படங்கள் | கட்டுரையாளர்

போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவியும் அரசால் வழங்கப்படுவதில்லை.

கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போர் நடவடிக்கையின்போது காணாமல்போனோரின், உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, காயமடைந்தவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்றும் – அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படவேண்டும் என்றும் – குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பாக போரால் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிவில் மக்கள் குறித்தோ அல்லது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் குறித்தோ எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

சமூக சேவைகள் திணைக்களத்தின் படி வட மாகாணத்தில் நிரந்த காயங்களுக்கு உள்ளானவர்கள் 19,826 பேர் வாழ்ந்துவருகின்றனர்.

19,826 பேர்தான் வட மாகாணத்தில் இருக்கின்றனர் என திணைக்களம் தெரிவித்தாலும், இது இருமடங்காக இருக்கலாம் என்கிறது வவுனியாவில் இயங்கும் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம்.

“கிட்டத்தட்ட நிரந்தர காயத்திற்குள்ளான 40,000 பேர் வட மாகாணத்தில் இருக்கின்ற அதேவேளை, அதில் 80 வீதமானோர் போரினால் காயத்திற்குள்ளானர்வர்கள்” என்று கூறுகிறார் வவுனியா வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் வெள்ளையன் சுப்ரமணியம்.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் ஒன்றில் வெள்ளையன் சுப்ரமணியம் கண்பார்வையை இழந்திருக்கிறார்.

போர் முடிவடைந்த காலப்பகுதியில் அதிகப்படியான உதவிகள் கிடைத்தபோதிலும் இப்போது சொல்லிக்கொள்ளும் படி அவ்வாறு கிடைப்பதில்லை என்கிறார் வெள்ளையன்.

இருந்தாலும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை, பொருட்களைக் கொண்டு நேர்மையான முறையில் சேவை செய்து வருவதாகவும் கூறுகிறார் அவர்.

இருப்பினும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிரந்தர காயத்திற்கு உள்ளானவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியில்லாம் கஷ்டப்பட்டுவருகின்றனர்.

ஒரு சிலர் வசதியோடு வாழ்ந்தாலும் அவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்னும் சிலர், நல்லுள்ளம் கொண்டவர்களால் ஒரு தொகை பணம் செலுத்தி வாங்கிக்கொடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் மாதாந்த தவணைப் பணத்தை செலுத்த முடியாமல் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சிலர், தாங்கள் வருடக்கணக்கில் தங்கியிருக்கும் உறவினர்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்படும் தருவாயில் இருக்கின்றனர்.

முன்னாள் போராளியான ஒருவர் – இடுப்புக்குக் கீழ் இயங்காதவர் – புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டவர், 5 வருடங்களுப் பின் ‘மாற்றம்’ அரசின் கீழ் இயங்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.

இன்னுமொரு முன்னாள் பெண் போராளி, அவருக்கும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளதால் இடுப்புகுக் கீழ் இயங்காது. தடுப்பிலிருந்து விடுதலையாகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ள கணவரின் தொலைப்பேசி இலக்கத்தைக் கேட்டு, அங்கவீனமானவர் என்று பார்க்காமல் இனந்தெரியாத மூவரால் தாக்கப்பட்டிருக்கிறார்.

ஆகவே, தெற்கில் போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு அனைத்து வசதிகளும் உரிமைகளும் வழங்கப்படுகின்றபோது, அதே போரில் காயமடைந்த தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?

அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்; தேவைகளும் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் தினத்தை (டிசம்பர் மாதம் 10) முன்னிட்டு ‘மாற்றம்’ தளம் போரில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிலரின் குரல்களை இங்கு பதிவு செய்கிறது.

IMG_2431

பதவியா, பொரளை, குருணாகல், மீண்டும் பதவியா, கண்டி, வவுனியா, கொழும்பு காசல், மீண்டும் பொரளைக்கு, ராகம…

சுமார் 3 வருடங்கள் மதிவாணன் தயாகினி சிகிச்சைக்காக இடம்பெயர்ந்த வைத்தியசாலைகளே மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கும்போது தயாகினியின் கழுத்துப் பகுதியை துப்பாகி ரவை துளைத்துச் சென்றுள்ளது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் மேல் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக வரிசையாக அனுப்பப்பட்டிருக்கிறார்.

