்றது. தேசிய பாதுகாப்புச் சபை அண்மைய மாதங்களில் அவ்வப்பொழுது ஒழுங்கற்ற விதத்தில் கூட்டங்களை நடந்தியிருந்ததுடன், நாடு எதிர்கொண்டு வந்த முனைப்பான பாதுகாப்புச் சவால்களுக்கு வினைத்திறன் மிக்க விதத்தில் எதிர்வினையாற்றும் விடயத்தில் தோல்வி கண்டிருந்தது. இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு பாதுகாப்புக் கட்டமைப்பில் இடம்பெற்ற தோல்விகளை எடுத்துக் காட்டும் அதே வேளையில், புலன் விசாரணைகளை நிறுத்துவதற்கும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதனை தடுப்பதற்குமென ஒரு சில தனிநபர்கள் வேண்டுமென்றே மேற்கொண்ட செயற்பாடுகளையும் குறிப்பிடுகின்றது.
அதன் மிக முக்கியமான முடிவுகளைத் தவிர, நாடாளுமன்றத் தெரிவுக்குழு பெரும்பாலான அமர்வுகளை ஊடகங்களுக்கு திறந்துவிட்டதன் மூலமும் ஒரு முன்னுதாரணத்தை வழங்குகின்றது. அதன் விளைவாக, இந்த அறிக்கை பிரசுரிக்கப்படுவதற்கு முன்னரேயே பொதுமக்கள் இது தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை தெரிந்து வைத்திருந்ததுடன், தோல்விகள் மற்றும் பொறுப்புகள் என்பன தொடர்பான ஒரு கலந்துரையாடலும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்குப் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனையோருக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியிருந்த விடயத்தை பொதுமக்கள் தெரிந்து கொண்டார்கள். மேலும், சஹ்ரான் தொடர்பாகவும், அவருடைய கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் நுண் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை என்பன மேற்கொள்ளப்பட்டிருந்தன என்ற விடயத்தையும் நாங்கள் கேள்விப்பட்டோம். காத்தான்குடியைச் சேர்ந்த சமூகத் தலைவர்கள் தமது பிரதேசத்தில் அதிகரித்து வந்த தீவிரவாதம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக போதியளவில் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என்றும் அறிக்கையிடப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் அறிக்கையில் புதிதாக காணப்படும் விடயம், தாக்குதல்கள் தொடர்பாக முன்னரேயே அறிந்திருந்தமை மற்றும் இது தொடர்பான புலன் விசாரணைகளை வேண்டுமென்றே உதாசீனம் செய்தமை என்பன தொடர்பான வெளிப்படுத்துதல்கள் ஆகும். அந்தப் புலன்விசாரணைகள் உரிய விதத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இலங்கையில் பாதுகாப்பு மற்றும் ஆளுகை என்பன தொடர்பாக அவை கணிசமான அளவிலான செல்வாக்கினை செலுத்தியிருக்கும். இக்கட்டுரையில் இந்த அம்சங்கள் அனைத்தையும் சுருக்கமாக தொகுத்துக்கூற முடியாது. ஆனால், உளவுத்துறை சமூகத்திற்கு மத்தியில் நிலவி வரும் பதற்ற நிலைமமைகள், உளவுத் தகவல்களை உரிய நேரத்தில் அறிக்கையிடத் தவறியமை மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை, பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் பொறுப்புக்கூறும் நிலை இல்லாதிருந்து வரும் நிலை, இந்தச் சம்பவங்களுக்கு பெருமளவுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஒரு சில ஆட்களுடன் சில அரசியல்வாதிகள் கூட்டாக இணைந்து செயற்பட்டிருக்கக்கூடிய நிலை மற்றும் அவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகள் போன்ற ஒரு சில பாரதூரமான விடயங்கள் எமது உடனடிக் கவனத்தை வேண்டி நிற்கின்றன. பெருமளவுக்கு கவலையூட்டக்கூடிய இந்தப் பிரச்சினைகள் தவிர, எமக்கு மேலும் கலக்கமூட்டும் ஒரு பிரச்சினை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுத்திருக்க முடியும். ஆனால், ஒரு சிலர் அவ்வாறு அதனைத் தடுப்பதற்கு முன்வரவில்லை என்பதாகும். இது எமது அரசியல் தலைமை, பாதுகாப்புக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் வகிபங்குகள், பொறுப்புக்கள் மற்றும் முன்னுரிமைகள் என்பன தொடர்பான சங்கடமான சில கேள்விகளை எழுப்புகின்றது. இந்தப் பதவிகளை வகிப்பவர்கள் மனித உயிர்களை பாதுகாக்க வேண்டிய தமது அடிப்படை பொறுப்பினைத் தட்டிக் கழித்துள்ளார்களா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
