Photo, AMILA UDAGEDARA
‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைத்துள்ளதுடன், ஏற்கனவே வறுமையின் விளிம்பில் இருந்த மலையக சமூகத்தை மீளமுடியாத துயரத்திற்குள் தள்ளியுள்ளது. ஒரு பேரிடரின் தாக்கம் என்பது அனர்த்தத்திற்கு முன்னரான சமூக – பொருளாதாரக் கட்டமைப்பாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்ற உண்மையை இக்கோரப் பாதிப்புகள் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், காணி உரிமை தொடர்பான தெளிவற்ற தன்மை மற்றும் அரச சேவைகளை அணுகுவதில் உள்ள நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக இம்மக்கள் மீண்டெழுவதில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். இச்சூழலில், நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் உரிய முறையில் மக்களைச் சென்றடைந்து, அவர்கள் பாதுகாப்பான சமூகமாக மீண்டெழுவதை உறுதிசெய்யும் பொருட்டு அரசாங்கம் போதிய அவதானத்தைச் செலுத்த வேண்டுமென ‘மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு’ கோரிக்கை விடுக்கின்றது.
மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவின் முழுமையான கோரிக்கை மனு கீழே தரப்பட்டிருக்கிறது.
***
‘டித்வா’ புயலின் விளைவாக ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் என்பன மலையகத்தை கடுமையாக பாதித்திருப்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தோட்டப் பிரதேசங்களில் வாழும் மலையக தமிழர் வாழ்வை இக்கோரப் பேரிடர் புரட்டிப்போட்டுள்ளது. வறுமை மற்றும் இடர் நேரும் அபாயத்தின் விளிம்பில் வாழ்ந்துகொண்டிருந்த இவர்களை தள்ளி தலைகுப்புற விழவைத்திருக்கிறது.
இயற்கையின் சீற்றம் தவிர்க்க இயலாததொன்றாக இருப்பினும் அதன் தாக்கமும் துயரமும் அனர்த்தத்திற்கு முன்னரான சமூக – பொருளாதார கட்டமைப்பினால் தீர்மானிக்கப்படுகின்றதென்பது பேரிடர் அனர்த்த ஆய்வுகளின் முக்கிய முடிவுகளில் ஒன்று. எனவே, இம்முறை வந்த இந்த அனர்த்தமும் இப்பிரதேசங்களில் விளிம்புநிலையில் இருந்த மலையக மக்களை அதிகளவு பாதித்திருப்பது ஆச்சரியமில்லை.
அரசாங்கம் அறிவித்திருக்கும் பல்வேறு நிவாரணத் திட்டங்களின் ஆதரவினைப் பெற்று மலையக தமிழர் சமூகம் மீண்டெழுவதில் சிக்கல்களும் சவால்களும் இருக்கின்றன. தோட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரச நிர்வாகத் தரப்பினருக்கு பொதுவாகவே இருக்கும் அனுபவ குறைவும், அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு இருக்கும் தடங்கல்களும் முக்கியமாக காணி உரிமை தொடர்பாக இருக்கும் தெளிவற்ற தன்மையும் சிக்கல்களை தோற்றுவிப்பன. இவற்றை சரிவர கையாளாவிட்டால் ஒரு சில கிழமைகளிலேயே இவை பிரச்சினையாகக் கிளம்பி எழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நிவாரணமும், புனர்வாழ்வும், புனர்நிர்மாணமும் சரியான முறையில் சென்றடைந்து இம்மக்கள் பாதுகாப்புள்ள சமூகமாக மீண்டெழ பின்வரும் விடயங்களில் அரசாங்கம் அவதானத்தை செலுத்தவேண்டுமென மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு கோரிக்கை விடுக்கின்றது.
- தெளிவான உத்தியோகபூர்வ தகவல் தொடர்பாடல் தமிழில் அவசியம்.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில், பாடசாலைகளில், உறவினர் வீடுகளில், பகுதியளவு சேதமடைந்த வீடுகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தங்கியுள்ளார்கள். இவர்களுள் மலையகத் தமிழர்களே பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்துவரும் வாரங்களில், மாதங்களில் இவர்களது புனர்வாழ்வுப் பாதை எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.
