Photo, SELVARAJA RAJASEGAR

மலையகத் தமிழர்கள் வீட்டுரிமை பிரச்சினைக்கு 900,000 பேர்ச்சஸ்கள் தேவை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியதை எப்படி விளங்கிக் கொள்ள போகிறோம்?

ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரத்தின் போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதே கருத்தை குறிப்பிட்டிருந்த நிலையில் அவர் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் சில தரவுகளைக் கொண்டு அதற்கு வினையாற்றியிருந்தேன். இப்போது மீண்டும் அதேநிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ள நிலையில் கூடுதல் தரவுகளுடன் வேறு ஒரு கோணத்தில் பிரச்சினையை அணுகியுள்ளேன்.

ஆரம்ப குறிப்பு

இந்த விடயத்தை ஆராய முதலில் நாம் காணி பரப்பு அளவைகள் பற்றிய கீழ்வரும் அடிப்படை அளவீடு பற்றிய அறிதல் வேண்டும்.

ஆக, 150,000 குடும்பங்களுக்கு ஒரு வீட்டிற்காக 6 பேர்ச்சஸ் என வழங்கப்படும் போது மொத்தமாக 900,000 பேர்ச்சஸ்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகிறார். பேர்ச்சஸ்களில் இருந்து ஹெக்டயர்களுக்கு மாற்றீடு செய்வோமாயின் ஒதுக்கப்பட வேண்டிய காணி பரப்பு வெறும் 2,277 ஹெக்டயர்கள் (5,625 ஏக்கர்கள்) மாத்திரமே.

எனவே, ஜனாதிபதி 900,000 பேர்ச்சஸ்கள் தேவை என்று கூறுவதன் மறு அர்த்தம் 2,277 ஹெக்டயர்கள் தேவை என்பதே.

பிரச்சினையின் பின்னணி

பேர்ச்சஸ்கள் பரப்பை ஹெக்டயர்களுக்கு மாற்றி சொல்வதன் மூலம் இந்தப் பிரச்சினையை முழுமையாக விளங்கிவிட முடியாது. அதற்கான இன்னபிற காரணங்களுடன் குறித்த 2,277 ஹெக்டயர்களை அல்லது இதை விட குறைந்த பரப்பையேனும் மலையகத் தமிழர்களுக்கு வழங்கினாலும் பின்வரும் பிரச்சினைகள் வரலாம் என்ற ஊகங்கள் வெளிப்படுத்தப்படும் நிலையில் அதன் உண்மைத்  தன்மையை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.

  1. குறித்த காணித் தேவைக்காக தேயிலை, இறப்பர் பயிர்கள் அகற்றப்பட வேண்டி தேவை ஏற்படும். அதனால் பெருந்தோட்டப் பொருளாதாரம் பாதிப்படையும்.
  2. மண்சரிவு அபாயமற்ற இவ்வளவு பரப்பு காணிகளை பெருந்தோட்டங்களில் அடையாளம் காண முடியாது.
  3. இவ்வளவு பரப்பு காணிகள் மலையகப் பிரதேசங்களில் மனிதர்கள் வாழ இடமளிக்கப்பட்டால் சுற்றாடல் மற்றும் இயற்கை பேரிடர்கள் மலையகத்திலும் வேறு இடங்களிலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.

மேற்குறித்த பொருளாதார மற்றும் இயற்கை காரணங்களுக்கு அப்பாலான பேரினவாத சிந்தனையுடனான காரணங்களும் இருக்கின்றன. எனினும், அதற்கு இந்தக் குறிப்பில் பதில் சொல்ல முனையாததால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.

இதை பற்றி தரவுகள் சொல்லும் செய்தி

சரி மேற்குறித்த மூன்று காரணங்களின் உண்மைத் தன்மையை அறிய நாம் அறிய வேண்டிய பல தரவுகளில் மிகவும் முக்கியமான தரவுதான் பெருந்தோட்டக் காணிகள், அதாவது பயிர் செய்யப்பட்ட காணிகள் உள்ளடங்களாக எவ்வளவு பரப்பு இருந்தன என்பதும் அவற்றில் எவ்வளவு குறைந்துள்ளன என்பதுமாகும்.

