படம் | Selvaraja Rajasegar, VIKALPA FLICKR

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்பினர், காணாமல்போனோரின் உறவினர்கள், பெண்கள் அமைப்பினர் ஐ.நாவின் காணாமல் போகச்செய்யப்பட்டோர் மீதான செயற்பாட்டுக் குழுவின் UN Working Group on Enforced and Involuntary Disappearances (UNWGEID) இலங்கை வருகை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை கவசமாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது அரச படையினர் மேற்கொண்ட அட்டூழியங்களை வரிசைப்படுத்தியிருக்கும் மேற்படி அமைப்பினர், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நாவின் காணாமல் போகச்செய்யப்பட்டோர் மீதான செயற்பாட்டுக் குழுவுக்குச் சென்று வந்தவர்களும்​உளவுத்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, இலங்கையில் நீதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்கான முன்நிபந்தனையாக வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கிழக்கு மாகாணத்தைச் சிவில் சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளர்.

நீதிக்கும் நல்லிணக்கத்துக்கும் முன்நிபந்தனை: இராணுவமயமாக்கலை ஒழித்தல்

இலங்கையின் வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்களின் மாறாத்துயரமாகக் காணப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையானது இந்நாட்டின் இன அடக்குமுறை வரலாற்றுடன் தொடர்புபட்டதாகும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தம் உறவுகளைத் தேடி அலைமோதும் எமது உடன் பிறப்புகளின் துயர நிலைக்கும் அவர்கள் தொடர்ந்தும் எதிர்கொண்டுவரும் அச்சுறுத்தல்களுக்கும் அடிப்படைக்காரணமான இனத்துவ அரசியலின் அடக்குமுறை வரலாற்றை இங்கு சுருக்கமாகவேனும் விபரிப்பது அவசியமாகும்.

சிங்களக் குடியேற்றங்கள்

1948 பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றவுடனேயே ஆட்சிப்பொறுப்பேற்ற சிங்கள அரசியல் தலைமைகள் மகாவலி அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு எனும் பெயரில் தென்பகுதி சிங்கள மக்களை கிழக்கு மாகாணத்தில் குடியேற்றத் தொடங்கினர். திருகோணமலையில் கந்தளாய் குடியேற்றம், திரியாய் ஜனகபுர குடியேற்றங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்லோயாக் குடியேற்றம் ஆகியன பிரதானமானவையாகும். ஆரம்பக் குடியேற்றங்கள் அரச காணிகளில் மேற்கொள்ளப்பட்டதால் தமிழ் மக்கள் இதனால் உடனடியாகப் பாதிக்கப்படவில்லை. எனவே, இதன் எதிர்கால விளைவுகளை அவர்களால் உணர முடியாமலிருந்தது.

1983களின் பின்னர் இராணுவ மயமாக்கலுடன் சிங்களக் குடியேற்றங்கள் விரிவாக்கப்பட்டன. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் இத்தகையக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், புதிதாக சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டடு மொறவௌ, பதவிசிறிபுர, கோமரங்கடவல ஆகிய சிங்களப் பெயர்களுடன் கூடிய புதிய உப அரச அதிபர் பிரிவுகளும் உருவாக்கப்பட்டன. இந்த குடியேற்றங்கள் எப்பொழுதும் இப்பகுதி தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததுடன், பிற்காலத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இன வன்முறைகளுக்கும் தளமாயமைந்தன.

இன வன்முறைகள்

அம்பாறை மாவட்டத்தில் இக்கினியாகொல பகுதியில் சிறியளவில் குடியேற்றப்பட்டிருந்த சிங்களவர்கள் 1952 – 1953 காலப்பகுதிகளில் இராணுவ ஒத்துழைப்புடன் அப்பகுதியில் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்றும், அவர்களின் இருப்பிடங்களை எரித்தும், அங்கிருந்து துரத்தி வன்முறைகளில் ஈடுபட்டதுடன், கிழக்கில் தமிழர்கள் மீதான இன வன்முறைகள் ஆரம்பமாயின. 1956இல் அன்றைய இலங்கை அரசு தனிச் சிங்கள சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் அமுலாக்கப்பட்ட செய்தி கிடைத்தவுடனேயே கல்லோயா குடியேற்றத்தில் குடியேற்றப்பட்டிருந்த சிங்களக் காடையர்கள் இன வன்முறைகளை உருவாக்கி 155 வரையிலான தமிழ் மக்களை படுகொலை செய்தனர். அதைத் தொடர்ந்து சிங்கள “சிறீ” எழுத்தை வாகனக் குறியீடாக பொதுமைப்படுத்தியதை எதிர்த்து தமிழர்கள் போராட்டம் நடத்தினர். எழுச்சிபெறும் தமிழரின் உரிமைக்கான குரலை அடக்கும் வகையில் மீளவும் 1958 இனவன்முறைகள் நாடு பூராவும் கட்டவிழ்த்துவிடப்பட்டன