அரசாங்கத்தின் எந்தெந்த உதவிகளினூடாக தமது வாழ்க்கையை கட்டியெழுப்பப் போகின்றோம், அரசாங்க ஆதரவைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு, அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடுகளினால் தமது இருப்பிடங்களுக்கு மீளச்செல்ல முடியாமல்போனால் என்ன மாற்றுத் தீர்வுகள் உள்ளன, நிரந்தரத் தீர்விற்கும் தற்காலிக ஏற்பாட்டிற்கும் நடுவில் வரும் இடைக்கால ஒழுங்கமைப்புகள் என்ன என்பது பற்றி பாதிக்கப்பட்ட மலையக பெண்கள், ஆண்கள் இடையே ஒரு நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. இதுவே அவர்களை அதிகமாக பதற்றப்படவைக்கின்றது. மன உளைச்சலுக்கும் அது சார்ந்த விளைவுகளுக்கும் ஆண்களையும் பெண்களையம் சிறுவர்களையும் இட்டுச்செல்கிறது. இந்தச் சூழலில் மக்கள் மன ஆறுதல் அடைவதற்கும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் முகம் கொடுக்கவும் தெளிவான தகவல் அத்தியாவசியமானது. இது தொடர்பாக அரசாங்கம் பின்வரும் நடடிக்கைகளை எடுக்க வேண்டும்.
1.1 சகல நிவாரணம், மீள்கட்டுமானம் குறித்த தகவல்கள் சமகாலத்தில் உத்தியோகபூர்வமாக தமிழிலும் உடனடியாக பிரசுரிக்கப்பட வேண்டும். இவை மலையக பெண்கள் ஆண்களை சென்றடையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு, பொருத்தமான ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படல் வேண்டும்.
1.2 நிவாரணம், மீள்கட்டுமானப் பணிகள் ஒரு நிலையான மட்டத்திற்கு வரும் வரை வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கட்டாயம் தமிழ் பேசும் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் அனர்த்த நிவாரண மீள்கட்டமைப்பு தொடர்பான தீர்மானங்களை அறிவிக்க, விளக்கமளிக்க சமூகமளிக்க வேண்டும். மொழி பெயர்ப்பு உடன் செய்யப்பட வேண்டும்
1.3 அனர்த்த மேலாண்மைக்காக நியமிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நடத்தும் ஊடக சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டங்களிலும் தமிழ்மொழி விளக்கம் அவசியம்.
1.4 பேரிடர் மேலாண்மைக்கான தேசிய சபை, அனர்த்த முகாமை நிலையம், அனர்த்த முகாமை நிவாரண சேவைகள் அமைப்பு மற்றும் ஏனைய அமைச்சுகள் அனர்த்த மேலாண்மை மற்றும் மீள்கட்டுமானம் தொடர்பாக வெளியிடும் அனைத்து சுற்று நிருபங்கள் மற்றும் அறிவித்தல்கள் சமகாலத்தில் தமிழ்மொழி மூலமும் வெளியிடப்பட வேண்டும். இவை சரிவர நடைபெறுவதை உறுதி செய்யவும் தேவையான சந்தர்ப்பங்களில் உதவிசெய்யவும் ஜனாதிபதி செயலகத்தில் தற்காலிக அலகு ஒன்று நிறுவப்படல் வேண்டும்.
1.5 பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர் பிரிவு மட்டத்தில் நடாத்தப்படும் கலந்துரையாடல்கள் அரசியலமைப்பின் அரச கரும மொழிக்கொள்கைக்கு ஏற்ப நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தமது மொழியில் அரச சேவைகளை அணுகுவதற்கு ஏற்பாடுகள் இருத்தல் அவசியம். இதனை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்திக் கூறுவது அவசியம்.
