Photo, Selvaraja Rajasegar
எப்போதும் வரலாற்றில் மௌனம் என்பது மறதியின் தொடக்கம், மறதி என்பது நீதி மறுக்கப்படுவதற்கான அல்லது கேள்விக்குட்படுத்தப்படாமல் கடந்து போவதற்கான வழி.
26 வருட போரியல் வரலாறு 2009 இல் மௌனிக்கப்பட்ட போது பல இலட்சம் உயிரிழப்புக்கள், உடைமைகள் அழிவு, வலிந்து காணாமலாக்கபட்ட பல்லாயிரக்கணக்கான அன்புக்குரியவர்களின் இழப்பு, இடப்பெயர்வுகள், புலம்பெயர்வுகள், அரசியல் கைதுகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் என ஒரு இனம் பாரியதொரு இனவழிப்பினையும் அதன் வடுக்களையும் சுமந்திருந்தது. உயிர், உடைமை,பொருளாதார இழப்புக்களின் நீட்சிகள் இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இது இனவழிப்பினை சந்தித்த எந்த சமூகமும் எதிர்கொள்கின்றதானதொரு நீண்டகால சவால். ஆனால், 17 வருடங்களின் பின்பும் வெறும் நினைவுகூரல்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றதென்றால் எம் குரல்கள் தேய்தொலிக்கின்றது என்பதே அர்த்தம்.
ஈழப்போராட்டத்தினையும் ஈழத்தமிழர்களின் இனவழிப்பினையும் யூதர்கள் எதிர்கொண்ட இனவழிப்போடு ஒப்பீடுசெய்வதில் ஒத்த இயல்புகள் பலவுள்ளன.
ஹாலோகாஸ்ட் (Holocaust) எனும் சொல்லை கேள்விப்பட்டுள்ளீர்களா? இது கிரேக்க மொழிச்சொல். இதன் மூலச்சொல் “holokaustos” (ὁλόκαυστος). இதில் Holo என்பது “முழுமையாக” என்பதையும் Kaustos என்பது “எரிக்கப்படல்” என்பதையும் குறிக்கின்றதானதொரு கூட்டுச்சொல். அதாவது, “முழுமையாக எரிக்கப்பட்ட பலி” என்பது இதன் அர்த்தமாகும். ஆரம்பத்தில் இச்சொல் மதம்சார் பலியிடலினை குறிக்கின்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தது. ஆனால், பின்னர் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தலைமையில் நாசிப்படைகள் செய்த யூத இன அழிப்பினை குறிப்பிடும் சொல்லாக வரலாற்றாசிரியர்கள் பயன்படுத்ததொடங்கினர். இன்று ஹாலோகாஸ்ட் எனும் சொல்லைத்தேடிப்பார்த்தால் அது 1933 – 1945 காலப்பகுதியில் நடைபெற்ற யூதவின அழிப்பினையே சுட்டுகின்றதொன்றாகியுள்ளது. அழிக்கப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களையும் அதன் நீட்சியாக எதிர்கொண்ட வடுக்களையும் மனித உரிமை மீறல்களையும் மேற்கோள் காட்டுகின்றது. இந்த ஹாலோகாஸ்ட் எப்படி இனமொன்றில் இருத்தலின் அழிப்பை மேற்கோள் காட்டுகின்றதோ அதேபோன்றதொரு மேற்கோளினை உலகிற்குச்சொல்ல வேண்டியதொரு தேவை ஈழத்தமிழர்களுக்கு இன்று அவசியமாகியுள்ளது. இக்கட்டுரை இது குறித்து ஆராய்கின்றது.
யூதர்கள் தங்கள் இனப்படுகொலையை உலகம் மறக்காமல் இருக்க பல தளங்களில் ஒருங்கிணைந்த முயற்சிகளை கட்டமைக்கப்பட்ட முறையில் முன்னெடுத்திருந்தனர்.
அருங்காட்சியகங்கள், நினைவகங்கள்
ஹாலோகாஸ்ட் நினைவகங்கள் உலகம் முழுவதும் நிறுவப்பட்டன. இவை வெறும் வரலாற்றினை மட்டும் காட்சிப்படுத்தும் இடங்களாக மட்டுமல்லாமல் உணர்வை உருவாக்கும் கல்வி மையங்களாகவும் செயற்படுகின்றன. இவ்மையங்களில் தம்முடைய இனவழிப்பை மேற்கோள் காட்டி மனித உரிமைச்சட்டங்கள், இனவெறி எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வுகள் குறித்து பேசுகின்ற தளமாக உள்ளன. இங்கு விழிப்புணர்வுகள், சட்டம்சார் விடயங்கள் பேசப்படுமிடத்து தம் இனவழிப்பு குறித்தும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றமை இங்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டியதொரு யுக்தி.
