Photo, THE ECONOMIST

இனவழிப்பு (Genocide) – இன சுத்திகரிப்பு (Ethnic Cleansing) இரு வார்த்தைகளில் உள்ள நுண்ணரசியல் குறித்து விளங்கிக்கொள்ள வேண்டியதொரு புள்ளியில் இன்று நாம் இருப்பதாகத் தோன்றுகின்றது.

ஓர் இன, மத அல்லது சமூகக்குழுவை முழுமையாக அழித்துவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படும் கொலைகள் இனவழிப்பு எனப்படுகின்றது. இது பல்வேறு முறைகளில் முன்னெடுக்கப்படலாம். கொலைகள், பாலியல் வன்முறைகள், மொழி மற்றும் கலாசார ஒழிப்புக்கள் இதனுள் உள்ளடங்கும். இது சர்வதேச சட்டத்தின் கீழ் (1948 UN Genocide Convention) தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதொரு குற்றமாகும். இதன் ஒரே நோக்கு குறிப்பிட்ட குழுமத்தினை அழிப்பது மட்டுமே.

ஆனால், இன சுத்திகரிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பௌதீக சூழமைவுக்குள் இருந்து நீக்குவது அல்லது வெளியேற்றுவது. இது சர்வதேச சட்டத்தில் தனிக்குற்றமாக வரையறுக்கப்படவில்லை. ஆனால், போர்க்குற்றங்கள் அல்லது மனிதத்தன்மைக்கெதிரான குற்றங்கள் (Crimes against humanity) என கருதப்படுகின்றது. இது கட்டாய இடப்பெயர்வுகள், வீடுகளை எரிப்பது, அச்சுறுத்துவது, சொத்துப்பறிமுதல் செய்வது போன்ற செயற்பாடுகளின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. இதன் இறுதி விளைவு நில அமைப்பிலிருந்து நீக்கப்படுவது மட்டுமே.

அழிக்கப்படுவதற்கும் அகற்றப்படுவதற்கும் வேறுபாடும் அதன் கனதிகளும் இவற்றின் பின்னுள்ள அரசியல் நிரல்களும் வேறானவை. இதனை நாம் சில வரலாற்று நிகழ்வுகள் மூலம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இனவழிப்பு

1. ஹாலோகாஸ்ட் (Holocaust) – ஜேர்மனி (1939 -1945)

யூத இனத்தினை முற்றிலுமாக அழிக்கும் நோக்குடன் அடால்ப் ஹிட்லர் தலைமையிலான நாசி ஆட்சியில் சுமார் ஆறு மில்லியன் யூதர்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்பட்டனர். இதன் ஒரே நோக்கம் யூத இனத்தினை உலகத்திலிருந்தே அழித்தொழிப்பதே. இது திடீரென முன்னெடுப்பட்ட வன்முறையல்ல. திட்டமிட்டு செய்யப்பட்ட பாரதூரமானதொரு செயற்பாடு. இச்செயற்பாடு மூன்று கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

முதலாவதாக, யூத மக்களுக்கு எதிரான சட்டங்கள் நியூரெம்பர்க் சட்டங்கள் (Holocaust 1935) இயற்றப்பட்டன. குடியுரிமை பறிக்கப்பட்டது. கல்வி, வேலை மற்றும் சொத்துரிமைகள் நீக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக யூதமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். Ghettos என்றழைக்கப்படும் மூடிய சுவர் அடைப்புக்குள் மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். இங்கு பசிப்பட்டினி, உணவுக்குறைவு, நோய்கள், இயலாமைகளுடன் மக்கள் போராடி இறந்தனர். மூன்றாவது கட்டமாக 1941 முதல் “யூத பிரச்சினைக்கான இறுதித்தீர்வு (Final Solution to the Jewish Question) எனும் திட்டத்தின் கீழ் வலுக்கட்டாய முகாம்கள் மற்றும் அழிப்பு முகாம்கள் எனும் சிறைமுகாம்களுக்கு (Concentration and Extermination Camps) யூதமக்களை கொண்டு சென்று விஷவாயு செலுத்தியும் பலவித சித்ரவதைகள் செய்தும் கொத்தாக கொன்றொழித்தனர். இந்த வரலாற்றுச் சம்பவம் இனவழிப்பிற்கானதொரு முக்கிய உதாரணம். இங்கு எதிர்பார்க்கப்பட்ட விளைவு ஒன்றுதான், அது யூதர்களை அழித்தல் மட்டுமே.

