Photo, THE GUARDIAN
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட போர் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதை கண்டிக்க தேசிய மக்கள் சக்தி அரசு தவறிவிட்டது. அது மூன்று வாக்கியங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
“மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து இலங்கை கடும் கவலையில் உள்ளது. அந்த நிலைமையை சமாளிக்க நிலையான நடவடிக்கைகள் எடுக்குமாறு நாம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம். மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், அமைதியை நிலைநாட்டி பராமரிக்க, தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்து, பின்வாங்காத இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.”
இந்த அறிக்கை ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு தாக்குதலை மறந்துவிட்டது மட்டுமல்லாமல், இந்த மோதலின் நெருங்கிய காரணமான காசாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை பற்றியும் ஒரு வார்த்தை கூட இல்லை.
நீதி மற்றும் அநீதிக்கு இடையேயான மோதலில் ஒரு தரப்பின் பக்கம் சாராதிருப்பது அநீதியின் சார்பாக நிற்பதே என்பது பழமையான உண்மை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இஸ்ரேல் நிறுவப்படுவதற்கு சோவியத் நாடும் பங்களித்தது. ஆனால், உடனே அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மத்திய கிழக்கில் தனது விரிவாக்கவாதத்தின் பிரதிநிதியாக அந்நாட்டை ஆக்கிக் கொண்டது.
இஸ்ரேலை நிறுவுவதற்கான முதல் நடவடிக்கையை எடுத்தவர்கள் யூத தேசிய அமெரிக்க – ஐரோப்பிய செல்வந்த குடும்பமான ரோத்சில்டுகள், பின்னர் யூத தேசிய அமெரிக்க செல்வந்தர்களான ராக்பெல்லர்கள். 1948இல் பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேல் நிறுவப்படுவதற்கு முன்பே அந்த மண்ணில் இந்த செல்வந்தர்களின் உதவியால் இஸ்ரேல் குடித்தொகைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஆரம்பகால யூத தேசியவாதிகள் விசா பெற்றே பாலஸ்தீனத்திற்கு வந்தார்கள்.
இன்று சர்வதேச சட்டத்தையும் கோரிக்கைகளையும் முற்றிலும் புறக்கணித்து கொடூரமான மற்றும் ஆக்கிரமிப்பு நடைமுறையை செயல்படுத்தும் இஸ்ரேலை இந்த நிலைக்கு உயர்த்தியதும், இன்றுவரை அதன் பாதுகாவலர்களாக சேவை செய்வதும் அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான். நாளொன்றுக்கு 10.8 மில்லியன் டாலர் வரை உதவிகள் வழங்கி மத்திய கிழக்கு மீதான தனது பலத்தை பிரயோகிப்பதற்கான ஒரு காரணியாக அமெரிக்கா இஸ்ரேலை ஆக்கிக் கொண்டது. அதாவது, வருடத்திற்கு 3.3 பில்லியன் டாலர். போர் உதவிக்காக வழங்கப்படும் பணத்தால் அமெரிக்க ஆயுதங்கள் மட்டுமே வாங்க முடியும்.
இதற்கு கூடுதலாக அயன் டோம் (Iron Dome), டேவிட்ஸ் ஸ்லிங் (David’s Sling), அயர்ன் பீம் (Iron Beam) என்ற ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு வருடத்திற்கு 500 மில்லியன் டாலர் அமெரிக்கா வழங்குகிறது. பைபிளில் வரும் டேவிட் என்ற இளைஞர் கோலியாத் என்ற அரக்கனை தோற்கடித்தமையை நினைவுகூர்ந்தே டேவிட் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஐந்து லட்சமளவு காசா பகுதியின் மக்களை கொலை செய்த – இனப்படுகொலை போரை நடத்துவதற்கு பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு போர் உதவிகள் மற்றும் போர் உளவுத் தகவல்களை இன்னும் வழங்கி வருகின்றன.
காசாவின் போரால் ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற சில நாடுகள் தவிர மற்ற அனைத்து ஐரோப்பிய நாடுகளின் மனித உரிமைத் திரையும் கிழிந்துவிட்டது.
