Photo, Selvaraja Rajasegar

அரசாங்க நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல்களை கண்டறியவென அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கோப் (அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய) குழு அண்மையில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளை அழைத்து மேற்கொண்ட விசாரணையின் போது ஆட்சிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களும் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கும் எவ்வாறு அரச காணிகளை குறைந்த விலைக்குப் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமாகவிருந்த பெருந்தோட்டக் காணிகளே இவ்வாறு விற்கப்பட்டுள்ளன. மறுபுறம் அரச காணிகள் எந்த அரச நிறுவனத்தின் கீழ் உள்ளது என்பது தொடர்பாகவும் பிரச்சினை எழுந்துள்ளது. காணி அபிவிருத்தி ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கூறுவதன்படி, அரச காணிகள் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளது எனக் கூறப்பட்டாலும், ஜனவசம, அரச பெருந்தோட்டயாக்கம் மற்றும் பிராந்திய தோட்டக் கம்பனிகள் என்பன அரச காணிகள் (குறிப்பாக தோட்டக் காணிகள்) தமக்குச் சொந்தமென கூறுவதாகவும், அதனால் பெருந்தோட்டக் காணிகள் யாருக்குச் சொந்தம் என்று பிரச்சினை தொடர்ந்து இருந்து வருதாகவும் கூறியுள்ளார். மேலும், காணிச் சீர்திருத்த ஆணைக்குழு இக்காணி உரிமை தொடர்பில் 400க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்துள்ள போதிலும் இதுவரை எந்தவித தீர்ப்பினையும் நீதிமன்றம் வழங்கவில்லையெனக் கூறியுள்ளார். எவ்வாறாயினும், பெருந்தோட்டக் காணிகள் காணி அபிவிருத்தி ஆணைக்குழுவிற்குச் சொந்தமென்று கருத்தே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் காணிப் பிரச்சினையும் வீட்டுப் பிரச்சினையும் அதேபோல் உட்கட்டமைப்பு பிரச்சினைகளும் மலையக தோட்ட வாழ் மக்களது தீரா பிரச்சினையாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. மலையக மக்களுக்கு காணி வழங்குங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தோட்டக் காணிகளை தோட்ட மக்கள் வீடு கட்டுவதற்கு வழங்கினால் அல்லது வாழ்வாதாரத்திற்கு வழங்கினால் தோட்டத் தொழிற்துறைக்கு அதாவது தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடும் எனும் கருத்தினைத் தோட்டக் கம்பனிகள் முன்வைப்பதுடன் அதனை ஆட்சியாளர்களும் ஏற்றுக்கொண்டு தோட்ட வாழ் மக்களுக்கு வீடு கட்டுவதற்கான காணி வழங்குவதை நிறுத்திவிடுகின்றனர். அல்லது ஒரு சில வீடுகளை கட்டுவதுடன் தமது செயற்பாடுகளை நிறுத்தி விடுகின்றனர். கடந்த முப்பது வருடங்களில் ஆட்சி பீடமேறிய அரசாங்கங்கள் இதனையே செய்து வருகின்றன. சுமார் 2 லட்சத்து அறுபதாயிரம் குடும்பங்கள் வாழ்வதற்கு உகந்த வீடில்லாமல் 175 வருட பழமை வாய்ந்த பத்தடி லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி ஒரு சில வாராங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் மலையக தோட்ட வாழ் மக்களுக்கு காணி வழங்குதில் உள்ள நியாயத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அதே ஜனாதிபதி அவ்வுரைக்கு முன்னர் தனியார் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தோட்ட மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், 200 வருட வரலாற்றைக் கொண்ட இம்மக்களுக்கு காணி வழங்குவது அவசியம். ஆனால், அதனைத் தோட்டத் தொழிற்துறைக்குப் பாதக மேற்படாமல் தோட்டக் கம்பனிகளுடன் பேசி நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இவரது கருத்தும் முன்னைய ஜனாதிபதிகள் முன்வைத்த கருத்துக்களுக்கு இணையானதாகவே இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்நாட்டிற்கு வளம் சேர்த்த தோட்ட மக்கள் ஏனைய மக்களைப் போல் காணி உரித்துடன் கூடிய வாழ்வதற்கு உகந்த வீடுகளில் வாழ்வதை நான் உறுதி செய்வேன் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதுடன் தனது ஆட்சிக் காலத்தில் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்றார். ஆனால், அதனை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல் அவருக்குப் பின்னர் வந்த ஜனாபதிகளும் வாக்குறுதிகளை அளித்து சிற்சிறு திட்டங்களை முன்னெடுப்பதுடன் நிறுத்திக் கொண்டனர்.