இந்த அறிக்கையை முழுவதுமாக வாசிப்பது பயனுள்ளதாகும். அறிக்கையின் 80ஆவது பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“அத்தகைய ஒரு பின்புலத்தில் இது சம்பந்தப்பட்ட ஒரு சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது – இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் புலன் விசாரணைகளை சீர்குலைப்பதற்கும், குற்றமிழைத்ததாகக் கூறப்படும் ஆட்களை கைதுசெய்வதை தடுப்பதற்கும், பெறுமதிமிக்க தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதைத் தவிர்ப்பதற்கும் ஒரு சில அரசியல்வாதிகளின் ஆதரவுடன் உளவுத்துறையின் ஒரு பிரிவினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? 2018 தொடக்கம் நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த பதற்றநிலை மற்றும் இன வன்முறை என்பன நிச்சயமற்ற நிலையை மேலும் தூண்டி, சமூகங்களுக்கு மத்தியில் – குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் – அச்சத்தை உருவாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டனவா? சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்பதனை எடுத்துக் காட்டுவதற்கும், அரசாங்க மாற்றம் ஒன்றுக்கான கோரிக்கைகளை வலுவடையச் செயற்வதற்குமென இது மேற்கொள்ளப்பட்டதா?
நாடு 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலையும், 2020ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களையும் எதிர்கொள்வதற்குக் காத்திருக்கும் ஒரு சூழ்நிலையில், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதிகரித்தளவிலான இனக் கலவரங்கள் என்பன தூண்டப்பட்டனவா? நாளாந்த வாழ்க்கையை சீர்குலைத்து, சமூகங்களுக்கு – குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களுக்கு – மத்தியில் பயத்தையும், அச்ச உணர்வையும் தோற்றுவிப்பதற்கென இவை முன்னெடுக்கப்பட்டனவா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதனை அடுத்து இலங்கையில் ஒரு சில பாகங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் என்பன பொதுமக்கள் மத்தியில் முன்னர் எப்பொழுதும் இருந்திராத அளவிலான ஒரு அச்ச உணர்வை தோற்றுவித்ததுடன், நாட்டின் அரசியல் தலைமை மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பு என்பன தொடர்பான விமர்சனங்களையும் எடுத்து வந்தன. இதே காலகட்டத்திலேயே அரசாங்க மாற்றம் இடம்பெற வேண்டும் என்ற குரல்களும் நாட்டில் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை வெறுமனே தற்செயல் நிகழ்வுகளாக கருத முடியாது. இவை தொடர்பாக மேலும் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். மேலும், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு சில பிரிவினரின் வகிபங்கு குறித்தும், பாதுகாப்பு, தேர்தல் செயன்முறை, அரசியல் நிலவரம் மற்றும் இலங்கையின் எதிர்காலம் என்பவற்றை நிர்ணயிப்பதில் அவர்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் தொடர்பாகவும் முக்கியமான கேள்விகள் எழுப்பப்படுதல் வேண்டும்.”
