Photo, imagesofceylon

1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்கக் குடியுரிமைச் சட்டம் ஆகஸ்ட் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. நவீன தென்னாசிய வரலாற்றில் கட்டமைப்பு ரீதியாக ஓர் இனத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட மிகவும் வன்முறையான சட்டங்களில் ஒன்றாக இக்குடியுரிமைச் சட்டம் விளங்குகிறது. அப்போதைய சிலோன் (இலங்கை) இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற உடனேயே, இங்கு வாழ்ந்த இரண்டாவது சிறுபான்மை இனத்தின் சுதந்திரத்தையும் அவர்களின் இருப்பையும் முற்றுமுழுதாக இல்லாதொழிக்கவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதிலும், ஏனைய சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.பி. ஜயா (கொழும்பு), சி. சுந்தரலிங்கம் (வவுனியா), சி. சிற்றம்பலம் (மன்னார்), வி. நல்லையா (மட்டக்களப்பு – கல்குடா), எஸ்.யு. எதிர்மானசிங்கம் (பட்டிருப்பு), எச்.எஸ். இஸ்மாயில் (புத்தளம்), கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் (கல்முனை), முதலியார் ஏ.சின்னலெப்பை (மட்டக்களப்பு), ஏ.ஆர்.எம். அபூபக்கர் (மூதூர்), முதலியார் எம்.எம். இப்ராஹிம் (பொத்துவில்) ஆகியோரது ஒப்புதலுடனும், நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களான பெருந்தோட்டக் கம்பனி உரிமையாளர்கள் மற்றும் ஐரோப்பியப் பிரதிநிதிகளின் வாக்குப் பலத்துடனும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், அது மிகக் கொடூரமான முறையில் நடைமுறைப்படுத்தவும்பட்டது.

இலங்கைத் தீவின் அப்போதைய சனத்தொகையில் 11%க்கும் அதிகமாக இருந்த, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய (700,000க்கும் மேற்பட்ட) மலையக (இந்திய வம்சாவளி) தமிழர்களின் குடியுரிமையை இச்சட்டம் பறித்தது. குடியுரிமையை உறுதிப்படுத்த, இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் இலங்கைத் தீவில் மூன்றாம் தலைமுறை தந்தைவழி வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதற்கு, (உறுதிப்படுத்த ஆதாரங்கள் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டே) கிட்டத்தட்டச் சாத்தியமற்ற ஆவண ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக் கட்டாயப்படுத்தியது.

ஒரு நூற்றாண்டு காலமாக இலங்கை பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கி, இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு, விசேடமாக இலவசக் கல்வி, மத்திய மகா வித்தியாலயங்கள், இலவச மருத்துவம், பெருந்தெருக்கள் மற்றும் புகையிரதப் பாதைகள் கட்டுமானம் என நாட்டின் அபிவிருத்திக்குப் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தாலும், இந்தச் சிங்கள பௌத்த பேரினவாத அரசும் அதன் நிலப்பிரபுத்துவ வர்க்க அரசாங்கமும் எம்மக்களின் குடியுரிமையைப் பறித்து, நம்மை உயிர் இருந்தும் உரிமையில்லா நடைப்பிணமாக்கின.

அதன் பின்னர் வாக்குரிமைப் பறிப்பு, பதிவுப் பிரஜை, தனிச்சிங்களச் சட்டம், சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை எனச் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் நிலைமையை இன்னும் மோசமாக்கவும் சற்றுத் தணிக்கவும் எனப் பல சட்டங்களையும் உடன்படிக்கைகளையும் செய்துகொண்டன. சுமார் 55 வருடங்களின் பின், 2003ஆம் ஆண்டு தாய்வழி வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தினால் போதும் என்பதற்கிணங்க, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க அசல் குடியுரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கையில் வம்சாவளிக் குடியுரிமையானது தந்தைவழிக்கு (தந்தையிலிருந்து பிள்ளைக்கு) மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. 2003ஆம் ஆண்டின் திருத்தமானது வம்சாவளிக் குடியுரிமையைத் தாய்வழிக்கும் விரிவுபடுத்தியது. இதன் மூலம், ஓர் இலங்கைத் தாய்க்குப் பிறந்த குழந்தைகள், 1948ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி என நிர்ணயிக்கப்பட்ட திகதியிலிருந்து பின்னோக்கி வம்சாவளிக் குடியுரிமையைக் கோர அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 78 வருடங்களாக, 1948ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இச்சட்டமானது இன்னும் பல சட்டங்களாலும் திட்டங்களாலும் யாப்புச் சீர்திருத்தங்களாலும் மலையகத் தமிழ் சமூகத்தின் மீது பலவகையான நீண்டகால, குறுகியகாலத் தாக்கங்களை ஏற்படுத்தியது.

குடியுரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கான முக்கிய காரணங்கள்

1947 சுதந்திரத்திற்கு முந்தைய தேர்தல்களில், புதிதாகத் தொழிற்சங்கமயமாக்கப்பட்ட மற்றும் அரசியல் விழிப்புணர்வு கொண்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை இந்திய காங்கிரஸ் வேட்பாளர்களுக்குப் பெருமளவில் வாக்களித்தனர். அதனூடாக இடதுசாரி அரசியல் அதிகாரம் மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் காலூன்றலாம் என்ற கவலையும், வலதுசாரி மேட்டுக்குடி நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாதிப்படையலாம் என்ற அச்சமும் ஆட்சியாளர்களுக்கு இருந்தது.

வரலாற்று ரீதியாக, பிரித்தானியக் காலனித்துவத் தோட்ட உரிமையாளர்களால் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக ஒப்பந்தத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை, சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை அரசியல் மேல்வர்க்கத்தினர் ஒரு “வெளிநாட்டு” அல்லது தற்காலிகக் குழுவாகவே கருதினர். இவர்களுக்கு இந்தியாவுடன் விசுவாசமோ பிணைப்போ இருக்கலாம் என்றும், அது சிங்கள பௌத்த தேசியவாதத்திற்குத் தடையாக அமையலாம் என்றும் அவர்கள் சந்தேகித்தனர்.

1949ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தை இயற்றியதன் மூலம், அரசாங்கம் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைத் திட்டமிட்டுப் பறித்தது. ஒரே இரவில், தீவின் இரண்டாவது பெரிய சிறுபான்மையினர் அரசியல் ரீதியாக அழிக்கப்பட்டனர். இந்நிகழ்வு அரசியல் ஈர்ப்பு மையத்தை அடியோடு மாற்றியது. இது, விரிவடைந்த பெரும்பான்மை வாக்குத் தளத்தைக் கைப்பற்றுவதற்காக ஆதிக்க சிங்களக் கட்சிகளுக்கிடையே பல தசாப்தகால “இனப் போட்டி” முறையைத் தொடங்கி வைத்தது. இதுவே பரந்த இலங்கை உள்நாட்டுப் போருக்கு அடித்தளமிட்டது.

மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் இந்திய வம்சாவளித் தொழிலாளர்களின் மக்கள் தொகை அடர்த்தியாக இருப்பது, தேர்தல் ரீதியாகத் தங்களை மிஞ்சிவிடுமென்றும், அவர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்றும் டி.எஸ். சேனாநாயக்கவும் கண்டிச் சிங்களத் தலைவர்களும் அஞ்சினர். எனவே, தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறித்து வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியதன் மூலம், அவர்கள் மலைநாட்டுத் தேர்தல் தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவது தடுக்கப்பட்டு, சிங்களவர்களின் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.

