படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம்

அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ள பிடி இந்த தாமதத்தில் இருந்தும் பிரேரணைக்கு கொண்டு வரப்பட்ட திருத்தங்களில் இருந்தும் நன்றாக தெரிகின்றது. அண்மையில் ஜனாதிபதி சிறிசேனவுக்கு நெருக்கமான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்தவொரு ஆலோசகர் குறிப்பிட்டது போல சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திற்குள் ஒரு எதிர்கட்சியாக இயங்கி வருகின்றது. சுதந்திரக் கட்சி பிரேரித்த திருத்தங்களையும் மஹிந்த சார்பு பொது எதிரணியின் திருத்தங்களையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த திருத்தங்களில் பிரதானமானது, “தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைக் கண்டடைதல் அரசியலமைப்பு அவையின் நோக்கங்களில் ஒன்று என பிரேரணையின் முகவுரைப் பந்தியில் குறிப்பிட்ட வாசகம் நீக்கப்பட வேண்டும்” என்பது. இவ்வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், இனப் பிரச்சினையைத் தீர்த்தல் தனது நோக்கங்களில் ஒன்று என வெளிப்படையாகக் குறிப்பிட்டு தொடங்கப்படுகின்ற முதலாவது அரசியலமைப்பாக்க முயற்சி என பிரேரணையை பாராட்டியிருந்தார். இம்முகவுரைப் பந்தியை மாற்றக் கூடாது என்று ஜனவரி 12, 2016 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்திருந்தார். கூட்டமைப்பின் கோரிக்கையை விட சுதந்திரக் கட்சியினரை திருப்திப்படுத்துவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானதாக இருந்திருக்கின்றது. இனப்பிரச்சினை ஒன்று தீர்க்கப்பட வேண்டும் என்ற அடையாளப்படுத்தலை எதிர்ப்பது என்பது இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை, இருந்தது ஒரு பயங்கரவாதப் பிரச்சினைதான் என்று சொல்வதற்கு ஒப்பானது. இதனை பகிரங்கமாகவே மஹிந்த ராஜபக்‌ஷ போர் முடிந்த கையோடு நாடாளுமன்றில் கூறினார் என்பது ஞாபகம் இருக்கலாம். ஜனவரி 9, 2016 அன்று பிரேரணை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாடாளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் கிழித்தெறியப்பட்டது தொடர்பில் வருத்தம் வெளியிட்டார். ஆனால், அவர் சார்பு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினராலேயே அரசியலமைப்பாக்க அவை தீர்மானத்தின் முகவுரை பந்தியில் “தேசிய பிரச்சினையைத் தீர்ப்பது புதிய அரசியலமைப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டுள்ள வாசகங்கள் நீக்கப்பட வேண்டும் என்று மும் மொழியப்பட்டுள்ளமை அந்த உணர்வின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. இன்றைய ஜனாதிபதியின் கீழ் செயற்படும் சுதந்திரக் கட்சியினரும் கடந்த ஜனாதிபதியின் கொள்கைகளையே பின்பற்றுகின்றனர், மாற்றம் பேச்சில் உள்ளது செயலில் இல்லை.

பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டது. புதிய அரசியலமைப்பில் என்னதான் இருக்கப் போகின்றது என்பதே இப்போதுள்ள கேள்வி. மக்கள் கருத்தறியும் குழுவின் நாடளாவிய சுற்றுலாவை ஒரு சடங்காகவே பார்க்க வேண்டும். புதிய அரசியலமைப்பில் என்ன உள்ளடக்கப்படவுள்ளது என்பது மக்களின் கருத்துக்களால் வடிவம் பெறாது. புதிய அரசியலமைப்பின் பிரதான நோக்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தலும் நாடாளுமன்ற முறையிலான ஒரு அரசாங்கமுறைக்கு இலங்கையை மீளக்கொண்டு வருவதும், புதியதோர் தேர்தல் முறையை கொண்டு வருவதும் என்றளவில் மட்டுபடுத்தப்படவிருக்கின்றது என்பது தென்னிலங்கை அரசியலில் இருந்து புலப்படும் செய்தி. 2015 ஓகஸ்ட் பொதுத் தேர்தலிற்கு முன்னர், 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படாத 20ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தேர்தல் மறுசீரமைப்பை பற்றியதுதான். அதுதான் புதிய அரசியலமைப்பின் முக்கிய உள்ளடக்கமாக இருக்கப் போகின்றது.