அறிக்கையின் மேலே குறிப்பிடப்பட்ட பிரிவும், ஏனைய பிரிவுகளும் மிகவும் பாரதூரமான பின் விளைவுகளை எடுத்து வரக்கூடிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்றன. இலங்கை ஒரு புதிய ஜனாதிபதியை – அதாவது, அரச தலைவராக, அரசாங்கத்தின் தலைவராக மற்றும் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக இருந்துவரக் கூடிய ஒரு ஜனாதிபதியை – தெரிவு செய்யவிருக்கும் ஒரு பின்புலத்திலேயே இவை அனைத்தும் இடம்பெற்றுள்ளன. அண்மைய கட்டுரை ஒன்றில் கலாநிதி அசங்க வெலிகல, அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 19ஆவது திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைவடைந்திருக்கும் விடயத்தை எடுத்துக் காட்டியிருந்தார். ஆனால், அதேவேளையில், ஜனாதிபதி அலுவலகம் இன்னமும் கணிசமான அளவிலான அதிகாரங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார். சுய அக்கறைக் குழுக்கள் நாட்டில் பெரும் குழப்ப நிலையை தோற்றுவித்து, அச்ச உணர்வையும், சந்தேகத்தையும் தீவிரப்படுத்தும் விதத்தில் நிகழ்வுகளை தந்திரமாக கையாண்டு வந்துள்ள விதம் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அதிர்ச்சி ஊட்டும் வெளிப்படுத்துகைகள் பெருமளவுக்கு கலக்கமூட்டுபவையாக இருந்து வருகின்றன. குறிப்பாக, அத்தகைய காரணிகள் தேர்தல் பெறுபேறுகள் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் இந்தக் கலக்கம் ஏற்படுகின்றனது. நாடாளுமன்றத் தெரிவுக்குழு பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
“தற்செயல் நிகழ்வாகவோ அல்லது தற்செயல் நிகழ்வாக அல்லாத விதத்திலோ ஜனாதிபதித் தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னரேயே பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக கவனம் ஈர்க்கப்பட்டு, மக்களின் அச்ச உணர்வுகள் தூண்டப்பட்டிருந்தன. மேலும், இச்சம்வங்கள், இலங்கை இராணுவம் மற்றும் இராணுவ புலனாய்வு இயக்குனரகம் (DMI) என்பவற்றின் தலைமைப் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த பின்புலத்தில் இடம்பெற்று வந்துள்ளன என்பதனையும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. இவை மிகவும் தீவிரமான அவதானிப்புக்களாக இருந்து வருவதுடன், அவை ஜனநாயக ஆளுகை, தேர்தல் செயன்முறைகள் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு என்பவற்றின் மீது தாக்கத்தை எடுத்துவர முடியும். எனவே, இது தொடர்பான உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுதல் அவசியமாகும்”.
வடக்கு கிழக்கில் தொடரும் இராணுவமயமாக்கல்
நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை வெளியிடப்பட்ட தினத்திற்கு அடுத்த தினம் நான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்தேன். அப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் சமூகங்கள் இந்த அறிக்கையின் முடிவுகள் குறித்தும், அதன் தாக்கங்கள் குறித்தும் மெதுவாக விடயங்களை தெரிந்து கொண்டிருந்தார்கள். திருகோணமலை மாவட்டத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் என்னுடன் உரையாடிய பலர் தோல்விகள் மற்றும் குற்றப் பொறுப்பு என்பன தொடர்பான முடிவுகள் குறித்து கவலை அடைந்திருந்தனர். அரசியல் தலைமையில் இருந்த ஒரு சிலரும், பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஒரு சிலரும் இந்த விடயத்தை அறிந்திருந்தும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய சாத்தியப்பாடு குறித்த விடயத்தை நம்ப முடியாது எனப் பலர் குறிப்பிட்டார்கள். காத்தான்குடியைச் சேர்ந்த பலர் அப்பிரதேசத்தில் அதிகாரித்து வந்த தீவிரவாதம் குறித்து அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்திருந்ததாகவும், பொலிஸில் கூட முறைப்பாடுகளை பதிவு செய்திருந்ததாகவும் சொன்னார்கள். ஆனால், மந்த கதியிலேயே இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன அல்லது அறவே நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலும் பிரஜைகளைப் பாதுகாப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை குறித்தும், அதனையடுத்து முஸ்லிம் சமுகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பழிவாங்குதல் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்தும் பலர் கவலை தெரிவித்தார்கள். இச்சம்பவங்கள் நிகழ்ந்து