சிகிச்சைகள் முடிந்து திருகோணமலையிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் தயாகினி தனது கணவர் மதிவாணனுடன் குடியேறியிருக்கிறார். யாழ்ப்பாணம் சென்ற பின்னர்தான் பதிவு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

“இன்டக்கு வரைக்கும் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கல்ல. வீட்டுத்திட்டமோ, அரச உதவிகளோ அல்லது தனியார் நிறுவன உதவிகளோ எதுவும் கிடைக்கல்ல. போய் கேட்டா, யாழ்ப்பாணத்தில யுத்தம் நடக்கேல்ல, அதனால உதவிகள் செய்ய ஏழாது என்டு சொல்லினம்” என்று கூறுகிறார் தயாகினி.

IMG_2420

“ஆனால், இந்த அரசாங்கம் மாறுனதிலிருந்து மருத்துவ கொடுப்பனவு என்டு சொல்லி மாதம் மூவாயிரம் டி.எஸ். ஒபிஸால தருவினம். அதவிட சமுர்த்தி முத்திரையும் இந்த வருஷம்தான் தந்தவ” என்கிறார் தயாகினி.

தயாகினியால் அவருடைய வேலைகளையே செய்துகொள்ள முடியாத நிலை. கணவன் மதிவாணன்தான் அவருடைய, மகனுடைய அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

“தொடர்ந்து என்னைப் பராமரிக்க வீட்டிலேயே ஒரு ஆள் தேவை. அவர் வெளி வேலை ஒன்டுக்கும் போறதில்ல. வயரின் வேலையும் செய்தவர். இப்ப வெளியால போக ஏலாத நிலமையால போறதில்ல. அப்படி வேலைக்குப் போனாலும் முழு நேரமும் இருந்து வேலை செய்ய முடியாது. காலையில எங்கட வேலைய முடிச்சி, மதியம் சாப்பாடு தாரத்துக்கு திருப்பி வரனும். திருப்பி இரவுக்கு வரனும். அதால வெளி வேலைக்கு ஒன்னும் போறதில்ல. என்ன விட்டுட்டும் போக ஏலாது. அதால போறதில்ல” என்று உருக்கமாக கூறுகிறார்.



“நாங்க இப்ப எங்கட அக்காட வீட்டுல ஒரு ரூம்லதான் இருக்கிறம். எங்களுக்குச் சொந்தமா வீடு இல்ல. காணியிருந்தும் வீடு கட்ட முடியாம இருக்கிறம். தற்காலிக வீடு கூட எங்களுக்குத் தரேல்ல. எங்களுக்கு இப்போதைக்கு டொய்லட் வசதியோட வீடொன்டுதான் அவசரமா தேவைப்படுது” என்று கூறுகிறார் தயாகினி.

பக்கத்து காணியில் அடுத்த வருடம் ஜனவரிக்கு குடியேறுவதற்காக நான்கு மரங்களை நாட்டி தகரங்கள் போட்டுள்ள கொட்டிலொன்றை மதிவாணன் காட்டுகிறார். தொடர்ந்து வீட்டாருக்கு கஷ்டத்தை கொடுக்காமல் தனியாகச் சென்று வாழ இருவரும் முடிவெடுத்து விட்டனர்.

“எங்கள மாதிரி யாழ். மாவட்டத்தில நிறைய பேர் இருக்கினம். எனக்குத் தெரிய 18, 19 பேர் இருக்கினம். அவைகளுக்கு இப்படி உதவியென்டு எதுவும் கிடைக்கிறதில்ல. அவைகளுக்கும் உதவி கிடைச்சா நல்லா இருக்கும்” – என்கிறார் தயாகினி.

________________________________________________________________________________

IMG_2461

நான்: காலையில என்ன சாப்பாடு?

நவீந்திரன்: மரவள்ளி,

நான்: மத்தியானம்?

நவிந்திரன்: ஒன்டுமில்ல…

இடம்: வட்டக்கச்சி, சம்புக்குளம்

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் கட்டிலில் படுத்திருந்த நவீந்திரனுக்கும் எனக்குமான உரையாடலே மேலிருப்பது.