இவ்விடயத்தில் ஜனாதிபதி சிறிசேன, அவர் சார்பு சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொது எதிரணி மூன்றினதும் பிரதான நோக்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட்டால் தேர்தல் முறை மறுசீரமைப்பானது நாடாளுமன்றத்தையும் அதன் மூலமாக பிரதமரையும் பலமான அதிகார மையமாக மாற்றும் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே. அதாவது, விகிதாசாரப் பிரதிநித்துவ தேர்தல் முறை நீக்கப்பட்டு தொகுதி வாரி தேர்தல் முறை மேலோங்கும் ஓர் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அவ்வாறான தொகுதி வாரி தேர்தல் முறைமையே தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் ஏதோவொரு கட்சிக்கு பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும். மத்தியையும் மத்தியின் தலைவரையும் பலமாக வைத்திருப்பதுதான் சிங்கள பௌத்த அரசிற்கு பாதுகாப்பு என்பது சிங்கள பௌத்த அரசியலமைப்பு சிந்தனை பாரம்பரியத்தில் (ஜாதிக சிந்தனையில்) அதி முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. 1972 அரசியலமைப்பு நாடாளுமன்ற முறையை ஒட்டியதாக இருந்தபோதிலும் வழமையான நாடாளுமன்ற முறைமைகளில் போன்றல்லாது அதியுயர் அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்தமையும் அதன் மூலம் பிரதமர் சகல அதிகாரமுள்ளவராக இருந்தமையும் நினைவில் கொள்ளப்பட வேண்டியது. ஆகவே, இங்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையா நாடாளுமன்ற முறையா என்பது முக்கியமல்ல. எந்த முறையானாலும் மத்தியில் நடுமையமான நிறுவனம் ஒன்றில் அதிகாரங்கள் குவிந்து இருக்க வேண்டும். இந்த மரபில்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முழுமையாக நீக்க வேண்டுமென்றால் பலமான மத்திய அரசாங்கத்தை தரவல்ல ஒரு தேர்தல் முறை ஒன்றை உறுதிப்படுத்த வேண்டுமென சிங்கள பௌத்த அறிவுஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும் அடிப்படையில் இதே மரபை சேர்ந்தவர்கள்தான். ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட ஆட்சி அதிகார நடைமுறை சித்தாந்தமும் நடுமையத்தில் அதிகாரக் குவிப்பை விரும்பும் ஒன்று என்று தென்னிலங்கை அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். நவதாராள முதலாளித்துவ உலக ஒழுங்கிற்குள் இலங்கையை அழைத்துச் செல்ல மத்தியில் அதிகாரக் குவிப்பு அவசியம் என்ற சிந்தனையில் பிறந்ததுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் 1978 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை. சந்திரிக்கா அம்மையார் காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு பற்றி விவாதிக்கப்பட்டபோது நிறைவேற்று அதிகார பிரதமர் முறையை தான் ஆதரிப்பதாக ரணில் விக்கிரமசிங்க நிலைப்பாடு எடுத்திருந்தமை ஞாபகம் இருக்கலாம். கொழும்பில் உள்ள அவரது சிவில் சமூக நண்பர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறை மேலோங்கும் ஓர் கலப்பு தேர்தல் முறையை விரும்பினாலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டு நிற்கும் இச்சூழலில் கூடுதலாக தொகுதி வாரி பிரதிநிதித்துவம் மேலோங்கும் ஓர் கலப்பு பொறிமுறையை ரணில் விக்கிரமசிங்கவும் விரும்பலாம். அது ஐக்கிய தேசியக் கட்சி அடுத்தவோர் தசாப்தத்திற்கு ஆட்சியில் தொடர்ந்து இருக்க வாய்ப்பளிக்கும் என ரணில் சிந்திக்கக் கூடும். ஆகவே, தேர்தல் முறை மறுசீரமைப்பு, அரசாங்க முறை தெரிவு ஆகிய விடயங்களில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் பெரிய கொள்கை வித்தியாசங்கள் இல்லை. குறுங்கால அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே வித்தியாசங்கள் தோன்ற வாய்ப்புள்ளன.