2. ருவாண்டா இனவழிப்பு (Rwanda Genocide -1994)

மத்திய ஆபிரிக்க நாட்டின் சிறியதொரு நாடான ருவண்டாவில் இரு முக்கிய இனக்குழுக்கள் இருந்தனர். இவர்களுள் பெரும்பான்மையினர் ஹூட்டு இனத்தவர்,  சிறுபான்மையினர் துத்சி இனத்தவர்கள். இரு இனங்களுக்குள்ளும் அரசியல் மற்றும் சமூக மோதல்கள் காலங்காலமாக தொடர்ந்து வந்த நிலையில் சுமார் 8 லட்சம் துத்சி இனத்தவர்கள் வெறும் 100 நாட்களுக்குள் கொல்லப்பட்டனர். பல இலட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகள் உணவின்மையினால் இறந்தன. பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாயினர். 20ஆம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்டதொரு பாரிய இனவழிப்பாக இது கருதப்படுகின்றது. இங்கு துத்சி இனத்தவர்கள் முற்றாக அழிக்கப்படுவதே நோக்காக இருந்துள்ளது.

இனச்சுத்திகரிப்பு (Ethnic Cleansing)

1. பொஸ்னியா – யூகோஸ்லாவிய போர் (1992- 1995)

பொஸ்னியாவில் சர்ப்படைகள் முஸ்லீம் போஸ்னியர்களை தங்களுடைய நிலப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். இதன் போது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. மக்கள் பலவந்தமாக அகற்றப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்டனர்.  “சர்ப் இனப்பகுதி” எனும் தூய இன நிலப்பரப்பினை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

2. மியன்மார் – ரோஹிங்கியா பிரச்சினை (2017 முதல்)

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியன்மார் இராணுவம் பல தாக்குதல்களையும் சொத்தழிப்புக்களையும் முன்னெடுத்தனர். மியன்மார் நாட்டின் பகுதிகளிலிருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களை தங்களுடைய பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவதே இங்கு பிரதான நோக்கமாக இருக்கிறது.

இலங்கை: ஈழப்போரும் இனவழிப்பு – இனசுத்திகரிப்பும்

இலங்கை உள்நாட்டுப்போர் அல்லது ஈழப்போர் என்பது மூன்று தசாப்தகாலமாக நீடித்ததொரு ஆயுத மோதலாகும். இது பெரும்பாலும் பேரினவாத அரசு – தமிழீழ விடுதலைப்புலிகள் இடையேயானது என்றாலும் இதன் வரலாற்று நிகழ்வுகளிலும் முரண்பாடுகளிலும் முஸ்லிம்களுக்கும் வகிபங்கு உண்டென்பதும் மலையக மக்களும் பாதிப்புற்றுள்ளார்கள் என்பதும் மறுக்க முடியாதது.