அந்த வகையில் மொத்த பெருந்தோட்டக் காணிகளின் அளவையும் (இது பயிர் செய்கை செய்யபட்ட காணிகள் மாத்திரம் அல்லாது  மொத்த பெருந்தோட்டக் காணி என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்) அவற்றில் எவ்வளவு பரப்பு கடந்த காலங்களில் குறைந்துள்ளன என்பதை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதியின் விளக்கத்தின் பரிமாணங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

பின்வரும் அட்டவணைகளில் உள்ள தரவுகளை நோக்குவது அவசியம் (இந்தத் தரவுகள் அனைத்தும் பெருந்தோட்ட அமைச்சினால் வெளியிடப்படும் பெருந்தோட்ட பயிர்கள் பற்றிய புள்ளிவிபர புத்தகத்திலே அந்தந்த ஆண்டுகளுக்குரியனவாகும். அத்தரவு புத்தகங்களிலே முன்னுக்குப் பின் முரணான தரவுகள் சில இடங்களில் காணப்படுகின்ற போதும் கீழே உள்ள தகவல்களில் எந்த முரண்களும் காணக்கூடியதாக இல்லை என்பதை பதிவு செய்தல் வேண்டும்).

அரச கூட்டுத்தாபனங்களினால் நிர்வகிக்கப்பட்ட பெருந்தோட்டக் காணிகளின் பரப்பு பற்றிய ஒப்பீடு (ஹெக்டயர்களில்)

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களினால் நிர்வகிக்கப்பட்ட பெருந்தோட்டக் காணிகளின் அளவு பற்றிய ஒப்பீடு (ஹெக்டயர்களில்)

1980-2007 வரையான காலத்தில் குறைந்துள்ள பெருந்தோட்டக் காணிகளின் அளவு (ஹெக்டயர்களில்)

1980இல் இருந்த பெருந்தோட்டக் காணிகள் அதாவது மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB) மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) ஆகிய கூட்டுத்தாபனங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காணியின் அளவு 281,747 ஹெக்டெயர்கள். எனினும் 1991ஆம் ஆண்டாகிற போது அக்கூட்டுத்தாபனங்கள் நிர்வகித்த காணிகள் 272,902 ஹெக்டெயர்கள். அதாவது, 8845 ஹெக்டயர் பெருந்தோட்டக் காணிகள் பரப்புகள் குறைந்துள்ளன. அதாவது 3.13% பரப்பு குறைந்துள்ளன.

1992ஆம் ஆண்டு குறித்த இரண்டு கூட்டுத்தாபணங்களினால் நிர்வாகம் செய்த பெருந்தோட்டக் காணிகளில் பெருவாரியானவை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டன. அக்கம்பனிகளின் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்ட காணிகளின் அளவு 239,398 ஹெக்டயர்கள். மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை 14,159 ஹெக்டயர்களையும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் 17,920 ஹெக்டயர்களையும் தொடர்ந்து நிர்வகித்தன. 2007ஆம் ஆண்டாகின்ற போது கம்பனிகள் நிர்வகித்த காணிகள் 210,295 ஹெக்டயர்கள் ஆக குறைந்தன. அதாவது 29,103 ஹெக்டயர் பரப்புகள் குறைவடைந்துள்ளன. இது 12.15% ஆகும். குறித்த கூட்டுத்தாபனங்கள் நிர்வகித்த காணிப் பரப்புகளில் முறையே 2397 ஹெக்டயர்கள் மற்றும் 8224 ஹெக்டயர்கள் குறைந்துள்ளன.

