Photo, Kumanan Kanapathippillai
உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கும் இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் மனிதப் புதைகுழி பகுதி தமிழ் மக்களின் மனக்குறைகளைத் தீர்த்துவைப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை ஒரு சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
முன்னாள் போர் வலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியான செம்மணியில் இந்த வருடம் பெப்ரவரியில் இந்து தகனசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த போது தொழிலாளர்கள் மனித எலும்புகளைக் கண்டெடுத்ததை அடுத்து மனிதப் புதைகுழிப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவித்ததை அடுத்து அந்த நிலப்பகுதியை தோண்டி மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் சிரேஷ்ட தொல்லியல் நிபுணர், தடயவியலிலும் மானிடவியலிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் உட்பட சட்ட மருத்துவ அதிகாரிகள் உள்ளடங்கிய நிபுணர்கள் குழுவொன்று, தற்போது மக்கள் செல்ல முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டிருக்கும் புதைகுழி பகுதியை அகழும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். அகழ்வுப் பணிகளுடன் பரிச்சயம் கொண்ட உத்தியோகபூர்வ வட்டாரங்களிடமிருந்து பெறக்கூடியதாக இருக்கும் தகவல்களின் பிரகாரம் இதுவரையில் 65 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. பாடசாலைப் பைகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறன.
தினமும் கண்டெடுக்கப்படும் பல எலும்புக்கூடுகள் பற்றிய தகவல்கள் தலைப்புச் செய்திகளாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருப்பதற்கு மத்தியில், அதிகரிக்கும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை உள்ளூர் மக்களுக்கு குறிப்பாக காணாமல்போன தங்களது அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மையை அறிவதற்காக வருடக்கணக்காக போராடிக் கொண்டிருக்கும் உறவினர்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. விடுதலைப் புலிகளை தோற்கடித்து அரச ஆயுதப்படைகள் கொடிய உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், காணமல்போனவர்கள் பற்றிய உண்மையைக் கண்டறிவதில் மக்கள் தொடர்ந்தும் உறுதியாக இருக்கிறார்கள். போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
தனது 21 வயது சகோதரன் 1996ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட நேரத்தில் இருந்து பொன்னம்பலம் ஆறுமுகசாமி அவரை கண்டறிவதற்கான முயற்சியிலேயே தனது பெருமளவு நேரத்தையும் சக்தியையும் செலவிட்டு வருகிறார். “காணாமல்போன உறவினர்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் எமது சகோதரனுக்கு அல்லது மகனுக்கு அல்லது மகளுக்கு நேர்ந்த கதி என்னவென்று தெரியாமல் சொல்லொணா வேதனைக்கு உள்ளாகியிருக்கிறோம்” என்று யாழ். நகருக்கு அண்மையாக வசிக்கும் 75 வயதான ஆறுமுகசாமி கூறுகிறார்.
காணாமல்போனோர் பற்றிய தகவல்கள் இன்னமும் தெரியாமல் இருக்கும் அதேவேளை, யாழ்நகருக்கு வெளியே மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் மனித எச்சங்கள் பற்றிய செய்திகள் மனக்குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. காணாமல்போன தங்களது அன்புக்குரியவர்கள் எங்காவது உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை உணர்வுக்கும் அல்லது அவர்களுக்கு மோசமான கதி ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற பீதிக்கும் இடையில் குடும்பங்கள் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
செம்மணி கவனத்தை ஈர்த்திருப்பது இதுதான் முதற்தடவை அல்ல. 1990 களின் பிற்பகுதியில் கிரிசாந்தி குமாரசுவாமி என்ற 18 வயதான தமிழ் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களில் ஒருவரான படைவீரர் சோமரத்ன ராஜபக்ஷ தனது சாட்சியத்தில் செம்மணியில் 300 – 400 சடலங்கள் புதைக்கப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டார்.
அவரின் தகவலையடுத்து அதிகாரிகள் அந்த இடத்தில் சுமார் 15 உடலங்களைக் கண்டெடுத்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு அது சம்பந்தமான வழக்கு கைவிடப்பட்டது. அதனால், குழப்பகரமான கடந்தகாலத்துக்கு முகங்கொடுக்கின்ற அதேவேளை விசாரணைகளை முன்னெடுப்பதில் திசாநாயக்கவின் நிர்வாகம் எந்தளவுக்கு முன்வரும் என்பதிலேயே தற்போது இடம் பெற்றுவரும் செம்மணி அகழ்வுகளின் திசை தங்கியிருக்கிறது.
