படம் | Selvaraja Rajasegar (காணாமல்போன தனது மகளின் படமொன்றை பற்றியவாறு முல்லைத்தீவு தாயொருவர்)

பலவந்தமாக அல்லது தன்னிச்சையற்ற முறையில் காணாமற்போகச் செய்வித்தல் தொடர்பான ஐ.நா. செயற்குழுவின் (WGEID) 35 வருட கால வரலாற்றில், மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் காணாமல்போதலில் இலங்கை 2ஆவது இடத்தில் திகழ்கின்றமை வெட்கப்படக்கூடியதொன்றாகும்.

தெளிவுப்படுத்தல்களுக்காக அரசிடம் கையளிக்கப்பட்ட மொத்த சம்பவங்கள் 12,341 ஆகும். அரசினால் தெளிவுபடுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 6,551 ஆகும். ஏனைய மூலங்களினால் தெளிவுப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 40 ஆகும். நிலுவையிலுள்ள சம்பவங்கள் 5,750. காணாமற்போனவர்கள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்த காலப்பகுதியான 2006ஆம் ஆண்டு முதல் இற்றை வரையான காலப்பகுதியில் இலங்கையிலேயே காணாமற்போனவர்கள் தொடர்பான சம்பவங்கள் மிக அதிகமாகக் காணப்பட்டுள்ளன. 637 சம்பவங்கள் அரசிடம் கையளிக்கப்பட்டன (2ஆவது அதிகப்படியான சம்பவங்கள் 169 பாகிஸ்தான் அரசிடம் கையளிக்கப்பட்டிருந்தது). அதேபோல் 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உணரக்கூடிய வித்தியாசங்கள் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. 2006ஆம் ஆண்டு 191 சம்பவங்கள், 2007 இல் 164 சம்பவங்கள், 2008 இல் 147 சம்பவங்கள், 2009 இல் 123 வழக்குகள்.

இலங்கையில் காணாமற்போனவர்கள் தொடர்பான விடயங்கள் அவ்வப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பலவந்தமாக அல்லது தன்னிச்சையற்ற முறையில் காணாமற்போகச் செய்வித்தல் தொடர்பான ஐ.நாவின் செயற்குழு (WGEID) விஜயம் செய்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் அவை வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இக்குழு ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. இது இக்குழுவின் இலங்கைக்கான நான்காவது விஜயமாகும். 1991, 1992, 1999 ஆகிய காலப்பகுதிகளில் ஏற்கனவே விஜயம் செய்துள்ளது. 16 வருடங்களின் பின்னர் WGEID மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. காணாமற்போனவர்களது குடும்பங்கள், இலங்கை செயற்பாட்டாளர்கள் மற்றும் WGEID அமைப்பு தானாகவே 2006ஆம் ஆண்டு முதல் கோரி வந்த போதிலும் கடந்த அரசு இதற்கான அனுமதியை தொடர்ச்சியாக மறுத்து வந்துள்ளது.

பலவந்தமாக அல்லது தன்னிச்சையற்ற முறையில் காணாமற் போகச்செய்வித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழு (WGEID)

WGEID ஆனது 1980 இல் உருவாக்கப்பட்டது. சர்வதேச ஆணையுடன் உருவாக்கப்பட்ட முதலாவது ஐ.நா. மனித உரிமைகள் தொனிப்பொருள் சார்ந்த பொறிமுறை இதுவாகும். தற்போதைய மனித உரிமைகள் பேரவையின் முன்னோடியான மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவினால் இது உருவாக்கப்பட்டது. அதாவது, 1970களில் இலத்தீன் அமெரிக்காவில் இடம்பெற்ற பாரியளவிலான காணாமற்போதல் சம்பவங்களின் விளைவாக இது தோற்றுவிக்கப்பட்டது.

