Photo, TAMILGUARDIAN

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நான் செம்மணியில் நின்று அகழ்வாராய்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு மேலதிக செயல்முறைகளுக்காக பொதி செய்யப்பட்டிருந்தன. மிகவும் கடினமான மற்றும் சிரமமான பணி. என்னைச் சுற்றி நீதிபதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், பொலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும், “இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்களைப் புதைத்தவர்கள் யார்?” என்ற புதிரைத் தீர்க்க முயற்சிப்பதைப் பார்த்தேன்.

புதைக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இப்படியொரு நாள் வரும் என்று எப்போதாவது நினைத்திருப்பார்களா என்று நான் நினைத்தேன். அவர்களில் சிலர் இன்னும் தங்களின் பாடசாலைப் பைகளை சுமந்து கொண்டு செல்லும் குழந்தைகள் மட்டுமே.

சிறையில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் இந்த மனித புதைகுழியைப் பற்றியும் அதன் கீழ் புதைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பற்றியும் நீதிமன்றில் வைத்து அம்பலப்படுத்தினார். இது உண்மையா? இல்லையா? அவர் சொல்வது சரியா? இன்னும் பலர் நிலத்தின் கீழே புதைக்கப்பட்டிருக்கிறார்களா? இன்று வரை, தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூட்டுத்தொகுதிகள் எண்ணிக்கை 231 என அறிவிக்கப்பட்டுள்ளது (வீரகேசரி, செப்டம்பர் 04, 2025).

செப்டம்பர் 5, 1990 அன்று நான் கிழக்குப் பல்கலைக்கழக அகதிகள் முகாமில் நூற்றுக்கணக்கானோருடன் நான் இருந்தபோது என்ன உணர்வோடு இருந்தேன் என்பதில் என் மனம் அலைவதை என்னால் தடுக்க முடியவில்லை. அங்கிருந்து 158 பேர் ஆயுதப்படைகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று வரை, அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தபோது, அவர்களின் வாழ்க்கையையும் குடும்பங்களையும் பற்றி அவர்களின் மனங்களில் என்ன கடந்து சென்றிருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். இத்தனை வருடங்களாக அவர்களது குடும்பங்கள் தங்களின் கனத்த இதயங்களில் என்ன சுமந்துகொண்டிருப்பார்கள் என்பது பற்றியும் நான் நினைக்கிறேன். நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன் – என்னைப் பற்றி என்ன சொல்ல முடியும்?

நான் எப்போதாவது அவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்படுவதைப் பார்ப்பேனா அல்லது அவர்கள் உயிருடன் திரும்பி வருவதைக் கண்டு நான் ஆச்சரியப்படுவேனா? ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வரலாறு எப்போதாவது எங்கள் கதைகளைச் சொல்லும். நீதி நிஜமாக நிறைவேறாவிட்டால், பின்னர் தெய்வீகமாகவோ அது நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். அதைப் பார்ப்பதற்கு நான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வந்தாறுமூலையிலிருந்து அழைத்துச் சென்ற அந்த 158 பேரின் பாரம்பரியம் தொடரும். அரசாங்க அறிக்கைகளிலும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் அவர்கள் இன்னும் ‘காணாமல் போன நபர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தின் காணாமல் போனவர்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி நான் பட்டியலிட்ட நபர்களிடம் அதிகாரிகள் எப்போதாவது விசாரணை நடத்தியிருக்கிறார்களா? விசாரணை நடாத்தியிருந்தால் விசாரணை முடிவுகள் எங்கே? விசாரணை நடாத்தவில்லை என்றால் ஏன்? வேறொரு வழக்கில் ரத்நாயக்கே போன்ற ஒருவர் விரல் நீட்டி இது தான் நடந்தது என்று சொல்லக்கூடியவராக இருப்பாரா, அவர்களின் கடைசி நாட்களில் கூட ஆறுதல் பெற காத்திருக்கிறேன். வேறொரு வழக்கில் ரத்னாயக்கா அம்பலப்படுத்தியது போல ஒருவர், அவரது வாழ்க்கையின் இறுதியிலும் கூட, ஏதேனும் ஆறுதல் பெற முடியும் வகையில் விரல் நீட்டி உண்மையில் என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா? அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக நான் இன்னும் காத்திருக்கிறேன்.

செப்டம்பர் 5, 1990 மற்றும் அந்த நாட்களைச் சுற்றி எதையாவது பார்த்த மற்றவர்கள் அப்பகுதியில் உள்ளனரா, அன்றைய நாட்களின் என்ன நடந்தது என்பது பற்றி தகவல்களை  கொடுத்துதவ முடியுமா? வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத கதைகளிலிருந்து நாம் கேள்விப்பட்டது என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்கள் முதலில் வாழைச்சேனை காகித தொழிற்சாலை முகாமில் வைக்கப்பட்டு பின்னர் நாவலடி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 8, 1990 அன்று அகதிகள் முகாமுக்கு வந்த ஜெனரல் என்னிடம் சொன்னார், “அவர்கள் அனைவரும் எல்.ரி.ரி.ஈ. அவர்களைப் பற்றி கேட்காதே.” அவர் அவ்வாறு குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? நான் இதை ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், விசாரணையில் வேறு எதுவும் வெளிவராதது ஏன்?