அனேகமானோரின் நிலை இதுதான்.

வைத்தியர் ஒருவரின் மூலமாக இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவீந்திரனுக்கு தவணை முறையில் செலுத்தக்கூடிய வகையில் ஆட்டோ ஒன்று கிடைத்திருக்கிறது. முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பிரத்தியேகமான முறையில் – கைகளைக் கொண்டு இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆட்டோவே இது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் குடும்பத்தைக் கொண்டுநடத்துகிறார் நவீந்திரன். ஆனால், கடன் கொடுக்க வேண்டியிருந்ததாலும், தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட காய்ச்சலினாலும் ஆட்டோவுக்கான புத்தகத்தை அடகுவைத்துள்ளார் நவீந்திரன். மாதம் 13,000 கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இருக்கிறார் அவர்.

IMAG2246

“மாதம் 13,000 கட்டனும். இப்போ அரியஸா 60,000 கிட்ட வந்திருக்கு. சிலநேரம் அரியஸ்னால தூக்கினமோ தெரியாது. ஆட்டோ கைவிட்டுப் போயிருச்சென்டா வாழ்க்கையே சரி… அது இருக்கிறதாலதான் ஹொஸ்பிட்டலுக்கு எல்லாம் பொய்ட்டு வாறன். திருப்பி எடுக்கக்கூடிய வல்லமையும் எங்ககிட்ட இல்ல. சாப்பாடு இல்லையென்டா பிச்சை எடுத்தாவது சாப்பிடலாம். வருத்தமென்டா கிளிநொச்சிக்குதான் போகனும். ஆட்டோ இல்லாம கஷ்டம்” – என்று கூறுகிறார் நவீந்திரன்.

நவீந்திரனின் மனைவி, 6ஆம் தரத்தில் படிக்கும் மூத்த மகளுடன் உதவி பெறுவதற்காக உறவினர் வீடொன்றுக்கு சென்றிருப்பதாகக் கூறுகிறார் நவீந்திரன்.



“கோழியும் வளர்த்து பார்த்தனான்…. அடுத்தடுத்து விடக்கூடிய மாதிரி காசு இல்லதானே. ரெண்டு செட் வளர்த்தன். அதில வந்த காச கடனுக்கும், ஆட்டோ லீசிங்கிங்கும் கொடுத்து முடிஞ்சிருச்சி. கோழி வாங்கித்தந்தா வீட்டோட இருந்து பார்த்துக்கலாம்” என்கிறார் அவர்.

4ஆம் தரத்தில் படிக்கும் இளையவன் நவீந்திரனினுடன் அவருக்கு உதவியாக, துணையாக அருகிலேயே அமர்ந்திருக்கிறான்.

________________________________________________________________________________

Screen Shot 2015-12-14 at 1.41.20 PM

கிளிநொச்சியில் பிள்ளைகள் இருவருடன் இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியின் துணையுடன் வாழ்ந்துவரும் முன்னாள் இளம் பெண் போராளி ஒருவரை சந்திக்கச் சென்றேன்.

2000ஆம் ஆண்டு முகமாலையில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலின்போது ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி இடது காலை இழந்தவர் இவர். அத்தோடு, முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் இடுப்புக்குக்கீழ் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியிலேயே நிரந்தரமாக உட்கார்ந்து விட்டார்.

“தலையில் இருந்து உள்ளங்கால் வரை பீஸ் (இரும்புத் துண்டுகள்) இருக்கிறது. அதனால், மழை என்றாலும் வெயில் என்றாலும் அடிக்கடி உடல் ரீதியான பிரச்சினைகள். தலைவலி தொடங்கினால் கை, கால்கள் எல்லாம் வீங்கத் தொடங்கும். 6 வருஷமா படுக்கைப் புண் இருக்குது” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முன்னாள் போராளி.

கணவனுடன் இருக்கும் படங்கள் டிவியின் மேலும், உடைந்த சுவர்களிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. கணவர் வீட்டில் இல்லையா என்று கேட்டேன்?

