பட மூலம், Selvaraja Rajasegar
மலையக தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் 6 தொழிற்சங்கங்கள் தொடர்பாக ‘மாற்றம்’ தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொழில் திணைக்களத்தில் தமிழ் மொழி மூலம் தகவல்கள் கோரியிருந்தது. அங்கத்தவர்கள் எண்ணிக்கை, ஒரு தொழிலாளியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாத் தொகை, தொழிற்சங்கங்கள் மாதாந்தம், வருடாந்தம் பெற்றுக்கொண்ட சந்தாப் பணம், ஓராண்டுக்கு தொழிற்சங்கங்கள் செலவழித்த தொகை, எதற்காக? கடந்த 3 வருடங்கள் மேற்கண்ட தொழிற்சங்கங்களால் கிடைக்கப்பெற்ற ஆண்டு கணக்கறிக்கை போன்ற விடயங்களடங்கிய தகவல் கோரிக்கை விண்ணப்பத்தை மாற்றம் நேரடியாகவே சென்று தொழில் திணைக்களத்தின் தகவல் அதிகாரியிடம் கையளித்திருந்தது.
கேட்கப்பட்ட கேள்விகளுள் சிலவற்றுக்கு மாத்திரம் பதில் (தெளிவற்ற விதத்தில்) கிடைத்துள்ள போதிலும் ஒரு சில கேள்விகளுக்கு பதில் தரப்பட்டிருக்கவில்லை. அதற்கான காரணமும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தொழிற்சங்கங்களின் ஆண்டு கணக்கறிக்கைகளை தொழில் திணைக்களம் தர மறுத்தது. “2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல்களுக்கான உரிமைச் சட்டத்தின் 5(1) f பிரிவின் படி தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாமையை தங்களுக்குத் தயவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மேலதிக தொழில் ஆணையாளர் நாயகம் சி.என். விதனாச்சியின் கையெழுத்துடன் கூடிய பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றம் தனது முதல் தகவல் கோரிக்கை விண்ணப்பத்தை 2018 ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி கையளித்தது. இதற்கான பதிலை வழங்க சரியாக 2 மாதங்கள் தொழில் திணைக்களத்துக்கு எடுத்துக்கொண்டது. தமிழ் மொழியில் விண்ணப்பித்ததால் மாற்றம் அசெளகரியங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. தமிழ் தெரியாததால் ஏற்றுக்கொண்டதற்கான பத்திரத்தை உடனடியாக தரமுடியாது என்று தகவல் அதிகாரி குறிப்பிட்டார். ஒக்டோபர் 25 ஏற்றுக்கொண்டதற்கான பத்திரம் எமக்குக் கிடைத்தது. 2018 டிசம்பர் மாதம் 12ஆம் திகதி கிடைக்கப்பெற்ற பதிலில் மாற்றம் கேட்டிருந்த 7 கேள்விகளில் 3க்கு மட்டுமே பதில் வழங்கப்பட்டிருந்தது. ஏனைய நான்கு கேள்விகளுக்கான பதில்கள் தங்களிடம் இல்லை என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு மாத காலப்பகுதியில் பதில் கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டதால் பல தடவைகள் தொலைபேசி மூலம் தகவல் அதிகாரியை தொடர்புகொள்ள நேரிட்டது. “இங்குள்ளவர்களுக்கு தமிழ் மொழி தெரியாததால் உங்களது விண்ணப்பத்தை சிங்களத்துக்கோ அல்லது ஆங்கிலத்துக்கோ மொழிபெயர்க்க வேண்டும். முழு திணைக்களத்துக்கும் ஒரு தமிழ் மொழிபெயர்பாளரே இருக்கிறார். எல்லோரும் அவருக்குத்தான் கொடுப்போம். அதனால்தான் தாமதமாகிறது” என்று தகவல் அதிகாரி குறிப்பிட்டார்.
தொழில் திணைக்களம் வழங்கிய பதில் திருப்தியளிக்காத காரணத்தினால் மாற்றம் 07.01.2019 மேன்முறையீடு செய்தது. இதற்கும் பதில் வழங்க திணைக்களத்திற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் (20.02.2019) எடுத்துக்கொண்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் திணைக்களத்தின் மொழிபெயர்ப்பாளர் மாற்றத்தை தொடர்புகொண்டிருந்தார். “இங்கு நான் மட்டும்தான் இருக்கிறேன். விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் அனுப்பியிருந்தால் இலகுவாக இருந்திருக்கும். எனக்கு அவ்வளவாக சிங்களம் தெரியாது. தொழிற்சங்கங்களின் பெயர்களை நீங்கள் தமிழில் தந்திருப்பதால் அதனைத் தேடுவது கடினம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேன்முறையீட்டின்போது கிடைத்த பதிலுக்கும் முதல் விண்ணப்பத்தின்போது கிடைக்கப்பெற்ற பதிலுக்கும் இடையே பெரிதாக வித்தியாசத்தை காணமுடியவில்லை.
தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் விவரம், ஒரு அங்கத்தவரிடம் அறவிடும் மாதாந்த சந்தாப் பணம், ஒரு வருடம் பெற்றுக்கொண்ட சந்தாப் பணம் போன்ற தகவல்களை மாற்றத்தால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
அட்டவனையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொழிற்சங்கங்களின் தமிழ் பெயர்கள்
CWC இலங்கைதொழிலாளர் காங்கிரஸ்
LJEWU இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம்
NUW தேசிய தொழிலாளர் சங்கம்
UPF மலையக தொழிலாளர் முன்னணி
JPTUC தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு
SRFU இலங்கை செங்கொடி சங்கம்
அட்டவணையை முழுமையாகப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
மேலுள்ள அட்டவணையில் இடைவெளியாகக் காணப்படும் பகுதிகளில் திணைக்களம் “எங்களிடம் தகவல் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தது.
அட்டவணையில் காணப்படும் முக்கிய விடயங்கள்
- தொழிற்சங்கங்களிடமிருந்து இறுதியாக கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் உறுப்பினர் விவரங்களை கேட்டிருந்தோம். 2017ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற அறிக்கையைக் கொண்டே திணைக்களம் மாற்றத்துக்கு தகவல்களைத் தந்திருக்கிறது. அதன்படி கிட்டத்தட்ட 4 இலட்சம் அங்கத்தவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டிருக்கிறது. இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் ஒன்றரை இலட்சம் அங்கத்தவர்களையும் தேசிய தொழிலாளர் சங்கம் 21,280 அங்கத்தவர்களையும் கொண்டிருக்கின்றன. இப்போது பெருந்தோட்டத்தில் ஒன்றரை இலட்சம் தொழிலாளர்களே வேலை செய்துவருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் திணைக்களம் வசமிருக்கும் 3 தொழிற்சங்கங்களின் தொகை மட்டும் ஐந்தரை இலட்சத்தைத் தாண்டுகிறது. அப்டேட் செய்யப்படாத அங்கத்தவர் விவரங்களை வருடா வருடம் தொழிற்சங்கங்கள் அனுப்ப அதனையே தொழில் திணைக்களமும் பராமரித்துவருவது இதன் மூலம் தெரிகிறது.
- தேசிய தொழிலாளர் சங்கம் ஒரு தொழிலாளியிடமிருந்து 25 ரூபா பெறுவதாக தொழில் திணைக்களம் வழங்கிய பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக அதிகரிக்கப்படும் வரை குறித்த தொழிற்சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் தொழிலாளர்களிடம் மாதாந்தம் சந்தாப் பணமாக 150 ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டதை மாற்றம் உறுதிப்படுத்தியது.
- “யூனியன் என்ன கலர்னே தெரியாது” என்ற தலைப்பில் மாற்றத்தில கடந்த வாரம் வெளியான Storysphere கட்டுரையில், “எங்களுக்கு பிரச்சின வந்தா பேசுறதுக்கு, உதவி ஏதும் கிடைக்கும்னு 150 ரூபா சந்தா குடுக்குறோம். ஆனா இதுவர எந்த உதவியும் கிடக்கல.”, “நாங்க குடுக்குற சந்தா பணத்துலதான் வாழ்றாங்க, சொகுசா வாழ்றாங்க” என்று தொழிலாளர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். நாம் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு (01.04.2016 – 31.03.2017) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏழு கோடியே எழுபத்தேழு இலட்சம் (77,751,933) ரூபாவை தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணமாக பெற்றுள்ளது. அதேபோல, இலங்கை தேசிய தொழிலாளர் சங்கம் இரண்டு கோடியே இருபத்தி நான்கு இலட்சம் (22,437,558.53), தேசிய தொழிலாளர் சங்கம் மூன்று கோடியே 45 இலட்சம் (34,524,328.41) என தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணமாக பெற்றுள்ளது.
- குறித்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாப் பணத்தில் மேற்கொள்ளும் செலவுகள் என்னவென்று முதல் விண்ணப்பத்தில் கோரியபோது பதில் வழங்கப்படாததால், மேன்முறையீட்டின்போது செலவுகளை உள்ளடக்கிய ஆண்டு கணக்கறிக்கையை மாற்றம் கேட்டிருந்தது. அதற்கு தகவல்களுக்கான உரிமைச் சட்டத்தின் 5(1) f பிரிவின் படி தகவல் தரமுடியாது என்று தொழில் திணைக்களம் மறுத்துள்ளது.
இதனை எதிர்த்து மாற்றம் தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளது.
தொழில் திணைக்களத்திடம் பெற்றுக்கொண்ட முதலாவது பதிலைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். மேன்முறையீட்டின்போது கிடைக்கப்பெற்ற பதிலைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரைகள், சரஸ்வதியின் ஒரு நாள் கதை (VIDEO), கழிவு