  • 1948 இல் “Ceylon Citizenship Act” என்ற சட்டம் இயற்றப்பட்ட போது சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் குடியுரிமையற்றவர்களாக்கப்பட்டனர். இதனால் வாக்குரிமை, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புக்கள் எல்லாவற்றினையும் இழந்தனர். நேரடியான வன்முறைகள் இன்றி நிகழ்த்தப்பட்ட இவ்வன்முறையை கட்டமைக்கப்பட்ட ரீதியில் அல்லது வடிவமைக்கப்பட்ட முறையில் அரசு முன்னெடுத்தது. சட்டங்கள், நிர்வாக முறை, பொருளாதார கொள்கைகள், கல்வி திட்டங்களிலிருந்து ஒரு இனத்தினை படிப்படியாக நீக்கி சமூக பொருளாதார ரீதியில் ஒதுக்கிவைக்கப்பட்டனர். இதனை கட்டமைக்கப்பட்ட ரீதியிலான இனச்சுத்திகரிப்பு (Structural Ethnic Cleansing) என குறிப்பிடலாம். இலங்கையின் முதலாவது இனசுத்திகரிப்பு நிகழ்வாக இது சுட்டிக்காட்டப்படுகின்றது.
  • இவ்வாறு நிறுவமைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்டவர்கள் 1954 – Nehru – Kotelawala Pact மற்றும் 1964 – Sirimavo – Shastri Pact மூலம் பெரும்பாலானவர்கள் இந்தியாவிற்கு பலவந்தமாக அனுப்பப்பட்டனர். இதன் மூலம் மலையகத் தமிழர்களுள் பெரும் இனக்குழுவினர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை சட்டரீதியான இனச்சுத்திகரிப்பாகும் (Legal Ethnic Cleansing).
  • 1983 இல் யாழில் இராணுவத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கலாக பேரினவாத வன்முறைக்குழுக்களால் கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை போன்ற நகரங்களிலிருந்த தமிழர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டது. “கறுப்பு ஜுலை” கலவரம் என வர்ணிக்கப்படுகின்ற இக்கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பல நூற்றுக்கனக்கான பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்டனர். கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளின்படி 3000 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் 150,000 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் தம்முடைய வீடுகளை, சொத்துக்களை இழந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றன. இச்சம்பவம் இனவழிப்புக்குள்ளும் அடங்கும் அதேவேளை இனரீதியாக வெளியேற்றப்பட்டமை இனசுத்திகரிப்பிற்குள்ளும் அடங்கும்.
  • 1990 – கிழக்குப் படுகொலைகள் (Eastern Massacres)

1987 இல் இந்திய அமைதிப்படைகள் (IPKF) இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப்பு லிகளுக்குமான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்தன. 1990 இல் இரு தரப்பிற்குமிடையில் சமாதான ஒப்பந்தம் முறிவடைந்ததுடன் இரண்டாம் கட்ட உள்நாட்டு – ஈழப்போர் மீண்டும் வெடித்தது. இந்தப் போர் முதலில் கிழக்கு மாகாணங்களில் ஆரம்பமானது. இதன் உச்சகட்டமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களிலுள்ள கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களுள் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் அடங்குவர். அத்துடன், பல பெண்களும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இரவோடிரவாக சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இவ்வாறு கொல்லப்பட்டவர்களுடைய நிலங்கள், சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. இந்த கட்டமைக்கப்பட்ட படுகொலைகளை இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவற் படையினரும் முன்னெடுத்தமை மேற்கோள்காட்டத்தக்கது. இங்கு இனம் சார்ந்து அக்குழுமங்களை அழிப்பதே நோக்காக இருந்துள்ளது. எனவே, இதனை இனவழிப்பு என குறிப்பிட முடியும். அதாவது, பேரினவாதமும் முஸ்லிம் ஊர்காவல்படையும் தமிழர்களுக்கெதிராக முன்னெடுத்த இனவழிப்பு. இங்கு சாதாரண முஸ்லிம் மக்களும் கொல்லப்பட்டனர். ஆயினும், கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் மிக குறைவானதே.

  • 1990 – வடக்கு முஸ்லிம் வெளியேற்றம்

1990ஆம் ஆண்டு தமிழீழப் புலிகளினால் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். 24 மணிநேரத்திற்குள் தங்களது இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்கின்ற புலிகளின் உத்தரவின் அடிப்படையில் மக்கள் வெளியேறினர். இவர்களது உடைமைகள் விட்டுச்செல்லப்பட்டன. இன்றும் பல தசாப்தங்களாக இவர்கள் தம்முடைய சொந்த இடத்திற்கு செல்லமுடியாதொரு நிலை காணப்படுகின்றது. இலங்கைக்குள் புலிகளால் நிகழ்த்தப்பட்ட பாரியதொரு இனசுத்திகரிப்பாக இந்த வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தைக் குறிப்பிடலாம். இவ் இனசுத்திகரிப்பின் போது ஏறத்தாழ 75,000 முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

