Photo, AP PHOTO
முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூன் 30) சரியாக ஒரு வருடம் கடந்துசென்றது. முதலாவது நினைவு தினத்தில் அவரை இலங்கை தமிழச் சமூகம் நினைவுகூருவதற்கு தவறிவிட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்தவொரு இடத்திலும் நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவோ அல்லது பத்திரிகைகளிலாவது நினைவஞ்சலி குறிப்பு ஒன்று வெளியானதாகவோ நாம் அறியவில்லை. சம்பந்தன் பல வருடங்களாக தலைமை தாங்கிய இலங்கை தமிழரசு கட்சியும்கூட அவரை நினைவு கூருவது குறித்து சிந்திக்கவில்லை.
சம்பந்தன் மீதான சகல விமர்சனங்களுக்கும் அப்பால், சிங்களத் தலைவர்களினதும் சர்வதேச சமூகத்தினதும் மதிப்புக்குரியவராக விளங்கினார். அவரது மறைவு தமிழ் அரசியல் சமுதாயத்தில் எளிதில் நிரப்பமுடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்பதை அவரது அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட மறுக்கமாட்டார்கள். ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் வாழ்வைக் கொண்ட அவரை நினைவு கூருவதற்கு தமிழர்கள் தவறியதை தமிழ் அரசியல் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் ஒரு பிணியின் வெளிப்பாடாகவே நோக்க வேண்டியிருக்கிறது.
சம்பந்தன் பல தசாப்தகால அரசியல் வாழ்வைக் கொண்டிருந்தாலும், உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலை முன்னெடுப்பதற்கு அவர் எவ்வாறு தலைமை தாங்கி வழிநடத்தினார் என்பதே அவரின் அரசியல் மரபாக வரலாற்றில் நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகமில்லை. முதலாவது நினைவு தினத்தில் கூட நினைவுகூருவது குறித்து எவரும் அக்கறைப்படவேண்டிய அவசியமில்லாத அளவுக்கு அவரது மரபு ஒதுக்கி விடப்படக்கூடியதா?
போரின் முடிவுக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலை வழிநடத்துவதில் சம்பந்தன் தலைமையில் பொதுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் குறிப்பாக தமிழரசு கட்சியும் கடைப்பிடித்துவந்த கொள்கைகளுக்கும் அணுகுமுறைக்குமான பொறுப்பை முற்று முழுதாகச் சம்பந்தன் மீது சுமத்திவிட முடியாது.
விடுதலை புலிகள் இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் சமுதாயம் படுமோசமாக பலவீனப்பட்டிருந்த சூழ்நிலைகளின் கீழ் அதுவும் குறிப்பாக பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததாக வெற்றிகொண்டாடிய சிங்கள அரசியல் சமுதாயம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதில் அக்கறையற்ற மனோபாவத்தைக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே சம்பந்தன் தமிழர் அரசியலின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டியிருந்தது.
தமிழ் அரசியல் கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை இலங்கை தமிழர்களின் பலம்பொருந்திய ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு சம்பந்தன் தவறியதனாலேயே இன்று தமிழ் அரசியல் சக்திகள் பல்வேறு கூறுகளாகிக் கிடக்கின்றன என்பதே அவர் மீதான முக்கியமான குற்றச்சாட்டு. தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை போருக்குப் பின்னரான உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளுக்கு இசைவான முறையில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டிய வரலாற்றுப் பொறுப்பைக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரின் முன்னாலேயே சீர்குலைந்தது. அவரால் குறைந்தபட்சம் தனது தமிழரசு கட்சியையேனும் ஐக்கியமான ஒரு அரசியல் இயக்கமாக வைத்திருக்க முடியாமல் போய்விட்டது.
சம்பந்தன் தனது அரசியல் அனுபவத்தையும் மூப்பையும் பயன்படுத்தி தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தி வைத்திருந்திருக்க முடியும் என்று பரவலான அபிப்பிராயம் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, முன்னைய காலத்தைப் போலன்றி அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் கட்சி உறுப்பினர்களையும் அவற்றின் கட்டமைப்புக்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத ஒரு விபரீதமான போக்கு வளரத்தொடங்கிய ஒரு காலப்பகுதியிலேயே சம்பந்தன் தலைமைத்துவப் பாத்திரத்தை வகிக்க வேண்டியிருந்தது.
இன்று இலங்கையில் எந்தவொரு கட்சியின் தலைவரும் தனது கட்சியை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று கூறமுடியாது. அண்மைய தேர்தல்களின் பின்னர் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் கட்சிகள் எதிர்நோக்குகின்ற நெருக்கடி இதை தெளிவாக வெளிக்காட்டுகின்ற பிந்திய உதாரணமாகும். மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்ட பின்புலத்தில், அவர்கள் மத்தியில் குறிப்பிட்ட ஒரு கட்சி மீதான விசுவாசம் என்பது பெருமளவுக்கு தளர்ந்து போய்விட்டது. ஒரு கட்சிக்கு நிலையான வாக்குவங்கி ஒன்று இனிமேலும் இருக்கும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அரசியல் சஞ்சலமானதாகிவிட்டது.
