Photos, SELVARAJA RAJASEGAR
‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இறுதிப் போரின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினர்.
போர் நிறைவடைந்து, 16 வருடங்களானதை முன்னிட்டு கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூர்ந்து நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினார்கள். கொல்லப்பட்ட தங்களுடைய அன்புக்குரியவர்களின் படங்களை வைத்து, மலர்களால் அலங்கரித்து, அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை படைத்து உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார்கள்.
நினைவுகூரலுக்கு அப்பால் கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த, காயமடைந்த அன்புக்குரியவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற ஒரே கோரிக்கையே அங்கு திரண்டிருந்த உறவுகளிடம் இருந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு’, “முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின எழுச்சியின் அடையாளம். தமிழ் இன அழிப்பை முள்ளிவாய்க்கால் திடலில் நினைவு கூர்வது மீண்டும் எம்மினத்தின் எழுச்சியை சுட்டி நிற்கின்றது. ஈழத்தமிழ் இனமாக சிங்கள அரசு அடக்குமுறைக்கெதிராகவும், சிங்கள ஒற்றையாட்சி அரசியல் அலகை தனது புவிசார் நலன்களுக்காக தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பின் அடக்குமுறைக்கெதிராகவும், போராட அணிதிரள்வதை தவிர வேறு எவ்வித தெரிவும் எமக்கு முன் வைக்கப்படவில்லை” என தனது முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2025’ இல் குறிப்பிட்டுள்ளது.
16 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பின்வருவனவற்றை வலியுறுத்துவதாக ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு’ குறிப்பிட்டுள்ளது.
1. சிங்கள – பௌத்த மயமாக்கப்படும் தமிழ் தாயகத்தை தடுக்கவும், தமிழ் தேசியத்தை நாளாந்த வாழ்வியலாக்கவும்,
2. ஈழத்தமிழ் இன அழிப்பில் சர்வதேச நீதி வேண்டி, அரச பொறுப்பையும், மேற்குலக நாடுகளின் உடந்தைத் தன்மையையும் வலியுறுத்தி, குற்றவாளிகளை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவும்,
3. தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதையும், தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், ஒருபோதும் பாரதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தவும்,
4. கூட்டு ஈழத்தமிழர் இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பை தடுக்கவும்,
5.தமிழ் தேசிய நம்பிக்கையின் உறுதிகொண்டு ஒரு குடையின் கீழ் தமிழ் இன அடக்கு முறைக்கெதிராக தமிழ் இன விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட எமது மக்கள் பலத்தை நம்பி தொடர்ந்தும் அடிபணியாது போராடுவோம்.