விடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப்பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பயம், பக்தி இப்போது அப்படியே மாறியுள்ளது. இப்போது அவர்களை வைத்து பணம் பார்த்தல், இழிவுபடுத்தல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத்தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை காம இச்சைக்காகப் பயன்படுத்துதல், சாதியின் பெயரால் புறக்கணித்தல் என எமது சமூகம் அவர்களை கையாண்டு வருகிறது.

தங்களது இளமைக் காலத்தில் உறவுகளை மறந்து, சராசரி மனிதன் அனுபவிக்கும் அத்தனை சுகபோகங்களையும் துறந்து தமிழ் மக்களின் எதிர்கால நலன் என்ற ஓர் இலக்கை நோக்கி பயணிப்பதற்காக போராடப் புறப்பட்ட பெண்களில் ஒரு பகுதியினர் இறுதியில் உறவுகளை இழந்து கால்கள், கைகள் இன்றி, கண்கள் தெரியாமல், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நிரந்தரமாக நடக்க முடியாமல், உடம்பில் இரும்புத் துண்டுகளை சுமந்துகொண்டு 2009ஆம் ஆண்டு இராணுவத்திடம் வந்து நின்றார்கள்.

இதிலிருந்து ஆரம்பித்தது அவர்கள் மீதான தமிழ் சமூகத்தினரின் வசை. இதுவரை காலமும் தான் வாழ்ந்து வந்த சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட – சிங்களமயப்பட்ட – இராணுவமயப்பட்ட சூழலில் சித்திரவதைக்கு உட்பட்டு பல ஆண்டுகாலம் தடுப்பில் இருந்து எமது சமூகம் எம்மை அரவணைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியில் வந்தவர்களை, “சண்டையிலேயே செத்திருக்கலாம்” என்ற முடிவுக்கு தமிழ் சமூகத்தினர் அவர்களை கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழ் சமூகத்தினரால் புறக்கணிக்கப்பட்டுவரும் பெண் போராளிகளின் கருத்தை பதிவு செய்ய ‘மாற்றம்’ தளம் முடிவு செய்தது. ஆனால் அவர்கள், தங்களது பெயர், படங்கள் வெளி வருவதை விரும்பவில்லை. நல்லாட்சியிலும் தங்களுக்கு இதனால் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இன்னும் நிலவுகிறது. அவர்களுடனான உரையாடல் தொகுப்பை Microsoft Sway Platform ஊடாக இங்கு பார்க்கலாம். அல்லது கீழே தரப்பட்டிருக்கும் இணைப்பு ஊடாகவும் பார்க்கலாம்.