காணாமற்போனவர்களது குடும்பங்களுக்கு உதவுவதும், அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அறிந்து கொள்வதற்கு உதவுவதுமே WGEID முதல்நிலை இலக்காகும். இச்செயற்பணியின் அடிப்படையில் WGEID ஆனது ஓர் இடைத்தொடர்பாளர் போல் செயற்பட்டு வந்தது. காணாமற்போனவர்களது குடும்பங்களுக்கும் அரசிற்கும் இடையில் தொடர்பாடல் செயற்பாடுகளை இது மேற்கொண்டது. காணாமற்போனவர்களது குடும்பங்களிலிருந்து முறைப்பாடுகளைப் பெற்று அவ்வித குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களிடமிருந்தும் முறைப்பாடுகளைப் பெற்று அந்த முறைப்பாடுகளை வலுக்கட்டாயமாக காணமாற் போகச் செய்தல் என்ற வகையில் கீழ் மதிப்பீடுசெய்து அந்த வழக்குகளை சம்பந்தப்பட்ட அரசுகளிடம் WGEID கையளித்து வந்தது.

எண்ணிக்கை மற்றும் சம்பவங்கள்

பலவந்தமாக அல்லது தன்னிச்சையற்ற முறையில் காணாமற்போகச் செய்வித்தல் தொடர்பான ஐ.நா. செயற்குழுவினால் கையளிக்கப்பட்ட வழக்குகளுக்கு மேலதிகமாக பல்வேறு விதமான விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் பொலிஸ் நிலையத்தில் காணப்படுகின்ற கூற்றுகள், அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் ஆகியன காணப்பட்ட பொழுதிலும் கூட இலங்கையில் இதுவரை எத்தனை பேர் காணாமற் போயுள்ளனர் என்பது தொடர்பான துல்லியமான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும், பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமற்போயுள்ளனர். பெரும்பாலும் ஒரு இலட்சம் பேர் வரையில் காணாமற் போயுள்ளதற்கான வாய்ப்புகள் உள்ளன. சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் பலர் அனுபவித்துள்ள சோகங்களில் அல்லது கொடுமைகளிலிருந்து இந்த எண்ணிக்கையானது கவனத்தை திசைதிருப்புவதாகவும் காணப்படுகிறது.

2007ஆம் ஆண்டு பெப்ரவரியில் தமிழ் ஊடகவியலாளரான சுப்பிரமணியம் ராமச்சந்திரன் என்பவர் யாழ்ப்பாணத்தில் ஒரு இராணுவச் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் இதுவரை அவரைக் காணவில்லை. அவர் கடத்தப்பட்டதன் பின்னர் அவரது தொலைபேசியிலிருந்து தமக்கு அழைப்புகள் கிடைத்ததாக அவரது பெற்றோர்கள் என்னிடம் தெரிவித்த பொழுதிலும் இதுவரை அவரைக் காணவில்லை. நான் பணியாற்றிய பெண்கள் மத்தியில் என்னை மிகவும் அகத்தூண்டலுக்கு உட்படுத்தியவர் திருமதி சந்தியா எக்னலிகொட. அவரது துணிச்சலின் காரணமாகவும், உறுதியான தொடர் போராட்டத்தின் காரணமாகவும், தேசிய மற்றும் சர்வதேச ஆதரவுகளை அவரால் அணிதிரட்ட முடிந்தது. இதன் காரணமாக காணாமற்போன அவரது கணவர் தொடர்பில் அதாவது, 2010ஆம் ஆண்டில் காணாமற்போன சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொட தொடர்பில் இறுதியாக சில இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். யாழ்ப்பாண கடற்படைச் சோதனைச் சாவடியில் அச்சுறுத்தப்பட்டு அங்கு இறுதியாக காணப்பட்ட தமிழ் கத்தோலிக்க மத போதகர் அருட்தந்தை ஜிம் பிரவுன் (15 முக்கிய சாவுகள் மற்றும் கொலைகள்) இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவானது சான்றுகள் இன்மையின் காரணமாகவும், குறிப்பாக இறந்தவர்களது சடலங்களைக் கண்டுபிடிக்க முடியாமையின் காரணமாகவும் விசாரணைகளை மேற்கொள்ள முடியவில்லையெனத் தெரிவித்தது. நன்கு அறியப்பட்ட தமிழ் கத்தோலிக்க மதகுரு மற்றும் முக்கிய எல்.ரீ.ரீ.ஈ. தலைவர்கள் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் பொழுது இராணுவத்திடம் சரணடைந்தமை தொடர்பாக கொண்டுவரப்பட்ட 16 ஆட்கொணர்வு மனுக்கள் பல்வேறுவிதமான சான்றுகளை உள்ளடக்கியிருந்த பொழுதிலும் கூட, 3 வருடங்களுக்கு மேலதிகமாக முல்லைத்தீவு மற்றும் வவுனிய நீதிமன்றங்களில் இழுபறி நிலையிலுள்ளது. யாழ். பிராந்தியத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 2002 இல் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் பிரகாரம், அதாவது, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட இந்த விசேட குழுவானது ஆயுதப்படைகளினால் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் 248 தமிழர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கின்றார்கள் அல்லது காணாமற்போயுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல், எல்.ரீ.ரீ.ஈயினால் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் 25 முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர் அல்லது காணாமற்போயுள்ளனர். அதேபோல் 1990களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியிருந்த 158 தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள எனது நண்பர் ஒருவர் தெரிவித்தார். இதனை அவரோடு ஆயிரக்கணக்கானோர் கண்டுள்ளனர். இதுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றித் தெரியாது. பல்வேறு விதமான சம்பவங்களுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை எனது நண்பர் பல ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்குத் தெரிவித்த போதிலும் இதுவரை எதுவும் நடைபெறவில்லை.