பாடத்திட்டங்கள் மற்றும் கல்வித்திட்டம்
இன்று பல நாடுகளிலும் குறிப்பாக யூதர்கள் தலைமைத்துவத்திலுள்ள இடங்களில் எல்லாம் ஹாலோகாஸ்ட் பற்றிய பாடதிட்டம் பாடசாலைகளிலும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் இனவெறி, வெறுப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் விளைவுகளைப் புரிந்துகொள்வதே இதன் நோக்கம் என்பது வெளிப்படையானதானதாகக் காட்டப்பட்டாலும் இதில் அரசியல் இல்லாமலில்லை.
இன்னுமொரு விடயம் ஹாலோகாஸ்ட் அனுபவத்திலிருந்து உருவாக்கப்பட்ட “மீண்டும் நிகழக்கூடாது” (Never Again) என்னும் கோட்பாடு. இது மனித உரிமை குறித்த செய்தியாக இருப்பினும் ஏற்கனவே குறிப்பிட்டதனை போன்று நிகழ்ந்த விடயங்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் தம்முடைய இழப்பினை பதியவைக்கின்றனர் என்பதும் மறுப்பதுக்கில்லை. இன்று இதுவே இனவழிப்பினையும் அதன் வன்முறைகளையும் எதிர்க்கின்ற ஒப்பந்தமாக மாறி மனித உரிமை கல்வியின் அடித்தள கொள்கையாக பரவலாக்கப்பட்டுள்ளமை நாம் அவதானிக்க வேண்டியதொன்று.
சாட்சியங்களின் பதிவுகள்
தாம் எதிர்கொண்ட இனவழிப்பினை ஆவணப்படுத்துவதையே எஞ்சிய யூதர்கள் முதல் கட்டமாக முன்னெடுத்தார்கள். உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்கள் ஒளி-ஒலி பதிவுகளாக்கப்பட்டன. ஆவணப்படுத்தப்பட்டன, ஆய்வு செய்யப்பட்டன. இது வரலாற்றில் மறுக்கப்படுதலுக்கான இடைவெளியை குறைக்கும் உத்தியாக கைக்கொள்ளப்பட்டது.
கலை மற்றும் ஊடகம்
ஹாலோகாஸ்ட் பற்றிய நினைவுகளையும் அதன் ஊடாக அலைகளையும் உருவாக்கியதில் கலை மற்றும் ஊடகத்தின் பங்கு இன்றியமையாதது. இன்றும் கூட யூத இனத்தவர்களின் வலிகள், இழப்புக்கள் மறைமுகமாக திரைப்படங்களில் வெளிவருவதும் கூட இதன் நிகழ்ச்சி நிரலே.
திரைப்படங்கள், நாவல்கள், ஆவணப்படங்கள் போன்றவை வரலாற்று கொடுமைகளை மனித உணர்வுகளுடன் இணைத்து புரிதலை ஆழப்படுத்துகின்றன. இவை வெறும் தகவல் பரப்பல்களை மட்டும் செய்வதில்லை. பாதிப்படைந்தவர்களது அனுபவங்களையும் உயிர்ப்பிக்கின்றது. இதே தவறு மீண்டும் நிகழக்கூடாது என்கின்ற எண்ணத்தினை வலுப்படுத்துகின்ற அதேவேளை அனுதாபத்தினையும் கூடவே பாதிப்படைந்தவர்களது வலி நிறைந்த மனதின் புள்ளி மீண்டும் தாக்கப்பட்டு அடுத்த கட்டத்தினை நகர்த்துவதற்கான தூறலும் விதைக்கப்பட்டது. யூதர்கள் தம்மை பொருளாதார, அரசியல் ரீதியாக கட்டமைத்ததில் இன்றும் கட்டமைத்துக்கொண்டிருப்பதில் கலை, ஊடகத்தின் பங்கு மேற்கோள் காட்டத்தக்கது.
அரசியல் மற்றும் சர்வதேச சட்டங்கள்
இனவழிப்பு என்ற சொல் உருவாக்கத்தில் ஹாலோகாஸ்ட் இன் பின்னணி முக்கிய பங்காற்றியுள்ளது. இதன் அடிப்படையிலேயே 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இனவழிப்பினை தடுப்பதற்கானதும் தண்டிப்பதற்குமான சர்வதேச சட்ட அடித்தளம் அமைக்கப்பட்டது. இதன் பின்னரே மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் அமைப்புக்கள் மற்றும் சட்ட முறைமைகள் வலுவடைந்தன. சர்வதேச நீதி மன்றங்கள், மனித உரிமை அமைப்புக்கள் மூலம் இனவழிப்பு, போர்க்குற்றங்கள் போன்றவற்றுக்கு எதிரான நீதிப்பொறிமுறைகள் சார் அழுத்தங்கள் அதிகரிக்கப்பட்டன. இதன் விளைவாக மனித உரிமை பாதுகாப்பு, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் முறைமைகள் உலக அரங்கில் முக்கிய அம்சங்களாக மாறின.
இனவழிப்பை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதில் ஈழத்தமிழர்களுக்குள்ள சவால்கள்
இலங்கையில் அரசியல் மாறினாலும் அரசியலின் நிகழ்ச்சிநிரல் மட்டும் மாற்றப்படுவதில் சில வேளைகளில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதிலொன்று நினைவுகூறல்களுக்கான கட்டுப்பாடுகள். இது சமூகத்துடன் இணைந்த சுமூகமான நினைவுகூறலை பாதிக்கின்றது.