“அவர் வௌியில இருக்கார். அவரும் என்னைப் போல முன்னாள் போராளி ஒருவர்தான். இயக்கத்தில இருந்து விலத்தி வந்துதான் என்னைத் திருமணம் செய்தவர். இடம்பெயர்ந்து முகாமுக்கு வந்தபோது கணவர பிடிச்சுக்கொண்டு பொயிட்டினம். பிறகு சித்திரவதை செய்த பிறகுதான் விட்டினம். ஒரு நாள் அவர் வேலைக்குப் போய் திரும்பி வரல்ல. திடீரென்று காணாமல்போயிட்டார். அவரைத் தேடாத இடமில்ல. சில மாதங்களுக்குப் பிறகுதான் ஒஸ்ரேலியாவில இருக்கிறதா கோல் பண்ணார். பிறகு அங்கயும் கஷ்டமென்டு ப்ரெண்ட் ஒருத்தர்ட உதவியோட பிரான்ஸ் போயிட்டார். அங்க இதுவர அவருக்கு ‘கார்ட்’ கிடைக்கல்ல. இடைக்கிட காசு அனுப்புவார். அதுக்குப் பிறகு நானும் பிள்ளைகளும் அம்மாவும்தான் வாழ்ந்து வந்தோம். அம்மா இரத்தப் புற்றுநோய் வந்து 2012 மோசம் போயிட்டா. இப்ப நாங்க மூன்று பேருதான் இருக்கிறம்”.

கண்களில் கண்ணீர் வலியவில்லை. குரலில் நடுகமும் இல்லை. திடமாகப் பேசுகிறார்.

“2014.6.3ஆம் திகதி இனந்தெரியாத 3 பேர் வந்து கணவர்ட போன் நம்பர கேட்டு என்ன அடிச்சதோட, வீல் செயாரயும் வெளியில தள்ளிவிட்டு பொயிட்டினம். தலையில, கையில, கால்ல காயமென்டதால ஒரு மாசமா ஹொஸ்பிட்டல்ல இருந்தன். பொலிஸில, மனித உரிமைகள் ஆணைக்குழுவுல என்ரி போட்டனான். ஆனா இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கல்ல. இனந்தெரியாத ஆக்கள் என்டதால கண்டுபிடிக்க முடியாது என்று பொலிஸால சொல்லினம்”.

மகளை அழைத்து டிவியின் கீழ் இருக்கும் பையொன்றை எடுத்துவருமாறு கூறுகிறார். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த வெளியான பத்திரிகை, இணையத்தள செய்திகளின் பிரதிகள் அடங்கிய பை அது. 5, 6 தாள்களைத் தந்தார். இணையதளங்கள் முந்திக்கொண்டு செய்தி வெளியிட்டிருந்தன, “முன்னாள் பெண் போராளி மீது இனந்தெரியாதோர் தாக்குதல்”.

காயப்பட்ட நாளில் இருந்து அரசாங்கம் உதவி எதுவும் செய்யவில்லையா என்று கேட்க?

“நான் காயப்பட்டு 15 வருஷமாகிட்டு. அரசாங்கமோ, இல்ல வேறு யாரோ எந்த உதவியும் செய்யல்ல. இருந்த சமுர்த்தியையும் புதுசா வந்த அரசாங்கம் வெட்டிட்டது. வட மாகாண சபையால மாதத்துக்கு 1,500 ரூபா கொடுக்குறாங்க. அந்தக் காச மட்டும்தான் எடுத்துக் கொண்டு இருக்கிறன்.

“நாங்க ஏழாத ஆக்கள் என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. இவைக்கு கொமட் வசதி இருக்குதா? பாத்ரூம் வசதி இருக்குதா? கிணறு இருக்குதா? இருக்க வீடு இருக்குதா? என்டு யாரும் வந்து பார்க்கிறதில்ல. எந்த நிறுவனமும் வந்து பார்க்கல்ல. ஒரே ஒரு நாள் ஜி.எஸ். வந்தார். அதுவும், நாங்கள் என்ன மரக்கன்று வச்சிருக்கம், எவ்வளவு வருமானம் என்டு கேட்டுப் போனார். அவ்வளவுதான்”.