அரசியல் துணிவாற்றல்
தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த வருடத்தைய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பாரிய ஆணையைச் சுட்டிக்காட்டி “இந்த அரசாங்கம் தனித்துவமானது” என்று இலங்கையின் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறினார். “அதன் அர்த்தம் சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கையும் தமிழ்பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கையும் பிளவுபடுத்திய இனவாத அரசியல் பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதேயாகும். எம்மைத் தெரிவுசெய்வதில் வடக்கையும் தெற்கையும் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது. அதனால், முன்னைய அரசாங்கங்களைப் போலன்றி, அவர்களின் அபிலாசைகளை நிறைவு செய்வதிலும் நல்வாழ்வை கவனிப்பதிலும் எமக்கு மிகவும் பெரிய பொறுப்பு ஒன்று இருக்கிறது” என்று நாணயக்கார தனது அமைச்சில் வைத்து ‘தி இந்து’வுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறினார்.
பெருங்கேடான மரணங்களை, ஆட்கள் காணாமல்போன சம்பவங்களை மற்றும் இழப்புக்களினால் அவலப்பட்டவர்களின் மனக்குறைகளை தீர்த்துவைப்பதில் திசாநாயக்க அரசாங்கத்துக்கு “முற்றுமுழுதான அரசியல் துணிவாற்றல்” (Complete political will) இருக்கிறது என்று கூறிய நாணயக்கார, (ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கூட்டணியின் பிரதான அங்கத்துவ கட்சியான) ஜனதா விமுக்தி பெரமுனவும் (ஜே.வி.பி.) 1980 களின் பிறபகுதியில் அதே அவலங்களைச் சந்தித்ததால் இந்தப் பிரச்சினையை நாம் மிகுந்த அக்கறையுடன் கையாளுவோம் என்று குறிப்பிட்டார்.
உலகில் காணாமல் போனோரின் எண்ணிக்கையை மிகவும் உயர்வாகக் கொண்ட நாடுகளில் இலங்கை ஒன்று என்று சர்வதேச மன்னிப்புச்சபை மதிப்பிட்டிருக்கிறது. 1970 களின் முற்பகுதியிலும் 1980 களின் பிற்பகுதியிலும் இடதுசாரி ஜே.வி.பி. முன்னெடுத்த ஆயுதக் கிளர்ச்சிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல்போன சிங்களப் பெரும்பான்மை தென்னிலங்கை உட்பட நாடுபூராவும் இருந்து 60 ஆயிரத்துக்கும் ஒரு இலட்சத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகள் விசாரணை செய்யப்படாமல் இருக்கின்றன. மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் (மிகவும் அண்மையில் வட மாகாணத்தில் மன்னார் நகரிலும் முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாயிலும் அடையாளம் காணப்பட்ட மற்றைய இரு மனிதப் புதைகுழி பகுதிகளில் காணப்பட்டதைப் போன்று) காணாமல்போனோரின் குடும்பங்கள் இன்னொரு சுற்று மன அழுத்தத்துக்கும் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் உள்ளாகிறார்கள்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக 2016ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் அமைக்கப்ட்ட காணாமல்போனோர் விவகார அலுவலகத்தின் [Office of Missing Persons (OMP)] ஆதரவுடன் அரசாங்கம் தற்போது நாடுபூராவும் 14 மனிதப்புதைகுழி பகுதிகளை கவனித்து வருகிறது என்று அதிகாரிகள் கூறினார்கள். “பணம் ஒரு பிரச்சினை இல்லை” என்று கூறிய நீதியமைச்சர் நாணயக்கார, 2025 ஜூன் 25 வரை செம்மணி அகழ்வுப் பணிகளுக்காக ஒரு கோடியே 17 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.