எனவே, 1980ஆம் ஆண்டில் இருந்து 2007ஆம் ஆண்டு வரையில் பெருந்தோட்டக் காணிகளில் 46,272 ஹெக்டயர்கள் (16.42%) பெருந்தோட்டக் காணிகள் என்ற நிலையில் இருந்து நீக்கம் பெற்றுள்ளன. அதாவது அவைகள் வேறு ஒரு அரச நிறுவனத்திற்குரிய காணிகளாக மாற்றப்பட்டுள்ளன. அத்தோடு அரச கருவிகளால் பிரஜைகளுக்கு, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு தனியாருக்குரிய காணிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு வரையான காலத்தில் அவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் மலையகத் தமிழருக்காக வழங்கப்பட்ட காணிகளில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி வளாகம் மற்றும் பாடசாலைகளுக்காக வழங்கப்பட்ட சிறு அளவிலான காணிகளைத் தவிர வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட காணிகள் என்று எதனையும் கூற முடியாது. 1995ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்ட 07 பேர்ச்சஸ் காணியுடனான வீட்டுத் திட்டத்திற்கான காணிகளை இதில் உள்ளடக்க முடியாது. காரணம் அக்காணிகளுக்கான காணி உறுதிப்பத்திரம் எதுவும் வழங்கப்படாத நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் அல்லது அரச கூட்டுத்தாபனங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்டதாகவே அவை இருந்து வருகின்றன.

தீர்வு பற்றிய பிரச்சினைகள்

சரி இனி பிரச்சினையின் மூலத்திற்கு வருவோம். ஜனாதிபதி குறிப்பிட்ட 2,277 ஹெக்டயர் (900,000 பேர்ச்சஸ்கள்) என்பது 2007ஆம் ஆண்டு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அது மொத்த பெருந்தோட்டக் காணியின் பரப்பில் வெறும் 0.97% மாத்திரமே.

150,000 குடும்பங்களுக்கு 6 பேர்ச்சஸ் வழங்கப்படும் போதே குறித்த காணி 2,277 ஹெக்டயர்கள் தேவைப்படும். எனினும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 10 பேர்ச்சஸ் காணி பரப்பை குடும்பமொன்றின் வீட்டுரிமைக்காக வழங்க இருப்பதாக கூறியுள்ளது. அதேவேளை, 2018ஆம் ஆண்டிற்கான மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் செயலாற்று அறிக்கையின் தரவுகளின் பெருந்தோட்டங்களில் வீடற்ற குடும்பங்கள் 186,298 என கணிப்பிட்டுள்ள நிலையில் தற்போதுள்ள வீடற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 200,000 என கொள்வோமாயின் தேவைப்படும் காணி பரப்பின் அளவு 5060 ஹெக்டயர் மாத்திரமே. இது மொத்த பெருந்தோட்டக் காணியில் 2.14% மாத்திரமே. காணி சீர்திருத்தச் சட்டத்தின் பிரிவு 3(3)(B) பிரகாரம் தோட்டத் தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு 20 பேர்ச்சஸ் வழங்கப்பட வேண்டும் என்று குறித்துரைத்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் வீதம் வழங்கினால் தேவைப்படும் காணிப் பரப்பின் அளவு 10120 ஹெக்டயர்கள். இது மொத்த பெருந்தோட்டக் காணிகளில் 4.28% மாத்திரமே.

1980ஆம் ஆண்டில் இருந்து 2007ஆம் ஆண்டு வரையில் பெருந்தோட்டக் காணிகளில் 46,272 (16.42%) ஹெக்டயர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பெருந்தோட்டக் காணிகள் என்ற வரையறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது வெறும் 4.28% காணியை மலையக தமிழரின் வீட்டுரிமைக்காக ஒதுக்குவதில் ஏன் தயக்கம்? இந்த தயக்கம் நிச்சயமாக மேலே சொல்லப்பட்ட பிரச்சினைகளினால் அல்ல என்பதை தாபிக்க வீட்டுரிமையை உறுதி செய்ய தேவையான காணியின் பரப்பைக் கொண்டே நிரூபிக்கலாம். அத்தோடு, மலையக தமிழர்கள் வாழ்ந்து வரும் பிரகடனப்படுத்தப்படாத குடியிருப்பு பிரதேசங்களின் பரப்புகள் மற்றும் பயிர் செய்கை செய்யப்படாத அதேவேளை மண்சரிவு அபாயத்திற்கு உட்படாத குடியிருப்புக்கு உகந்த காணிகள் நிச்சயமாக மொத்த பெருந்தோட்டக் காணிகளில் 4.28 வீதத்திற்கு அதிகமாகவே இருக்க வாய்ப்புண்டு (இதற்கான ஒரு ஆய்வும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளை அடிப்படையாக கொண்டு செய்யப்படல் வேண்டும்).

