Photo, AMILA UDAGEDARA
இலங்கையின் மலையகத் தமிழ் சமூகம், நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி மூலம் முக்கியப் பங்களிப்பை வழங்கி வந்தாலும், இச்சமூகம் வரலாற்று ரீதியிலான சட்ட மற்றும் சமூக – பொருளாதார ஒடுக்குமுறையால் தொடர்ந்து விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இந்தக் கட்டமைப்புப் பாதிப்பின் மிகத் தெளிவான வெளிப்பாடு, தோட்டப் பிரதேசங்களில் காணப்படும் தரமற்ற உட்கட்டமைப்பு வசதிகளும், அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்கான தேசிய வலையமைப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளமையும் ஆகும். 2025ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று இலங்கையை தாக்கிய டித்வா சூறாவளியானது, இந்த உட்கட்டமைப்பு நெருக்கடியை ஒரு தேசியப் பேரழிவாக வெளிப்படுத்தியுள்ளது. சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் விளைவுகள், நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்பட்ட பாதிப்புகளை விடவும், மலையக மாவட்டங்களான கண்டி, நுவரெலியா, பதுளை போன்ற பகுதிகளில் பல மடங்கு அதிகமாக இருந்தன. 2025 டிசம்பர் 17ஆம் திகதி நிலவரப்படி, நாடு முழுவதும் 6228 வீடுகள் முழுமையாகவும் 101,055 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றபோதிலும், அறிக்கையிடப்பட்ட அதிகபட்ச உயிரிழப்புகள் (கண்டியில் 237, நுவரெலியாவில் 89, பதுளையில் 88) மலையக பகுதிகளில் குவிந்துள்ளன. இந்தத் தரவுகள், மோசமான வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட அபாயகரமான பிரதேசங்களில் மக்கள் வாழ்வதன் நேரடியான விளைவாகும். இந்த உட்கட்டமைப்பு நெருக்கடியை நிவர்த்தி செய்வது, வெறுமனே அபிவிருத்திப் பிரச்சினை மட்டுமல்ல; இது எதிர்கால அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தேசிய அனர்த்தத் தயார்நிலையின் (National Disaster Preparedness) ஒரு தவிர்க்க முடியாத அங்கம் என்பதையும், இது மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் அடிப்படையிலான நீடித்த மீட்சிக்கும் (Rights-based Sustainable Recovery) மிக அவசியம் என்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை வலியுறுத்துகிறது.
மலையகத்தின் உட்கட்டமைப்புப் பற்றாக்குறையின் வேர்கள், 19ஆம் நூற்றாண்டின் காலனித்துவப் பொருளாதாரத்தின் ஆழமான கட்டமைப்பில் உள்ளன. 1948 இல் சுதந்திரம் கிடைத்தபோதும், 1970 களில் தோட்டங்களின் தேசியமயமாக்கல் (Nationalization) நடந்தபோதும் கூட, இந்த உட்கட்டமைப்பு மாதிரி முழுமையாக மாற்றப்படவில்லை. தேசியமயமாக்கலுக்குப் பிறகு, தோட்டங்கள் பல நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டன (SPC, JEDB), பின்னர் அவை மீண்டும் 1990 களில் பிராந்தியத் தோட்டக் கம்பனிகளிடம் (Regional Plantation Companies – RPCs) குத்தகைக்கு விடப்பட்டன. ஒவ்வொரு ஆட்சியிலும், இந்தச் சமூகத்தின் உட்கட்டமைப்புப் பொறுப்பைத் தோட்ட நிர்வாகத்திடம் இருந்து விலக்கி, தேசிய மற்றும் மாகாண அரசாங்கத்தின் உள்ளூர் நிர்வாக அமைப்புகளுடன் (பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி சபைகள்) முழுமையாக ஒருங்கிணைக்கும் ஒரு தெளிவான கொள்கை முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக, அத்தியாவசியச் சேவைகள் வழங்கல் பொறுப்பு சட்டரீதியற்ற முறையில் தோட்ட நிர்வாகம், மாகாண சபை, மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையே தெளிவின்றிப் பிரிந்து, ஒரு ‘பொறுப்பு வெற்றிடத்தை’ (Responsibility Vacuum) உருவாக்கியது.