1953 வரை ஈரானில் அரசியலமைப்பு அடிப்படையில் அமைந்த அரசொன்றே இருந்தது. நாட்டின் ஆட்சி நாடாளுமன்றத்திடம் இருந்தது. பிரதமர் மொசாடெக் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ஜனநாயக ஆட்சியாளராவார். அவர் மேற்கத்திய நாடுகளுக்குச் சொந்தமான எண்ணெய் தொழிலை அரசுடைமையாக்கினார். சோவியத் நாட்டுடன் நெருங்கிய உறவுகளை பராமரித்தார். ரேசா ஷா பகலவி அரச வம்சத்தின் மன்னராக இருந்தார்.
மொசாடெக் ஆட்சி கம்யூனிச சோவியத் நாட்டின் பக்கம் சாய்வதாக அஞ்சிய மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் 1953இல் சதி மூலம் அவரது ஆட்சியைக் கவிழ்த்து மேற்கத்திய சார்பு சர்வாதிகார அரசை நிறுவினர். அது மேற்கத்திய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் சார்பாக இருந்தது.
1979இல் ஈரானில் ஷா அரசுக்கு எதிராக பெரும் சமூகப் புரட்சி நடந்தது. அதன் தலைமைத்துவத்திற்கான போராட்டத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய குழுக்கள் முற்போக்கு குழுக்களை தோற்கடித்து அதிகாரத்தை கைப்பற்றின. பிரான்சில் வாழ்ந்த அயத்துல்லா கொமேனி மீண்டும் ஈரானுக்கு வந்து மேற்கத்திய எதிர்ப்பு தீவிர ஷியா மத அரசை நிறுவினார்.
அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றி அதை யஸீர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு வழங்கினார். இஸ்ரேலுக்கு ஒரு நாடாக இருக்க உரிமை இல்லை என்று அறிவித்தனர்.
மறுபுறம் ஷியா இஸ்லாமிய தலைவரான அயத்துல்லா கொமேனி மத மற்றும் அரசியல் வாழ்க்கை என்ற இரண்டிலும் விரிவான அதிகாரத்தை தன் கைகளில் எடுத்துக் கொண்டார். அவரை கேள்வி கேட்க முடியாது.
அதேபோல் இப்போது அதிகாரப்பூர்வமாக சர்வாதிகார ஆட்சி இல்லை என்றாலும் இஸ்ரேலும் தெளிவான சர்வாதிகார போக்குகளை காட்டுகிறது. நீதித்துறை சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கும், அதிகாரத்தை மையப்படுத்துவதற்கும் அரசு எடுக்கும் முயற்சிகள் நாட்டின் ஜனநாயக அடித்தளங்களை அரிக்கின்றன. தொடர்ந்து போர் நிலை நீடித்தால் இஸ்ரேல் விரைவில் முழு சர்வாதிகார ஆட்சிக்கு நுழைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை அறிகுறிகள் விடுக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் ஆளும் கட்சியான லிகுட், பாரம்பரிய தேசியவாதம் மற்றும் சியோனிசத்தில் வேரூன்றிய கருத்தியல் கொண்ட தீவிர வலதுசாரி கட்சி. அது இஸ்ரேலின் பாதுகாப்புக்கும் நாட்டின் யூத அடையாளத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது. பாலஸ்தீன நாடு உருவாகுவதை எதிர்க்கிறது. தற்போது பாலஸ்தீனத்திற்கு சொந்தமான மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
இஸ்ரேலில் மனிதாபிமானமற்ற நிலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன அரசியல் கைதிகளை தடுத்துவைத்துள்ளார்கள். அதற்கான கடுமையான அடக்குமுறை சட்டங்கள் அந்நாட்டில் இயற்றப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் உள்ள அடக்குமுறை நாடுகளுக்கு ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்குவது இஸ்ரேலின் மற்றொரு பங்கு. இலங்கையின் போர் காலத்தில் இஸ்ரேல் மொசாட் உளவு சேவை அரசின் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியது. இன்றுவரை மொசாட் உளவு சேவை இந்நாட்டில் செயல்படுகிறது.
