Photo, ft.lk

இலங்கையின் இனவன்முறை ஒரே இரவில் ஆரம்பமாகவில்லை. 1983 ஜூலையில் நிகழ்ந்த சோகமான நிகழ்வுகள் வெறுமனே தமிழ் போராளிகளால் 13 இலங்கை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக தன்னிச்சையாக எழுந்த எதிர்வினையல்ல. மாறாக, அந்த நிகழ்வுகள் பல தசாப்தங்களாக இருந்த அரசியல் கையாளுதல்கள், முறையான வேறுபாடுகள் மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்ட குரூரத்துவத்தின் ஒன்றிணைந்த வெளிப்பாட்டைக் குறிக்கின்றன. வன்முறையை ஒழுங்கமைப்பதில் ஆளும் கட்சியின் அதிகாரிகளின் நேரடி பங்களிப்பையே சாட்சியங்கள் எடுத்துக் கூறுகின்றன. எனவே, இது இனக்கோபத்தின் திடீர் வெடிப்பல்ல, மாறாக அரசின் ஆதரவோடு நடைபெற்ற இனப்படுகொலையாகும்.

1958, 1968, 1977 மற்றும் 1981ஆம் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கலவரங்களுடன், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் தமிழர் எதிர்ப்பு வன்முறை மீண்டும் மீண்டும் நிகழும் அம்சமாக இருந்தது. வன்முறையின் ஒவ்வொரு சுழற்சியும் அரச இயந்திரத்திற்குள் இருந்த தீவிரவாத சிங்கள பிரிவுகளால் ஊக்குவிக்கப்பட்டு, தமிழ் மக்களை ஓரங்கட்டுவதை மேலும் வலுப்படுத்தியது.

காலனித்துவம்

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி இலங்கையின் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளை அடிப்படையாக மாற்றியது. நிர்வாகத்தை மையப்படுத்துவதன் மூலமும், ஆங்கிலத்தை நிர்வாகம், கல்வி மற்றும் சட்டத்தின் மொழியாக அமல்படுத்துவதன் மூலமும், பிரிட்டிஷார் இன வெறுப்பின் விதைகளை விதைத்தனர். தமிழர்கள், குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள், காலனித்துவ ஆட்சியின் கீழ் அரசு சேவை பதவிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர், இது சிங்களவர்கள் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற கருத்துக்களுக்கு எரிபொருளாக அமைந்தது.

காலனித்துவ பொருளாதாரக் கொள்கைகள் தீவின் பொருளாதாரத்தை வியத்தகு முறையில் மாற்றின, ஏற்றுமதி சார்ந்த விவசாயத்தில் கவனம் செலுத்தும் தோட்டம் அடிப்படையிலான அமைப்பை அறிமுகப்படுத்தியது, குறிப்பாக காபி மற்றும் பின்னர் தேயிலை. இந்த மாற்றம், குறிப்பிடத்தக்க நிலக் கொள்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பெருகி வரும் தோட்டங்களுக்காக தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் ஆட்சேர்ப்பு மற்றும் பிளவுகளை வேரூன்றச் செய்த கடுமையான சட்ட – நிர்வாக அமைப்புகளின் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த காலனித்துவ கட்டமைப்புகள் தீவின் இன சிக்கல்களை எதிர்கொள்ள போதிய ஆயுதங்களற்ற ஒற்றையாட்சி அரசால் பெறப்பட்டன, இது அரசியல் பதற்றத்திற்கான களத்தை அமைத்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு வேற்றுமைக்கு உட்படுத்தல்

சுதந்திரத்திற்குப் பிறகு, சிங்கள தேசியவாதக் கொள்கைகள் பிளவுகளை மேலும் வேரூன்றச் செய்தன. 1948இல், புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கம், குடியுரிமைச் சட்டத்தை இயற்றியது, இது தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டுத் தமிழர்களின் வாக்குரிமையை பறித்தது. இந்தச் சட்டம் அவர்களின் குடியுரிமை உரிமைகள் மற்றும் வாக்குரிமைகளை பறித்து, அவர்களை நாடற்றவர்களாக மாற்றியது.