1990ஆம் ஆண்டிற்குப் பின்னர் காணாமல் போனவர்களுள் அதிகமானவர்கள் தமிழர்கள். அதேவேளை, முஸ்லிம்களும் சிங்களவர்களும் காணாமல் போயுள்ளனர். இவ்விதமான காணாமல்போதல் சம்பவங்களுக்குப் பொறுப்பாக இராணுவம், பொலிஸார் (விசேடமாக விசேட அதிரடிப்படை), அரசின் சார்பில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுகின்ற பல்வேறு அமைப்புகள் போன்றன இவ்விதமான சம்பவங்களுக்குப் பொறுப்பாக அடையாளம் காணப்பட்டனர். சில சம்பவங்களின் பொழுது காணாமற்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களைக் கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் அல்லது இராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் கடத்திச் செல்லப்பட்ட முகாம்கள் போன்ற விபரங்களை எடுத்துக் கூடிய பொழுதிலும் இதுவரை காத்திரமாக எதுவும் நடைபெறவில்லை. பலர் காணாமற்போனதற்குப் பொறுப்பாக எல்.ரீ.ரீ.ஈயும் இருந்துள்ளது. அதேபோல், எல்.ரீ.ரீ.ஈலிருந்து கிழக்கு மாகாணத்தில் பிரிந்துசென்ற (கருணா, இனிய பாரதி) மற்றும் கடந்த அரசின் பதவிக்காலத்தில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டீ.பி. குழுவினரும், இராணுவத்தினருடன் கூட்டிணைந்து இவ்விதமான காணாமற்போன செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்துள்ளனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு புலப்படுகின்ற அடிப்படை உண்மை என்னவெனில், ஆயுதப்படைகளாக இருந்தாலென்ன அல்லது எல்.ரீ.ரீ.ஈ. ஆக இருந்தாலென்ன இவர்கள் அனைவரும் முழுமையான தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமை பெற்றுள்ள நிலையிலேயே குற்றங்களை இழைத்துள்ளனர். இவற்றுள் கடந்த பத்து மாதங்களாக ஆட்சி செய்து வருகின்ற புதிய அரசும் உள்ளடங்கும்.

உளவியல் மற்றும் நிதி ரீதியான தாக்கங்கள்

உறவுகள் காணாமல்போன சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு விதமான மன வடுக்களையும், உளவியல் ரீதியான பல தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களது பெற்றோர்கள், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள் ஆகியோரைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. அருட்தந்தை ஜிம் ப்ரவுனுக்கு என்ன நடந்தது என்பதை தாம் இறப்பதற்கு முன்னர் அறிந்துகொள்ள விரும்புவதாக அவரது வயதான பெற்றோர்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர். இருப்பினும், சில வருடங்களுக்கு முன்னர் அவரது தாயார் மறைந்துவிட்டார். தன் மகனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறியாத நிலையிலேயே அவரது உயிர் பிரிந்தது. அதேபோல, தனது மகனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அவரது தந்தையால் அறிந்துகொள்ள முடியுமா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. அதேசமயம், உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்ற சந்தியா எக்னலிகொடவின் இளைய மகன் உளவளத்துணை ஆலோசனைகளின் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