“நாங்களா உழைச்சாதான் சாப்பிடலாம். ஏழாதென்டு சொல்லி எந்த நிறுவனமும், எந்த அரசாங்கமும் உதவ வராது. கட்டில் கூட நான்தான் காசு குடுத்து வாங்கினன்”.

தான் யாரையும் நம்பியிருக்கவில்லை என்பது அவரது வார்த்தைகளால் தெரிகிறது. இடையிடையே வந்துபோகும் அம்மாவின், தந்தையின் உதவியுடன் அன்றாட தேவைக்கென்று தோட்டம் செய்வதாகக் கூறுகிறார் அவர். நான் சென்றிருந்த அன்றும் வயதான ஒருவர் அரைக் காற்சட்டையுடன் மண்வெட்டியுடன் தோட்டத்தில் நின்றிருந்ததைக் கண்டேன்.

தற்போது தான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சக்கர நாற்காலியின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், அதன் பின்னர் தான் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளார் என்றும் அவர் கூறுகிறார்.

“நான் தனியாத்தான் வீட்டு வேலைகள செய்றன், அதோட டவுனுக்குப் போகனும், ஹொஸ்பிட்டல் போகனும். உடுப்பு கழுவனும்… இதெல்லாம் இந்த வீல் செயார்ல இருந்து கொண்டுதான் செய்றன். இதுக்கும் காலம் சரி. ஒரு வருஷமாகப் போகுது. இதுதான் கடைசியென்டு தந்தவங்க. நானும் கிறீஸ் எல்லாம் போட்டு, ரேஸர் மாத்தி பாவிச்சிக் கொண்டுதான் இருக்கிறன். இது பழுதாப் போனா அடுத்தக்கட்டமா இன்னொரு வீல்செயார் கிடைக்குமா கிடைக்காதா என்டு கூட தெரியாது” என்கிறார் அவர்.

________________________________________________________________________________

IMG_8945

“நான் மருத்துவத்திலதான் தங்கியிருக்கிறன். அடிக்கடி ஹொஸ்பிட்டலுக்குப் போகனும். மினரல் வோட்டரதான் குடிக்கச் சொல்றாங்க. ஆனா அந்த வசதி ஒன்டும் எங்ளிட்ட இல்ல” என்கிறார் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக்கீழ் செயலிழந்த யோகராஜன்.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த யோகராஜனுக்கு பாடசாலை செல்லும் வயதில் மூன்று பெண் பிள்ளைகள். முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பிரத்தியேகமான முறையில் – கைகளைக் கொண்டு இயக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட ஆட்டோவை இவர் செலுத்தி வருகிறார். ஆட்டோ செலுத்தி அதில் கிடைக்கும் கொஞ்ச பணத்தைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

“2009 யுத்தம் நடந்த காலப்பகுதியில்தான் எனக்கு காயம் ஏற்பட்டது. முள்ளந்தண்டில் இன்னும் பீஸ் இருக்குது. அத எடுத்தா இன்னும் பாதிப்பு என்டு எடுக்காமல் இருக்கன். இது இருக்கிறதால நிறைய பிரச்சின. உடம்பு வலிக்கும், வீங்கும்” என்கிறார் யோகராஜன்.

அவரது மூன்று மகள்களும் வந்து என் பின்னால் நின்று சிரிக்க, யோகராஜன் பார்வையாலேயே அதட்டுகிறார்.

IMAG2241

“வாழ்வாதார உதவியாக அரசாங்கம் 36,000 தந்தது. அத எவ்வளவு காலத்துக்குத்தான் வச்சுக் கொண்டு இருக்கிறது. அதோட, சித்திர மாதத்தில் இருந்து 3,000 கொடுப்பனவு தாராங்க. முதல்ல 4 மாதத்தையும் சேர்த்து தந்தாங்க. பிறகு ஒரு மாதத்துக்கான கொடுப்பனவ தந்தாங்க. மீதிய இன்னம் தரல்ல. ஆனா போய் சைன் வச்சிக்கொண்டுதான் இருக்கிறம்” என்று கூறுகிறார் அவர்.

