பட மூலம், Selvaraja Rajasegar
நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த நாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும் என்ன தெரிகின்றது என்பதையே இக்கட்டுரை அலசுகின்றது.
18 மே 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்படுகையில், தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும், தமிழகத் தமிழர்களிடமும்தான் கையளிக்கப்பட்டது. இது இயற்கையான போக்கில் நிகழ்ந்ததுதான். ஆனால் அனைத்துத் தரப்புமே இந்தக் கைமாற்றலைக் கைவிட்டனர். பெரும் பேரவலத்தோடு நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் அரசினாலும், இராணுவத்தாலும் உருவாக்கப்பட்ட திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் இருந்து மக்களை மீட்டெடுக்கவே யாரும் முன்வரவில்லை. பணவசதியுள்ளவர்கள் பணத்தைக்கொடுத்துத் தப்பித்துக்கொள்ள, பணமற்ற சாதாரணர்கள் அதற்குள்ளேயே வருடக்கணக்கில் அடைபட்டுக்கிடந்தனர். அதற்குள்ளேயே கடத்தப்பட்டனர். காட்டிக்கொடுப்பவர்களின் கைவரிசைகளினால் காணாமலும் போயினர். ஒருநாள் ‘அமைப்பில்’ இருந்தவர்களும் இராணுவத்தின் அறிவிப்பை நம்பி வெள்ளைவான் ஏறினார்கள். அவர்கள் மீண்டுவரவேயில்லை. நலன்புரி நிலையங்களுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் வருகைதந்த போதிலும் விலங்குக் காட்சிசாலை பார்க்கவே வந்தார்கள். உலகம் நடத்திய போரொன்றிலிருந்து தப்பிவந்த மனிதர்களைப் பார்க்க வரவில்லை. இறுதியில் அரசின் நலன்புரி நிலையப் பணிகள் நன்றாக உள்ளதென சான்றுப்பத்திரம் கொடுத்துப்போயினர்.
ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின்னர், அரசியல் தளத்தில் இனவிடுதலைக்கான போர் முன்னெடுக்கப்படும் என்றே தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், போரில் கொலைக்கு மேல் கொலை செய்து களைத்துப் போய் அரசியலுக்கு வந்திருந்த சரத்பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தும், அவரால் பாதிக்கப்பட்ட மக்களை அவருக்கு வாக்களிக்க கோரியபோதிலும் கூட்டமைப்புக்கு இருந்த வரலாற்றுப் பெறுமதியை அது தவறவிட்டது. அந்த சந்தர்ப்பத்தோடு, தமிழ் தேசிய தேர்தல் அரசியலின் அடையாளமாகிவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதையவும் தொடங்கியது. அதற்கு மாற்று அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தன்னைப் பிரகடனம் செய்தது. பத்தாண்டுகளாக அப்பிரகடனம் நீடித்துக்கொண்டேயிருக்கிறது. அதன் பின்னரான காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் புதியவர்கள் நுழைந்தார்கள். உயிர்த்தியாகத்தாலும், ஆயுதப் போரினாலும் வளர்ந்த தமிழ் தேசியம் என்கிற விடுதலைத் தத்துவத்தை விலைபொருள் ஆக்கினர். வியாபாரம் பேசினர். ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் 2009க்குப் பின் சேர்ந்தவர்களில் பலர் தேர்ந்த வியாபார விற்பன்னர்களாயிருந்தனர். எனவே, முள்ளிவாய்க்காலின் பின்னான விடுதலைத் தேசியம் வியாபாரத் தேசியமானது. 2015 வரைக்கும் அது வளைந்து நெளிந்து நிமிரும் என்ற நம்பிக்கை தென்பட்டாலும், குறித்த ஆண்டில் ஏற்பட்ட நல்லாட்சிக்கு அது வழங்கிய ஆதரவிலிருந்து முற்றாகவே தமிழ்தேசியம் நீர்த்த கட்சியாக மாறியது. சிங்களத்தேசியம் என்கிற பெருந்தேசியத்துக்குள் தன்னை நிர்மூலப்படுத்திக்கொள்ள சதாகாலமும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. அப்படி நிர்மூலப்படுத்திக்கொள்வதில் தமிழ் தேசிய விடுதலை விற்பன்னர்களுக்கு பெரும் இலாபமிருந்தது.
