Photo, SELVARAJA RAJASEGAR

2023ஆம் இலங்கை எதிர்கொண்ட, நாட்டினுள் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை, ஆவணப்படங்களை, வீடியோ நேர்க்காணல்களை, புகைப்படங்களை ‘மாற்றம்’ தளம் வெளியிட்டிருந்தது. குறிப்பாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது, தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வைப்பதில் அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகள், அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நழுவல் போக்கு போன்றவை பற்றி குறிப்பிடலாம். அதேபோல 2023ஆம் ஆண்டு இலங்கை, 75ஆவது வருட சுதந்திர தினத்தை சந்தித்ததோடு, அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட – இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்காத கறுப்பு ஜூலை இடம்பெற்று 40 ஆண்டுகள் நிறைவையும் கண்டிருந்தது. இவை தொடர்பாக மாற்றுக் கண்ணோட்டத்தில் அணுகி மாற்றம் கட்டுரைகளையும் நேர்க்காணல்களையும் வெளியிட்டிருந்தது.

மலையகம் மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் நிறைவானதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணமும் கடந்த வருடமே இடம்பெற்றிருந்தது. 12 நாட்களாக இடம்பெற்றுவந்த இந்த நடைபயணம் மற்றும் பிரகடனம் வெளியீடு தொடர்பான பதிவுகள் தொடர்ச்சியாக மாற்றம் சமூக வலைதளங்களில் அப்டேட் செய்யப்பட்டு வந்தன. அத்துடன், 200 வருட நிறைவை முன்னிட்டு ஏராளமான கட்டுரைகளும் நேர்க்காணல்களும் வெளிவந்திருந்தன.

அதேவேளை, தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புகள், அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படையினர் அவற்றுக்கு அனுசரணை வழங்குவது தொடர்பிலும் மாற்றம் கடந்த வருடம் அவதானம் செலுத்தியிருந்தது. குறிப்பாக, குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலையை வைத்து சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலை செயற்படுத்திவரும் தொல்பொருள் திணைக்களம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு, 2500 நாட்களுக்கும் மேலாக தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கில் போராடிக்கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களுடைய உறவுகளின் குரல்களுக்கும் எப்போதும் போன்று மாற்றம் செவிசாய்த்திருந்தது.

பொருளாதார நெருக்கடி, உரிமை மறுப்பு, பொலிஸ் தடுப்பின் போதான மரணங்கள் மற்றும் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்வினையை, கருத்துப்பகிர்வை, கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அடக்கியொடுக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் 2023 கொண்டுவந்திருந்தது. பின்னர் சிவில் சமூகத்தினர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மக்களது எதிர்ப்பின் காரணமாக அரசாங்கம் பின்வாங்கியிருந்தது. இது தொடர்பாகவும் மாற்றம் கவனம் செலுத்தியிருந்தது.

2023 மாற்றம் தளத்தில் வெளிவந்திருந்த கட்டுரைகளுள் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.



2023 A Recap