கடுமையான ஹிஜாப் சட்ட மீறல் குற்றச்சாட்டின் பேரில் காவலில் இருந்தபோது இறந்த மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு 2022 செப்டெம்பர் மாசத்தில் தொடங்கிய “பெண், வாழ்க்கை, சுதந்திரம்” என்ற ஈரானிய பெண் எழுச்சியை அடக்குவதற்காக 500க்கும் மேற்பட்ட பெண்களை கொமேனியின் ஆட்சி கொன்றது. 20,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஹிஜாப் சட்ட மீறலுக்கான சட்ட தண்டனைகள் அதிகரிக்கப்பட்டன.
ஈரான் பல நாடுகளின் ஷியா இஸ்லாமிய தீவிரவாத ஆயுதப் போராட்டங்களுக்கு உதவுகிறது. காசாவின் ஹமாஸ் அமைப்பும் இஸ்லாமிய தீவிரவாதக் கருத்தியல் கொண்டது. முற்போக்கு மற்றும் தாராளவாத பாலஸ்தீன விடுதலை அமைப்பை பலவீனப்படுத்த இஸ்ரேல் ஹமாஸ் என்ற அமைப்பை உருவாக்கியதாக சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள், ஆப்கானிஸ்தானின் முஜாஹிதீன் கெரில்லாக்களை தீவிரவாத தலிபானாக அமெரிக்கா உருவாக்கியது போல.
இந்த அனைத்து நிலைமைகளுக்கு மத்தியில் ஈரான், கடந்த சில வாரங்களுக்குள் இஸ்ரேலின் வெல்ல முடியாத தன்மையை தவிடுபொடியாக்கியது. அமெரிக்க தடைகளால் அழுத்தப்பட்ட ஈரானில் இவ்வளவு போர் சக்தி உள்ளது என்று அமெரிக்காவோ இஸ்ரேலோ கற்பனை செய்யவில்லை.
எத்தனை ஏவுகணைகள் இலக்கை நோக்கி சென்றாலும் இந்தப் போரின் பலிகளாக ஆகப்போவது இரு நாடுகளிலும் சிறுபான்மையினரான சுதந்திர விரும்பிகளான மக்கள். கொமேனியும் நெதன்யாகுவும் மேலும் தங்கள் தீவிரவாத மற்றும் சர்வாதிகார அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
ஈரானிய சுதந்திர சிந்தனையாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இட்ட இந்தக் குறிப்பு இந்த குறுகிய பகுப்பாய்வை முடிக்க பொருத்தமாக இருக்கும்.
“ஈரானியனாக, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது, நிலைமை இனி அரசியல் இல்லை என்பதுதான். அது எங்கள் இருப்பு. நாம் உடைந்து விழும் இரண்டு கட்டமைப்புகளுக்கு இடையே சிக்கிக் கொண்டுள்ளோம்: ஒன்று உட்புறம், ஒன்று வெளியே. ஒருபுறம், நாம் உச்ச தலைவர் மற்றும் இஸ்லாமிய குடியரசின் தேர்ந்தெடுக்கப்படாத நிறுவனங்களால் இயக்கப்படும் ஆழமாக அடக்குமுறை அரசை எதிர்கொள்கிறோம்.”
“பல தசாப்தங்களின் மோசமான பொருளாதார மேலாண்மை, எதிர்ப்பை அடக்குதல் மற்றும் கொடூரமான கருத்தியல் ஆட்சி தலைமுறைகளை அந்நியப்படுத்தி உள்ளது. யாரும் இனி சீர்திருத்தங்களை நம்பவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு முயற்சியும் நசுக்கப்பட்டுள்ளது.”
“ஆனால் இங்கே முரண்பாடு: ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்த ஈராக், லிபியா, சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மேற்கத்திய தலையீடுகளின் விளைவுகள் குறித்து எமக்கு அனுபவம் இருப்பதால், ஆட்சி முறை சரிவது குறித்து நாம் அச்சம் கொள்கிறோம். அந்த நாடுகள் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தன. உள்நாட்டுப் போர் நிரந்தரமானது, அல்லது வெளிநாட்டு படைகள் வந்து குடியேறின. நாம் அமெரிக்காவையோ இஸ்ரேலையோ நம்பவில்லை. ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கை ‘விடுவித்த’ நாடுகளை எவ்வாறு நடத்துகின்றன என்பதை நாம் அறிவோம்.”
பயங்கரமான தேர்வுகளையே போர் நம் முன் வைத்திருக்கிறது.
சுனந்த தேசப்பிரிய