அது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரது வார்த்தைகளில் காணமுடியவில்லை. மூன்று மாதங்களாக அந்த உதவித் தொகை இல்லாமல் சமாளித்துவிட்டோம், இனி வந்தாலென்ன, வராவிட்டாலென்ன, சமாளித்துவிடலாம் என்று அவர் எண்ணுவது போல எனக்குத் தோன்றியது.

“நிரந்தரமாக ஒரு தொழில் இல்ல. ஓட்டோ ஓடுறன். கச்சான் விக்கிறன். அதுவும் சீஸனுக்குத்தான் விக்கலாம்” என்கிறார் எதிர்காலம் குறித்து நிச்சயமில்லாமல்.

________________________________________________________________________________

IMG_8908

“சீவல் தவிர, வேற தொழில் என்டா இவர் செய்யமாட்டார். கண்பார்வை தெரியாதுதானே” என்கிறார் முன்னாள் பெண் போராளியான நகுலேஷ்வரன் அருள்மீரா.

1997ஆம் ஆண்டும் இடம்பெற்ற மோதலின்போது இடது கையை இழந்துள்ள அருள்மீரா 2009ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வின் பின்னரே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

பிறவியிலேயே கண்பார்வையை இழந்த நகுலேஷ்வரனை அருள்மீரா திருமணம் செய்திருக்கிறார். இருவரும் 2014ஆம் ஆண்டு முதல் முள்ளியவலையில் உறவினர் ஒருவரின் வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

“வீட்டுத்திட்டத்திற்கான காணி தந்திருக்கினம். வீடு கட்டித் தருவினம் என்டு சொல்லியிருக்கினம். ஆனா இன்னும் கிடைக்கல்ல. கிடைக்கும் என்டு நம்பிக்கொண்டிருக்கிறம்” என்கிறார் அருள்மீரா.

IMG_8919

வாழ்கைய கொண்டு நடத்த என்ன செய்றீங்க என்று கேட்டேன், “பாக்கு சீவி கொடுக்கிறோம்” என்றார் நகுலேஷ்வரன். யார் சீவுவது? “நான்தான்” என்றார் அவர். கண்பார்வை தெரியாதவர் எப்படி என்று திகைத்துப் போனேன். நான் உட்கார்ந்திருந்த அறையின் ஓரத்தில் பெரிய பாக்கு வெட்டியொன்று பொருத்தப்பட்டிருந்த மேசையொன்று இருந்தது. அருள்மீராவைப் பார்த்து, “ரெண்டு பாக்கு எடுத்திட்டு வா” என்று கூறியவாறு சுவரை தடவிக்கொண்டு பாக்கு வெட்டி மேசையை நோக்கி நகர்ந்தார். கண் பார்வை உள்ள எங்களால் கூட அவ்வாறு பாக்கை சீவ முடியாது. அவ்வளவு நேர்த்தி.

இந்தத் தொழிலை எப்படி ஆரம்பித்தீர்கள் என்று அருள்மீராவிடம் கேட்டேன்?

“வெளிநாட்டில இருந்து ஒருத்தர் நாற்பதாயிரம் காசு தந்து உதவினார். அத கொண்டுதான் சின்னதா பாக்கு சீவல் வேலைய தொடங்கினம். பாக்கு சீவி ஒரு கிலோ குடுத்தா 40 ரூபா கிடைக்கும். இன்னும் கொஞ்சம் காசு உதவி கிடைச்சா இந்தத் தொழில நல்லா செய்துகொண்டு போகலாம்” என்கிறார் அருள்மீரா.



“அரசாங்கம் இதுவர எந்த உதவியும் செய்யல்ல. கூலி வேலையோ, கடற்தொழில் வேலையோ இவரால செய்ய முடியாது. சீவல தவிர இவரால வேற எதுவும் செய்யமுடியாது. வீட்டுலயே இருந்து இந்தத் தொழிலதான் செய்யலாம். இந்தத் தொழில செஞ்சு கொண்டு போக உதவினா நல்லா இருக்கும்” என்று உதவிகோருகிறார் அருள்மீரா.

