“யார் யாரோ சொல்றாங்க, நாங்க 600, 700 ரூபாவுக்கு ஒப்பந்தத்துல சைன் வச்சிட்டோமுனு. அதெல்லாம் பொய். எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கினா தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வாங்கிக்கொடுக்கலாம்னு எனக்கு முழு நம்பிக்க இருக்கு.”
– கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஆறுமுகன் தொடண்டமான் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு 2 தினங்களுக்கு முன்னர் இவ்வாறு கூறியிருந்தார். மூடிய அறைக்குள் இரகசியமாக – கள்ளத்தனமாக ஒப்பந்தம் செய்து தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தொழிலாளர்கள் கூறிவருகிறார்கள். அதன் வெளிப்பாடாக இன்றும் தோட்டங்களில் 1000 ரூபாவை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
“இப்போது தாங்கள் எதிர்நோக்கும் செலவுகளுக்கு 1000 ரூபாவே போதாது. இருந்தாலும் அது கிடைத்தாலே போதும்” – 700 ரூபாவுக்கு கூட்டு ஒப்பந்தம் இன்னும் சில மணிநேரங்களில் கைச்சாத்திடப்படுவதை அறியாமல் ஜனவரி 28 திகதியன்று கொழுந்து பறித்துக் கொண்டே சரஸ்வதி இவ்வாறு கூறியிருந்தார். இந்த விரக்தியில் தொழிற்சங்கங்களுக்கு மாதாந்தம் செலுத்திவரும் சந்தாப் பணத்தை நிறுத்துவதற்குக் கூட தொழிலாளர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். மாற்றத்துடன் பேசிய மஸ்கெலியாவைச் சேர்ந்த தோட்டமொன்றில் பணிபுரியும் பெண் தொழிலாளி ஒருவர், தன்னுடைய தலைமையில் 25இற்கும் மேற்பட்ட பெண்கள் கைச்சாத்திட்டு சந்தாப் பணம் செலுத்துவதை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்தபோதும் குறித்த தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலர் அச்சுறுத்தியதால் தற்காலிகமாக பின்வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறுகிறார்.
360 பாகை வடிவிலான புகைப்படம் மற்றும் ஒலி வடிவம் மூலம் தொழிலாளர்கள் தாங்கள் செலுத்திவரும் சந்தாப் பணம் தொடர்பாக தெரிவித்த கருத்தை இங்கு கிளிக் செய்வதன் மூலமும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.
குறிப்பு: ஓடியோ வடிவிலான அடையாளத்தை அழுத்தவதன் மூலம் தொழிலாளர்களின் கருத்துக்களைக் கேட்கலாம்.
தொடர்புபட்ட கட்டுரைகள்: ‘கழிவு’, “150 years of ceylon tea”