காணாமற்போதல் சம்பவங்களானது கடும் பொருளாதார ரீதியான நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களது குடும்பங்கள் எவ்வித குற்றங்களையும் இழைக்காத போதிலும் கூட தாம் உயிர் வாழ்வதற்கும் தமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் அடுத்தவர்களது உதவியை நாடி நிற்கின்ற நிர்ப்பந்தநிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, சில சந்தர்ப்பங்களில் தனது தன்மானத்தையும் அடகுவைக்க வேண்டிய நிலையிலுள்ளனர். அதேபோல், 2013ஆம் ஆண்டில் காணாமல்போன நபர் ஒருவரது இளம் மனைவி தனது இரண்டு குழந்தைகளின் ஜீவனோபாயத்தின் பொருட்டு என்னிடம் இம்மாத தொடக்கத்தில் உதவிகளை நாடி வந்தார். இவ்வாறு நிதியுதவிகளை நாடி வருபவர்கள் தொடர்பில் சமூகம், அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மத்தியில் மிகக் குறைவான கரிசனை காணப்படுவதன் காரணமாக இவர்களுக்கான நிதியுதவிகளை வழங்குவது ஒரு சிரமான காரியமாகத் திகழ்கிறது. நிதி நெருக்கடிகளின் காரணமாக உண்மைக்கும் நீதிக்குமான இவர்களது போராட்டங்களிலும் அது தொடர்பிலான உதவிகளிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன.

அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள், அவதூறுகள், கட்டுப்பாடுகள்

காணாமல்போனவர்களது குடும்பங்கள், ஏனைய செயற்பாட்டாளர்கள் மற்றும் நான் காணாமல்போனவர்கள் தொடர்பில் பல்வேறு விதமான சவால்களை விடுக்கும் முயற்சிகளை மேற்கொண்ட பொழுது, அரசிடமிருந்து பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள், கட்டுப்பாடுகள் போன்றவற்றை எதிர்கொண்டோம். இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் காணாமல்போன இளைஞர் ஒருவருடைய தயாரான பாலேந்திரன் ஜெயகுமாரி 2014 இல் கைதுசெய்யப்பட்டார். இதனோடு தொடர்புடைய சூழ்நிலைகள் பற்றிய விடயங்களை ஆராய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்காக நானும் கைதுசெய்யப்பட்டேன். அவரது மற்றுமொரு இள வயது மகளுக்குத் தங்குவதற்கான இடம் ஒன்றைத் தேடும் முயற்சியின் பொழுது நான் கைதுசெய்யப்பட்டேன். கடந்த வருடம் கொழும்பில் காணாமல்போனவர்களின் குடும்பங்களுடன் நாம் கூட்டமொன்றை நடத்தினோம். மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் இராஜதந்திரிகள் போன்றோர் அதில் கலந்துகொண்டிருந்த சமயத்தில் ஆத்திரமடைந்த நிலையில் ஒரு குழுவினர் அத்துமீறி அங்கே உள்நுழைந்தனர். நாம் பொலிஸாரை அழைத்த போதிலும் அவர்களை வெளியேற்றுவதற்கு அவர்கள் மறுத்துவிட்டதுடன், எமக்குப் பாதுகாப்பளித்தனர். இவ்வாறு அத்துமீறி உள்நுழைந்தவர்கள் தொடர்பில் தகுந்த ஆதாரத்துடன் சான்றுகளைத் தெரிவித்த போதிலும் அவர்களுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆஜன்ரீனாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மூலமாக ஏற்பட்ட அகத்தூண்டல்