உட்கட்டமைப்பு நெருக்கடி
தோட்டப் பிரதேசங்களில் காணப்படும் உட்கட்டமைப்பின் பற்றாக்குறை, டித்வா சூறாவளியின் போது உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்ததற்கான நேரடிக் காரணமாகும். இந்த நெருக்கடி பின்வரும் அம்சங்களில் காணப்படுகிறது.
வீதிப் போக்குவரத்து மற்றும் அணுகல் (Road Connectivity and Accessibility)
தோட்டங்களுக்குள் உள்ள வீதிகள் (Estate Roads), பெரும்பாலும் சரியான வடிகால் வசதி மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட மேற்பரப்பு இன்றி, களிமண் மற்றும் சரளைக் கற்களால் ஆனவையாக உள்ளன. இந்த வீதிகள், நீண்ட காலமாகத் தோட்டக் கம்பனிகளால் பெயரளவிலேயே பராமரிக்கப்படுகின்றன. டித்வா சூறாவளி போன்ற தீவிர மழை நிகழ்வுகளின் போது, பலவீனமான வடிகால் அமைப்புகள் மற்றும் சரிந்து விழும் கரைகள் காரணமாக, இந்த வீதிகள் உடனடியாக நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் துண்டிக்கப்படுகின்றன. உதாரணமாக, IOM மற்றும் ஐ.நா.வின் கள அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியில் கூட, உடனடி நிவாரணப் பொருட்கள் (Core Relief Items – CRIs) மற்றும் அவசர மருத்துவக் குழுக்கள் கண்டி, நுவரெலியா மற்றும் பதுளையில் உள்ள பல தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களை (Isolated Communities) சென்றடைவது கடினமாக இருந்தது. வீதிகள் துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவ அவசரநிலைகள் மற்றும் காயமடைந்தவர்களை வெளியேற்றுவது தாமதமாகி, அதிக உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. உட்கட்டமைப்பு தேசிய வீதி வலையமைப்பில் முறையாக இணைக்கப்பட்டிருந்தால், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் உள்ளூராட்சி சபைகள் போன்ற அரசாங்க நிறுவனங்கள் இவற்றை விரைவாகத் திறம்பட மீட்டெடுத்திருக்க முடியும்.
நீர், சுகாதாரம் மற்றும் வடிகால் வசதிகள் (WASH and Drainage)
சுகாதார வசதிகளின் நிலை தோட்டப் பகுதிகளில் மிகவும் மோசமாக உள்ளது. லயன் அறைகளின் வடிவமைப்பே, தனிப்பட்ட கழிப்பறை அல்லது சுத்தமான நீருக்கான வசதிகளை வழங்கவில்லை. நீர் வழங்கல் அமைப்புகள் பெரும்பாலும் திறந்த கால்வாய்கள், ஓடைகள் அல்லது அடிப்படைத் தொட்டிகளை நம்பியிருக்கின்றன. டிட்வாவின் கடுமையான வெள்ளப்பெருக்கின் போது, இந்த நீர் ஆதாரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அமைப்புகள் (Sewage Systems) உடனடியாக வெள்ள நீரில் கலந்து, குடிநீரைக் கடுமையாக மாசடையச் செய்தன. ஐ.நா.வின் அறிக்கைகள், பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா போன்ற தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்குச் சுத்தமான குடிநீரையும் சுகாதார ஆதரவையும் வழங்குவதன் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டின. முறையான, தேசியத் தரத்திலான குடிநீர் அதிகாரசபையின் (National Water Supply and Drainage Board – NWSDB) இணைப்புகள் இல்லாததால், மலையகச் சமூகம் டெங்கு போன்ற அனர்த்தத்துக்குப் பிந்தைய சுகாதார நெருக்கடிகளுக்கு ஆளாகிறது. வடிகால் அமைப்புகளின் பற்றாக்குறையும், வீடுகளைச் சுற்றியுள்ள மண் அரிப்பு அபாயத்தை அதிகரித்து, நிலச்சரிவுகளை மேலும் தூண்டுகிறது.