- நிவாரணப்பணியை துரிதப்படுத்த மலையகத்திற்கு மேலதிக ஆளணி அவசியம்
மலையகத்தை பாதித்த மழை மற்றும் அதிக எண்ணிக்கையான மண்சரிவுகளால் பாதைகள் சேதமடைந்து போக்குவரத்து மிகவும் சிரமமான ஒன்றாக மாறி உள்ளது. அனர்த்தத்திற்கு முன்னரும் கூட அண்மித்த நெடுஞ்சாலைகளிலிருந்து தோட்டங்களைச் சென்றடைய பல மணித்தியாலங்களாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
தோட்டப்பிரதேச கிராமசேவையாளர் பிரிவுகள் ஏனைய பகுதிகளிலுள்ள கிராமசேவகர் பிரிவுகளுடன் ஒப்பிடும்பொழுது மிக அதிகமான குடும்பங்களை கொண்டிருக்கின்றன. உதாரணமாக, நுவரெலியா மாவட்டத்திலேயே கிராமங்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுடன் ஒப்பிடும்பொழுது தோட்டங்களை அதிகமாகக் கொண்ட நுவரெலியா, அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுகளில் கிராமசேவையாளர் பிரிவின் சராசரி சனத்தொகை மூன்று மடங்காகும். 13,000க்கு மேற்பட்ட சனத்தொகை கொண்ட கிராமசேவையாளர் (GN) பிரிவும் கூட இங்கு இருக்கின்றது. 3000 – 5000 வரை சனத்தொகை கொண்ட ஆனால், ஒரு கிராமசேவையாளரை மட்டும் கொண்ட பிரிவுகள் பல உள்ளன. அரச நிவாரண விண்ணப்ப விநியோகம், சேத மதிப்பீடு, அத்தாட்சிப்படுத்தல், சிபாரிசு செய்தல் என மிகவும் முக்கியமான தொழிற்பாடுகளைக் கொண்ட கிராமசேவையாளரின் வேலைப்பழு இடர் நிவாரணக் காலங்களில் சமாளிக்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும். பல பிரதேசங்களில் அண்டிய கிராமத்திற்கான சிங்கள கிராம உத்தியோகத்தரே மலையக மக்களுக்கும் பொறுப்பானவராக இருப்பார்.
எனவே, அதிக சனத்தொகை கொண்ட கிராமசேவையாளர் பிரிவுகளில் அவர்களுக்கு உதவிசெய்வதற்காக அரச சேவைகளில் ஏனைய பிரிவுகளில் இருக்கும் உத்தியோகத்தர்களை இவர்களுக்கும், மக்களுக்கும் உதவுவதற்கு தற்காலிகமாகவேனும் ஏற்பாடு செய்வது அவசியம்.
2.1 PCCF, DO மற்றும் ஏனைய தமிழ் பேசும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளருடன் இணைந்து பணியாற்றுவதற்கு உத்தரவிடப்பட்டு, தேவையேற்படின் பாதிப்பு குறைந்த ஏனைய பிரதேசங்களில் இருந்தும் உத்தியோகத்தர்களை இப்பிரதேசங்களுக்கு தற்காலிகமாக அனுப்புதல் அவசியம். இவர்கள் களத்தில் மக்களுக்கு உதவுவதற்கான விதத்தில் கொடுப்பனவுகள் ஒழுங்குசெய்யப்படல் வேண்டும். தேவையேற்படின் தகைமை வாய்ந்த தன்னார்வலர்களையும் இணைத்துக்கொள்ளும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இல்லாவிடின் 25,000/-, 50,000/- போன்ற அரசின் உடனடி நிவாரணங்கள் கூட இவர்களை சென்றடைய பல மாதங்கள் எடுக்கலாம்.
2.2 பல வருடங்களாக தோட்ட மக்களின் நலன்புரிப் பொறுப்புகளை தோட்ட நிர்வாகம் மற்றும் அவர்களின் முகவர் அமைப்புகளிடம் ஒப்படைத்து அரசாங்கம் சற்று விலகி நின்றதால் ஏற்பட்ட விளைவே தற்போதைய நிலைமை. இந்த அனர்த்த நிவாரணப் பொறுப்பை வேறு எந்த அமைப்பையும் இடைத்தரகர்களாகவோ முகவர்களாகவோ வைக்காமல் அரச கட்டமைப்பு நேரடியாக இம்மக்களுக்கு சேவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்வது அவசியம். தோட்ட நிர்வாகத்தின் அநாவசிய தலையீடும் தோட்டங்களில் தொழில்செய்வோர், தோட்டங்களில் தொழில் செய்யாதோர் என பாகுபாடு காட்டுவதும் நிராகரிக்கப்பட வேண்டும்.