2007ஆம் ஆண்டு முதல் கணிசமானளவு நேரத்தை காணாமல் போனவர்களுடைய குடும்பங்களுடன் நான் கழித்திருக்கின்றேன். இவர்களுள் சிலருடன் வைத்தியசாலைகள், முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் போன்றவற்றுக்கு காணாமல் போனவர்களைத் தேடி நானும் சென்றிருக்கின்றேன். இவர்களைப் பற்றி இவர்களது வீடுகளிலும் எனது அலுவலகத்திலும் கலந்துரையாடி இருக்கிறேன். இவர்களுக்காக கொழும்பிலும் மற்றும் ஜெனீவாவிலும் கூட ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குபற்றியிருக்கிறேன். இவர்களுக்காக அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் சந்திக்கச் சென்றிருக்கின்றேன். இவர்களுடன் நீதிமன்றங்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் பல்வேறு வகையான விசாரணைக் குழுக்கள் ஆகியவற்றுக்குச் சென்றிருக்கின்றேன். இவர்களுக்காக கொழும்பு, யாழ்ப்பாணம், ஜெனீவா போன்ற இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளின் போது கலந்துரையாடியதோடு, இவர்கள் பற்றிய பல்வேறு விதமான தகவல்களையும் அறிந்துள்ளேன். இவர்களைப் பற்றி பல்வேறு விதமான பத்திரிகை ஆக்கங்களை எழுதியுள்ளேன். இருப்பினும், நாம் எதனை அடைந்துள்ளோம் என்று சற்று சிந்தித்துப் பர்க்கின்ற பொழுது எதுவும் புரியாத நிலையிலுள்ளது.

இருப்பினும் கூட சந்தியா எக்னலிகொட, காணாமற் போனவர்களின் தாய்மார்கள் மற்றும் அவர்களின் மனைவிமார்களைச் சந்திக்கின்ற போது பல அகத்தூண்டல்கள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன. இவர்களுள் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளடங்குவர். அண்மையில் ஆஜன்ரீனாவைச் சேர்ந்த 84 வயதுடைய ‘ஹெஸ்லிலாடி காலோட்டோ’ என்ற மூதாட்டியை இந்த வருடம் இரண்டு முறை சந்திப்பதற்கான வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. இவர் பாட்டிமார்களுக்கான “காசாடி மயோ” என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர். ஆஜன்ரீனாவில் மிக மோசமாக நடைபெற்ற யுத்தத்தின் பொழுது பலவந்தமாக காணாமல்போகச் செய்து அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைத் திருடி அவற்றைத் தத்துக்கொடுக்கும் முறையொன்று காணப்பட்டது. அவ்வாறு தத்தெடுத்து வளர்க்கப்படும் தனது பேரப்பிள்ளைகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இம்மூதாட்டி தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தார். காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆஜன்ரீனா அரசு மற்றும் சர்வதேச ரீதியாக ஆழமான அபிப்பிராயங்களைத் தோற்றுவிப்பதில் இவரது பணி காத்திரமிக்கதாகக் காணப்பட்டது. 36 வருடங்களுக்கு முன் தனது மகள் கைதுசெய்யப்பட்டு பின்னர் காணாமற்போய் அவருக்குப் பிறந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டு அதன் பின்னர் அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். 36 வருட தொடர்ச்சியான தேடலின் பின்னர் தற்சமயம் இம்மூதாட்டி தனது பேரப்பிள்ளையைக் கண்டுபிடித்துள்ளார். காணாமல்போன தனது மற்றைய பேரப் பிள்ளைகளையும் எவ்வாறாவது தான் கண்டுபிடிப்பேன் என்பதில் அவர் உறுதியாகவிருக்கின்றார். அவர்களைக் கண்டுபிடிக்கும் வரை அல்லது தான் இறக்கும் வரை இப்பணி தொடரும் என்பதில் அவர் உறுதியாகவுள்ளார். “வீட்டில் அழுவதும், வீதிகளில் போராடுவதும்” என்ற அவளது வாசகமானது இலங்கையில் காணாமல்போனவர்களது குடும்பங்களுக்கும் பொருந்துவதாகவிருக்கும். இந்நிலைமை என்னைப் பொறுத்தவரையிலும் உண்மையானது.