கல்வி மற்றும் சுகாதார வசதிகள் (Education and Health Facilities)
மருந்தகங்கள் (Dispensaries) தோட்ட நிர்வாகத்தின் கீழ் பெயரளவிலேயே இயங்கி வருகின்றன. இவை பல ஆண்டுகளாகத் தேவையான நிதி மற்றும் மனிதவள ஒதுக்கீட்டைப் பெறவில்லை டித்வா சூறாவளியின் போது, பல தோட்டப் பாடசாலைகள் சேதமடைந்து அல்லது தற்காலிகப் பாதுகாப்பு மையங்களாக (Temporary Safety Centre) பயன்படுத்தப்பட்டன. இது மாணவர்களின் கல்வித் தொடர்ச்சியைத் துண்டித்தது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Dispensaries), சிறிய கட்டமைப்புகளைக் கொண்டிருந்ததால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சேதமடைந்தன அல்லது இடம்பெயர்ந்தோரின் தேவைகளுக்குப் பதிலளிக்கப் போதுமான திறன் கொண்டிருக்கவில்லை .சுகாதார மற்றும் கல்விச் சேவைகளை முழுமையாக மாகாண அல்லது தேசிய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, தேசியப் பாடசாலைகள் மற்றும் பிராந்திய மருத்துவமனைகளுக்கு இணையான நிதி மற்றும் ஊழியர்களை வழங்காவிட்டால், இந்தப் பேரழிவுகள் இந்தச் சமூகத்தின் மனித மூலதனத்தின் (Human Capital) மீதான நீண்டகால விளைவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
சட்ட மற்றும் கொள்கைத் தடைகள்
தோட்ட உட்கட்டமைப்பு தேசிய வலையமைப்பில் ஒருங்கிணைக்கப்படுவதைத் தடுக்கும் முக்கியத் தடையாகச் சட்ட மற்றும் நிர்வாகக் குழப்பங்களே உள்ளன .தோட்டங்கள் பிராந்தியத் தோட்டக் கம்பனிகளுக்கு (RPCs) நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டபோது, அந்தக் குத்தகை ஒப்பந்தங்களில், தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி மற்றும் அடிப்படைச் சேவைகளை வழங்கும் பொறுப்பு ‘சமூகப் பொறுப்பாக’ (Social Obligation) கம்பனிகளின் மீது சுமத்தப்பட்டது. ஆனால், பல கம்பனிகள் இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழித்தன அல்லது பெயரளவிலேயே நிறைவேற்றின. இந்தச் சட்டபூர்வமற்ற ஏற்பாடு, உள்ளூராட்சி சபைகள் அல்லது மாகாண சபைகள், தோட்டங்களுக்குள் முதலீடு செய்வதற்கான தெளிவான சட்டபூர்வமான அதிகார வரம்பை (Jurisdiction) கொண்டிருக்கவில்லை என்ற நிலையை உருவாக்கியது. நிதி ஒதுக்கீட்டுக் கொள்கைகளின்படி, அரசாங்க நிதியானது உள்ளூராட்சிச் சபைகள் அல்லது பிரதேச செயலகங்கள் மூலம் மட்டுமே செலவிட முடியும் .பின்னர் 2018 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்ட திருத்தத்தின் மூலம் தோட்டங்களுக்குள் பிரதேச சபை நிதியைப் பயன்படுத்தி பணியாற்ற முடியும் என்ற வாய்ப்பு உள்ளது. எனினும், இந்த அரசாங்கம் அதனை முறையாக கையாளவில்லை.