________________________________________________________________________________

IMG_8958

“2009இல நான் அனுபவப்பட்ட மாதிரி வேறு யாரும் அனுபவப்பட்டிருக்க மாட்டாங்க. அப்படியொரு இக்கட்டான சூழ்நிலை. எங்க பார்த்தாலும் மனிதப் பிணங்கள். கொத்துக் கொத்தாக சனம் கொல்லப்பட்ட கிடந்தாங்க. அதையும் கடந்து வரும்போதுதான் எனக்கு துப்பாக்கிச் சூடு பட்டது. 2009.2.4ஆம் திகதிதான் நான் காயப்பட்டன்”.

இவ்வாறு கூறுகிறார் வட்டக்கச்சியைச் சேர்ந்த பிரபாகரன். பிரபாகரனுக்கு முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டதால் நிரந்தரமாக சக்கர நாற்காலியில் உட்காரவேண்டி ஏற்பட்டுவிட்டது.

இருப்பினும், மன உறுதி மிக்கவர். தானாக அத்தனை வேலைகளையும் செய்துகொள்கிறார்.

“ஒரு கால் இல்லாதவர் எப்படியும் சமாளித்துக் கொள்வார். ஆனால், ஸ்பெஷலா முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட என்னைப் போன்றவர்கள் வீல் செயாரில் இருப்பதால் நிறைய கஷ்டத்த எதிர்கொள்றம். எங்களுக்கு இன்னொருத்தர்ட உதவி கட்டாயமா தேவைப்படுது. அரச கட்டடங்கள்ல, பஸ்ல எல்லாம் இன்னொருத்தர்ட உதவியோட ஏறவேண்டியிருக்கு. இது எனக்கு மனக்கஷ்டத்த தரக்கூடியதா இருக்கு.

உளவியல் ரீதியாக பிரபாகரன் பாதிக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது. தனக்கு யாரிடமும் கையேந்த விருப்பமில்லை என்ற வார்த்தை அடிக்கடி அவர் வாயிலிருந்து வந்து கொண்டே இருந்தது.

IMG_8959

“சாதாரணமான கூலி வேலைக்குப் போய் 1,000 ரூபா உழைக்கிறவர் கிட்ட கேட்டா, கஷ்டமென்டுதான் சொல்வார். 24 மணித்தியாலமும் இதுல இருக்கிற எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். வாழ்வாதார ரீதியா முற்றுமுழுதா பாதிக்கப்படுறம்” என்று கூற எம்மிடம் பதில் இல்லை.

தான் போன்றவர்களுக்கு இருக்கும் திறமையை பரீட்சித்து தொழில் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கூறும் பிரபாகரன், ஆனால், தன்னை விட தகுதி குறைந்தவர்கள் அரச, தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுவதாகக் குற்றம் சாட்டுகிறார்.

“கொம்பியூட்டர் பக்கம் எல்லாம் நான் செய்வன். ஹார்ட்வெயார் புல்லா செய்வன், சொப்ட்வெயார் இன்ஸ்டொலேஷன் எல்லாம் செய்வன். எனக்கு உள்ள திறமைய செக் பண்ணலாம். வேலை செய்யாத கொம்யூட்டர தந்திட்டு திருத்தித் தரச்சொன்னா இரண்டு நிமிஷத்தில என்ன பிரச்சின என்டு கண்டுபிடிப்பன்” – ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அவர்.



“இந்த அரசாங்கம் மாறியும் எந்தவித பயனும் எங்களுக்கு இல்லை. 2016ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில எங்களுக்கென்று ஏன் காசு ஒதுக்க முடியாது? வட மாகாண சபையால 1,500 ரூபா தாராங்க. அத வச்சிக்கொண்டு என்னத்த செய்யலாம்? அதக்கொண்டு சந்தைக்குப் போனா 100 ரூபா காசுதான் மிஞ்சும். ஏன் எங்கள மாதிரி ஆக்களுக்கு அரசாங்கத்தால உதவி செய்ய முடியாதா?”

“சாராரணமாக படை வீரர்களுக்கு 55,000 சம்பளம் கொடுக்குறாங்க. அதுக்காக அத அப்படியே எங்களுக்கு தா என்டு கேக்கல்ல. எங்களயும் இந்த நாட்டின் பிரஜைகளாக கருத்தில் கொண்டு வாழவிடுங்க” – பிரபாகரனின் இந்தக் கருத்தை ‘மாற்றம்’ அரசு செவிமடுக்குமா?