இச்சட்ட அமுலாக்கத்திற்குப் பின்னர் எமது மக்கள் அரச பாதுகாப்பிற்குள் (பேரரசு) உள்வாங்கப்படாததால் இலகுவில் பாதிப்படையக்கூடிய (சமூக, பொருளாதார, உடல், உள மற்றும் இயற்கை அனர்த்தப் பாதிப்புகள்) நிலை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தப்பட்டது. ஆகவே, நிர்க்கதி நிலையை அடைய வைத்து, வேறு வழியின்றித் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தோட்டத் துரைமாரையும் நிலப்பிரபுக்களையும் (சிற்றரசு) தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டனர். இந்நடைமுறை மூலம் நிலப்பிரபுக்கள் தமது கட்டுப்பாட்டிலுள்ள நாதியற்ற மக்களை முகாமைத்துவம் செய்வதற்கும், தமக்கேற்ற விதத்தில் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்துவதற்கும் நிலப்பிரபுத்துவச் சிங்கள பௌத்த அரசு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இது முறைசாரா விதத்தில் குடியுரிமை உள்ளவர்களை ஆள ஒரு “அரசும்”, குடியுரிமை இல்லாதவர்களை ஆள இன்னொரு “அரசுமாக” உணரக்கூடிய வகையில் இரு நிர்வாக முறைகளை உருவாக்கியது. அதனால்தான் இன்றும் அநேகமாகத் தோட்டப் பகுதியில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் தாம் வாழும் பிரதேசத்தைத் “தோட்டப்” பிரதேசம் என்றும், சிங்கள மக்கள் வாழும் அயல் கிராமங்களை “நாட்டுப்” பிரதேசம் என்றும் கூறுகின்றனர். இது நாம் இந்த நாட்டு மக்கள் அல்ல என்பதை எமது DNA வரை கொண்டு சென்று ஆழமான வடுக்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். அந்தச் சட்டத்தின் நேரடி விளைவாக, சட்டப்படி கண்ணுக்குப் புலப்படாத, அரசியல், சமூகப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சிவில் அடிப்படையில் கட்டுண்ட (யாப்பு ரீதியில் அடிமையாக்கப்பட்ட) ஒரு பெரும் தொழிலாளர் படை உருவாக்கப்பட்டது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, அந்தச் சமூகம் அரசின் பாதுகாப்பிலிருந்து வெளியே தள்ளப்பட்டது.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தமும் நாடு கடத்தலும்

  • 1948 இலங்கை குடியுரிமைச் சட்டம்
  • சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் (1964)
  • இந்தியாவுக்கு நாடு கடத்துதல் (525,000) | இலங்கைக் குடியுரிமை (300,000)
  • கட்டாய இடப்பெயர்வும் மன அதிர்ச்சியும்
  • உடன்படிக்கையில் உறுதியளித்த குடியுரிமையை வழங்குவதில் ஏற்பட்ட மிகத் தாமதமான செயலாக்கம்
  • இந்தியாவிலும் முகாம்களிலும் அறிமுகமில்லாத பகுதிகளிலும் குடியமர்த்தப்படுதல்
  • அமைப்பு ரீதியான, கட்டமைப்பு இடைவெளிகள் நீடித்தல்

தொடர்ச்சியான அதிகாரத்துவ வர்க்கம் மலையகத் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்கி, சிங்கள பௌத்த பெரும்பான்மையின் இலாபத்துக்காக வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டது; குறிப்பாக 1964ஆம் ஆண்டின் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974ஆம் ஆண்டின் இந்திரா காந்தி – சிறிமாவோ ஒப்பந்தம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த ஒப்பந்தங்கள் மலையகத் தமிழ் மக்களை உயிருள்ள மனிதர்களாகவே மதிக்காமல், ஒரு கணக்குப் புத்தகத்தில் உள்ள எண்களாகவே கருதின. மேலும், 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தாம் ஒருபோதும் பார்த்திராத ஒரு நாட்டிற்கு வலுக்கட்டாயமாகச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதே நேரத்தில், எஞ்சியிருந்த மக்கள் தங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட இலங்கை குடியுரிமைக்காகப் பல தசாப்தங்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த வலுக்கட்டாய நாடு கடத்தல் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைப் பிரித்ததுடன், மலையகத் தமிழ் சமூகத்தின் மீது ஆழ்ந்த சமூக அதிர்ச்சியையும் சுயகௌரவத்தின் மீது பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

தீர்வுக்கான மாயை: 2003ஆம் ஆண்டு சட்டமும் யதார்த்தங்களும்

மலையகத் தமிழ் மக்களின் பல்லாண்டுகால சட்டப்பூர்வப் போராட்டங்களின் மூலம் (பல தேர்தல் கால வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டாலும்) குடியுரிமையற்ற நிலை சட்டப்பூர்வமாகத் தீர்க்கப்பட்டது. இது 2003ஆம் ஆண்டின் இந்திய வம்சாவளியினருக்குக் குடியுரிமை வழங்கும் சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம், எஞ்சியிருந்த அனைத்து இந்திய வம்சாவளியினருக்கும் சட்டப்பூர்வமான முறைசார்ந்த குடியுரிமையை வழங்கியது. இருப்பினும், முறைசார்ந்த குடியுரிமைக்கும் (பதிவுப் பிரஜாவுரிமை) உள்ளார்ந்த குடியுரிமைக்கும் (இலங்கை மண்ணில் பிறந்தால் பிறப்பின் ஊடாக இயற்கையிலே கிடைக்கும் பிரஜாவுரிமை) இடையே ஒரு முக்கிய இடைவெளி நீடிக்கிறது. தற்போது மலையகத் தமிழர்கள் தேசிய அடையாள அட்டைகளையும் வாக்குரிமைகளையும் பெற்றிருந்தாலும், பிறப்பிலிருந்தே கிடைத்த பிரஜாவுரிமையை அனுபவிக்கும் சமூகத்தைப் போலன்றி, அரசின் முழுப் பராமரிப்பிற்கு வெளியே வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பல தசாப்தங்கள், இன்னும் கடந்து செல்வதற்குக் கடினமான ஒரு வகையான கட்டமைப்பு ரீதியான ஓரங்கட்டலை உருவாக்கியுள்ளன.

சமூகப் பொருளாதாரப் பரிமாணம்

1948 சட்டத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தால், தற்போதும் ஓர் இலங்கைப் பிரஜையாகத் தாம் அனுபவிக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட மிகப் பெரிய போராட்டத்தின் பின்னரே பெற்றுக்கொள்ள வேண்டிய பல சிக்கலான பாதிப்புகளை அனுபவித்த வண்ணம், பெயருக்கு இலங்கைப் பிரஜையாக வாழ வேண்டி ஏற்பட்டுள்ளது. குடியுரிமை பறிக்கப்பட்டு இந்த இன்றுடன் 78 வருடங்களாகியும், வாழ்வாதார நிலம் மற்றும் வீட்டுவசதி உரிமைகள் மறுக்கப்பட்டதால், தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களிலேயே சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர் அல்லது அடைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் காலனித்துவக் கால “வரிசை அறைகளில்” (லயன் அறைகளில்) வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இன்றும் 80%க்கும் அதிகமானோர் தங்கள் லயன் அறைகளைத் தங்களின் சொந்தப் பணத்தைக் கொண்டு சௌகரியமான வீடுகளாகக் கட்டிக்கொண்டாலும், அவர்கள் தாங்கள் வசிக்கும் வீட்டிற்கோ அல்லது வாழ்வாதாரத்திற்கெனச் சிறு விவசாயம் செய்யும் அல்லது கால்நடைகளின் உணவிற்காகப் புல் வளர்க்கும் புற்தரைக்கோ இன்னும் சட்டப்பூர்வ உரிமையாளர்களாக இல்லை.

சிங்கள பௌத்த பேரினவாதிகளின் மற்றும் இலங்கைப் பிரஜாவுரிமையைக் கொண்ட மேட்டுக்குடி சிறுபான்மையினரின் தேவைக்காக மலையக மக்களின் குடியுரிமையை இரத்துச் செய்து இன்றுடன் 78 வருடங்களாகியும், இன்னும் நாடற்றவர்களாகவும், வெறும் எண்ணிக்கையாகவும் அனுதாபப்படக்கூடிய சமூகமாகவுமே நடத்தப்படுகின்றனர். இதற்குச் சிறந்த உதாரணமாக, 1993ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களைத் தனியார்மயப்படுத்திய போது அங்கு வாழ்ந்த மக்களையும் சேர்த்துக் கம்பனிகளுக்கு அடகு வைத்தமையைக் குறிப்பிடலாம். இந்நிலைமையை இன்னும் ஆழமாக விளங்கப்படுத்த வேண்டுமாயின், மலையக மக்களைப் பேரழிவிற்குட்படுத்திய ‘தித்வா’ (Ditwah) பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உறுதியளித்த காணியும் வீடும் இன்னும் எட்டாக்கனியாகவே இருப்பதையும், உயர் நீதிமன்றம் பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கு அவர்களுக்கே உரித்தான முகவரிகளை வழங்க ஆணையிட்டும் இன்னும் வழங்காமையையும் குறிப்பிடலாம்.