இலங்கையைப் பொறுத்த வரையில் காணாமல்போனவர்களது குடும்பங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், போராட்டங்கள் தொடர்பில் ஒரு செயற்பாட்டாளர் என்ற வகையில் சாதாரண இலங்கை மக்களது அனுதாபத்தையும் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்வது பெரும் சவாலாகக் காணப்படுகிறது. இருப்பினும், இலங்கையில் காணப்படுகின்ற பல்வேறு விதமான மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான விடயங்களைக் கருத்திற்கொள்கையில், குறிப்பாக யுத்தத்திற்குப் பின்னரான நிலைமையைக் கருத்திற்கொள்கையில் காணாமல்போனவர்கள் சார்பாக தொடர்ச்சியாக பரிந்துரைகளையும் உதவிகளையும் கோருகின்ற செயற்பாடானது ஓர் இலகுவான விடயமல்ல. காணாமல்போனவர்களது குடும்பங்களுக்கான உதவிகளை அணிதிரட்டுதல் மற்றும் இவர்கள் தொடர்பிலான விழிப்புணர்வினை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், சமயத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றன முக்கிய வகிபாகங்களை வகித்தன. இருப்பினும், சில நேரங்களில் தமது சொந்த நலன்களை மேம்படுத்துவதற்காக இவர்களைப் பயன்படுத்தினார்களா என்ற சந்தேகமும் காணப்படுவதுண்டு. இவர்களது போராட்டங்களை சிலர் தரக்குறைவாகக் குறிப்பிடுவதுடன், அரசியல் உள்நோக்கத்தின் நிமித்தம் இவை நடத்தப்படுகின்றது எனக் குறிப்பிடுவது ஒரு சோகமான விடயமாகும். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாரிய முயற்சியும் கடும் உழைப்பும் அவசியமானதொரு போராட்டம் இதுவாகும். இவ்விதமான பின்புலத்தில் ‘எஸ்ரிலாவின்’ கதைகள் மற்றும் ஆஜன்ரீன ‘தாஸா டீ மயோவைச்’ சேர்ந்த மூதாட்டியின் தொடர்ச்சியான போராட்டங்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் பல தசாப்தங்களாக இவர்கள் மேற்கொண்ட கடும் முயற்சிகள் ஆகியன எமக்கு அகத்தூண்டல்களாகத் திகழ்கின்றன. முடிவற்ற தொடர் போராட்டமாக காணப்படுகின்ற நிலைமைக்கு இது மென்மேலும் பலம் சேர்க்கின்றதொரு மூலமாகத் திகழ்கிறது.

WGEID இலங்கையில் என்ன செய்ய முடியும் மற்றும் இலங்கைக்காக என்ன செய்ய முடியும்?

காணாமல் போனவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் செயற்படுகின்ற செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு WGEID தொடர்பில் உயர்ந்த எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. WGEID உறுப்பினர்கள் விஜயம் செய்துள்ள காலப்பகுதியிலும் கூட காணாமல்போன நபர்கள் எங்கே இருக்கின்றார்கள், அவர்களது நிலைமைகள் எவ்வாறு காணப்படுகின்றன போன்ற கேள்விகளுக்கான பதில்கள் கிடைப்பதில்லை. இதனை அடைவதற்கான ஆணையோ அல்லது அதிகாரமோ இதனிடம் இல்லை. இருப்பினும், இத்தகைய விஜயமானது குடும்பங்கள், தொழில்வாண்மை மிக்கவர்கள், சர்வதேச செயற்பாட்டாளர்கள் போன்றவர்கள் இது தொடர்பிலான செயன்முறைகளை மேற்கொண்டு அதன் மூலம் காணாமல்போனவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? அவர்களது நிலைமைகள் என்ன? என்பதை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துமென நான் நம்புகிறேன். மேலும், நீதி, இழப்பீடுகள், இவ்வித சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமலிருத்தல் ஆகியன தொடர்பிலான உறுதிப்பாடுகளை இது வழங்குமென நினைக்கிறேன். இச்சூழ்நிலையில் விஜயம் மேற்கொண்டுள்ள இத்தருணம் முக்கியமானது.