இந்தப் போக்கில் விமர்சனமுள்ளவர்கள் வெளியே வந்தார்கள். புதிய கட்சிகள் தொடங்கினர். இரத்தமாகப் பாய்ந்த பெருநதி சிறுசிறு கிளையாகி வற்றிவரளும் நிலையை எட்டியது.
அரசியல் இப்படியே நிர்மூலமாகப் பொருளாதாரமாவது தளிர்த்ததா என்று பார்த்தால் அதுவும் அதளபாதாளத்தில் விழுந்தது.
வடக்கு, கிழக்கு முழுவதும் கிளைபரப்பிய தெற்கு முதலாளிகளின் வங்கிகளும், பன்னாட்டு நிதிநிறுவனங்களும் போரில் எஞ்சியிருந்த மக்களையும் சுரண்டித்தீர்த்தன. வடக்கு, கிழக்கில் இருந்த தமிழர்களின் பெருவணிகம் என நம்பப்பட்ட அனைத்துமே பலத்த அடியை வாங்கின. மீள முடியாதளவுக்கு வீழ்ச்சியைக் கண்டன. தமிழ் சமூகம் தனக்கு கீழான சுயபொருளாதார கட்டமைப்பில் எப்போதும் பலமாக இருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இந்தப் பத்தாண்டுகளுக்குள் அந்த அடித்தளமே சிதறடிக்கப்பட்டிருக்கிறது. இலகு கடன்கள், நுண்கடன்கள் பெண்களை அதிகளவில் இலக்காக்கின. கிராமிய அளவில் படலை வரை வந்து நின்ற இலகுகடன்கள், இலகுவிலேயே தமிழ் பெணகளைத் தம் வசப்படுத்தியது. பெற்ற கடனை மீள செலுத்தமுடியாத கடனாளிகளை தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு உளஅழுத்தத்தைக் கொடுத்தது. பல பெண்கள் கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள். தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அரசு குறித்தளவிலான கடனைப் பொறுப்பெடுததுக்கொண்ட போதிலும், இப்போதெல்லாம் இரவில் கடன் வசூலிப்பு இடம்பெறுகிறது. உடற்பாகங்களை விற்று கடனை மீளச்செலுத்தும் பெண்களையும் இந்தப் பத்தாண்டுகளுக்குள் தமிழ் சமூகம் கண்டிருக்கிறது.
போரில் ஈடுபட்ட தரப்பினராகிய முன்னாள் போராளிகள் என்றொரு வகுப்பினரும் தமிழ் சமூகத்தில் உருவாகியிருக்கின்றனர். இந்த சமூகத்தின் விருத்திக்காக, வளமான வாழ்வுக்காக, விடுதலைக்காக தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த போராளிகள் இன்றைய நிலை கவலைதருவதாக இருக்கிறது. பொருளாதார ரீதியிலும், உளரீதியிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். புனர்வாழ்வளிப்பின் பின்னர் மர்மமாக இறந்துபோன முன்னாள் போராளிகள் எத்தனைபேர் என்ற தகவல்களைக் கூட திரட்டிப் பாதுகாக்கக் கூட யாரும் அக்கறையெடுக்கவில்லை. போரில் தன் உடல் அவயத்தை இழந்து பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் வாழும் முன்னாள் போராளி குறித்து சமூக வலைதளங்களில் கண்ணீர் வரும் காணொளிகள் வெளியான பின்னரே அவர் குறித்து பரிதாபப்படும் மனநிலையை தமிழ் சமூகம் அடைந்திருக்கிறது. உளப்பலம் மிக்க பல முன்னாள் போராளிகள் தங்கள் கஸ்ரங்களை வெளிப்படுத்தாமலே இறந்துபோன சந்தர்ப்பங்களும் இடம்பெற்றிருக்கின்றன. முன்னாள் போராளி என்றால் வேலையில் புறக்கணிப்பு, திருமணத்தில் புறக்கணிப்பு, சமூக அந்தஸ்தில் புறக்கணிப்பு எனப் பல்வேறுவிதமான அழுத்தங்களையும் அவர்கள் சந்தித்துவருகின்றனர்.