  • 2009 இறுதி யுத்தம்

2008 முதல் 2009 வரை அப்போதிருந்த மஹிந்த அரசினால் கட்டமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் ஓர் பாரிய பகுதியாக இறுதியுத்தம் பார்க்கப்படுகின்றது. மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களும் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள், சிறுமிகள், போராளிகள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர். இன்று வரை சர்வதேச விசாரணைகள் கண்துடைப்பாக இடம்பெறுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி இன்றும் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. 2009 இல் இலங்கை அரசு போர் முடிவிற்கு வந்துவிட்டது என பகிரங்கமாக அறிவித்திருந்த போதும் அதன் பின்னர் அபிவிருத்திகளை மேற்கொள்கின்ற போதும் வலிந்து காணாமலாகப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், முன்னாள் போராளிகள், நிர்வாகத்தில் மறுக்கப்படுகின்ற உரிமைகள் என உள்ளக நீதிக்கான பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. அத்துடன் மொழி, கலாசார சுத்திகரிப்புக்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

  • 2019 – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்

இந்தத்தாக்குதல்கள் கத்தோலிக்க – கிறிஸ்தவ ஆலயங்களை/ மக்களை இலக்கு வைத்தே நிகழ்த்தப்பட்டுள்ளன. இன ரீதியாக நோக்குமிடத்தில் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, குறிப்பிட்ட இன மத ரீதியாக தாக்குதல் எனும் போதும் தற்கொலை குண்டுவெடிப்புக்கள் என்பதன் இறுதி விளைவு உயிர்களை அழிப்பது என்பதன் அடிப்படையிலும் இதுவும் இனவழிப்பு நிகழ்வே. கூடவே மதரீதியான சுத்திகரிப்பு (Religious Ethnic Cleansing) என்றும் அடையாளப்படுத்தலாம்.

போருக்கு பின்னரான நீதி கோரல்களும் மனிதஉரிமைச் செயற்பாடுகளும்

2009 இற்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டதும் மக்களை உள்ளீர்த்து கட்டமைக்கப்பட்ட நிகழ்வாக அரகலயவினை குறிப்பிடலாம். ஆனால், இப்போராட்டத்தின் பின்னுள்ளதும் போராடியவர்களின் பின்னுள்ளதுமான நுண்ணரசியல் மிகவும் முக்கியமானது.

2021 – 2022 பொருளாதார நெருக்கடி வந்த போது மக்கள் தம்முடைய அன்றாட தேவைகளைக் கூட சமாளிக்க முடியாமல் வீதிக்கு இறங்கி போராடினர். ஆனால், போரியல் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்களும், 1948 இல் இருந்து மலையக மக்களும் இதே பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர், இன்றும் எதிர்கொள்கின்றனர். ஆனால், இக்கால கட்டங்களில் மௌனமாயிருந்த பெரும்பான்மையினர் தம்மை நோக்கி திரும்பிய போது சிறுபான்மையினரையும் இணைத்துக்கொண்டு இந்நெருக்கடியினை பொதுமைப்படுத்தி வீதிக்கிறங்கி போராடினர் என்பது மேற்கோள் காட்டத்தக்கது. அதேவேளை போர்காலத்தில் சில மனிதாபிமானவர்களும், சிங்கள ஊடகவியலாளர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சிறுபான்மையினருக்கு குரல்கொடுத்தனர் என்பது உண்மையே. ஆயினும், “நாட்டுமக்கள்” வீதிக்கு இறங்கியது அம்பு தம்மை நோக்கி திரும்பிய போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

2009 யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்த போது பால்சோறு கொடுத்து கொண்டாடிய அதே தென் இலங்கை 2022 இல் “முள்ளிவாய்க்கால் நினைவு”களை விளக்கேற்றி அணுசரித்ததும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும். ஒருவேளை தென்னிலங்கையானது சிறுபான்மையினரின் வலிகளை உணர்ந்துவிட்டது என்று மக்கள் நினைத்திருந்தால் அதுவும் பொய்த்துப்போனமை இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்று.

தமிழீழ விடுதலைப்புலிகளை எவ்வாறு போர் வரலாற்றில் இருந்து விலத்திட முடியாதோ அதேயளவு புலியெதிர்பாளர்களது வகிபங்கினையும் போர் காலத்திலும் போருக்கு பிந்திய காலகட்டத்திலும் நாம் தவிர்த்திட முடியாது. இயக்கம் இருந்த போது துப்பாக்கி முனைகளுக்கு பயந்தொளிந்து திரிந்தவர்கள் 2009 இற்குப் பின்னர் எவ்வாறு தம்முடைய நியாயங்களை முன்வைக்கவும் எதிர்தரப்பு முடக்கபட்ட நிலையில் தம் விவாதங்களையும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளையும் பொதுமைப்படுத்தினார்கள் என்பதும் வரலாற்றின் படிகளே. புலிகளை விமர்சிக்கும் போது அவர்கள் தம் குரல்களை நசுக்கினார்கள் என்று மேற்கோள் காட்டியவர்கள் பின்னர் தம்முடைய “புலியெதிர்ப்பு வாதத்தினை” எவ்வாறு அரசியலாக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பது மிகவும் காத்திரமானதொரு தளத்தில் விமர்சிக்கப்பட வேண்டியடிதொரு விடயம்.