________________________________________________________________________________

Screen Shot 2015-12-10 at 8.31.02 PM

“எனக்கு மகன படிக்க வைக்கோனும் என்டு ஆசை இருக்குது. படிப்பென்டா சும்மா இல்லதானே, நிறைய செலவு வரும். எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைய படிக்க வச்சி நல்ல உத்தியோகம் எடுத்துக் கொடுக்கோனும் என்பதுதான் என்ட ஆசை” முள்ளியவலையைச் சேர்ந்த நகுலேஸ்வரி தனது மகனின் எதிர்காலம் குறித்த தனது கனவை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

முன்னாள் போராளியான நகுலேஸ்வரி ஆயுதப் பயிற்சியின்போது தவறுதலாக இடம்பெற்ற வெடிவிபத்தில் இரண்டு கைகளையும் இழந்தவர்.

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வின் பின் விடுதலையாகி 2011ஆம் திருமணம் செய்துள்ளார். ஒரு மகனுடன் வாழ்ந்துவரும் இவர்களுக்கு ஒரு சில உதவிகள் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் அவை முழுமையாக கிடைக்கப் பெறாததால் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

Screen Shot 2015-12-10 at 8.30.08 PM

“மூன்று குடும்பங்கள் சேர்ந்து இந்த ஓட்டோவ வாங்கித் தந்தவ. உடனே நாங்க அறுபதினாயிரம் கட்டினனாங்கள். அதுக்குப் பிறகு மாதம் மாதம் ஏழாயிரம் கட்டிக் கொண்டிருக்கிறம். ஓட்டம் பெரிசா வாரதில்ல. பார்க்ல நிறுத்த பத்தாயிரம் வேணும். சாப்பிடறமோ இல்லையோ காசு கட்டியே ஆகனும். வீடும் கட்டி குறையாதான் இருக்கு” என்கிறார் நகுலேஸ்வரி.

நகுலேஸ்வரியால் ஒருவேலையும் செய்ய முடியாததால் அவருடைய கணவர்தான் அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்.

“இவரு கூலி வேலை செஞ்சிதான் என்னயும் பிள்ளயையும் பார்த்து வரார். காலையில எழும்பி முற்றத்த கூட்டி, சட்டி பானை கழுவி, காலை – பகல் சாப்பாடு செஞ்சி வச்ச பிறகுதான் வேலைக்குப் போரார். ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போறதில்ல. சந்தர்ப்பம் கிடைக்காது. எங்களுக்கு எல்லா வேலையும் செய்து முடியும்போதே நேரம் போயிடும். இப்ப மழைக்காலம் என்டதால இன்னும் கஷ்டமாக இருக்கு” என்று கூறுகிறார் அவர்.

என்ன உதவி எதிர்பார்க்குறீங்க என்று கேட்டதற்கு?

“பசு மாடு எடுத்துத் தந்தா பால் கறந்து விக்கலாம். கோழி வாங்கித் தந்தா வளர்க்கலாம்” என்கிறார் நகுலேஸ்வரி.

மகன் படிக்கிறாரா என்று கேட்டேன்?

“எனக்கு மகன படிக்க வைக்ககோனும் என்டு ஆசை இருக்குது; ஒரு உத்தியோகம் செய்யவைக்க ஆசையா இருக்குது. இங்கிலீஸ் எல்லாம் படிக்க வைக்க ஆசை. எனக்கும் கூட இங்கிலீஸ் படிக்க, பேச ஆசை. எனக்கு இன்னும் படிக்க விருப்பம். ஆனா முடியாது. அதனால என்ட மகன இங்கிலீஸ் படிக்கவைக்கனும். படிப்பென்டா சும்மா இல்லதானே, நிறைய செலவு வரும். எப்படியாவது கஷ்டப்பட்டு பிள்ளைய படிக்க வச்சி நல்ல உத்தியோகம் எடுத்துக் கொடுக்கோனும் என்பதுதான் என்ட ஆசை” – நகுலேஸ்வரியின் கனவு கனவாக இல்லாமல் நனவாகட்டும்.