இந்த சந்தரப்பத்தை இராணுவம் தெளிவான திட்டத்தோடு பயன்படுத்திக்கொண்டது. வறுமைக்கோட்டுக்குட்பட்டு வாழும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளைக் கொண்டு சிவில் பாதுகாப்பு வேலைத்தளங்களை இராணுவம் உருவாக்கியிருக்கிறது. அரச நியமனத்துக்கு நிகரான தொழில்வாய்ப்பொன்றை வழங்கியிருக்கும் இராணுவம், ஆண் – பெண் முன்னாள் போராளிகளுக்கு முழுநேர வேலைவாய்ப்பை வழங்குகிறது. அவர்களின் கல்வித்தகைமைக்கேற்ப கட்டடத்தொழிலாளர்களிலிருந்து, அலுவலக வேலைகள் வரைக்கும் வழங்கப்படுகின்றன. இராணுவ பயிற்சிகளும் வேலைக்கான ஒரு தகைமையாகக் கொள்ளப்படுகிறது. இதுவொருவகையில் இராணுவமயமாக்கல் என்ற பார்வையும் உண்டு. சிவில் பாதுகாப்பு பிரிவிலிருந்து பயிற்றப்பட்டு வெளியேறும் சிறுவர் பாடசாலை ஆசிரியர்கள் கிராமங்களில் கற்பிக்கின்றனர். அந்தச் சிறார்களுக்கான கல்வி, அதற்கான செலவு அனைத்தையுமே இராணுவம் பார்த்துக்கொள்கிறது. எனவே மறைமுகமான இராணுவமயமாக்கல் சிந்தனை சிறுபராயத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறது. இராணுவமயமாக்கலை தம் வாழ்வோடு இணைந்த ஒன்றுதுான் என்ற எண்ணம் ஆழ்மனதில் படியும்வரைக்குமான கற்பித்தல் ஒழுங்குகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. அசாதாரண நிலையை சாதாரணமாக்கும் வேலைத்திட்டம் இதுவென்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதோடு, சிவில் பாதுகாப்பு பண்ணைகளில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் மீறல்சார்ந்த பிரச்சினைகள் வெளிவருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றது.
என்றுமில்லாதளவுக்கு தமிழ் சமூகம் தனக்குள்ளேயும், வெளியேயும் சிதைவைச் சந்தித்திருக்கிறது. இராணுவம், பொலிஸ், புலனாய்வுத்துறை, கடற்படை என தமிழர் பகுதிகளின் மூலைமுடுக்கெல்லாம் முகாமிட்டிருக்கும் இராணுவத்தைக் கடந்துதான் தாராளமாக போதைப்பொருட்கள் புழங்குகின்றன. பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருட்கள் விநியோகிப்பவர்கள் கையுமெய்யுமாக அகப்பட்டாலும், விசாரணைகள் ஒரு கட்டத்தின் மேல் முன்னெடுப்பதில்லை. இறுக்கமான கடற்படையின் கண்காணிப்பைத் தாண்டித்தான் கேரள கஞ்சா மாதகல், வடமராட்சி கிழக்கு பகுதிகளுக்கு வருகின்றன என்பதை நாம் நம்பியே ஆகவேண்டும். போதைப்பொருள் சார்ந்த குற்றச்செயல்கள் கண்டும்காணாமல் விடும் பாதுகாப்புத் தரப்பே தமிழர்களைச் சூழ நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. எங்காவது கையூட்டலில் தாமதங்கள் ஏற்படுத்தபடுமிடத்தில்தான் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் பொலிஸாரிடம் சிக்குகின்றனர். இவ்வாறானதொரு நிலையில்தான் மொத்த தமிழ் சமூகத்தையும் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருக்கின்றனர். அதற்கு நிகராக வாள்வெட்டுக்குழுக்களும் உருவாக்கப்பட்டு சமூகத்துள் உலாவவிடப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் உலாவிய துணை இராணுவக் குழுக்களைப் போல இந்த வாள்வெட்டுக் குழுக்கள் செயற்படுகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறை இராணுவத்துக்கும் தெரியாது. பொலிஸாருக்கும் தெரியாது. இத்தகையதொரு அச்ச சூழலுக்குள்தான் தமிழ் சமூகத்தின் பத்தாண்டுகள் கழிந்திருக்கிறது. இனியும் அதுவே நீளவுமுள்ளது.