மலையக தமிழர் வாழும் சில பிரதேசங்கள் முழுமையாக மண்சரிவு அபாயத்திற்கு உட்பட்டவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவ்வாறன பிரதேசங்களில் வாழ்வோருக்கு அல்லது வாழ்ந்தோருக்கு புதிய பிரதேசங்களில் வீட்டுரிமைக்காக மாற்று இடங்களில் காணிகள் வழங்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் பொதுவில் ஒரு குறித்த பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட நாட்டின் வேறு பிரஜைகளுக்கு வீட்டுரிமைக்காக வழங்கப்படும் காணி பரப்பின் அளவை ஒத்த அளவை மலையக தமிழருக்கும் வழங்ககூடிய வகையில் வசிப்பதற்கு உகந்த காணிப் பரப்புகள் பெருந்தோட்டங்களில் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. எனினும், இந்த உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றது.

நிறைவுரை

பெருந்தோட்டங்கள் அல்லது பெருந்தோட்டக் காணிகள் என்ற இப்போது சொல்லப்படுகின்ற காணிகளில் ஏகப் பெரும்பான்மையானவை மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வரும் முன்னர் மனிதர்கள் காலடிப்பட்டிராத அடர்ந்த காடுகளே. மலையகத் தமிழரின் முன்னோர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களின் கடும் உழைப்பால் அவை செல்வம் கொலிக்கும் வர்த்தகப் பயிர்களான கோப்பி, தேயிலை, இறப்பர் வளர்க்கும் இடங்களாக உருமாற்றப்பட்டவை. அந்த காணிகளில் 5% குறைவான காணியை அவர்களினதும் வழித்தோன்றல்களினதும் வீட்டுத் தேவைக்காகவும் அவர்களுக்கு வழங்குவதை (முன்னோர்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில்) மறுத்தல் என்பது காணியின் பரப்பு போதாமை அல்லது பெருந்தோட்ட பொருளாதார வீழ்ச்சிக் காரணியோ அல்லது சுற்றாடல் காரணியோ சார்ந்ததல்ல. மாறாக மலையக தமிழர்கள் அந்நியர்கள், அடிமைகள், கூலிக்காரர்கள், மற்றவர்களுக்கு நிகரானவர்கள் அல்ல என்ற கருத்துநிலைகளில் இருந்து மட்டுமே வரக்கூடிய பிரச்சினையாகும்.

இந்த பகுப்பாய்வை சமகாலம் வரையான தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்வதற்கு முயற்சி செய்த போதும் கிடைக்ககூடிய பெருந்தோட்ட பயிர்கள் பற்றிய புள்ளிவிபர புத்தகத்திலே 2008 ஆண்டுக்குப் பின்னர் பெருந்தோட்டக் கம்பனிகள், அரச கூட்டுத்தாபனங்கள் பயிர் செய்துள்ள காணிகள் தொடர்பான புள்ளிவிபங்களை கடந்து நிர்வகிக்கும் மொத்தக் காணிப் பரப்புகள் பற்றிய தரவுகள் உள்ளடக்கப்படவில்லை. குறித்த தரவு திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதா, ஏன் தவிர்க்கப்பட்டு வருகிறது என்பவை ஆழ்ந்த கவனத்திற்கு உட்பட வேண்டியவையாகும்.

சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார்