Photo, REUTERS
இலங்கை அரசியலில் அண்மைய நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல், பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பித்த அரசாங்கத்தின் செயல், இரு வாரங்களாக தலைமறைவாக இருந்த இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை, முன்னாள் இராணுவ தலைவர்கள் சிலர் மீது பிரிட்டன் விதித்திருக்கும் தடைகள் ஆகியவையே அந்தச் சம்பவங்களாகும்.
முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க பெப்ரவரி மாதம் லண்டனில் வைத்து அல் ஜசீராவின் ‘ஹெட் ரு ஹெட்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல் மார்ச் 6 ஆம் திகதி ஒளிபரப்பானது. தனது அரசியல் அனுபவம், அறிவு மற்றும் சாதுரியத்தில் அதீத நம்பிக்கை கொண்டவரான விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, அவருக்கு விரோதமான சபையோரின் முன்னிலையில் இடம்பெற்ற அந்த நிகழ்ச்சி உண்மையில் பெரிய அனர்த்தமாக போய்விட்டது. அல் ஜசீரா செய்தியாளர் மெஹ்டி ஹசன் பிறப்பதற்கு முன்னரே தான் அரசியலுக்கு வந்து விட்டதாக அவரிடம் கூறவேண்டிய அளவுக்கு ஒரு நிர்ப்பந்த நிலை விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது பரிதாபமானதாகும். நேர்காணலைப் பற்றி உள்நாட்டில் விமர்சனம் செய்தவர்களில் அனேகமாக சகலருமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவர் இணங்கியிருக்கக் கூடாது என்றே கூறினார்கள்.
மெஹ்டி ஹசன் விக்கிரமசிங்கவை நேர்காணல் செய்த விதம் பெருமளவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. கேள்விகளுக்கு பதிலளிப்பவர் தனது பதிலை நிறைவு செய்யவிடாமல் அட்டகாசமான முறையில் குறுக்கீடு செய்வதும் ஒரு எதிரியை நோக்கி கேள்வி கேட்பதைப் போன்ற தொனியில் மூத்த அரசியல் தலைவர்களுடன் பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஊடகத்துறைச் செயற்பாடாக இருக்க முடியாது.
இரு மணித்தியாலங்கள் பதிவுசெய்யப்பட்ட தனது நேர்காணலில் முக்கியமான பகுதிகளை திட்டமிட்டு நீக்கிவிட்டு அல் ஜசீரா ஒரு மணித்தியாலமே அதை ஒளிபரப்பியதாக விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார். ஆனால், ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.)வின் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் (1988 – 1990) கம்பஹா மாவட்டத்தில் உள்ள பட்டலந்த பிரதேசத்தில் இயங்கிய தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை முகாம் தொடர்பாக தொடுக்கப்பட்ட கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி அளித்த நழுவல் போக்கிலான பதில்தான் இறுதியில் 27 வருடங்கள் பழமையான பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தூசி தட்டி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கத்துக்கு தைரியத்தைக் கொடுத்தது.
அல் ஜசீரா நேர்காணல் ஒளிபரப்பாகாமல் இருந்திருந்தால் ஆணைக்குழு அறிக்கை தற்போதைக்கு வெளியில் வந்திருக்குமா என்பது சந்தேகமே. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 1995 செப்டெம்பரில் நியமிக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழு அதன் அறிக்கையை 1998ஆம் ஆண்டில் அவரிடம் கையளித்தது. ஆனால், அதன் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் திருமதி குமாரதுங்கவோ அல்லது அவருக்கு பிறகு ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர்களோ ஒருபோதும் அக்கறை காட்டவில்லை.
ஆனால், ஆணைக்குழு அறிக்கையின் மென்பிரதிகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் ஏற்கெனவே பகிரப்பட்டிருந்தது என்கிற அதேவேளை, விக்கிரமசிங்க தன்னிடம் பட்டலந்த முகாம் பற்றி மெஹ்டி ஹசன் கேட்டபோது “ஆணைக்குழுவின் அறிக்கை எங்கே?” என்று பொருத்தமில்லாத வகையில் பதில் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் முன்னாள் பி.பி.சி. செய்தியாளராக பணியாற்றிய பிரான்சிஸ் ஹரிசன் ஆணைக்குழு அறிக்கையின் பிரதி ஒன்றை அவருக்கு காண்பித்தபோது “அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை” என்று விக்கிரமசிங்க கூறினார்.