காணாமல்போனவர்கள் தொடர்பான விடயங்களைக் கையாளும் பொருட்டு கடந்த அரசினால் தொடர்ச்சியாக பல விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. இவற்றுள் இறுதியாக நியமிக்கப்பட்ட குழு இதுவரை செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு 23,249 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன (இவற்றுள் 5,000 பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடையவை). நான் அறிந்த வரையில், இவ் ஆணைக்குழுவானது இதுவரை காணாமல்போன ஒரு நபர் பற்றிய தகவல்களையாவது அறிந்துகொள்ள முடியாத நிலையிலுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஒன்றைத் நிறுவுவதற்கு புதிய அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. இலங்கையில் பொறுப்புக்கூறல், தண்டனையிலிருந்து சிலர் விலக்கீட்டுரிமை பெறல் ஆகியன தொடர்பில் ஐ.நாவினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய குற்றங்கள் ஆகியன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் WGEIDஇன் தற்போதைய விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது. காணாமல்போனவர்கள் தொடர்பில் விரிவான முறையில் பல விடயங்களை மேற்கொண்ட மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உயர் ஸ்தானிகர் அலுவலகமானது பின்வரும் விடயங்களைத் தெரிவித்தது.

இலங்கை அதிகாரிகள் பரந்தளவிலும், முறையாகவும் குறிப்பிடக் கூடியளவு மக்கள் சுதந்திரமாகச் செயற்படுவதைத் தடுத்துள்ளனர் என்பதற்கும், அவ்வாறு அம்மக்களது சுதந்திரமான செயற்பாட்டிற்கு தாங்கள் தடையாகவிருந்தோம் என்பதை ஏற்றுக்கொள்வதை மறுத்துள்ளனர் என்பதற்கும், மேலும் அதனை நம்புவதற்குத் தகுந்த அடிப்படைக் காரணங்கள் உண்டு. அதேபோல், காணாமல் போனவர்கள் எங்கே இருக்கின்றனர், அவர்களது நிலைமை என்ன என்பன போன்ற தகவல்களையும் மறைத்து வைத்துள்ளனர் என்பதை நம்புவதற்கு தகுந்த காரணிகள் உண்டு. இவ்வித நிலைமைகளின் காரணமாக இந்த மக்கள் சட்டத்திலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை இழந்துள்ளதுடன் கடும் இடர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சிவில் சமூகத்திற்கெதிரான பரந்தளவிலான தாக்குதலின் ஓர் அங்கமாக வலுக்கட்டாயமாக காணாமல் போகச்செய்வித்தல் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்பதை நம்புவதற்கும் அத்தகைய குற்றங்கள் நடைபெற்றுள்ள புவியியல் ரீதியான பிரதேசங்கள், அவை இடம்பெற்ற காலகட்டம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நோக்குகையிலும் குறிப்பிட்ட ஆயுதப்படையினர் குறிப்பிட்ட மக்களை இலக்காகக் கொண்டு இவற்றை மேற்கொண்டுள்ளனர் என்பதை நம்புவதற்கும் தகுந்த அடிப்படைக் காரணிகள் உண்டு.

காணாமல்போனவர்களது குடும்பங்களும் அவர்கள் தொடர்பிலான செயற்பாட்டாளர்களும் கடந்த பல வருடங்களாக கோரி வருகின்ற பல்வேறு வகையான தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசு அர்ப்பணிப்புடன் உறுதியளித்து இரண்டு மாதம் கடந்துள்ள நிலையிலேயே WGEID தற்போது விஜயத்தை மேற்கொண்டுள்ளது. இத்தருணத்தில் இலங்கையில் காணாமல்போதல்களை குற்றச் செயல்களாக கருதக்கூடிய விதத்தில் வலுக்கட்டாயமாக காணாமல்போகச் செய்வித்தலுக்கு எதிரான சர்வதேச சமவாயத்தை ஏற்றுக்கொள்ளல், மரணச் சான்றிதழ் விநியோகிக்க முடியாத நிலைமைகள் ஏற்படுகின்ற பொழுது காணாமல்போனவர்களது குடும்பங்களுக்கு காணாமல் போனமை தொடர்பான சான்றிதழ்களை விநியோகித்தல், இவ்வித அர்ப்பணிப்புகள் தொடர்பில் அரசு எவ்விதமான காலவரையறைகளையும் தெரிவிக்கவில்லை. அதேவேளை, இந்த அர்ப்பணிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது தொடர்பிலும் தெளிவாக எடுத்துரைக்கப்படவுமில்லை.