இலங்கையின் அண்மைய கொள்கை ஆவணங்கள், குறிப்பாக தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டம் (National Disaster Management Plan – NDMP 2023-2030) போன்ற ஆவணங்கள், அனர்த்த முகாமைத்துவத்தின் அனைத்து நிலையகளிலும் ‘பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் சிறப்புக் கவனத்தையும்’ (Special Needs of Vulnerable Communities) ‘சமபங்கு அடிப்படையிலான அணுகுமுறையையும்’ (Equity-based Approach) வலியுறுத்தினாலும், நடைமுறையில் உள்ள உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பொறிமுறைகள் இந்தப் பரந்த நோக்கத்தைச் செயல்படுத்தத் தவறுகின்றன. உதாரணமாக, அனர்த்த காலங்களில் வீட்டுச் சேதங்களுக்கான இழப்பீடு அல்லது மீள்கட்டுமான மானியத்தைப் பெறுவதற்குச் சட்டப்பூர்வ நிலப் பத்திரம் கட்டாயமாக்கப்படுவதால், லயன் அறைகளில் வசிப்போர் இந்தக் கொள்கை நலன்களில் இருந்து விலக்கப்படுகிறார்கள். இந்த நிர்வாகத் தடைகள், உட்கட்டமைப்பு குறைபாடுகளால் பேரழிவுக்கு உள்ளாகும் மக்களை, மீட்சிப் பொறிமுறைகளில் இருந்தும் விலக்கி, அவர்களை ஆழமான வறுமைச் சுழற்சிக்குள் தள்ளுகின்றன. எனினும், பின்னர் அரசாங்கம் வெளியிட்ட விசேட வர்த்தமானி மூலம் லயன் வீடுகளுக்கும் நிவாரண கொடுப்பனவை பாதிக்கப்பட்ட அடிப்படையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு முன்னேற்றகரமான செயல்பாடு. இதனை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கான அரசாங்க மட்ட ஒழுங்குகள் செய்யப்படவேண்டும்.
உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும், அதன் பயன்பாட்டை உறுதிப்படுத்தவும், நீடித்திருக்கச் செய்யவும், நில உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும். ஒரு குடும்பம் அபாயகரமான லயன் அறையிலிருந்து பாதுகாப்பான இடத்தில் மீள்குடியேற்றப்பட்டாலும், அந்தப் புதிய குடியிருப்புக்குச் சட்டபூர்வமான, தடையற்ற பூரண காணி உறுதிப் பத்திரம் (Absolute and Unencumbered Land Deed) வழங்கப்படாவிட்டால், அந்தச் சொத்தின் மீதான அவர்களின் உரிமை நிரந்தரமாக இருக்காது. உரிமையின்மை என்பது வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறுவதற்கான தடையை ஏற்படுத்தி, வாழ்வாதாரத்தை பல்வகைப்படுத்துவதையும், குடும்பத்தின் பொருளாதார மீள்திறனையும் தடுக்கிறது. டித்வா பேரழிவுக்குப் பிந்தைய மீள்கட்டுமானமானது, இந்தச் சட்டபூர்வமான உரிமையின்மைப் பிரச்சினையை நிவர்த்தி செய்யாமல், வெறும் சுவர்களைக் கட்டினால், அது வேறொரு இடத்தில் வரலாற்று அநீதியைத் தொடரும் ஒரு ‘புதிய லயன் அறையாக’ மட்டுமே மாறும்.
சட்ட அங்கீகாரமும் நிர்வாக முடக்கமும்: 2018 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டத்தின் பின்னடைவுகள்
மலையகப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நீண்டகாலமாக முட்டுக்கட்டையாக இருந்த ‘தோட்டங்கள் தனியார் நிலங்கள்’ என்ற வாதம், 2018ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாகத் தகர்க்கப்பட்டுள்ளது (இது 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்கப் பிரதேச சபைகள் சட்டத்தைத் திருத்தியமைத்தது). இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தமானது, தோட்டப் குடியிருப்புகளை (Estate Settlements) பிரதேச சபைகளின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவந்ததோடு, பின்வரும் அதிகாரங்களை வழங்கியது:
விரிவாக்கம்: “தோட்டக் குடியிருப்புகளின் மேம்பாடு அல்லது பராமரிப்பு” மற்றும் தெரிவு செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் தோட்டக் குடியிருப்புகளின் “ஒருங்கிணைந்த அபிவிருத்தி” ஆகியவற்றை பிரதேச சபையின் பணிகளுக்குள் கொண்டு வந்தது.