2.3 தோட்டப் பிரதேசங்கள் பலவற்றிற்கு நீட்சியடையவிடாதிருந்த அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
2.4 மக்களின் கருத்துகளை பெற கிராமங்களில் இருப்பது போன்ற RDS, WRDS, இளைஞர் குழுக்கள் என்பன பல தோட்டப் பிரிவுகளில் இல்லாதிருப்பதால் மீள்கட்டுமானம் தொடர்பான மக்கள் கலந்தாலோசனைகளுக்கு தோட்டப் பிரிவுகளில் தற்காலிக விசேட ஏற்பாடுகள் செய்வது அவசியம். அதில் பெண்களின் இளைஞர்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். மீள்கட்டுமான, மீள்குடியேற்ற தீர்மானங்கள் எடுக்கும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவமும் அவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படுதலை உறுதிப்படுத்த வேண்டும்.
- சில அரச நிவாரணத் திட்டங்களில் தகைமை, அத்தாட்சிப்படுத்தலில் நெகிழ்வுத்தன்மை அவசியம்.
பெருந்தோட்டத்துறையின் முகாமை முறைகள், தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களின் காணி உரிமையின்மை காரணமாக தமது விவசாய, கால்நடை, கைத்தொழில், வியாபார முயற்சிகளைப் பதிவுசெய்ய இயலாத சட்ட, நிர்வாக சூழல் மலையகத்தில் காணப்படுவது அனைவரும் அறிந்ததே. எனவே, அரசின் தற்போதய சுற்று நிருபங்களின் அடிப்படையில் இவர்கள் இழப்பீடு பெறுவதற்கான தகைமை கேள்விக்குரிய ஒன்றாக இருக்கின்றது. தோட்ட பிரதேசங்கள் குறித்து அரச தரவு சேகரிப்பதிலும் தேவையை இனங்காண்பதிலும் நிறைய இடைவெளிகளும் குறைபாடுகளும் காணப்படுகின்றன
3.1 அரசு வழங்கும் பயிர்செய்கைப் பாதிப்பு, கால்நடை இழப்பு, சிறுதொழில் பாதிப்பு போன்றவற்றிற்கான நட்டஈடு மலையக மக்களை சென்றடையும் வகையில் பதிவு, தகைமை, அத்தாட்சிப்படுத்தல் என்பவற்றில் நெகிழ்வுத்தன்மை அவசியம். கடந்த காலங்களில் இருந்து பின்பற்றப்படும் ஒதுக்கப்படுத்தலை நிவர்த்திசெய்யுமுகமாக இந்தச் சமூகத்தின் நிலைமையினை இலக்குப்படுத்திய விசேட சுற்றுநிருபங்கள், செயன்முறைகள் அவசியம். இவற்றை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் அலுவலகம் மற்றும் துறைசார் அமைச்சுகளுடாக அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டு உடனடியாக வெளியிடவேண்டும்.
3.2 இதுவரை அரச சேவைகள் பெறுவதில் இருந்து சற்று விலக்கிவைக்கப்பட்டிருந்த இந்த சமூகத்தினருக்கு நிவாரணங்கள் சென்றடைவதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். எனவே, இவற்றை உடனடியாக கருத்தில் எடுத்து தீர்வு நோக்கிய இலகுபடுத்தலை செய்வதற்கு தற்காலிகமாகவேனும் ஒரு சிரேஷ்ட அரச உத்தியோகத்தரை (SLAS) அத்தியாவசிய சேவைகள் உதவி ஆணையாளாராக நியமிக்க வேண்டும். இவர் மலையகப் பிரதேசத்தில் நடைமுறை அனுபவம் கொண்ட தமிழ் பேசும் சிரேஷ்ட உத்தியோகத்தராக இருப்பது அவசியம். இவர் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளார் நாயகத்துடன் இணைந்து உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும்.