பட்டலந்த விவகாரத்தில் உரக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான வீடமைப்பு தொகுதியை பொலிஸார் பயன்படுத்துவதற்கு அனுமதித்ததில், அன்றைய கைத்தொழில்துறை அமைச்சர் என்ற வகையில், உரிய நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்று மாத்திரமே தன் மீது அறிக்கையில் குறை கூறப்பட்டிருப்பதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இனிமேல் தான் பட்டலந்த விவகாரம் குறித்து எதுவும் பேசப் போவதில்லை என்று சில தினங்களுக்கு முன்னர் ‘அத தெரண’ வின் ஹைட் பார்க் 24 நேர்காணலில் கூறினார். அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 10ஆம் திகதியும் பிறிதொரு தினத்திலும் விவாதம் நடைபெறவிருக்கிறது.
ஆணைக்குழுவின் அறிக்கையில் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் ஜே.வி.பியினர் செய்த அட்டூழியங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதால் நாடாளுமன்ற விவாதத்துக்குப் பிறகு எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு சிக்கலை எதிர்நோக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விக்கிரமசிங்கவுக்கு பிரச்சினையைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் அரசாங்கம் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் அவசரம் காட்டியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அவரது குடியியல் உரிமைகளை பறிக்க முடியும் என்று கூட அரசாங்க அரசியல்வாதிகள் சிலர் பேசினார்கள். தென்னிலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கையில் அக்கறை காட்டுகின்ற அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்நாட்டுப்போரின் போது இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பல்வேறு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விடயத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி.
உதாரணத்துக்கு கூறுவது என்றால், சர்வதேச சமூகத்தின் நெருக்குதலை அடுத்து 15 பிரத்தியேகமான உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2006ஆம் ஆண்டில் நியமித்த உடலாகம ஆணைக்குழு அறிக்கை, போரின் முடிவுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டில் அவர் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு 2013ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை, முன்னைய ஆணைக்குழுக்கள் சகலவற்றினதும் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டில் நியமித்த நவாஸ் ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்த அறிக்கை என்று போர்க்கால மீறல்கள் தொடர்பிலான பல அறிக்கைகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன.
அரசியல் அனுகூலத்துக்காக ‘தெரிந்தெடுத்த முறையில்’ பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையில் எடுத்திருக்கிறது. உரிமை மீறல்கள் என்று வருகின்றபோது பாரபட்சமின்றி முன்னைய சகல ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும் கவனத்தில் எடுக்கக்கூடிய அரசியல் துணிவாற்றல் அரசாங்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
அடுத்ததாக, பொலிஸ்மா அதிபர் தேசபந்து விவகாரத்தைப் பொறுத்தவரை, அவர் வீட்டில் இருந்து மூன்று வேளை உணவையும் வரவழைத்துக்கொண்டு விளக்கமறியலில் இருக்கிறார். முக்கியமான புள்ளிகள் விளக்கமறியலுக்கு அனுப்பப்படும்போது அவர்களை உடனே தொற்றிக்கொள்ளும் ஒருவகை ‘நோய்’ தேசபந்துவை பீடிக்கவில்லை. இன்னமும் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை.
அவரை பதவி நீக்குவதற்கான பிரேரணையை ஆளும் கட்சியின் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள். அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியதை அடுத்து தேசபந்துவை பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி விக்கிரமசிங்க நியமித்தார். அந்த அங்கீகாரத்தை வழங்குவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சபாநாயகர் நடந்துகொண்ட முறை குறித்து சர்ச்சை கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், அவரது நியமனத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் ஒன்பது அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் அவர் பொலிஸ்மா அதிபராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அவர் பொலிஸ்மா அதிபராக பதவியில் இருப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது என்பதால் அவருக்கு எதிராக பூர்வாங்க சான்றுகள் இருப்பதாகவும் அந்த பிரேரணையில் கூறப்பட்டிருக்கிறது.
தேசபந்து தனது நடத்தைகள் மூலமாக பொலிஸ்மா அதிபர் பதவிக்கும் பொலிஸ் திணைக்களத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாகவும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குறிப்பிட்ட சில நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்றும் பிரேரணையில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறார்கள். குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கு சபாநாயகர் குழுவொன்றை நியமித்து அதன் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பதே நடைமுறை.
ஆனால், தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பிரேரணை ஏப்ரல் 8, 9ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொலிஸ்மா அதிபர் ஒருவர் இரு வாரங்களாக தலைமறைவாகி இருந்து இறுதியில் ஆடம்பர வாகனம் ஒன்றில் வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தது உலகிலேயே இலங்கையில்தான் முதற் தடவையாக நடந்திருக்கிறது எனலாம்.
இது இவ்வாறிருக்க, கடந்த வாரம் இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவ தலைவர்களுக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்கு தளபதி கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் எதிராக பிரிட்டன் தடைகளை விதித்திருக்கிறது.