ஆறு மாதங்கள் கடந்து போயிருக்கும் நிலையிலும் கூட, முஸ்லிம் சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி மற்றும் தாக்குதல்கள் என்பனவும், அவர்கள் இருந்து வரும் பாதுகாப்பற்ற நிலையும் நிதர்சனமாக தென்படுகின்றன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை உயர் மட்டங்களிலான நுண் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு என்பன தொடர்பாக குறிப்பிடுகின்றது. இந்த விடயங்களை முன்னர் எவரும் பகிரங்கமாக அறிந்திருக்கவில்லை. அத்தகைய செயற்பாடுகள் பின்னர் இடம்பெறவில்லை என்பது இதன் பொருள் அல்ல. ஆனால், பன்முக உளவுத்துறை முகவரகங்களின் செயற்பாடுகளை விரிவாக ஆவணப்படுத்தும் முதலாவது பகிரங்க அறிக்கையாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையே இருந்து வருகின்றது. இந்த அறிக்கையின் பல பிரிவுகள் இராணுவப் புலனாய்வு இயக்குனரகத்தின் வகிபங்கு, களத்தில் அதன் பிரசன்னம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டிருக்கும் நபர்களுடன் அது பராமரித்து வந்த தொடர்புகள் என்பவற்றை கலந்துரையாடுகின்றது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்வைக்கப்பட்ட சான்றுகளின் பிரகாரம், உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த நபர்களுடன் பிணைப்புக்களை கொண்டிருந்தது மட்டுமன்றி, அவர்களுடைய வசிப்பிடங்களையும், நடமாட்டங்களையும் தெரிந்து வைத்திருந்தார்கள். இது, இந்த ஆட்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியை எழுப்புகின்றது. மேலும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த சகாக்கள் அண்மைய வாரங்களில் நிலவி வந்த அதிகரித்த அளவிலான நுண் கண்காணிப்பு தொடர்பாக குறிப்பிட்டதுடன், தேர்தலின் பின்னர் அது மேலும் தீவிரமடைய முடியும் என்ற விதத்தில் அச்ச உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் இரு கடற்படை உத்தியோகத்தர்கள் நடமாட்டம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவந்திருந்த ஊடக அறிக்கை இதனை மேலும் தீவிரப்படுத்துகின்றது. ஜனாதிபதித் தேர்தல் அண்மித்து வரும் நிலையில் திருகோணமலையில் அவர்களுடைய பிரசன்னம் குறித்து உள்ளூர்வாசிகள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். மேலும், ஓய்வுபெற்ற பெருந்தொகையான இராணுவ அதிகாரிகள் வடக்கிலும், கிழக்கிலும் தரித்து நின்று, குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு சார்பாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்கள் என்ற விடயத்தை பலர் குறிப்பிட்டிருந்த பின்னணியையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். முன்னைய இராணுவத்தினரின் பிரசன்னம் ஒரு தேர்தல் குற்றச் செயலாக இருந்து வராதுவிட்டாலும் கூட, இது இப்பிரதேசங்களில் இடம்பெற்று வரும் இராணுவமயமாக்கல்களின் புதிய பரிமாணத்தையும், தற்போதைய தேர்தலில் முன்னைய மற்றும் தற்போதைய இராணுவத்தினரின் வகிபங்கிணையும் எடுத்துக் காட்டுகின்றது.
உடனடி சீர்திருத்தங்களுக்கான தேவை
பலரின் கவனத்தை ஈர்க்கத் தவறியிருக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முக்கியமான முடிவுகளில் ஒன்று வலுவான, சீர்திருத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சபை ஒன்றுக்கான தேவையாகும். தேசிய பாதுகாப்புச் சபையை ஸ்தாபிப்பதற்கென 1999ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை கலந்துரையாடும் தெரிவுக்குழு, அண்மைக்கால பாதுகாப்புச் சவால்களை கவனத்தில் எடுக்கும் பொழுது, இது தொடர்பாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய ஒரு தேவை இருந்து வருகின்றது எனக் குறிப்பிடுகின்றது. பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பான உரிய நேரத்திலான தலையீடுகள் தொடர்பான பரிந்துரை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பெயரில் ஒரு புதிய பதவியை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. பல நாடுகளில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் தேசிய பாதுகாப்புச் சபையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் முக்கியமான வகிபங்குகளை வகித்து வருவதுடன், இலங்கையிலும் தேவையான அதிகாரங்களும், வளங்களும் வழங்கப்பட்டால் அவ்விதம் அத்தரப்புக்களும் செயற்பட