இலங்கையின் காணாமல்போனோர் விவகார அலவலகச் சட்டத்தின் (OMP Act) பிரகாரம் (அரசிடமிருந்து நிதி ஒழுங்காகக் கிடைப்பதை உறுதிசெய்தல், ஊடகங்களுக்கு வசதி செய்துகொடுக்கும் பிரச்சினைகளில் தலையீடுசெய்தல், சாத்தியமாகும் சந்தர்ப்பங்களில் பலியானவர்களை அல்லது பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு உதவுவது போன்ற) நிர்வாகப் பணிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற அதேவேளை, மனிதப்புதைகுழி விவகாரங்களில் ஒரு அவதானியாகச் செயற்படுவதற்கான அதிகாரம் காணாமல்போனோர் விவகார அலுவலகத்துக்கு இருக்கிறது.
மனிதப்புதைகுழிகள் குறித்து விசாரணை செய்வது என்பது “மிகவும் சிக்கலான ஒரு செயற்பாடு” என்று காணாமல்போனோர் விவகார அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு ஆணையாளர் மிராக் ரஹீம் கூறினார். முதலில், புதைக்குழிகளை தோண்டுவதே அழிவுத்தனமான ஒரு செயலாகும். சம்பந்தப்பட்ட பகுதிகள், எலும்புக்கூடுகளை கண்டெடுப்பதற்காக நாசப்படுத்தப்பட வேண்டும். பிறகு அவற்றை ஒருபோதும் புனர்நிர்மாணம் செய்யமுடியாது. மனித எச்சங்களை கண்டெடுப்பதில் மாத்திரமல்ல, அந்த இடங்களில் இருந்து சாத்தியமானளவு கூடுதலான தகவல்களை சேகரிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. உதாரணமாக உடல்களின் திசையமைவு, இடங்களின் புவியியல், புதைகுழிகளின் எல்லைகள் போன்ற விபரங்கள் அந்த இடங்கள் எவ்வாறு தோண்டப்பட்டிருக்கக்கூடும் என்பதை அறிவதற்கான பயனுடைய குறிகாட்டிகளாக அமையும் என்று அவர் கூறினார்.
உலகளாவிய அனுபவங்களின் அடிப்படையில் நோக்கும்போது புதைகுழிகளை அகழ்வதற்கான அத்தகைய முயற்சிகளுக்கு தடய மானிடவியலாளர்கள், தடய அகழ்வாய்வாளர்கள், வரலாற்றியலாளர்கள், குற்றவியலாளர்கள், மரபணுவியலாளர்கள் மற்றும் ஏனையோரைக் கொண்ட பல்துறை நிபுணத்துவ குழு ஒன்று தேவைப்படுகிறது என்று றஹீம் சுட்டிக்காட்டினார். புதைகுழி பகுதிகளில் கண்டெடுக்கப்படுபவற்றுடன் சேர்த்து சாட்சிகளின் வாக்குமூலங்களையும் பகுதிகளைச் சூழ இடம்பெற்றிருக்கக்கூடிய நிகழவுகளையும் விசாரணையாளர்கள் பரிசீலிக்கிறார்கள். ஏனென்றால், மனிதப் புதைகுழிகள் தனியொரு சம்பவத்தின் விளைவானவை அல்லாமல் இருக்கக்கூடும். அதனால் உண்மையை நிறுவுவதற்கு விசாரணைகளுக்கும் ஆய்வுகளுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அணுகுமுறை அவசியம். அல்லது முரண்பாடுகள் நிறைந்ததும் முடிவுகளை எடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் உதவாததுமான அறிக்கைகளையே நாம் இறுதியில் பெறவேண்டியிருக்கும் என்று அவர் விளக்கமளித்தார்.
தொழில்நுட்ப நிபுணத்துவம்
புதைகுழிகளைத் தோண்டுவதற்கும் அதையடுத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அரசியல் துணிவான்றல் முக்கியமானது என்கிற அதேவேளை, தொழில்நுட்ப நிபுணத்துவமும் அவசியமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். காணாமல்போனோரின் குடும்பங்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் புதைகுழி அகழ்வு விவகாரம் தொடர்பாக முன்னர் அறிந்திருக்கவில்லை. ஆனால், இப்போது குவாத்தமாலா, ஆர்ஜென்டீனா மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளின் புதைக்குழிகள் கையாளப்பட்டதன் பின்புலம் உட்பட பெருமளவுக்கு விடயங்களை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று காணாமல்போனோரின் குடும்பங்களுடன் பணியாற்றி அவர்களுக்காக முன்னிலையாகின்ற சட்டத்தரணியான ரனிதா குணராஜா கூறுகிறார்.