மறுபுறம் தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிதி போதியதாக இல்லையெனும் கருத்தும் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டது. இக்கருத்தினை நம்பிய மலையக நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் சிவில் அமைப்புகளும் காணிகளை வழங்கினால் தோட்ட வாழ் மக்கள் தங்கள் நிதியினைக் கொண்டு வீடுகளைக் கட்டிக்கொள்வர் எனக் கோரிக்கை விடுத்தபோது அதனை ஆளும் தரப்பினர் தட்டிக் கழித்து விட்டனர். மலையக மக்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பதற்கு போதியளவு காணிகளும் மற்றும் போதியளவு நிதியும் இல்லை எனும் இவ்விரண்டு கூற்றுக்களும் உண்மையா என்றால் இல்லை என்றே கூறவேண்டும்.

1992ஆம் ஆண்டு தோட்டங்கள் தனியார்மயமாக்கும் போது ஜனவசம மற்றும் பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழிருந்த தோட்டங்களில் 23 பிராந்திய கம்பனிகளுக்கு மொத்தமாக 442 தோட்டங்கள் ஒப்படைக்கப்பட்டன.  அதேவேளை, ஜனவசம் மற்றும் பெருந்தோட்டயாக்கத்திடம் முறையே 33 மற்றும் 31 தோட்டங்கள் வைத்துக் கொள்ளப்பட்டன. ஆனால், 2022ஆம் ஆண்டின் தோட்டத் துறை அமைச்சின் அறிக்கையின்படி 21 பிராந்திய தோட்டக் கம்பனிகளின் கீழ் 295 தோட்டங்களே உள்ளன. அதேவேளை, அரசாங்கத்தின் கீழுள்ள ஜனவசம, அரச பெருந்தோட்டயாக்கம், எல்கடுவ பிராந்தியக் கம்பனி, சிலாபம் பிராந்தியக் கம்பனி, குருநாகல் பிராந்தியக் கம்பனி, தேயிலை ஆராய்ச்சி நிலையம் என 41 தோட்டங்களே உள்ளன. இதன்படி பார்க்கின் மொத்தமாக 336 தோட்டங்களே இயங்குகின்றன. அவ்வாறாயின் மிகுதி பெருந்தோட்டங்களுக்கு என்ன ஆயிற்று? அத்தோட்டங்கள் கைவிடப்பட்டதா? அல்லது யாருக்கு வழங்கப்பட்டது? இவற்றினால் தேயிலை உற்பத்தி பாதிப்படையவில்லையா? என்ற கேள்வி எழுகின்றது. மேலும், தற்போதுள்ள தோட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டயார் காணிகள் உற்பத்தி செய்யாமல் கைவிடப்பட்டுள்ளது.

மறுபுறம் நிதிப்பற்றாக்குறைப் பற்றி பார்ப்போமாயின் தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு வெளிநாட்டு வருமானத்தையே பெற்றுத் தருகின்றனர். தோட்டத்துறை அமைச்சு வருடாவருடம் வழங்கும் தகவல்களின் படி வருடந்தோரும் திறைசேரிக்கு பல கோடி ரூபா வருமானத்தை தோட்டத் தொழிலாளர்கள் தமது உற்பத்தி மூலம் பெற்றுக் கொடுக்கின்றனர்.

தோட்டங்கள் தனியார் மயமாக்குவதற்கு முன் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதிக்கு இரு வகையான வரியை அரசாங்கம் விதித்திருந்தது. முறையே ஏற்றுமதி வரி (Export Tax) மற்றும் விலை மதிப்பீட்டு வரி (Advalorem tax) எனும் வரிகளை விதித்து. இதன் மூலம் 1980க்கும் 1992க்கும் இடைப்பட்ட காலத்தில் 8322.2 மில்லியன் ரூபாக்களை வருமானமாகப் பெற்றது. அதாவது, 83 கோடி ரூபாக்களை வருமானமாக அரசாங்கத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுக்கொடுத்துள்ளனர். தனியார்மயமாக்கப்பட்டப் பின் இவ்வரி நிறுத்தப்பட்டு செஸ் (Cess) எனும் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றும் அது நடைமுறையிலுள்ளது. 1993ஆம் ஆண்டு முதல் பலகோடி ரூபாக்களை செஸ் வரியாகத் திறை சேரி பெற்றுள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் மட்டும் அதாவது 2011 முதல் 2022 வரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் 2,629,342.4 மில்லியன் ரூபாக்களை திறைசேரி (அரசாங்கத்திற்கு) வருமானமாகப் பெற்றுள்ளது.