3.3 அனர்த்த முகாமைத்துவ நிலையமும் அமைச்சகங்களும் சேத மதிப்பீடு மற்றும் தேவை இனங்காணல் செய்யும் போது தோட்டப்பிரதேசங்களின் தரவுகளை விசேட கவனம் செலுத்தி எடுப்பது அவசியம். தோட்ட உட்கட்டமைப்புக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் மற்றும் அரசாங்கத்தில் இருக்கும் மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இது சரிவர நடப்பதை உறுதி செய்தல் வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வாங்கி இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செய்யும் தேவை மதிப்பீட்டில் உரிய முறையில் மலையக விடயங்கள் சேர்க்கப்படுவதை பிரதி அமைச்சர் கண்காணிக்க வேண்டும்.
- அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தோட்ட சமூக உட்கட்டமைப்பை செப்பனிடும், மீள்கட்டுமானம் செய்யும் பணியை அரசு பொறுப்பெடுத்து போதியளவான நிதி ஒதுக்க வேண்டும்.
RDA, PRDA அதிகாரத்திற்கு உட்படாத தோட்டங்களில் உள்ள பல நூறு கிலோமீற்றர் பாதைகள் டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கனமழையும் வெள்ளப்பெருக்கும் பல நூற்றுக்கணக்கான மண்சரிவுகளும் இந்தப் பாதைகளை, பாலங்களை, வடிகால்களை, படிக்கட்டுகளை, பாதுகாப்பு சுவர்களை சேதமாக்கியுள்ளன. அதே போல பல முன்பள்ளிக் கட்டடங்கள், தோட்ட மருத்துவ கட்டடங்கள், சிறுவர் பாராமரிப்பு நிலையங்கள், சனசமூக நிலையங்கள் என்பனவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அரச அமைச்சுகளின் கீழ் வருவன அல்ல. பல தசாப்தங்களாக தோட்ட முகாமைத்துவத்தின் பொறுப்பாக விடப்பட்டு அண்மைய காலங்களில்தான் ஓரளவாவது அரச கவனிப்பிற்குள் வந்துள்ளன. தோட்டக் கம்பனிகளுக்கோ அல்லது PHDT போன்ற முகவர் அமைப்புகளுக்கோ இவற்றை திருத்தும் பொறுப்பை கொடுத்தால் இவற்றை செப்பனிட்டு மீள்கட்டமைக்க பல வருடங்கள் செல்லும். எனவே, இந்தப் புனர்நிர்மாணப் பணி அரச பொறுப்பாக எடுக்கப்பட்டு பின்வருவன செய்யப்பட வேண்டும்.
4.1 பிரதேச சபை சட்டத்தின் 2018ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்திற்கு அமைவாக தோட்டப் பிரதேசங்களில் இத்தகைய உட்கட்டுமானப் பணிகளைச் செய்வதற்கான அதிகாரம் அவ்வப் பிரதேச சபைகளுக்கு உள்ளதென தெளிவுபடுத்தி குறித்த அமைச்சினால் அனைத்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பிரதேச சபை ஆணையாளருக்கும் ஒரு அறிவுறுத்தல் (directive) அனுப்பப்படல் வேண்டும். இந்தப் பேரிடரின் பாதிப்பை கவனத்தில் எடுத்து மத்திய அரசின் பாதீட்டில் இருந்து இதற்கான மேலதிக ஒதுக்கீட்டை இந்தப் பிரதேசத்தின் சபைகளுக்கு வழங்கவேண்டும். இவ்விடயத்தில் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வாங்கி போன்றோருக்கு அரசாங்கம் எடுத்தியம்ப வேண்டும்.
4.2 அரசியல் அமைப்பின் 13ஆம் திருத்தத்தின்படி தோட்ட உட்கட்டமைப்பு மாகாண சபைகளின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு விடயமாகும். மீள்கட்டுமானப் பணிக்கென குறித்த மாகாண சபைகளுக்கு இந்தப் பாதீட்டுத் தலைப்பின் கீழ் மத்திய அரசின் பாதீட்டில் இருந்து மேலதிக நிதி ஒதுக்கப்படல் வேண்டும்.