பல சந்தர்ப்பங்களில், சிறுபான்மையினர், நாட்டில் எந்த உரிமையும் இல்லாத வெளியாட்கள் என்று கருதப்படுகிறார்கள். உதாரணமாக, முஸ்லிம்கள் அரேபியாவுக்கு செல்ல வேண்டும் என்றும், தமிழர்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு முன்னாள் அமைச்சர் ஒருமுறை கூறியது என் நினைவில் உள்ளது. வெறுப்புப் பேச்சு சட்டங்களின் கீழ் கூட அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது காணாமல் போனவர்கள் பற்றிய புதிய அலுவலகம் ஒன்று இருப்பதாக நான் பார்க்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிடமும் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்திடமும் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்னும் ஏன் நிலுவையில் உள்ளன அல்லது அதிகாரப்பூர்வமாக முத்திரையிடப்பட்டுள்ளன என்று ஆச்சரியப்படுகிறேன். இது சில சர்வதேச சட்டங்கள் அல்லது ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே செய்யப்படுகிறதா? புதிய அரசாங்கம் வித்தியாசமானதாக இருக்கலாம். எனவே, நான் ஓரளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களைப் புறக்கணித்து, மாகாண உரிமைகளை நிராகரித்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தயக்கம் காட்டுவது சந்தேகத்தை எழுப்புகிறது. இது புதிய பெயரின் கீழ் இயங்கும் அதே பழைய முறைமையா? இருப்பினும், 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை விசாரிப்பதாக ஜனாதிபதியின் சமீபத்திய வாக்குறுதி, காணாமல் போன 158 பேர் மற்றும் பல பேரின் குடும்பங்களுக்கு சிறிது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

1990 கிழக்குக்கு பயங்கரமான ஆண்டாக இருந்தது. முஸ்லிம் கிராமங்கள் இரண்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அகதிகள் முகாம் உருவாக்கப்பட்டது. தன்னாமுனை உட்பட தமிழ் பகுதிகளில் ஏராளமான கடத்தல்கள் மற்றும் கைதுகள் நடந்தன. இந்தச் சம்பவங்களைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது, சித்தாண்டி மற்றும் பங்குடாவெளி போன்ற இடங்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் உடலங்களை கண்டுபிடிப்பது ஒரு பணியாக இருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வ கோப்புகளை திறப்பது மற்றொரு பணியாகும். நாம் உடலங்களை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். அப்படி இடம்பெறாவிட்டால் கோப்புகளை ஒருபோதும் திறக்க முடியாது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உதவியுடன் செம்மணியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் போல, மனித புதைக்குழிகளைக் கண்டுபிடிப்பதற்கு அதிக ரேடார் உபகரணங்களைப் பயன்படுத்துவது ஒரு பரிந்துரையாகும். உண்மையைத் தேடுவதை விரைவுபடுத்தும் அத்தகைய முயற்சிகளுக்கு புலம்பெயர் சமூகம் நிதி வழங்கலாம்.

காணாமல் போனவர்களுடன் பணிபுரிபவர்கள் எல்லா பக்கங்களிலும் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்று அவர்களோடு பணிபுரிபவர்கள் எனக்குக் கூறினார்கள். குடும்பத்தின் வருமான மார்க்கமாக இருந்த, உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மைக்காக காத்திருக்கும் இந்த குடும்பங்களுக்கு OMP இடைக்கால மனிதாபிமான உதவியாக இழப்பீடுகளைக் கருத்தில் கொள்வது நல்லது.

மரண சான்றிதழுக்கு பதிலாக குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணாமல் போனவர்களின் சான்றிதழைப் பயன்படுத்தி நில பரிமாற்றங்கள், EPF மற்றும் ETF பணம் பெறுவதில் நிர்வாக இடையூறுகள் உள்ளன என்றும் எனக்கு அறியக்கிடைத்தது. இவற்றைத் தீர்க்குமாறு நான் அரசாங்கத்திடம் பணிவுடன் கோருகிறேன். ஏனென்றால், இந்த மக்கள் கடந்த 35 ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடி வருகிறார்கள், அவர்கள் அனுபவித்துவரும் வேதனைக்கு மேலதிகமாக அவர்கள் மற்றொரு சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கக் கூடாது.

வீடுகளை இழந்த எம்.பி.க்களுக்கு சில மாதங்களுக்குள் மில்லியன் கணக்கான இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்வது பொருத்தமானது. மோதலில் வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் இன்னும் கொடுப்பனவுகளுக்காக பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உண்மையான அரசியல் விருப்பம் இருந்தால், எப்போதும் ஒரு வழி இருக்கிறது. ஏற்கனவே 35 ஆண்டு சாதாரண வாழ்க்கையை இழந்த இந்த குடும்பங்களுக்கு அரசு அதை செய்து காட்ட வேண்டும்.

நான் எதையும் கேட்கவில்லை. ஆனால், பாடசாலை நாட்களில் நான் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. “கடவுள் உண்மையைப் பார்க்கிறார். ஆனால், காத்திருக்கிறார்.” நான் இதை நம்புகிறேன். என்றாவது ஒரு நாள், ஆணைக்குழு மூலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மை வெளியே வரும், செம்மணியில் நடந்ததைப் போல உலகம் உண்மையான கதையை அறியும். இந்த ‘மரகத தீவில்’ இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வேதனை என்றென்றும் மறைக்கப்படாது.

பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம்
* கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
* 1990 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை அகதி முகாம் பொறுப்பதிகாரி