கடந்த 2015இல் ஏற்பட்ட நல்லாட்சியின் பின்னர் இராணுவத்துக்கு நிகரான அதிகாரங்கள் அரச திணைக்களங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன. சர்வதேச நல்லபிப்பிராயத்திற்காக பாடுபட்ட அரசு, வலிகாமம் வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவித்துக்கொண்டிருக்க, தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வன வளத்திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றன தமிழர் நிலத்தை ஆக்கிரமிப்பதில் இரவு பகலாக உழைத்தன. தொல்லியல் திணைக்களம் தமிழர்கள் இடங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டுவது, புதிய இடங்களை தொல்லியல் மையமாக பிரகடனம் செய்வது, புத்த விகாரைகளை வைப்பது போன்ற பணிகளை செய்தது. இராணுவமும் அவர்களோடு இணைந்து தம் பணிக்கு புத்தர் சிலைகளை நிறுவினார்கள். முல்லைத்தீவில் மட்டும் 60 இடங்களில் புத்த விகாரைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் திணைக்களம் செய்திருக்கின்றது. மகாவலி அபிவிருத்தி அதிகார சபையும், தேசிய வீடமைப்பு அதிகார சபையும் வவுனியா வடக்கிலும், மணலாற்றிலும் பெரியளவிலான சிங்கள குடியேற்றத்திட்டங்களை உருவாக்கியிருக்கின்றன. அங்கு குடியேற்றப்பட்ட மக்களுக்கென தனி பிரதேச செயலகம் சம்பத்நுவர எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கில் புதிய சிங்கள பிரதேச சபையை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் முன்னின்று செய்வது அரச திணைக்களங்கள்தான். மகாவலி திணைக்களத்தின் எல் வலயம் இரணைமடு வரைக்கும் நீண்டிருக்கிறது. அதனை யாழ்ப்பாணம் வரை கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டங்கள் இரவுபகலாக நடக்கின்றன. இதன் பின்னணியில்தான் இரணைமடுகுள நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதில் கடற்றொழில் திணைக்களம் தமிழர் கடலின் வளங்களை சுரண்டிச் செல்வதற்கு தன்னாலான முழு பணிகளையும் செய்கிறது. கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டிய திணைக்களம் தமிழர் அளவாகப் பயன்படுத்தி எதிர்கால தலைமுறைக்காகக் பாதுகாத்து வந்த மொத்த கடல்வளத்தையும் அழித்துச் செல்ல உதவுகின்றது. கொக்கிளாய், நாயாறு, முல்லைத்தீவு, சாலை, சுண்டிக்குளம், தாழையடி என குடியேறியிருக்கும் சிங்கள மீனவர்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். கடலில் டைனமைற் வீசி வெடிக்கச் செய்து மீன் பிடிக்கின்றனர். பகலிலேயே அட்டை பிடிப்பில் ஈடுபடுகின்றனர். தடைசெய்யப்பட்ட கரைவலை முறைகளைப் பயன்படுத்துகின்றனர். தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். தமிழர் தொழில் செய்யமுடியாதளவுக்கு கடல் முழுவதையும் ஆக்கிரமித்து நின்று இரவு பகல் மீன்பிடியில் சிங்கள மீனவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான அனுமதியை நீரியல் வளத்திணைக்களம்தான் வழங்கியிருக்கிறது. நாயாறு பகுதியை மாயபுர எனப் பெயர் மாற்றி 300 வரையான சிங்கள குடும்பங்கள் குடியேறவும், அங்கிருக்கும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை பௌத்த விகாரையைாக மாற்றவும் இத்திணைக்களம் உதவியிருக்கிறது.
இந்தப் பத்தாண்டுகளுக்குள் இனவிகிதாசாரப்படி சிங்கள, முஸ்லிம் இனங்களின் இனவிருத்தி அதிகரித்துச் செல்ல தமிழர்களின் இனவிருத்தி குறைந்துசெல்வதையும் ஆய்வொன்று நிருபிக்கின்றது. இலங்கையில் இன்னும் பத்தாண்டுகளில் மூன்றாவது சிறுபான்மையினமாகத் தமிழர்கள் மாறிவிடக்கூடிய அபாயம் இருப்பதாக அவ்வாய்வு குறிப்பிடுகின்றது. அதற்கு நாட்டைவிட்டு புலம்பெயர்தலும் மிக முக்கியமான காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது. போர் ஓய்ந்து பத்தாண்டுகளில் இவ்வளவு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் தமிழர்கள் இனவிருத்தியிலும் அருகுவார்களாயின், அரசியல் அபிலாசைகளை நிலைநாட்டுவதிலும் அசண்டையீனங்கள் உருவாகும். எனவே, மூன்றாவது சிறுபான்மையினத்தின் அரசியல் உரிமைகள், தேவைகள் குறித்து அக்கறைப்படத் தேவையற்ற சூழல் ஒன்றும் உருவாகும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இரண்டாவது தசாப்தத்தை அடையும்போது, அரசியல் உரிமை குறித்தோ, இன விடுதலை குறித்தோ அக்கறைபடாத ஒரு சமூகமாக தமிழர்கள் மாறியிருப்பர் என்கிற எதிர்வுகூறலையும் முன்வைக்கமுடியும்.