4.3 பெருந்தோட்ட அமைச்சின் தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரிவிற்கு மீள்கட்டுமானத்திற்கென நிதி ஒதுக்கப்படல் வேண்டும். இடம்பெற்றிருக்கும் பாதிப்பின் அளவிற்கு பொருத்தமான பெறுமானம் ஒதுக்கீடு செய்யவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இயங்கும் புதிய கிராமங்கள் அதிகாரசபைக்கு (NEVIDA) விசேட பொறுப்புகள் சட்டபூர்வமாக உள்ளது. இதன் முக்கிய குறிக்கோளான ‘தோட்ட வதிவிடங்களை உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகளுடைய கிராமமாக மாற்றும்’ செயற்பாடு அனர்த்தத்தின் பின்னரான மீள்கட்டுமான காலத்தில் கள நிலைமைக்கேற்ப தகவமைத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. எனவே, இதற்கு போதியளவான நிதியை ஒதுக்கி இந்த அதிகார சபையின் இயங்குதன்மையை பலப்படுத்த வேண்டியது அவசியம். உட்கட்டமைப்பு பாதிப்பு தொடர்பான அளவீடுகளை மேற்கொள்ளவும் இவ்வதிகார சபை பணிக்கப்படலாம்.
4.4 கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளும் மின்சார மற்றும் நீர்வழங்கல் சபை போன்றனவும் தோட்டப் பிரதேசங்களில் தமது செயற்பாடுகளை செய்வதற்கான நிதியினைக் கோரி, தனியான நிரற்படுத்தி செயற்படவேண்டும்.
- மலையக மக்களின் வீடு, காணி உரிமை தொடர்பாக தெளிவான கொள்கை விளக்கமும் அதை ஒட்டிய உத்தியோகபூர்வ அங்கீகார செயற்பாடுகளை உறுதிப்படுத்தலும் அவசியம்.
பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் வசமுள்ள தோட்டங்களிலும் தனியார் தோட்டங்களிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீண்டெழுவதற்கு தடையாக இருக்கும அடிப்படை ஆதாரப் பிரச்சினை இம்மக்களுக்கு காணி உரிமை இல்லாமையாகும். முற்றிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 50 இலட்சம், திருத்த வேலைகளுக்கு 25 இலட்சம் வரை, காணி கொள்வனவு செய்வதற்கு 50 இலட்சம் என அரசாங்கம் பல இழப்பீட்டுத் தொகைகளை அறிவித்திருந்தாலும் பெரும்பாலும் தமது காணிக்கான உரித்து இல்லாத மலையக குடும்பங்களுக்கு இவ்வுதவி எவ்வாறு சென்றடையும்? தற்போதய அரச நிவாரண செயன்முறைகளில் இவ்வுதவிகளைப் பெற காணிக்கான உறுதி இன்றியமையாத ஆவணமாகக் கோரப்படுகின்றது. உதாரணமாக 4 லயன் குடியிருப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் அதற்கான நட்டஈடு அங்கு பல தசாப்தங்களாக வசிக்கும் குடும்பங்களுக்கா அல்லது காணி உறுதியை உடைய தோட்ட உரிமையாளர்களுக்கா வழங்கப்படும்?
பாரிய மண்சரிவிற்குள்ளாகிய அல்லது NBRO வினால் ஆபத்தான இடமென அடையாளம் காணப்பட்ட வாழிடங்களில் இருந்து வெளியேற்றினால் அவர்களுக்கான மாற்று இடங்கள் எங்கு எவ்வாறு வழங்கப்படும்? பதுளை, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் பெருந்தோட்ட கம்பனிகளிடமிருந்து காணிகளை மீளப்பெறாமல், சில தனியார் தோட்டங்களில் காணி சுவீகரிப்போ அல்லது மாற்று இடங்கள் அடையாளப்படுத்தலோ அன்றி இதற்கான தீர்வுகளைக் காண இயலாது. இதற்கு போதியளவான காணிகள் மலையக பிரதேசத்தில் இருக்கின்றதென்பதே எமது ஆய்வறித்த நிலைப்பாடு.