நிதிப் பயன்பாடு: வீதிகள், கிணறுகள் மற்றும் ஏனைய பொது வசதிகளைத் தோட்ட மக்களுக்கு வழங்குவதற்காகப் பிரதேச சபையின் நிதியைப் பயன்படுத்தச் சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது.
செலவுப் பங்கீடு: கட்டுமான அல்லது பராமரிப்புச் செலவுகளுக்காகத் தோட்ட உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பாளர்களிடம் இருந்து பங்களிப்பைப் பெறவும், அதனை ஒரு விசேட வரியாக அறவிடவும் வழிவகை செய்யப்பட்டது.
இருப்பினும், டித்வா பேரழிவின் போது ஏற்பட்ட பாரிய உயிர் மற்றும் சொத்து இழப்புகள், இந்தச் சட்டத் திருத்தம் கடந்த ஏழு வருடங்களாகக் காகித அளவில் மட்டுமே உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இந்த அரசாங்கம் இந்தச் சட்ட மாற்றத்தை முறையாகக் கையாளத் தவறியுள்ளதோடு, அதற்கான நிதி ஒதுக்கீடுகளைத் தோட்ட மட்டத்திற்குக் கொண்டு செல்வதில் பாரிய நிர்வாக மெத்தனப்போக்கைக் காட்டியுள்ளது. சட்ட ரீதியான அனுமதி இருந்தும், மலையகத் தமிழ் மக்களின் குடியிருப்புகள் இன்றும் ஒரு ‘பொறுப்பு வெற்றிடத்தில்’ (Responsibility Vacuum) இருப்பதற்கு அரசாங்கத்தின் திட்டமிடப்படாத அணுகுமுறையே காரணமாகும்.
தோட்ட உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப் பிரதேச சபைச் சட்டம் மட்டுமன்றி, வேறு பல சட்ட ரீதியான பொறிமுறைகளும் இலங்கையில் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், இவை ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று ஒருங்கிணைக்கப்படாமல் இயங்குவது பேரழிவுக்கான தாக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது,
நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) சட்டம் (1978 இன் 41ஆம் இலக்கம்): திட்டமிடப்பட்ட நகர மற்றும் பிராந்திய அபிவிருத்திக்கு இது பொறுப்பாகும். தோட்டப் பகுதிகளை ‘நகர அபிவிருத்தி வலயங்களுக்குள்’ முறையாக உள்வாங்காதது ஒரு பாரிய கொள்கை இடைவெளியாகும்.
நகர்ப்புற குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் (2008 இன் 36 ஆம் இலக்கம்): குறிப்பிட்ட பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்த இது வழிவகை செய்கிறது. தோட்டக் குடியிருப்புகளை ‘நகர்ப்புறக் குடியிருப்புகளாகத்’ தரமுயர்த்துவதில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை.
மலையக அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் (2005 இன் 26 ஆம் இலக்கம்): மலையகப் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை அடையாளம் காணவும், ஒருங்கிணைக்கவும் இது உருவாக்கப்பட்டது.
இந்த அனைத்துச் சட்டங்களும் அதிகாரங்களும் இருந்தும், டித்வா சூறாவளியின் போது கண்டியில் 237 உயிரிழப்புகளும், நுவரெலியாவில் 89 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருப்பது, இந்த அதிகாரசபைகள் தோட்டப்பகுதிகளில் நிலவும் அனர்த்த அபாயங்களை அடையாளம் கண்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தத் தவறியுள்ளதையே காட்டுகிறது.