1956ஆம் ஆண்டின் ‘தனிச் சிங்கள சட்டம்’ தமிழ் பேசுபவர்களை ஓரங்கட்டியது, அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை கடுமையாக குறைத்தது. 1972இல் அரசியலமைப்பு பௌத்தத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது, மத சிறுபான்மையினரை அந்நியப்படுத்தியது. பல்கலைக்கழக ஒதுக்கீடுகள் உயர்கல்விக்கான தமிழர்களின் அணுகலை மட்டுப்படுத்தியது. அரசு தலைமையிலான குடியேற்றத் திட்ட நிலப் பகிர்வால் தமிழர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

தொடர்ச்சியான சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களால், சுயாட்சி குறித்து பேசுவதற்காக தமிழ் அரசியல் இயக்கங்கள் மீண்டும் மீண்டும் மேற்கொண்ட முயற்சிகள் நிராகரிக்கப்பட்டன. இந்த பாரபட்சமான கொள்கைகள் தமிழர்களிடையே அரசியல் விரக்தியை வளர்த்து, போராட்ட பிரிவினைவாதத்தின் எழுச்சிக்கு பங்களித்தன.

அரச ஒடுக்குமுறை அதிகரிப்பு

1970களின் பிற்பகுதியில், அரசாங்கம் தமிழ் தரப்பின் அதிருப்திக்கு சீர்திருத்தத்தின் மூலமாக தீர்வை வழங்காமல் கடுமையான இராணுவமயமாக்கல் மூலமாக பதிலளித்தது. அவசரகால விதிமுறைகள் மற்றும் கொடூரமான பயங்கரவாத தடுப்பு சட்டம் (PTA) மூலம் அரச ஒடுக்குமுறை நிறுவனமயமாக்கப்பட்டது, இது பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களையும் கிட்டத்தட்ட முழுமையான தண்டனையின்மையையும் வழங்கியது. தன்னிச்சையான கைதுகள், சித்திரவதை மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் தமிழ் பகுதிகளில் பொதுவானவையாக மாறின. இது பயம் மற்றும் விரோதத்தின் சூழலை உருவாக்கியது.

இதற்கிடையில், 1981 யாழ்ப்பாண நூலகத்தை எரித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தமிழர் எதிர்ப்பு வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசாங்கம் தவறியது. இது தண்டனையின்மையின் கலாச்சாரத்தை வலுப்படுத்தியது.

1983 ஜூலைக்கு வழிவகுத்த நிகழ்வுகள்

அரச ஒடுக்குமுறைக்கு பதிலடியாக தமிழ் போராளிகள் அரசப் படைகளுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் 1980 களின் முற்பகுதியில் அதிகரித்தன. 1983 ஜூலை 23 அன்று, தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) யாழ்ப்பாணத்தில் இராணுவ பாதுகாப்புப் பணியில் பதுங்கித் தாக்குதல் நடத்தியது, இதில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். சிங்கள மக்களிடையே வெறுப்பைத் திரட்ட மற்றும் ஊடகங்களின் மீது தணிக்கை மேற்கொண்டு மற்றும் பத்திரிகையாளர்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இந்த நிகழ்வைப் பயன்படுத்தியது.

1980களின் ஆரம்பத்தில், அரச ஒடுக்குமுறைக்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ் போராளிகளால் அரசுப் படைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. ஜூலை 23, 1983 அன்று, யாழ்ப்பாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்குவைத்து விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர், இதன் விளைவாக 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சிங்கள மக்களிடையே வெறுப்பைத் திரட்ட மற்றும் ஊடகங்களின் மீது தணிக்கை மேற்கொண்டு மற்றும் பத்திரிகையாளர்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இந்த நிகழ்வைப் பயன்படுத்தியது.

அதன் பிறகு நடந்தது தற்செயலாக இடம்பெற்ற கலவரமல்ல. அது ஒரு முறையான இனப்படுகொலையாகும். ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ஆயுதமேந்திய கும்பல்கள், கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் வியாபார இடங்களை அடையாளம் காண வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்தின. பாதுகாப்புப் படைகள் மௌனமாக நின்றன அல்லது தாக்குதல்களில் தீவிரமாக பங்கேற்றன. பல நாட்கள், தமிழ் பொதுமக்களது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. கற்பழிக்கப்பட்டனர், உயிருடன் எரிக்கப்பட்டனர் மற்றும் படுகொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பானது என நம்பப்பட்ட வெலிகட சிறைச்சாலையில் கூட தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.

அரச ஆதரவுடன் நடந்த குரூரத்தன்மையின் மத்தியில் பல சிங்கள மக்கள் தைரியமாக தமது தமிழ் அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு அளித்ததன் மூலம், மனித வெளிப்படுத்தினர்.

சட்டமயமாக்கப்பட்ட அடக்குமுறை மற்றும் பின்விளைவுகள்

குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடருவதற்குப் பதிலாக, அரசாங்கம் கலவரங்களை ஒரு காரணமாகப் பயன்படுத்தி ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.), நவ சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளைத் தட​செய்தது. இந்த நிலைமை 1988-89இல் தெற்கில் பேரழிவுக்கு வழிவகுத்தது.