இவற்றிற்கு மத்தியில் இரண்டு கட்சிகளுக்குமே இனப்பிரச்சினையை தீர்ப்பதை பற்றி உண்மையான அக்கறை காட்டப் போவதில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரபல ஆங்கில வார இறுதிப் பத்திரிகை ஒன்று தனது அரசியல் பத்தியில், கூட்டமைப்பிடம் பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க வேண்டாம் எனப் பிரதமர் தம்மிடம் கூறியதாக பிரதமரை மேற்கோள் காட்டியிருந்தது. 13ஆம் திருத்தத்தில் இருப்பவை தக்கவைத்துக் கொள்ளப்படும் என்றும், ஆளுநரின் சில அதிகாரங்கள் குறைக்கப்படலாம் என்றும், வடக்கு – கிழக்கு இணைப்பு நிச்சயம் சாத்தியமில்ல என்றும் தான் கூட்டமைப்பிற்கு சொல்லி விட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

அப்படியென்றால் தொடர்ந்து சர்வதேச சமூகத்திற்கு ரணிலும் அவரது வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவும் புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவரும் என்று சொல்வதன் சூட்சுமம் என்ன? ஒன்றும் பெரிதாக கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் கூட்டமைப்பும் இச்செயன்முறையில் நம்பிக்கை வைக்குமாறு தமிழ் மக்களை தொடர்ந்து கோருவது எதற்காக?

ரணில், மங்களவை பொறுத்த வரையில் அரசியல் தீர்வு ஒன்று கொடுத்தாகி விட்டது என்பதுதான் பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கான சிறந்த வழி. அரசியல் தீர்வு கிடைத்து விட்டால் பொறுப்புக் கூறலை பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, அப்படி புதிய அரசியலமைப்பை உருவாக்கிய பின்னும் பொறுப்புக் கூறலை வலியுறுத்தினால் அரசியல் தீர்வு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட சமாதானம் பாதிக்கப்படலாம் என வாதிடுவதுதான் சிறிசேன – ரணில் அரசாங்கத்தின் திட்டம். இந்த வாதத்தை அண்மையில் ஜனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் இயங்கும், சந்திரிக்கா அம்மையாரால் தலைமை தாங்கப்படும் மீளிணக்கத்திற்கும் தேசிய ஒற்றுமைக்கான நிலையத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ராம் மாணிக்கலிங்கம் சர்வதேச இணையத்தளம் ஒன்றிற்கு எழுதிய கட்டுரை ஒன்றின் மூலம் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.

அரசியல் தீர்வையும் பொறுப்புக் கூறலையும் பேரம் பேசும் பொருட்களாக மாற்றுவதில் உள்ள அசிங்கத்திற்கு அப்பால் நேர்மையான பேரம் பேசுதலாக அமையக் கூட இங்கு வாய்ப்பில்லை. அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக தமது கட்சியின் சிங்கள பௌத்த வாக்காளர்களை அந்நியப்படுத்த ரணிலுக்கோ மங்களவுக்கோ சிறிசேனவுக்கோ துளியளவும் விருப்பமில்லை. அதன் காரணமாகத்தான் கடந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளிலும் புதிய அரசியலமைப்புக்கான கருத்தறியும் குழுவிற்கு முன் தோன்றிய தமிழ் மக்களின் சமர்ப்பணங்களிலும் மிகத் தெளிவாக சமஷ்டிக் கோரிக்கை மீள வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் தென்னிலங்கை கட்சிகள் ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என மீள மீள வலியுறுத்துகின்றனர். இங்கு அடிப்படையில் மீளிணக்கம் செய்யப்பட முடியாத நிலைப்பாடுகளை சிங்களத் தரப்பும் தமிழ்த் தரப்பும் எடுத்துள்ளன. இந்தப் பிரச்சினைக்கான தீர்வு ஒற்றையாட்சியோ சமஷ்டியோ என்று அடையாளப்படுத்தாத ஒரு அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் எட்டப்படலாம் என்று மங்கள சமரவீரவும் சுமந்திரனும் உலகத் தமிழர் பேரவையும் அவர்களது சக பிரயாணிகளும் சிங்கப்பூரில் கடந்த வருடம் நடத்திய கூட்டமொன்றில் பேசி தீர்த்ததாக சொல்லப்படுகின்றது. ஒன்றை ஒன்றின் பெயரால் அழைக்காமல் விடுவதன் மூலம் அது அதுவாகி விட முடியாது என்று கூறுவது அறிவுடமையாகாது. போண்டாவை போண்டா என்றோ வாய்ப்பனை வாய்ப்பன் என்றோ அழைக்காமல் விட்டால் போண்டா போண்டாவாக இல்லாமல் போகாது; வாய்ப்பன் வாய்ப்பன் என்றோ இல்லாமல் போகாது. நிற்க.

இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழ் மக்களிடம் இந்த இல்லாத அரசியல் தீர்வை அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ளச் செய்ய திட்டம் ஒன்று உள்ளது. அரசியலமைப்பு அவையில் 2/3 பெரும்பான்மை, நாடாளுமன்றில் 2/3 பெரும்பான்மை என்பதற்கும் அப்பால் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரம் சாதாரண பெரும்பான்மை ஒன்றின் மூலம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தேவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் குறிப்பாக தமிழ் மக்களின் பெரும்பான்மையினரின் வாக்குகள் அரசியல் தீர்வு எய்தப்பட்டு விட்டது எனக் காட்டுவதற்கு அவசியமானது. நாடாளுமன்ற முறையின் கீழ் மாகாண முறைமை/ அதிகாரப் பரவலாக்கம் நன்றாக வேலை செய்யும் வாய்ப்புள்ளது, ஆளுநரின் அதிகாரம் சிலது குறைக்கப்படுதல் நன்மையே, இது தீர்வுக்கான ஆரம்பப் புள்ளி என்று சொல்லி தமிழ் மக்களின் வாக்குகளைக் கேட்டு 2016இல் தீர்வு தருவோம் என வாக்குறுதி தந்த எமது பிரதிநிதிகளே எம்மிடம் வருவார்கள். இவை எவையும் மக்களிடம் எடுபடாவிட்டால் புதிய அரசியலமைப்பை மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு எதிர்க்கிறது. ஆகவே, தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள அக்காரணம் ஒன்றே போதும் என்று வாதிடப்படும். எப்படி மைத்திரிபால சிறிசேனவை கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது விமர்சித்தவர்களை மஹிந்த ஆதரவாளர்களாகக் காட்ட முயற்சிக்கப்பட்டதோ, அதேபோன்று புதிய அரசியலமைப்பு தீர்வாகாது என்று கூறுபவர்களை மஹிந்த ஆதரவாளர்களாகக் காட்ட முயற்சிக்கப்படும். மஹிந்த எதிர்ப்பே போருக்கு பிந்திய தமிழ்த் தேர்தல் அரசியலின் பிரதான முதலீடாக இருப்பதால் இந்த உத்தி வேலை செய்வதற்கான வாய்ப்பு உண்டு. இது நடந்தால் தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள் ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டதாகவும் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டதாகவும் அரசாங்கத்தால் பரப்புரை செய்யப்படும். அத்தோடு, பொறுப்புக் கூறல் செயன்முறையையும் மெல்ல மூடி விடுவார்கள். இந்த அணுகுமுறைக்கு இந்தியாவும் அமெரிக்காவினதும் பூரண ஆதரவு நிச்சயம் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. இந்த அணுகுமுறைக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் அல்லது இருக்கக் கூடியவர்களது அரசியலை தமிழ் தீவிரவாத அரசியலாக அடையாளப்படுத்தி அவர்களை ஒதுக்கும் வேலைத்திட்டம் வெகு தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டம் முறியடிக்கப்பட வேண்டுமென்றால் தமிழ் மக்கள் மத்தியில் இவ்விடயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திறந்த விவாதக் களங்கள் உருவாக்கப்பட வேண்டும். இக்களங்கள் கட்சி அரசியலைத் தாண்டி ஒரு வெகுசன மக்கள் அணிதிரள் அரசியலை உருவாக்குவதற்கான வெளியை உண்டு பண்ண வேண்டும்.

ஞாயிறு தினக்குரலுக்காக குமாரவடிவேல் குருபரன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.