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மலையக மக்களின் காணிப் பிரச்சினைக்கான தீர்வுகளை தள்ளிப்போட்டதன் காரணமாக அனர்த்தத்திற்குப் பின்னரான புனர்நிர்மாணப் பணிகள் கட்டமைப்பு ரீதியான தடைகளுள் சீக்கிரம் சிக்குண்டுப் போகும் அபாயம் உள்ளது. தற்போது இருக்கும் சட்ட, நிர்வாக, நிறுவன செயன்முறைகளினூடாக காணி அடையாளப்படுத்தப்பட்டு வீட்டுக்கான தீர்வு வழங்கப்படுமாக இருந்தால் மீள்கட்டுமானம் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பொறுத்தவரை பல வருடங்களுக்கு இழுபறிப்பட்டு போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்திய வீட்டுத் திட்டத்திற்கு தற்போது காணி தேடும் படலமே அதற்கு சிறந்த உதாரணமாகும்.
5.1 இனிமேலும் தாமதிக்காமல் தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பற்றி தெளிவான கொள்கை தீர்மானங்களை அரசாங்கம் உடன் எடுக்க வேண்டும். நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்படும் காணி தொடர்பான தீர்வுகளுக்கு சமமாக காணி உரிமை மலையக மக்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். இவை முறையான அமைச்சரவை பத்திரங்களாக சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற்று பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
5.2 மேற்குறித்த கொள்கை வகுப்பதற்கும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களின் காணி/ வீடு தொடர்பாக அரசிற்கு விதந்துரைப்புகளை வழங்கவும், அரசியல், நிர்வாக, பெருந்தோட்ட கம்பனி, சிவில் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அரசு உடன் அமைத்து (NDMC இன் உறுப்புரைக்கு ஏற்ப) பாதிக்கப்பட்டவர்களுடனான கலந்துரையாடலின் பின் இக்குழு தனது ஆலோசனைகளை முன்வைக்க குறுகிய கால அவகாசத்துடனான ஆணை ஒன்றிறை ஜனாதிபதி வழங்கவேண்டும்.
5.3 பாதிப்புற்றோருக்கான (வீடுகள், சேதமடைந்தோர் மற்றும் ஆபத்து ஏற்படக்கூடிய இடமென அடையாளப்படுத்தி அப்புறப்படுத்தவுள்ள குடும்பங்கள்) எந்தவொரு மாற்று ஏற்பாடாக இருப்பினும் அது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத் தொடர்புகளுக்கு இசைவான ஏற்பாடாகவே இருப்பதை உறுதிசெய்தல் அவசியம்.
5.4 அரச முகாமையின் கீழ் உள்ள தோட்டங்களில் (உ-ம் JEDB, SLSPC, Elkaduwa) காணி பரப்பளவு, காணி பயன்பாடு, வசிக்கும் குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் உடனடியாகக் கோரி பாதிக்கப்பட்ட மக்களுக்கான மாற்று காணிகளை அத்தோட்டங்களிலேயே அடையாளப்படுத்தி வழங்க ஜனாதிபதி செயற்பட வேண்டும்.
5.5 அதேபோல் பெருந்தோட்ட கம்பனிகளால் நடாத்தப்படும் தோட்டங்களில் பாதிப்புற்றோருக்கான (வீடுகள், சேதமடைந்தோர் மற்றும் ஆபத்து ஏற்படக்கூடிய இடமென அடையாளப்படுத்தி அப்புறப்படுத்தவுள்ள குடும்பங்கள்) மாற்று இடங்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அண்மித்து தோட்ட காணிகளிலேயே வழங்கப்படுவதற்கான உத்தரவினை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக கம்பெனிகளுடனான குத்தகை ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செயது தேவை ஏற்படின் திருத்தங்களை செய்ய வேண்டும்.