காணாமல்போனவர்களது குடும்பங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் காத்திரமாகவும் உறுதியாகவும் கடந்த 35 வருடங்களாக சுயாதீனமாகவும் நன்மதிப்புடனும் உறுதியாகவும் பணியாற்றிய சர்வதேச நற்பெயர் WGEIDஇற்கு உண்டு. இதனைச் பரிசோதித்துப் பார்ப்பதற்கான தருணம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. வெறும் வார்த்தைகளைக் கடந்து காணாமல்போனவர்களது குடும்பங்கள் மற்றும் அது தொடர்பிலான செயற்பாட்டாளர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் பொதுவான முறையிலும் உறுதியான முறையில் தனது ஒருமைப்பாடுகளை இவர்கள் புலப்படுத்தல் வேண்டும். கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகளை இவர்கள் மிகவும் காத்திரமான முறையில் ஆய்வுக்குட்படுத்துவதுடன், குறிப்பாக பாரிய புதைகுழிகள் மற்றும் இரகசிய தடுப்பு நிலையங்கள் போன்றன தொடர்பில் விசேட கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். கடந்த காலம், எதிர்காலம் ஆகியன தொடர்பில் இவற்றுடன் தொடர்புடைய சட்டங்கள், சட்ட ரீதியான பொறிமுறைகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பிலான தகவல்களைச் சேகரித்தல் வேண்டும். அரசின் சாதகமான செயற்பாடுகள், அர்ப்பனிப்புகள் ஆகியவற்றைக் கருத்திற்கொள்கின்ற அதேவேளை, அரசின் அலங்கார வார்த்தைகள், பேச்சு சாதுர்யம் ஆகியவற்றுக்கு அடிபணியாமல் நடந்துகொள்வது முக்கியமாகும். இச்சந்தர்ப்பத்தில் சிறு சிறு விடயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதுவரை கால வரையறை குறிப்பிடப்படவில்லை. அவற்றையும் இங்கு கருத்திற்கொள்வது சிறப்பானதாகும். அதேவேளை, இராஜதந்திர ரீதியான உறவுகள் மற்றும் அரசியல் பரிசீலனைகள் போன்ற விடயங்கள் கடுமையான கேள்விகளைக் கேட்பதிலிருந்தும் அவர்களைத் தடுத்துவிடக்கூடாது. சௌகரியமற்ற உண்மைச் சம்பவங்கள் அல்லது கசப்பான உண்மைகளைக் கண்டறியும் பொழுதும் அது தொடர்பிலான வினாக்கள் எழுப்பப்படுவது அவசியமாகும். அதேவேளை, அரசு ஏற்றுக்கொள்வதற்கு சங்கடப்படுகின்ற விதப்புரைகளாகவிருந்தாலும் அவற்றையும் தெரிவித்தல் வேண்டும். அத்தோடு, பெரும்பான்மைச் சமூகம் வரவேற்காத பரிந்துரைகளாகவிருந்தாலும் அவற்றையும் தெரிவித்தல் வேண்டும். இவற்றை தமது விஜயத்தின் பொழுதும் அதன் பின்னரும் தெரிவித்தல் வேண்டும். இவர்களது ஆர்வம் மற்றும் பின்னூட்டல் செயற்பாடுகள் ஆகியவற்றிலேயே பல விடயங்கள் தங்கியுள்ளன. மேலும், தமது விஜயத்தின் பின்னரும் ஆர்வமுடன் பல விடயங்களை மேற்கொள்ளல் வேண்டும். குறிப்பாக 2016 செப்டெம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு தமது முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரையில் இச்செயற்பாடுகள் தொடரவேண்டும்.

Groundviews தளத்தில் Disappearances in Sri Lanka and the visit of the UN Working Group on Disappearances என்ற தலைப்பில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.

ருக்கி பெர்னாண்டோ