வடக்கு முஸ்லிம் வெளியேற்றம் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பு பகிரங்கமாக மன்னிப்பினை கோரியது. எனினும், அரசினால் ஆயுதமளிக்கப்பட்டு “ஊர்காவற்படை” உருவாக்கப்பட்டு எல்லைக்கிராமங்களின் “பாதுகாப்பிற்காக” என்று நிறுத்தப்பட்டவர்கள் அப்பாவி தமிழர்களையும் அவர்களுக்கு உதவியளித்த அப்பாவி முஸ்லிம்களையும் கொன்றொழித்தது பற்றி பேசிக்கொள்வதில்லை. எந்தவொரு கட்டமைப்பும் சமூகத்தில் ஆயுதமேந்தும் போது அவ்வினம் சார் பக்கபலம் இல்லாதிருப்பதில்லை. தெரிந்தோ தெரியாமலோ இவை நிகழ்த்தப்பட்டாகத்தான் வேண்டும். இதற்கு நிறுவல்கள் தேவையில்லை. இதனடிப்படையிலேயே தமிழ் அப்பாவி இளைஞர்கள் பலர் புலிகளுக்கு உதவினார்கள் என்று கொல்லப்பட்டுள்ளார்கள், அரசியல் கைதிகளாக்கப்பட்டுள்ளார்கள். இன்று பகிரங்கமாக விடுதலைப்புலிகளில் முஸ்லிம் பிரதிநிதிகளும் இருந்தார்கள் என்று கண்காட்சி நடாத்தும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊர்காவற்படையிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தார்கள் என்று ஒத்துக்கொண்டு பொறுப்புக்கூறல்களை முன்னெடுக்கத் தயாராகவுள்ளார்களா?

காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் குறித்து பரவலாக பேசும் கிழக்கு முஸ்லிம் பிரதிநிதிகளும், மனிதவுரிமை ஆர்வலர்களும் கிழக்கில் நிகழ்த்தப்பட்ட ஏனைய படுகொலைகள் பற்றி ஏன் ஒப்பீட்டளவில் பரவலாக பேசுவதில்லை. (இங்கு “ஒப்பீட்டளவில்” என்பது கவனிக்கப்படவேண்டியதொரு சொல்லாடல்) இன்று வரை காத்தான்குடி பள்ளிவாசல்கள், மதரஸாக்களில் நினைவுகூறல் நினைவுகளில் பரப்படுகின்ற இன காழ்ப்புணர்வுகள் ஆர்வலர்களின் காதினை அடையாமை வியப்பானதே.

இவ்வருடம் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடங்களை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. ஒரு இனத்தின் வலிநிறைந்த பக்கத்தினை நினைவுகூருவதில் குற்றமில்லை. எனினும், இவ் நினைவுகூரல் குறித்த நிகழ்வுகளில் சில விடயங்கள் ஊன்றி கவனிக்கப்பட வேண்டியன. முக்கியமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தமை பகிரங்கமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளது, முஸ்லிம் இனத்தவர்களுள் சிலர் காட்டிக்கொடுத்தார்கள் என்பது பகிரங்கமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, அடுத்தது வடக்கு முஸ்லிம் வெளியேற்றம் இடப்பெயர்வல்ல “இனச் சுத்திகரிப்பு” என மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதனை பகிரங்கமாக மேற்கோள் காட்டியுள்ளவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பெண்ணியவாதிகளுமே. எனினும் மலையகத்திலும், கிழக்கிலும் கட்டமைக்கப்பட்ட ஏனைய “இன சுத்திகரிப்பு”, “இனவழிப்பு”, “பாலியல் வன்முறை” குறித்து இவர்கள் நினைவுகூராமை பெரும் முரண்நகையானதே.