தற்போது கைவிடப்பட்டுள்ள அரச பெருந்தோட்டங்களில் வாழும் மலையகத் தமிழ் மக்கள், பல்லாண்டுகாலமாக ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கங்களிடமும் தமக்கென ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள ஒரு காணித் துண்டையும், தங்களைச் சிறு தோட்ட உடைமையாளர்களாக மாற்றியமைக்க வாழ்வாதாரக் காணியையும், பெருந்தோட்டக் கட்டமைப்பிலிருந்து தங்களை அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கக் கோரியும் பல்வேறு அகிம்சை வழிப் போராட்டங்களை நடத்தினாலும் இன்னும் அவை எட்டாக்கனியாகவே உள்ளன.

அதுமட்டுமல்லாமல், இவ்வாறு பொதுமக்கள் தங்களுக்கு ஒரு காணித்துண்டை வழங்குமாறு அரசைக் கேட்டுக்கொண்டிருக்க, தனியாருக்கு அரச காணிகளைக் குத்தகைக்கு விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பது, “எம்மக்களைப் பூரண குடியுரிமை உள்ளவர்களாக, ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்போம்; அவர்களைச் சமமான பிரஜைகளாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம்” என்று உறுதி கூறி ஆட்சிக்கு வந்த இந்த NPP அரசும் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடி, சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலையே கொண்டு செல்வதையும் அதனை மேலும் மேலும் வலுவூட்டுவதையுமே காட்டுகிறது. இவர்களும் ஏனைய அரசாங்கங்களைப் போலவே ‘ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி, கடந்த பின் நீ யாரோ நான் யாரோ’ என்ற நிலையில் செயல்படுவதை நன்றாக உணர முடிகின்றது. எம்மக்களை இந்த அரசாங்கமும் நாடற்றவர்களாகவே பார்க்கிறது என அர்த்தம் கொள்ள எம்மைத் தூண்டுகின்றது.

எனவே, இந்த 78 வருடங்களாக இலங்கை அரசு திட்டமிட்டு எம்மக்களை இலக்கு வைத்துச் செய்த இச்செயலை ஒரு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன். எமது மக்கள் தங்கள் இன அடையாளத்தை இழக்கவும், ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான மக்கள் தொகையை நாடு கடத்தவும், அதனூடாக அரசியல், சமூக, பொருளாதாரப் பங்களிப்புகளை முற்றுமுழுதாகத் துடைத்தெறியவும் இது காரணமாக அமைந்தது.

1983இல் இடம்பெற்ற இனக்கலவரம் எப்படி இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் இருப்பையும், பொருளாதார அரசியல் பலத்தையும் சிதறடித்து, உயிர்களைக் காவுகொண்டு, மக்களை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்ததோ, அதைவிடப் பன்மடங்கு தாக்கத்தை இச்சட்டமூலம் நடைமுறைக்கு வந்தவுடன் மலையகத் தமிழரின் வாழ்வில் ஏற்படுத்தியது. அது மலையகத் தமிழ் மக்களை உயிர் இருந்தும் சடலங்களாக்கியதுடன், ஆடு மாடுகளை விற்பதும் வாங்குவதும் போல் இந்தியாவும் இலங்கையும் எங்களை ஒரு பண்டமாற்றுப் பொருளாகக் கைமாற்றிக்கொள்ளுமளவுக்கு அரசுக்கு அதிகாரத்தையும் எம்மக்களை அடிமையாக நடத்துவதையும் உறுதி செய்தது. ஒரு மனிதனுக்குக் கட்டாயம் இருக்கவேண்டிய சுயகௌரவத்தை முற்றிலுமாக இல்லாதொழித்து, பிறந்த நாட்டிலேயே நாடற்றவர்களாக்கி நடைப்பிணமாக்கி, இன்றுவரை சலுகைகள்தான் எமது உரிமை என்று நினைக்கும் அளவுக்கு எமது சிந்தனையையும் மாற்றியமைத்துள்ளது.

வே. வீரசிங்கம்