Photo, @anuradisanayake

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (23/9) சரியாக ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் நேரடியாக முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 வாக்குகளை பெறாவிட்டாலும், இலங்கையில் இடதுசாரி அரசியல் இயக்கத்தின் தலைவர் ஒருவர் ஜனநாயக தேர்தலின் மூலம் முதற்தடவையாக ஆட்சியதிகாரத்துக்கு சந்தர்ப்பமாக அது இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.

அதேவேளை, தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக ஆயுதக் கிளர்ச்சியொன்றை நடத்திய இடதுசாரி அரசியல் இயக்கம் ஒன்று தேர்தலின் மூலம் அதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாகவும் திசாநாயக்கவின் அந்த வெற்றி இலங்கையை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறது. முன்னென்றும் இல்லாத வகையில் இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியைத் (2022 அறகலய) தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதியாக வந்த திசாநாயக்கவிடமும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும் மக்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக அதன் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர்கள் தாங்கள் உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆசனங்களைத் தந்தால் போதும் என்று வெளிப்படையாகவே கேட்டபோதிலும் கூட, நாட்டு மக்கள் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்தை வழங்கினார்கள். அதுவும் குறிப்பாக ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தாங்கள் மட்டுப்பாடில்லாத அதிகாரத்தை மக்களிடம் இருந்து கேட்கவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மைப் பலத்தை தந்தால் போதுமானது என்றும் கூறினார்.

“புதிய அரசியல் கலாசாரத்தையும் முறைமை மாற்றத்தையும்” கொண்டுவரப்போவதாக தேசிய மக்கள் சக்தி தேர்தல்களின்போது வழங்கிய வாக்குறுதியை மக்கள் எந்தளவுக்கு நம்பினார்களோ தெரியவில்லை. ஆனால், பழைய பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீது தங்களுக்கு இருந்த கடுமையான வெறுப்பையும் ஆத்திரத்தையும் தேர்தல்களில் அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தினார்கள்.

இத்தகையதொரு பின்புலத்திலேயே, ஜனாதிபதி திசாநாயக்கவின் ஒரு வருடகால ஆட்சியின் செயற்பாடுகளை நோக்க வேண்டும்.

கடந்த வருடம் இரு தேசிய தேர்தல்களிலும் நாட்டு மக்களுக்கு தாங்கள் வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளின் நடைமுறைச் சாத்தியமற்ற தன்மையை ஜனாதிபதியும் அரசாங்கத் தலைவர்களும் இப்போது ஒரு வருடம் கடந்த நிலையில் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்பலாம். பொருளாதார இடர்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கு விரைவான நிவாரணங்களை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த சனத்தொகையில் அதிகப் பெரும்பான்மையானவர்களுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் அந்த உடன்படிக்கையை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்போவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது. ஆனால், அதே உடன்படிக்கையின் நிபந்தனைகளை எந்த விதமான மாற்றமும் இன்றி பின்பற்றுவதை தவிர, புதிய அரசாங்கத்துக்கு வேறுவழி இருக்கவில்லை.

உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து நேர்மறையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்ற போதிலும், சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரங்களில் உருப்படியான எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகளையே தொடர்ந்து முன்னெடுக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் சொந்த பொருளாதாரக் கொள்கைகளை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது எவருக்கும் தெரியவில்லை. முன்னைய ஆட்சியாளர்களை மக்கள் வெறுத்து ஒதுக்கிய காரணங்களை நன்கு உணர்ந்தவர்களாக ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்கத் தலைவர்களும் தங்களது நிருவாகம் ஊழலுக்குள் சிக்கிவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுகிறா்கள். கடந்த கால ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதிலும் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகிறது. மற்றைய முனைகளில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு மந்தநிலை காணப்படுகிறது.

பதவிக்காலத்தின் முதல் வருடத்தில் ஒரு அரசாங்கத்திடமிருந்து நாம் எதிர்பார்பார்க்கக்கூடியவற்றுக்கு ஒரு மட்டுப்பாடு இருக்கிறது என்ற போதிலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு வருடகால செயற்பாடுகள் அதன் எதிர்காலத் திசைமார்க்கத்தை மதிப்பிடுவதற்கு ஓரளவுக்கேனும் போதுமானது என்பது நிச்சயம். ஜே.வி.பி.யின் கடந்தகால அரசியல் குறித்த பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், ஜனநாயக தேர்தல்களின் மூலமாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு அந்தக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறைகளையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பழைய பாரம்பரிய அதிகார வர்க்க அரசியல் கட்சிகளின் அரசாங்கங்களுக்குச் சேவை செய்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு முறைமை மாற்றத்தைக் கொண்டு வருவது என்பது நடைமுறையில் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதை ஜே.வி.பி.யின் தலைவர்கள் தற்போது தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். தங்களது கொள்கைகளின் பிரகாரம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தடையாக இருக்கும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பில் சீற்றமடைந்த ஜே.வி.பி.யின் முக்கிய அமைச்சர்கள் அண்மைக்காலங்களில் வெளியிட்ட கருத்துக்கள் அவர்களின் அந்த புரிதலின் வெளிப்பாடேயாகும். அடுத்த சுனாமி உயர்மட்ட அதிகாரிகளையே தாக்கும் என்று கூட ஒரு அமைச்சர் கூறினார். பழைய அரசு இயந்திரத்தைப் பொறுப்பேற்று நிருவகிப்பதையே ஒரு வருடகாலமாக தேசிய மக்கள் சக்தி செய்து வருகிறது.

