5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம். அவனையும் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். மூவருக்கும் மூன்று விதமான சாப்பாடு. அந்த வேலையையும் முடித்துவிட்டு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்.
காலை 6.45 மணியிருக்கும், பக்கத்துவீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும் வானொலி செய்தி வழியாக ஆறுமுகன் தொண்டமான் பேசுகிறார். “யார் யாரோ சொல்றாங்க, நாங்க 600, 700 ஒப்பந்தத்துல சைன் வச்சிட்டோமுனு. அதெல்லாம் பொய். எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கினா தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வாங்கிக்கொடுக்கலாம்னு எனக்கு முழு நம்பிக்க இருக்கு.” மகளுக்கு தலை பின்னிக்கொண்டிருக்கும் சரஸ்வதியின் முகத்தில் சந்தோசம் தெரிகிறது. ஆனால், அன்றே 700 ரூபாவை அவர் ஏற்றுக்கொள்வார் என்பதை சரஸ்வதி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நாங்கள் என்னவோ எஸ்டேட்டுக்கு, கம்பனிக்கு உழைச்சு குடுப்பது போலத்தான் இருக்கு. நாங்க செய்யும் வேலைக்கு 1000 ரூபா கூட போதாது. ஆனாலும், இப்போதைக்கு 1000 ரூபா கிடைச்சாலே போதும் என்கிறார் 38 வயதான சரஸ்வதி.
சரஸ்வதியுடன் அரை நாள் பயணம் செய்தேன். அந்த அரை நாளில் அவர் செய்யும் வேலைகளை, அவர் எதிர்நோக்கும் சவால்களை வீடியோ வடிவில் பதிவுசெய்து இங்கு தந்திருக்கிறேன்.
குறிப்பு: கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட முன், ஜனவரி 25ஆம் திகதி இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டது.