இன்று கூட பல சாட்சியங்கள் பதியப்படாமல் இருப்பதுடன் அவர்களுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக படுகொலைகள், வன்புணர்வுகள் குறித்த சாட்சியங்கள் கட்டமைக்கப்பட்ட முறையில் அழிக்கப்பட்டு வருகின்றன. பல வன்முறைகள் குறித்த தரவுகள், அவற்றினை அணைவரும் அணுகுவதற்கான தளங்களின் தேவைப்பாடு இன்றும் உள்ளது.
இனவழிப்பு நடவடிக்கைகளின் போது தப்பியோடிய, இடம்பெயர்ந்த, புலம்பெயர்ந்த யூதர்கள் எவ்வாறு ஒருங்கிணைப்பினை மேற்கொண்டார்களோ அதே பொறிமுறையை முன்னெடுக்க வேண்டியதும், பலப்படுத்த வேண்டியதுமான தேவை ஈழத்தமிழர்களுக்கு இன்னும் குறைபாடுள்ளதாகவேயுள்ளது.
இனவழிப்பினை சந்தித்த இனங்கள் எனும் அடிப்படையில் மீண்டெழுந்த யூதர்களிடமிருந்து ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டியவை பலவுள்ளன. யூதர்களுள் பௌதீகவியலை மையப்படுத்திய அரசியல் இல்லை. ஆனால் நம்மிடையே வடக்கு, கிழக்கு, மலையகம் என்கின்ற பிரிப்புள்ளது. சாதியல், மதரீதியான பிரிப்புக்கள் உள்ளன. இதன் ஆதிக்கம் நேரடியாக தெரியாவிட்டாலும் மறைமுக தாக்கங்கள் காலங்காலமாக இருந்து வருகின்றது என்பது மறுப்பதற்கில்லை. இது கட்சி அரசியலிலும் உள்ளது. நம்மிடமுள்ள மற்றுமொரு முரண் இனவழிப்பினை ஆவணப்படுத்தும் போதும் பதிவுசெய்யும் போதும் குறிப்பிட்ட பகுதியினருக்கானது என மட்டும் மேற்கோள் காட்ட முயல்வது. நடந்ததை அதனதன் உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மையுடன் அணுகும்போதே அது வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதை பல வரலாற்று நிகழ்வுகள் எமக்குச் சொல்லியிருக்கின்றது.
ஈழத்தமிழர்கள் யூதர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் இது. அடுத்தது மேற்கூறிய ஐந்து விடயங்கள் குறித்து சிந்தித்தல், பொறிமுறையை உருவாக்கிக்கொள்ளல் என்பன முக்கியமானது. குறிப்பாக கல்வித்திட்டங்களில் உள்வாங்கப்படல், ஆவணப்படுத்தல்கள், சர்வதேசமயப்படுத்தல், சர்வதேச அமைப்புக்கள், மனித உரிமை சார் தளங்களுக்கு ஈழத்தமிழர்களின் இனவழிப்பினை கொண்டுசெல்லல் நீதி, பொறுப்புகூறலை உறுதிப்படுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குதல், நிலைமாறுகால நீதி பொறிமுறைகள் குறித்த முன்னெடுப்புகளில் கவனஞ்செலுத்தல் என்பன இன்று ஈழத்தமிழர்களின் முன்நகர்விற்கு வழிவகுக்கும்.
போர்ச்சூழல் ஈழத்தமிழர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் இந்த இழப்புகளின் ஊடாக புலம்பெயர்சார் சமூகத்தினை உருவாக்கி இருப்பை உறுதிசெய்துள்ளது நேர்மறையான விளைவு எனலாம். இன்று சர்வதேச பொறிமுறையை முன்னெடுப்பதற்கும் மண்ணில் இழப்புகளுடன் வாழும் தமிழினத்தின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்குமான திறப்பு இந்த புலம்பெயர் சமூகத்தின் கைகளிலேயே உள்ளது.
நினைவுபடுத்தல் என்பது மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது. இந்த நினைவுகள் பேசப்படவில்லை என்றால் ஒரு இனத்தின் வரலாறு மௌனமாக்கப்பட்டுவிடும். ஆனால், நினைவுகூரல் மட்டும் உரிமைகளை மீட்டுத்தந்துவிடாது. யூதர்கள் தங்களது குரலை ஒரு போதும் தணியவிடவில்லை. அதனால் தான் ஹாலோகாஸ்ட் இன்று உலகின் மிக அதிகம் அறியப்பட்ட இனவழிப்பாக பதியப்பட்டிருக்கின்றது. குரல் தொடர்ந்தால் தான் நீதி உயிருடன் இருக்கும், மௌனம் ஏற்பட்டால் மறக்கடிக்கப்பட்டு விடும்.
கேஷாயினி எட்மண்ட்