இரு வாரங்களுக்கு முன்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சி, முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மாபெரும் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு முன்னெடுத்த அரசியலமைப்புச் சீர்திருத்த மற்றும் ஜனநாயக பரீட்சார்த்தங்களின் தோல்வியை உலகிற்கு அம்பலப்படுத்தியது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கடந்த நூற்றாண்டில் இரு தசாப்தகால இடைவெளியில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஒரு இடதுசாரி அரசியல் இயக்கம் என்ற வகையில் ஜே.வி.பி. நேபாள நிகழ்வுகளை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கையை பொறுத்தவரை, புதிய அரசியல் கலாசாரம் என்பது ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதுடன் மாத்திரம் நின்று விடுவதல்ல. இனத்துவ உறவுகளிலும் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த தேசிய இனப்பிரச்சினைக்கு காணப்பட வேண்டிய அரசியல் தீர்வுக்கான அணுகுமுறையிலும் ஏற்படவேண்டிய முக்கியமான மாற்றத்தை பிரதிபலிப்பதாக அந்தப் புதிய அரசியல் கலாசாரம் அமைய வேண்டும்.

முன்னைய ஆட்சியாளர்களைப் போலன்றி ஜனாதிபதி திசாநாயக்க சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக வட பகுதி தமிழர்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவதில் கூடுதல் அக்கறை காட்டுகிறார். பதவியேற்ற ஒரு வருடகாலத்தில் அடிக்கடி யாழ்ப்பாணத்துக்கு அவர் விஜயங்களை மேற்கொண்டிருக்கிறார். சகல சமூகங்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களது கொள்கை என்றும் ஓயாது பிரகடனம் செய்கிறார்.

ஆனால், கடந்த காலத்தில் அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட இனப்பாகுபாட்டுக் கொள்கைளினாலும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளினாலும் பாதிக்கப்பட்டு வந்திருக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் முகங்கொடுக்கும் பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு ஒரு இடைக்காலத் தீர்வுகளையேனும் காண்பதில் அக்கறை காட்டாமல் சகலரையும் சமத்துவமாக நடத்துவதாக பிரகடனம் செய்வதில் அர்த்தமில்லை என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

ஜே.வி.பி.யை பொறுத்தவரை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு குறிப்பாக அதிகாரப்  பரவலாக்கத்தை செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த ஒரு கசப்பான கடந்த காலத்தைக் அது கொண்டிருக்கிறது. ஆட்சியதிகாரத்துக்கு வந்த பின்னராவது அந்தக் கடந்த காலத்தில் இருந்து வேறுபட்ட ஒரு போக்கை கடைப்பிடிப்பதில் தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை ஜே.வி.பி. தலைவர்கள் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. ஜனாதிபதி திசாநாயக்க போன்றவர்களை இனவாதிகள் என்று கூறுவதை விடவும் இனவாதத்தின் கைதிகள் என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த இனவாதச் சிறைக்குள் இருந்து அவர்கள் வெளியில் வரவேண்டும்.

இனத்துவ உறவுகளும் தேசிய இனப்பிரச்சினையும் இதுகாலவரையில் சிங்கள அரசியல் சமுதாயத்தினாலும் தமிழ் அரசியல் சமுதாயத்தினாலும் கையாளப்பட்ட நடைமுறைகள் காரணமாக இலங்கையின் இனப்பிளவு தொடர்ந்தும் ஆழமானதாகவே இருந்துவருகிறது. இனத்துவ உறவுகளுடன் தொடர்புடைய விவகாரங்களில் வடக்கும் தெற்கும் இரு வேறு உலகங்கள் போன்றே காணப்படுகின்றன. அத்தகைய கவலைக்குரிய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கு சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மாத்திரமல்ல, பெரும்பான்மைச் சமூகத்தையும் பழைய சிந்தனைப் போக்கில் இருந்து விடுபட வைக்கக்கூடிய மார்க்கத்தில் பயணம் செய்வதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் இனிமேலாவது தயாராக வேண்டும்.

வீரகத்தி தனபாலசிங்கம்