கல்வியில் தமிழர்கள் தான் முதலிடம் பிடித்திருந்தார்கள். இதனால், எரிச்சலடைந்த பெரும்பான்மையினத்தவர் கலவரங்களை செய்தனர். கல்வித்தரப்படுத்தலைக் கொண்டுவந்தனர். இதுவே இலங்கையில் ஆயுதப் போராட்டங்கள் தமிழர் பக்கமிருந்து உருவாகக் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. எந்தக் கல்விக்காக தமிழர் ஆயுதம் ஏந்தினரோ அந்தக் கல்வியிலேயே இன்று அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் நிலை உருவாகியிருக்கிறது. போர்க்காலத்தில் குப்பி விளக்குகளில் படித்து சாதனைப் படைத்த தமிழ் தலைமுறை இன்று சகல வசதிகள் அடைந்தும் கல்வியில் பின்சென்றிருக்கிறது. சாதாரணதர, உயர்தர, உயர்கல்வி வாய்ப்புக்களில் மூன்றாமிடத்துக்கு தமிழர்கள் பின்தள்ளப்பட்டிருக்கின்றனர். பெரியளவான பணவரவும், தேவைகள் இலகுவில் நிறைவேறுகின்றமையும், புலம்பெயரும் பேரவாவும், போதைப்பொருட்களின் அதிகரித்த பாவனையும் கல்வி மீதான ஆர்வத்தை இல்லாமல்செய்திருக்கும் காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
போர்காலத்தில் சாதிய பிளவுகளோ, சமய பிரிவுகளோ பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. விடுதலைப் புலிகள் இம்மாதிரியான பிற்போக்குத்தனங்களை தடைசெய்திருந்தனர். இந்தப் பத்தாண்டுகளுக்குள் அந்த வன்மம் மீளவும் உயிர்த்துடிப்போடு கண்விழித்திருக்கிறது. சாதிய கடைபிடிப்புக்கள் மீளவும் அரும்பத்தொடங்கியிருக்கின்றன. கோயில், திருமணம், ஊர் நடைமுறைகளில் சாதியக் கட்டுக்களை மீள நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். அதற்கு சமதையாக மதப் பிரச்சினைகளும் தூண்டப்படுகின்றன. அண்மையில் மன்னார், திருக்கேதீச்சரம் பகுதியில் இடம்பெற்ற மதம்சார்ந்த பிரச்சினைகள் தமிழ் சமூகத்தின் ஒற்றுமையை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. இந்த ஆபத்தான போக்கை தமிழ் சமூகம் தற்போது எதிர்கொண்டிருக்கிறது.
இப்படியாக கடந்த பத்து வருடங்கள் தமிழ் சமூகத்தின் உள்ளேயும், புறமாயும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழர்களின் பொது எதிரியான சிங்கள பெருந்தேசியமும், இந்தியாவும், சர்வதேச சமூகமும் தமிழர் குறித்த பார்வையில் துளியளவு மாற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. நாட்டின் எப்பாகத்தில் குண்டுவெடித்தாலும், வடக்கு, கிழக்குத் தமிழர்கள்தான் பிரதான குற்றவாளியாக்கப்படுகின்றனர். நாட்டுக்குள் சர்வதேச தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் முன்னாள் போராளிகள்தான் கைதாகின்றனர். எனவே கடந்த பத்தாண்டுகளில் தமிழர் குறித்த பெரும்பான்மையினர் பார்வையில் – மனநிலையில் துளியளவு மாற்றமும் நிகழவில்லை என்ற புரிதலோடு இனப்படுகொலையைின் இரண்டாவது தசாப்தத்திற்குள் நுழைவோம்.
ஜெரா
போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடமானபோது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பாக இதுவரை பல கட்டுரைகளை வௌியிட்டு வந்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும். 10 வருடத்தையொட்டி வௌியாகும் ஆக்கங்களை இங்கு கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்.