மனிதப்புதை குழிகளை கண்டறிவதிலும் அகழ்வுப் பணிகளிலும் மூலோபாயங்கள், முறைமைகள், சட்ட ரீதியான செயன்முறை மற்றும் சவால்களையும் பல்வேறுபட்ட அணுகு முறைகளையும் நாம் இப்போது கூடுதலான அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார். மரபணு தரவுத்தளம் ஒன்று இல்லாமல் இருப்பது போன்ற சில சவால்கள் தொடர்ந்து இருக்கின்ற போதிலும் கூட, மனிதப் புதைக் குழிகளை கையாளுவதற்கான சிறந்த வசதிகளை இலங்கை கொண்டிருக்கிறது என்பதை அவரின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
“நன்கு பழுதடைந்த மனித எச்சங்களை கையாளுவதற்கான மரபணு வங்கியும் விசேடமான மரபணு ஆய்வுகூடங்களும் எம்மிடம் இல்லை. மனிதப் புதைகுழிகளில் இருந்து எடுக்கப்படுபவற்றுடன் காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு அவை அவசியமானவை” என்று ரஹீம் கூறினார்.
காலம் கடந்து கொண்டிருப்பது இன்னொரு சவால். “காணாமல்போனோரின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் பலரை நாம் இழந்துவிடும் ஆபத்து இருக்கிறது. தங்களது மரபணுக்களை அல்லது காணாமல்போனார் பற்றிய முக்கியமான தகவல்களை பகிர்ந்துகொள்ளாமல் அவர்கள் காலமாகிப் போய்விடக்கூடும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
உதவியை நாடுவதில் அரசாங்கம் திறந்த மனதுடன் இருக்கிறது போன்று தெரிகிறது. “எம்மிடம் சில வளங்கள் இருக்கின்ற அதேவேளை, தொழில்நுட்ப நிபுணத்துவத்துக்கான தேவை எழுகின்றபோது எமது சர்வதேச நண்பர்கள், பங்காளிகளிடம் இருந்து உதவிகளைப் பெறுவதற்கு நாம் தயங்கப்போவதில்லை. எம்மிடம் நிபுணத்துவம் இல்லை என்று கூறி இந்த விசாரணைகளை நாம் கைவிடப் போவதில்லை. தெற்கைச் சேர்ந்தவரோ அல்லது வடக்கைச் சேர்ந்தவரோ எந்தவொரு குற்றவாளியையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை” என்று அமைச்சர் நாணயக்கார கூறினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான நெருக்கடியை இலங்கை மாத்திரம் எதிர் நோக்கவில்லை. தெற்கு உலகு (Global South) பூராவும் குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் தடயவியல் போராட்டத்தை முன்னெடுத்த பல பின்புலங்கள் இருக்கின்றன என்று ரஹீம் தெரிவித்தார். “ஆர்ஜென்டீனா போன்ற நாடுகள் அவற்றின் மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டிருக்கவில்லை, ஆனால், பகிர்ந்து கொள்வதற்கு பெருமளவு அறிவும் அனுபவமும் அவர்களிடம் இருக்கிறது. அதனால் இலங்கை அதன் தேசிய ஆற்றலை கட்டியெழுப்புவதற்கு உதவக்கூடிய பல வளங்களைக் கொண்டிருக்கிறது” என்று அவர் கூறுகிறார்.
நம்பிக்கையை வென்றெடுத்தல்
“காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைக்கான தீர்வு மக்களுக்கு தேவைப்படுகிறது. மக்களுக்கு நீதி தேவைப்படுகிறது” என்பதை ஏற்றுக் கொள்ளும் ரஹீம், குடும்பங்களின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது, பாதிக்கப்பட்டவர்களில் விசேட வகை ஒன்றை அங்கீகரிக்கவும் அவர்களின் வாழ்வுக்கு சில வடிவிலான சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவையும் இருக்கிறது என்று விளக்கமளித்தார். “30, 40 வருடங்களாக பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட தமிழர்கள், சிங்களவர்களை உடனடியாக நம்பப்போவதில்லை. அவர்களது நம்பிக்கையை வென்றெடுத்து மனக்காயங்களைக் குணப்படுத்துவதற்கு உதவுவதே எமது பணி” என்றும் அவர் கூறினார்.