ஆண்டு ஏற்றுமதி அளவு பெறுமதி சேர் வரி ரூபா (மில்லியன்) அமெரிக்க டொலர் (மில்லியன்) SDR மில்லியன்
2011 303.2 2057.80 151,776.50 1372.70 869.60
2012 306 2051.40 169,015 1324.50 865.1
2013 311.1 2240.20 190,803.90 1477.80 972.50
2014 317.8 2283 203,506.70 1558.70 1025.9
2015 298.9 2046.20 174,293.40 1282.20 916.60
2017 278.2 2527.20 222,376 1458.60 1051.50
2019 282.8 1874.90 227,881.20 1274.70 922.70
2020 256.6 1754.30 218,797.30 1179.30 846.10
2021 285.9 1873.60 263,353.40 1324.20 930.00
2022 250.2 1642.10 411,055 1258.70 951.70
மொத்தம்   24,575.40            2,629342.40 16,076.90 11,180.60

Source: Statistical Information on Plantation Crops – Ministry of Agriculture and Plantation Industries, Plantation Industry Division – 2022

தேயிலை ஏற்றுமதி மூலம் பெற்ற தீர்வை வரி

அவ்வாறு பெறப்படும் வருமானத்தில் எத்தனை மில்லியன் ரூபாக்களை ஆட்சி பீடத்தில் இருந்த அரசாங்கங்கள் இம்மக்களின் அபிவிருத்திக்காக செலவிட்டுள்ளன?

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புகளும் இந்திய நிதி உதவியைக் கொண்டே நிர்மாணிக்கப்படுகின்றது. அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வீடமைப்புத்திட்டங்களும் வெளிநாட்டு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியுடனேயே மேற்கொள்ளப்பட்டன. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியின் போது மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கு இந்தியா நிதி உதவி வழங்கியது. அவ்வுதவி நல்லாட்சிக் காலத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேண்டுகோளுக்கு அமைய 10 ஆயிரம் வீடுகளுக்கான நிதியாக அதிகரிக்கப்பட்டது. இவ்வீடமைப்புக்களுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடுகையில் இலங்கை அரசாங்கம் கட்டப்படும் வீடமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான அதாவது பாதை, குடிநீர், வடிகாலமைப்பு, சனசமூக நிலையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை, இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும் என்றே ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் மலையகத்தில் கட்டப்பட்ட திட்டங்களில் குடி நீரைத் தவிர வேறு எந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் இவ்வீட்டுத் திட்டங்களில் காண முடியாது. அவ்வகையில் ஆட்சிபீடமேறிய அனைத்து அரசாங்களும் தாம் வழங்கிய உத்தரவாதத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. மறுபுறம் மலையக பிரதிநிதிகளும் இதனை வலியுறுத்தியதாகத் தெரியவில்லை.

ஆட்சி பீடம் ஏறிய அனைத்து அரசாங்களும் இம்மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக பாரிய நிதி ஒதுக்கவில்லை; இவ்வரசாங்கமும் குறைந்தளவு நிதியினையே ஒதுக்கியுள்ளது. இப்பொய்மையை கலைய வேண்டியத தேவை இன்று எழுந்துள்ளது. பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட பின்  ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பிறருக்கு வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம் தேயிலை உற்பத்தி மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபா வருமானமாக வந்துகொண்டிருக்கின்றது. எனவே, இந்த உண்மையை அரசாங்கத்திற்கு குறிப்பாக ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் எடுத்துக் கூறி காணியையும் நிதியையும் ஒதுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். குறைந்தது வருடந்தோரும் 100 முதல் 200 வீட்டிற்காவது செஸ் வரியிலிருந்து நிதி ஒதுக்கப்படவேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்விடயத்தின்பால் ஆளும் கட்சியின் மலையகப் பிரதிநிதிகளே அதி கவனம் செலுத்தி ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க வேண்டும். மலையக மக்களின் பால் அதிக அக்கறை செலுத்தி வரும் ஜனாதிபதி இவ்வுண்மையை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் ஆளும் கட்சியைச் சார்ந்த மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாபதிக்கு பரிந்துரை செய்வேண்டியது இன்றியமையாததாகும்.

பெ.முத்துலிங்கம்