ஒருவேளை மனித உரிமையாளர்கள் இதயசுத்தியுடனும் மனித உரிமைக்காகவும்தான் போராடுகின்றார்கள் எனின் ஏன் புலிகளால் மட்டும் நிகழ்த்தப்பட்ட அதேவேளை புலிகள் அமைப்பினாலேயே பகிரங்கமாக மன்னிப்பு கோரப்பட்டதொரு விடயத்தினை மட்டும் தூக்கிப்பிடிக்கின்றார்கள் என்கின்ற வினா உங்களுக்குள் எழும்பவில்லையா? ‘மனிதம்’ தான் பின்னுள்ளது என்றால் வருடாவருடம் நினைவுகூரப்படுகின்ற சத்துருக்கொண்டான் படுகொலை, வீரமுனை படுகொலைகள் மற்றும் இன்னபிற படுகொலைகள் குறித்து ஏன் இவர்கள் நினைவுகூறுவதில்லை அல்லது விமர்சிப்பதில்லை. ‘பாசிசம்’, ‘இன சுத்திகரிப்பு’ என்கின்ற சொல்லாடல்கள்களை மட்டும் மேற்கோள் காட்டி புலிகளை விமர்சிக்கும் இவ் ஆர்வலர்கள் ஏன் ஏனையவர்கள் நிகழ்த்தியவை பற்றி பேசிக்கொல்வதில்லை.

இன சுத்திகரிப்பு என்பதற்கும் இனவழிப்பு என்பதற்கும் பாரிய வேறுபாடு, விளைவுகள் அடிப்படையில் உண்டு. அவ்வாறிருக்கும் போது “இன சுத்திகரிப்பினை தூக்கிப்பிடிக்கும் ஆர்வலர்கள் இனவழிப்பினை குறித்தும் ஒப்பீட்டளவில் கனதியான இனவழிப்பின் விளைவுகள் குறித்தும் கண்டுகொள்ளாமல் போவது ‘புலிகள்’ சம்மந்தப்படாமல் இருப்பதாலா அல்லது கிழக்கில் கொலைகள் நிகழ்த்தப்பட்டதால் அதனை குறித்து பேசும் போது முஸ்லிம்களை பகைக்க வேண்டியிருக்கும் என்பதாலா? அல்லது பெரும்பான்மையின் அரசியல் நிரலின் கீழ் தம்முடைய அரசியல் பங்களிப்பினை உறுதிப்படுத்தி கொள்கின்ற அரசியலா? என்பது சிந்திக்க வேண்டியதொன்றாகின்றது.

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தமிழ்த்தேசியத்தின் வடக்கை தமிழ்த்தேசமாக்கும் தன்மை என வாதிடும் ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் கிழக்கில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் பின்னுள்ள “கிழக்கு முஸ்லிம்களுக்கானது” என்கின்ற இன அரசியல் நிகழ்ச்சி நிரலை கண்டுகொள்ளாமல் கடப்பதேன்? வடக்கில் நிகழ்ந்தது இன சுத்திகரிப்புதான். ஆனால், கிழக்கில் நிகழ்த்தப்பட்டது இனவழிப்பு. உங்களளவில் எது கனதியானது?

போருக்கு பின்னரான சூழமைவில் மக்களின் மனவடுக்களை ஆற்றுப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு வழிநடாத்த வேண்டிய பொறுப்புள்ளவர்கள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட முக்கிய தினங்களில் மக்களிடையே “வார்த்தை அரசியல்” செய்வதும் தம்முடைய எதிர்ப்புக்களை நியாயப்படுத்த குறிப்பிட்ட இனத்தவர்களுக்காக வருடாவருடம் கண்ணீர் வடிப்பதும் மிகவும் தெளிந்த சிந்தனையுடன் அனுகப்படவேண்டியது என்பதை இத்தனை இழப்பிற்கு பின்னராவது மக்கள் புரிந்துகொள்வார்களா? அதற்கான சித்தனை தளம் உள்ளதா என்பதே போருக்கு பின்னர் 16 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் – முஸ்லிம் – மலையக மக்களிடம் முன்வைக்கப்பட வேண்டிய வினாவாகின்றது.

கேஷாயினி எட்மண்ட்