தமிழ் மக்களுக்கெதிரான அரச இன அடக்குமுறை கட்டமைக்கப்பட்ட முறையில் திட்டமிட்டு விரிவாக்கப்பட்டதன் அக்கம்பக்கமாக இன வன்முறைகளும் நாட்டில் இடம்பெறத்தொடங்கின. 1977, 1980 (இது குறிப்பாக மலையகப் பகுதிகளில் இடம்பெற்றது), 1983 ஜூலை வன்முறை உட்பட 2006 திருகோணமலை நகரிலும் இன வன்முறைகள் நடைபெற்றன.

பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அரச வன்முறைகளும்

1982ஆம் ஆண்டு தமிழ் மக்களின் உரிமைக் குரலை நசுக்குவதற்காக இலங்கை அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இலங்கையின் அரசியல் யாப்பு விபரிக்கும் அடிப்படை உரிமைச் சட்டங்களை அனுபவிக்க முடியாது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்றுவரை தடையாக உள்ளது. இச்சட்டமானது அரச படையினருக்கும் காவல் துறைக்கும் உச்சபட்ச அதிகாரங்களை வழங்குகிறது. கடந்தகாலங்களில் நடைபெற்ற இராணுவச் சுற்றி வளைப்புகள், அகால நேரங்களிலும் வீடுபுகுந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள், கைதுகள், தடுத்துவைப்புகள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் அடங்கலாக இன்றுவரை தொடரும் அனைத்து வடிவிலான அரச வன்முறைகளுக்கும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சட்ட ரீதியான நியாயாதிக்கம் வழங்குவதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டமே அடிப்படைக் காரணமாகும்.

கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்

மட்டக்களப்பு மாவட்டம்

  • 5 புரட்டாதி 1990: வந்தாறுமூலைப் பல்கலைக் கழகத்தில் வைத்து 158 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 9 புரட்டாதி 1990: சத்துருக்கொண்டான் பகுதியில் 184 படுகொலை செய்யப்பட்டனர்.
  • 12 ஆனி 1991: கொக்கட்டிச்சோலை பகுதியில் 152 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம்

  • 6 பங்குனி 1990: கல்முனை பகுதியில் முதலாம் கட்டமாக 160 படுகொலை செய்யப்பட்டனர்.
  • 6 பங்குனி 1990: கல்முனை பகுதியில் இரண்டாம் கட்டமாக 250 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டம்

  • 12 பங்குனி 1986: சேருநுவர பகுதியில் வாழ்ந்த சிங்களக் காடையர்களால் ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தின் காரணமாக இடம்பெயர்ந்து ஈச்சிலம்பற்று நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் கொண்டுசென்ற 5 தமிழ் அரச ஊழியர்கள் உட்பட 21 பேர் அரச படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
  • 7 ஆடி 1990: சம்பூர் பகுதியில் 54 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 16 ஆடி 1990: மூதூர் மல்லிகைத் தீவு, பெருவெளி பகுதியில் 47 பேர் படுகொலை செய்யபப்பட்டனர்.
  • 11 மாசி 1996: மூதூர் குமாரபுரம் பகுதியில் 15 பெண்கள், 9 குழந்தைகள் உட்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்திய அமைதி காக்கும் படை

29 ஜூலை 1987 கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுதல் எனும் பெயரில் இந்திய அரசினால் அனுப்பிவைக்கப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினர் தாம் இங்கு தங்கியிருந்த காலங்களில் பாரதூரமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர். படுகொலைகள், கைதுகள், தடுத்துவைப்புகள், சித்திரவதைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் இப்படைகளால் மேற்கொள்ளப்பட்டன. இந்திய படையினருடன் இணைந்து செயற்பட்ட தமிழ் ஒட்டுக் குழுக்களும் இந்த அநியாயங்களுக்கும் ஆட்கடத்தல்களுக்கும் உடந்தயாக இருந்தன.

பெண்கள் மீதான அரச வன்முறை

இலங்கை அரசின் இன அடக்குமுறையானது தமிழ்ப் பெண்களை பன்முக அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழர்களாக இருப்பதனால் அவர்கள் அரசின் நேரடி இன அடக்குமுறைக்கு உள்ளாகின்றனர். பெண்களாக இருப்பதனால் அரச படைகளாலும் ஒட்டுக்குழுக்களாலும் பாலியல் வன்முறைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகின்றனர். இராணுவ மயமாக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் அச்சத்துடன் வாழும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். யுத்தம் காரணமாக ஆண்கள் பலர் கொல்லப்பட்டதாலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டதாலும் தடுப்புக் காவலில் இருப்பதாலும் பெண்களே குடும்பப் பொருளாதாரத்தை சுமக்கின்றனர். அத்துடன், சிறையிலிருக்கும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடும் முயற்சிகளில் பெண்களே பெரிதும் ஈடுபடுகின்றனர். இதன்போது பெண்கள் அரச படைகள், ஒட்டுக்குழுக்கள், உளவாளிகள் ஆகியோரால் பல்வேறு விசாரணைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாவதை இங்கு அறியத்தருகிறோம். அரச அனுசரணை பெற்ற நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்துப் பெண்களை அச்சுறுத்தியும் அவர்களின் உறவுகளை ஏமாற்றியும் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை அபகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடிவரும் அநாமதேயத் தொலைபேசி அழைப்புகளும் தொலைபேசி மூலமான அச்சுறுத்தல்களும் பெண்கள் பலரையும் உளவியல் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை

இன்று வடக்கு – கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையானது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இன அடக்குமுறையின் ஒரு வடிவமாகும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் இனவாத அரசியல் முன்னெடுப்புகளும் இராணுவ மயமாக்கலுமே இதன் அடிப்படையாகும்.

கடந்த ராஜபக்‌ஷ அரசானது காணாமற்போனோர் விவகாரம் சார்ந்து ஆணைக்குழுவொன்றை (பரணகம ஆணைக்குழு) நியமித்தது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசும் இந்த பரணகம ஆணைக்குழுவையே தொடர்ந்தும் செயற்பட அனுமதித்துள்ளது. புதிய அரசின் கீழ் கடந்த மாதங்களில் பரணகம ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்ட போது ஆணைக்குழு அமர்வுகள் நடைபெற்ற இடத்திலேயே உளவுப்பிரிவினர் இருந்து கண்காணித்துக்கொண்டும் கைத்தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்தனர். ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த பலர் பின்னர் உளவுத்துறையினால் தொலைபேசி மூலமும் நேரடியாகவும் விசாரிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த உள்நாட்டுப் பொறிமுறைகளில் நாங்கள் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளோம்.

தேசியக் கலந்துரையாடலுக்கான முன்நிபந்தனை

இன்றைய புதிய அரசானது இடைக்கால நீதிக்கான தேசியக் கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப அங்கத்தவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் சுந்திரமாக தேசிய கலந்துரையாடலில் பங்குபற்ற வேண்டுமாயின், இராணுவ மயமாக்கம் ஒழிக்கப்பட வேண்டும். 29ஆம் ஐப்பசி 2015 கொழும்பு ஜானகி ஹோட்டலில் கௌரவ வெளிவிவகார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இடைக்கால நீதிக்கான தேசிய கலந்துரையாடல் சார்ந்த ஆரம்ப ஆலோசனைக் கலந்துரையாடலில் பங்குபற்ற செல்லுமுன்னரேயே உளவுப் பிரிவினர் திருகோணமலையில் யார் யார் இதற்குச் செல்கிறார்கள் என விசாரிக்கத் தொடங்கிவிட்டனர். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நாவின் காணாமல் போகச்செய்யப்பட்டோர் மீதான செயற்பாட்டுக் குழுவுக்குச் சென்று வந்தவர்களும் தொலைபேசி மூலம் உளவுத்துறையினரால் கேள்வி கேட்கப்படுகின்றனர்.

எனவே, இலங்கையில் நீதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்கான முன்நிபந்தனையாக வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல் முடிவுறுத்தப்பட வேண்டும் எனக் கோருகிறோம்.

இவ்வண்ணம்,

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சார்ந்த

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பத்தினர்,

பெண்கள் அமைப்புகள்,

சிவில் அமைப்புகள்,

கிராமிய அடிப்படைக் குழுக்கள்

14 கார்த்திகை 2015

வை.எம்.சி.ஏ. மண்டபம்

மட்டக்களப்பு