ஆயுதப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோரே தடைகள் விதிக்கப்பட்ட இராணுவ தலைவர்களாவர். பிரிட்டனுக்கான பயணத்தடையும் சொத்துக்கள் முடக்கமும் இந்த தடைகளில் அடங்கும். “உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூற வைத்தல் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய இராச்சிய அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருக்கிறது” என்று மார்ச் 24ஆம் திகதி தடைகள் விதிப்பை அறிவித்த வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் இணையமைச்சர் டேவிட் லாமி கூறினார்.
வெளிநாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக இவ்வாறு தடைகளை விதிப்பது இதுதான் முதற்தடவை அல்ல. ஏற்கெனவே சவேந்திர சில்வாவுக்கு எதிராக 2020 பெப்ரவரியில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகளை விதித்தது. அதன் பிரகாரம் அவரும் உடனடிக் குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியாது.
அதேபோன்றே முன்னாள் ஜனாதிபதிகளான சகோதரர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் 2023 ஜனவரி 10ஆம் திகதி கனடா அதன் விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடைகளை விதித்தது.
தற்போது மூன்று இராணுவ தலைவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை ஆட்சேபித்திருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சு வெளிநாடுகளினால் இவ்வாறாக ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கச் செயன்முறைகளுக்கு உதவப்போவதில்லை, மாறாக அந்த செயன்முறைகளை சிக்கலாக்கும் என்று கூறியிருக்கிறது. இது தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக்கிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்தும் செயன்முறைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது என்றும் கடந்த காலத்தின் எந்தவொரு மனித உரிமை மீறலும் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாகவே கையாளப்பட வேண்டும் என்றும் ஹேரத் கூறியிருக்கிறார்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான செயன்முறைகளைப் பொறுத்தவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடு முன்னைய அரசாங்கங்களின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபட்டதாக அமையப்போவதில்லை. சில வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஹேரத் இதைத் திட்டவட்டமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் வெளிநாடுகள் தடைகளை விதித்த முன்னைய சந்தர்ப்பங்களில் கிளம்பியதைப் போன்ற கண்டங்கள் சிங்கள தேசியவாத சக்திகளிடமிருந்து தற்போதும் கிளம்பியிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவந்த இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர்களை ஐக்கிய இராச்சியம் எவ்வாறு தண்டிக்க முடியும் என்று மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வழமை போன்று விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் பிரிட்டனை கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னரான மக்கள் கிளர்ச்சியையும் கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களையும் அடுத்து பெரும் பின்னடைவைக் கண்ட தேசியவாத சக்திகள் மீண்டும் அரசியலில் தலையெடுப்பதற்கு இத்தகைய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தும் என்பது தெரிந்ததே. முன்னாள் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக தடைகளை விதித்த பிரிட்டனை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையாக கண்டனம் செய்யவில்லை என்று விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் கூட அண்மைக் காலமாக சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலக நாடுகள் மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கையுடன் பாரபட்சமான முறையில் நடந்துவருவதாக குற்றம் சாட்டிவருகிறார். மத்திய கிழக்கில் காசா போர் மற்றும் உக்ரைன் போரைப் பொறுத்தவரை ஒரு விதமாகவும் இலங்கை விவகாரத்தில் வேறு வீதமாகவும் மேற்குலகம் இரட்டைத்தனமாக செயற்படுவதை சுட்டிக்காட்டும் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை வெளியேற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். டொனால்ட் ட்ரம்ப் மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேற முடியுமானால் இலங்கையினால் ஏன் முடியாது என்று அவர் கேள்வியும் வேறு எழுப்புகிறார்.
அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக வெளிநாடுகள் விதித்த முன்னைய தடைகளினால் இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதில் எந்தளவுக்கு நிர்ப்பந்திக்க முடிந்தது? என்ற ஒரு கேள்வி இருக்கிறது. தேசியவாத சக்திகள் மீண்டும் தலையெடுப்பதற்கான வாய்ப்புக்களை தோற்றுவிப்பதை தவிர இந்தத் தடைவிதிப்புகளினால் வேறு எதையும் உருப்படியாகச் செய்ய முடியாமலும் போகலாம். ஏனென்றால், இலங்கையில் எந்தவொரு அரசாங்கமும் உள்நாட்டுப் போரின்போது உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினர் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நெருக்குதல்கள் அதிகரிக்குமானால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மேலும் தீவிரமான தேசியவாத நிலைப்பாட்டை நோக்கிச் செல்லக்கூடிய சாத்தியமே இருக்கிறது.
ஐக்கிய இராச்சியம் கடந்தவாரம் விதித்த தடைகளை தமிழ் அரசியல் கட்சிகள் வழமை போன்று வரவேற்றிருக்கின்றன. கடந்த பதினாறு வருடகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தமிழர்கள் நெடுகவும் கானல் நீரை விரட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான் விதியோ என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.
வீரகத்தி தனபாலசிங்கம்