முடியும். சீர்த்திருத்தப்பட்ட ஒரு தேசிய பாதுகாப்புச் சபை எவ்வித தாமதமும் இல்லாமல் தகவல்கள் பரிமாறப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஒரு கட்டமைப்பை எடுத்துவர முடியும். அந்த நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து தனிநபர்களும் அவற்றில் பங்கேற்கக்கூடிய இயலுமையையும் கொண்டிருப்பார்கள். இது சட்டவாக்கச் சீர்திருத்தங்கள் மற்றும் கண்காணிப்பு தொடர்பான சீர்திருத்தங்கள் என்பவற்றை உள்ளடக்கிய விதத்தில் அனைத்துமடங்கிய பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்களை அவசியப்படுத்துகின்றது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பகிரங்க அமர்வுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் தாமதங்கள் மற்றும் அதிகார கெடுபிடிகள் என்பவற்றையும் எடுத்துக் காட்டியிருந்தன. சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய சாட்சியத்திற்கும், பொலிஸ் அதிகாரிகள் வழங்கிய சாட்சியத்திற்கும் இடையில் நடவடிக்கை மற்றும் தொடர் நடவடிக்கை என்பவற்றின் அடிப்படையில் முரண்பாடுகள் காணப்பட்டன. தெரிவுக்குழு இந்தச் சான்றின் அடிப்படையில், அரச வழக்குத் தொடுநர் அலுவலகம் ஒன்றை ஸ்தாபித்தல் மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உடனடிச் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையை ஆணித்தரமாக குறிப்பிடுகின்றது. அதிகரித்தளவிலான அரசியல்மயமாக்கல், தாமதங்கள் மற்றும் பொறுப்புக்கூறும் நிலையை உத்தரவாதப்படுத்த வேண்டிய தேவை என்பவற்றை அறிக்கைகள் சுட்டிக்காட்டும் ஒரு கால கட்டத்தில் இவை அவசியமான கோரிக்கைகளாக இருந்து வருகின்றன.
நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான உன்னிப்பான பரிசீலனை, கல்வித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் ஆற்றலை கட்டியெழுப்புதல் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் பரந்த வீச்சிலான விடயங்கள் தொடர்பாகவும் ஏனைய முக்கியமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாடாளுமன்றத்தின் மேற்பார்வை என்ற விடயமும் வலியுறுத்தப்படுகின்றது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவு செயன்முறை மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டிய நிலையை உறுதிப்படுத்துதல் என்பன தொடர்பான முடிவுகளை பரீசிலனைக்கு எடுக்கும் பொழுது இது முக்கியமானதாக இருந்து வருகின்றது. வினைத்திறன் மிக்க நாடாளுமன்றத்தின் மேற்பார்வை பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத் தன்மை என்பவற்றுக்கு அப்பால் சென்று பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மத்தியில் நிலவி வரும் அவநம்பிக்கையை போக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும்.
எமது நாட்டின் அண்மைக்கால வரலாறு, அரசியல் யாப்பு சூழ்ச்சி மற்றும் வன்முறைச் சம்பவங்கள் என்பவற்றுக்கு மத்தியிலும் கூட பிரஜைகளும், சுயாதீனமான நிறுவனங்களும் கொண்டிருக்கும் தாக்குப் பிடிக்கும் திறனை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால், நாங்கள் வெறுமனே திருப்தி அடைந்தவர்களாக இருந்து வர முடியாது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவுகளும், இலங்கையின் கள நிலவரமும் இலங்கை ஒரு பாதுகாப்பு அரசாக மாறக்கூடிய சாத்தியப்பாட்டினை எடுத்துக்காட்டும் யதார்த்த நிலைமைகளாக உள்ளன. எமது தேர்தல்களில் தலையிடுவதற்கும், எமது பாதுகாப்பின் மீது தாக்கத்தை எடுத்து வருவதற்கும், எமது ஜனநாயகத்தை உதாசீனப்படுத்துவதற்கும் எடுக்கப்படக்கூடிய எந்த ஒரு முயற்சியையும் பிரஜைகள் என்ற முறையில் நாங்கள் வலுவாக எதிர்த்து நிற்க வேண்டும். நாங்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளிடமிருந்து இந்த விடயங்களை கோரி நிற்கவும் வேண்டும். அடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் பொழுதும், நிர்ணயகரமான சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலை என்பன தொடர்பாக வலுவாக குரல் கொடுக்கும் பொழுதும் இந்த விடயத்தை நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பவானி பொன்சேகா
Is the Deep State Involved? Reflection on the PSC Findings & Implication for the Future என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.