தொழில்நுட்பத் தரநிலைகள் மற்றும் தேசிய நீர்வழங்கல் ஒருங்கிணைப்பு
சட்டத் திருத்தம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தோட்ட வீதிகளைத் தேசிய வீதி வலையமைப்புடன் (National Road Network) தர ரீதியாக இணைப்பது காலத்தின் கட்டாயமாகும். டித்வா சூறாவளியின் போது, தோட்டங்களுக்குள் செல்லும் பாதைகள் முறையான வடிகால் வசதியின்றிச் சிதைந்ததால், பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்ற முடியாமல் போனது. 2018ஆம் ஆண்டின் 30ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) தொழில்நுட்பத் தரத்திற்குத் தரமுயர்த்தப்பட்டிருக்க வேண்டும். இதேபோல், தோட்டங்களில் உள்ள குடிநீர் திட்டங்களைப் பிரதேச சபைகள் பொறுப்பேற்று, அவற்றை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையுடன் (NWSDB) ஒருங்கிணைக்க வேண்டும். 2025 டிசம்பர் 6ஆம் திகதி நிலவரப்படி, கண்டி மற்றும் நுவரெலியாவில் நிலவும் குடிநீர் மாசடைவு மற்றும் தொற்றுநோய் அபாயத்தைத் தடுக்க இத்தகைய ஒருங்கிணைப்பு இன்றியமையாதது.
அனர்த்தத் தயார்நிலை: மொழி உரிமை மற்றும் நிர்வாகப் பொறுப்பு
பிரதேச சபை சட்டத் திருத்தத்தை முறையாகக் கையாள்வது என்பது, அனர்த்த முகாமைத்துவத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும் குறிக்கும். மலையகத்தில் அனர்த்தத் தயார்நிலை என்பது தொழில்நுட்பத்துடன், மொழிசார் உரிமையையும் (Language Rights) உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். டித்வா பேரழிவின் போது, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) ஆரம்ப எச்சரிக்கைகள் பல தோட்டங்களுக்குத் தமிழில் உரிய நேரத்தில் சென்றடையவில்லை. 2018ஆம் ஆண்டின் சட்டத் திருத்தம் வழங்கிய நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிரதேச சபைகள் தோட்ட மட்டத்திலான ‘அனர்த்த முகாமைத்துவக் குழுக்களை’ (CBDMCs) உருவாக்கி, தகவல்தொடர்பு மற்றும் வெளியேற்ற முறைகளைத் தமிழில் உறுதிப்படுத்தியிருக்க முடியும். அரசாங்கத்தின் இந்த நிர்வாகத் தோல்வியால், மலையகச் சமூகம் தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தின் (NDMP) பலன்களில் இருந்து அந்நியப்பட்டு நிற்கிறது.
முடிவுரை
மலையகத் தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பு என்பது இப்போது சட்டமின்மை தொடர்பான பிரச்சினை அல்ல; அது நடைமுறையில் உள்ள சட்டங்களை அமுல்படுத்தாத ‘நிர்வாகத் தோல்வி’ (Administrative Failure) தொடர்பான பிரச்சினையாகும். 2018ஆம் ஆண்டின் 30ஆம் இலக்கப் பிரதேச சபை சட்டத் திருத்தம் என்ற ஒரு பலமான அதிகாரம் கையில் இருந்தும், டித்வா பேரழிவின் போது அரசாங்கம் அதைப் பயன்படுத்தத் தவறியது ஒரு வரலாற்றுப் பிழையாகும். 643 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் 100,000 மேற்பட்ட வீடுகளின் அழிவு என்பது, இந்தச் சட்டங்களை முறையாகக் கையாளத் தவறியதன் விலையாகும். இவற்றுள் பெரும்பாலான லயன் வீடுகள் மற்றும் மலையக பிரதேசத்தில் உள்ள ஏனைய வீடுகளும் உள்ளடங்கும். எதிர்காலத்தில் இத்தகைய அழிவுகளைத் தவிர்க்க வேண்டுமாயின், அரசாங்கம் பிரதேச சபைச் சட்டம், UDA சட்டம் மற்றும் மலையக அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் ஆகியவற்றின் ஊடாகத் தோட்ட உட்கட்டமைப்பைத் தேசிய வலையமைப்பில் உடனடியாக ஒருங்கிணைக்க வேண்டும். நில உரிமை, தரமான வீதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தேசியத் தரத்தில் வழங்குவது என்பது தோட்ட மக்களுக்கு அரசு வழங்கும் சலுகை அல்ல; அது அவர்களின் சட்டபூர்வமான உரிமை.
அருள் கார்க்கி