குடும்பங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது முக்கியமானதாக அமையும். “அவர்கள் வெறுமனே தகவல்களுக்கான மூலங்கள் அல்ல. என்ன நடக்கிறது என்பதைப் பற்றி தெரிந்திருக்க வேண்டிய தேவை கொண்ட அவர்கள் செயன்முறைகளின் தீவிரமான பங்காளிகள். அதனால், அவர்கள் நிலைவரத்தை அவதானித்து எமக்கு உதவமுடியும். அவர்களது வகிபாகம் முக்கியமானது” என்று ரஹீம் குறிப்பிட்டார்.
அதிகரித்து வருகின்ற விழிப்புணர்வு காணாமல்போனோரின் குடும்பங்களுடன் ஊடாட்டங்களைச் செய்பவர்கள் செம்மணி புதைகுழிகளைச் சூழவுள்ள இயல்பாயமைந்த சவால்களையும் செயன்முறையையும் அவர்களுக்கு சிறப்பாக விளங்கப்படுத்துவதற்கு வசதியாக அமைகிறது என்கிற அதேவேளை, குடும்பங்களும் கூட செயன்முறையில் துணிச்சலுடன் பங்கு பற்றுகின்றன என்று ரனிதா குணராஜா குறிப்பிட்டார். “அவர்கள் தங்களுக்கு நடந்தவை பற்றிய கதைகளை பகிர்ந்துகொள்கிறார்கள், தங்களது நினைவுகளில் இருந்து பல விபரங்களை கூறுகிறார்கள், அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் குழுவினருக்கு உணவு வகைககளையும் பானங்களையும் வங்குகிறார்கள். அதேவேளை, பல வருடகால வேதனை மற்றும் அதிர்ச்சிக்குப் பிறகு சில பதில்களுக்காகவும் பிரச்சினைக்கு முடிவைக்காணவும் அமைதியாக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
கடந்த மாதம் இலங்கைக்கான தனது விஜயத்தின்போது செம்மணி மனிதப்புதைகுழி பகுதிக்குச் சென்று பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், “இலங்கையில் பலரின் வாழ்வை கடந்தகாலம் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சான்று செம்மணி” என்று கூறினார். செம்மணியில் அகழ்வுப் பணிகள் கட்டங்கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இருவாரங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஜூலை 21ஆம் திகதி (இன்று) மீண்டும் அகழ்வுப்பணிகளை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
நம்பகத்தன்மையான செயன்முறையை முன்னெடுப்பதில் அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருக்கிறது போன்று தெரிகிறது என்று கூறிய குடும்பங்களும் செயற்பாட்டாளர்களும் இதுவரையில் எந்தவிதமான நிவாரணமும் வழங்கப்படாத அனுபவத்தின் அடிப்படையில் விளைவுகள் பற்றி மிகுந்த நிதானத்துடன் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
“விசாரணைகள் நிறைவுபெறாத நிலையில் எங்களால் இப்போதைக்கு எதையும் கூறமுடியாது. கண்டுபிடிப்புக்கள் இந்தத் தடவையாவது எங்களுக்கு சில வகையான பதில்களைக் கொண்டுவரும் என்று நம்பிக்கையுடன் இருக்க முயற்சிக்கிறேன் என்று ஆறுமுகசாமி கூறினார். “எனது சகோதரனுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். பல பெண்மணிகள் தங்களது மகன்கள், மகள்களுக்காக காத்திக்கொண்டிருக்கிறார்கள். நாம் எவ்வளவோ வேதனைகளை தாங்கிக் கொண்டிருக்கிறோம். எமக்கு பதில்கள் தேவை.”
மீரா ஸ்ரீனிவாசன்
‘தி இந்து’ தளத்தில் “Jaffna mass grave, a test for the Dissanayake government” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் – வீ. தனபாலசிங்கம்.