5.6 மேற்குறித்த 5.4 மற்றும் 5.5.இன் கீழ் செயற்படுத்தப்படும் மீள்குடியேற்றம் இலங்கை அங்கீகரித்த சர்வதேச நியமங்களுக்கு இசைவான “மீள்குடியேற்ற கொள்கையின்படி” செயற்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இந்த நியமங்கள் மீறப்பட்டால் இலங்கைக்கு கிடைக்கும் சர்வதேச கடன் மற்றும் மானிய உதவிகளில் தாக்கம் ஏற்படலாம். மலையக மக்கள் மீண்டும் வறுமை, ஆபத்து மற்றும் விளிம்பு நிலைக்கு தள்ளாதிருக்க மலையக பிரதேசங்களில் ஒரு பேண்தகு நிலைமாற்றத்தை கொண்டுவர, மலையக மக்களும் ஏனைய இலங்கை பிரஜைகள் போல சமமான உரிமை கொண்ட இலங்கையர்களாக வாழ இந்த அணுகுமுறை இன்றியமையாதது ஆகும்.
5.8 புனர்வாழ்வு மற்றும் புனர் நிர்மாண கட்டங்களில் காணி மற்றும் வீடு தொடர்பான இழப்பீடு, மீள்குடியேற்றம் போன்ற செயற்பாடுகளில் தோட்ட குடியிருப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அண்டைய கிராமங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் எதுவித பாரபட்சமும் காட்டப்படக்கூடாது. குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் கடைபிடிக்கப்படும் நியமங்களுக்கு அமைவாக காணித் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
***
தற்போது களத்தில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்புகள், நபர்கள் மற்றும் களத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர், பாதிப்பிற்குள்ளான ஆண்கள், பெண்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் முதல் கட்ட கோரிக்கைகளாக மலையக சிவில் சமூக கூட்டிணைவு இதனை முன்வைக்கின்றது.
மலையக மக்களின் நீண்ட நாள் போராட்டமான தோட்ட குடியிருப்புகளை கிராமங்களாக நிலைமாற்றும் நோக்கத்தினை அடைவதற்கு ஏதுவாக அனர்த்தத்தின் பின்னரான மீள்கட்டுமானம் இருக்கவேண்டும் என நாம் நம்புகின்றோம்.
இந்தக் கோரிக்கைகளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் அனைவருடனும் இணைந்து இவற்றை சாத்தியப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம்.
இதனை நாம் பிரதி அமைச்சர் பிரதிப் சுந்தரலிங்கம் அவர்களுடன் கலந்துரையாடி சமர்ப்பித்ததுடன் எதிர் கட்சியிலுள்ள மலையக பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருடனும் கலந்துரையாடி முன்வைத்துள்ளோம். பாதிப்புற்ற மக்கள் நலன் கருதி அனைவரும் இந்த முன்னெடுப்பை சாதகமான ஒன்றென கருதுவதுடன் இயன்ற ஒத்துழைப்பை வழங்குவதாக கூறியிருக்கின்றனர். ஆளும் கட்சியிலுள்ள ஏனைய மலையக தமிழ் பிரதிநிதிகளுடனும் இது தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.
இவர்கள் அனைவரிடமும் நாம் வேண்டுவது மேற்குறித்த கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்து அவருடைய கவனத்திற்கு இவற்றை எடுத்துச்செல்ல ஆவன செய்ய வேண்டும் என்பதாகும். தற்போதைய சூழலில் நாட்டின் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியின் ஒப்புதல், அறிவித்தல் இருப்பின் இக்கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த ஏதுவாக இருக்கும். அவர் முன்னின்று தோட்டங்களில் வசிக்கும் பாதிப்புற்ற மலையக மக்களிற்கு எவ்வாறு அரசாங்க நிவாரண, புனர்வாழ்வு, புனர்நிர்மான செயற்பாடுகள் சென்றடையப் போகின்றன எனவும் மலையக மக்கள் இடர் நேரும் லயன் குடியிருப்புகளிலிருந்து சமூகமாக, பாதுகாப்பான, வாழ்வாதாரத்திற்கு அண்மித்த, காணி உறுதியுடன்கூடிய இடங்களுக்கு எவ்வாறு செல்லப்போகின்றார்கள் என்பது பற்றியும் நிகழ்ச்சித் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.