மேலும், தமிழர்களின் சுயாட்சிக்கான அமைதியான போராட்டத்தை கூட குற்றமாக்கி ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஆறாவது அரசியலமைப்புத் திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் நுழைவது தடைசெய்யப்பட்டு, முழுமையான ஒடுக்குமுறைச் சூழல் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1983 நிகழ்வுகள் வெளிநாடுகளில் தமிழ் புலத்தை வலுப்படுத்தி, பாரிய தமிழ் மக்கள் இடம்பெயர்வுக்கு வழிவகுத்தது.

சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நீதிபதி ஆணையம் (ICJ) உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகளை புறக்கணித்து, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்த இனப்படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்த மறுத்து வருகின்றன.​

அரசு தூண்டிய உள்நாட்டுப் போர்

ஜூலை இனப்படுகொலை தீவின் சமூக கட்டமைப்பை மீளமுடியாமல் சிதைத்து, நாட்டை 26 ஆண்டுகால கொடூர உள்நாட்டுப் போருக்குள் தள்ளியது. நியாயமான தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, சிவில் சுதந்திரங்கள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை மேலும் அரிக்கும் வகையில் அரசாங்கம் இராணுவ ஒடுக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தியது. பாரபட்சமான அணுகுமுறைகள் தொடர்ந்து பகைமை வளர்க்கும் அதே வேளையில், பலவீனமான நடைமுறைப்படுத்தல் மற்றும் அரைகுறை சீர்திருத்தங்களால் நல்லிணக்க முயற்சிகள் குறைமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

ஜூலை 1983ன் நீடித்த மரபு சமூகங்களுக்கிடையே ஆழமான அவநம்பிக்கையாகும், இது பொறுப்புக்கூறல் அல்லது நீதியை உறுதி செய்யத் தவறிய அரசின் தோல்வியால் மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள சவால்

இனப்படுகொலை இடம்பெற்று பல தசாப்தங்களுக்குப் பின்னரும், இலங்கையின் ஆட்சி அமைப்பு தொடர்ந்து பெரும்பான்மைவாதம், இராணுவமயமாக்கல் மற்றும் தண்டனையின்மையால் வரையறுக்கப்பட்டுள்ளது. மாகாண சுயாட்சியை உறுதியளிக்கும் 13வது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தல் போன்ற அடிப்படை வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளன.  அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்ந்து எதிர்ப்பை சந்திக்கிறது, தமிழ் பெரும்பான்மைப் பகுதிகளில் இராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது.

நிலையான அமைதிக்கு கடந்த காலம் குறித்த நேர்மையான மதிப்பீடு தேவை. எந்தவொரு நம்பகமான நல்லிணக்க செயல்முறையும் இராணுவமயமாக்கல் நீக்கம், போர்க்குற்றங்கள் மற்றும் இன வன்முறைக்கு பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையான அரசியல் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும். அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் இலங்கையின் பன்மைத்துவத்தை பிரதிபலிக்க வேண்டும், அனைத்து சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை வழங்க வேண்டும்.

மக்கள் மட்ட உரையாடல், கலாச்சார பரிமாற்றம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள ரீதியான ஆதரவு மூலம் சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதிப்பாடு முக்கியமானது. சந்தேகத்துடன் நோக்கப்படுதல் அல்லது ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல் அமைதிக்காக முன்னிலையாக சிவில் சமூகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

முடிவுரை

1983 ஜூலை இனப்படுகொலை வரலாற்றில் தற்செயலாக நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் அல்ல – இது இலங்கையை போருக்குள் இழுப்பதை விரைவுபடுத்திய வேண்டுமென்றே திட்டமிட்ட அரச வன்முறையின் வெளிப்பாடாகும். அதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் இன்றும் கூட பொருத்தமானவை. அமைதியை எதிர்பார்க்கும் அரசால் தொடர்ந்து ஒடுக்குமுறையை நியாயப்படுத்தவோ, சிறுபான்மை உரிமைகளை புறக்கணிக்கவோ அல்லது வரலாற்று அநீதிகளை நிலைநிறுத்தவோ முடியாது.

இலங்கை தனது வன்முறைச் சுழற்சியிலிருந்து விடுபட, தண்டனையின்மைக்குப் பதிலாக பொறுப்புக்கூறலையும், பெரும்பான்மைவாதத்திற்குப் பதிலாக பன்முகத்தன்மையையும், பழிவாங்கலுக்குப் பதிலாக நல்லிணக்கத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் ஜூலை 1983ன் காயங்கள் குணமடையத் தொடங்கும்.

லயனல் போபகே