தலைவரை ஏகமனதாக தெரிவுசெய்யும் தமிழரசு கட்சியின் பாரம்பரியமான நடைமுறையை பேணிக் காக்கக்கூடியதாக தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களைக் கூட வழிக்குக் கொண்டுவர முடியாத அளவுக்கு ஒரு கையறு நிலையிலேயே இறுதிக் காலத்தில் சம்பந்தன் இருந்தார். கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தலைவர் தேர்தலுக்குப் பின்னர் தமிழரசு கட்சிக்குள் நிலவும் அருவருக்கத்தக்க உட்பூசல் தமிழர் அரசியலில் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது.
ஆனால், போரின் முடிவுக்குப் பின்னரான தமிழ் மக்களின் நிலையை உணர்ந்தவராக சம்பந்தன் வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களை உயர்த்திப்பிடித்து மீண்டும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் பாதையைக் காட்டுவதற்கு ஒருபோதும் முயற்சித்ததில்லை. தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பொறுத்தவரை, அடிப்படைக் கோரிக்கைகளில் விட்டுக் கொடுப்பைச் செய்யாமல் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறையாகவே இருக்க முடியும் என்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
அதேவேளை, நிரந்தரத்தீர்வை நோக்கிய பயணத்தில் இடைக்கால ஏற்பாடாக அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளை இயங்கவைக்க வேண்டும் என்று அரசாங்கங்களை இடையறாது வலியுறுத்த சம்பந்தன் தவறியதில்லை. சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களிலும் அந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்த அவர் தவறியதில்லை. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாவிட்டால், வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வொன்றைக் கோருவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்பது இறுதிவரையான அவரது நிலைப்பாடாக இருந்தது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணும் விடயத்தில் சம்பந்தன் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருந்தார். இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச சமூகம் நெருக்குதலை பிரயோகிக்க வேண்டும் என்பதும் அவரது இடையறாத வலியுறுத்தலாக இருந்து வந்தது. சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் அரசியல் தீர்வை காண்பது சாத்தியமில்லை என்பதும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் சம்பந்தனின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது.
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற தலைவர்களுடன் ஒப்பிடும்போது சிங்கள சமூகத்தின் கடுமையான வெறுப்புக்கு உள்ளாகாத ஒரு மிதவாத தமிழ்த் தலைவராக சம்பந்தன் இறுதிவரை விளங்கியதை அவருக்குரிய ஒரு ‘தனித்துவமாக’ கூறலாம். ஆனால், தனது தலைமுறையைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்களைப் போன்றே தமிழ் மக்களுக்கு அமைதியானதும் கௌரவமானதுமான வாழ்வை உறுதி செய்யக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க முடியாதவராகவே சம்பந்தனும் இவ்வுலகில் இருந்து விடைபெற்றார்.
நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளிலும் அரசாங்கத் தலைவர்களுடனும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் மற்றைய எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் செய்யாத வகையில் சம்பந்தன் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து வரிசைக் கிரமமாக விளக்கம் அளிப்பது சம்பந்தனின் வழக்கமாக இருந்தது வந்தது.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பதவிக் காலத்தில் 1991ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியில் இருந்தபோது 2000ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு யோசனைகள், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவின் யோசனைகள், மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச்செயன்முறை ஆகியவற்றை சம்பந்தன் தவறாது குறிப்பிடுவார்.
சமாதான உடன்படிக்கைக்கையைத் தொடர்ந்து மாகாண சபைகள் அமைக்கப்பட்ட பின்னரும் கூட, அரசியல் தீர்வை நோக்கிய அந்தச் செயன்முறைகளை முன்னெடுத்ததன் மூலமாக 13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையமுடியாது என்பதை அரசாங்கங்களே ஏற்றுக்கொண்டிருந்தன என்பதை நிரூபிப்பதே சம்பந்தனின் நோக்கமாக இருந்தது.
ஜனாதிபதிகளுடனும் சிங்கள அரசியல்வாதிகளுடனும் சுமுகமான உறவை சம்பந்தன் கொண்டிருந்தது குறித்து தீவிர தமிழ்த் தேசியவாத சக்திகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், அத்தகைய உறவை அவர் கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினையில் சிங்கள தலைவர்களின் தவறுகளை நேரடியாகவே சுட்டிக்காட்டும் துணிச்சல் அவரிடம் இருந்தது.
சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த இரண்டாவது தமிழ் அரசியல் தலைவராவார். முதலில் அமிர்தலிங்கம் 1977 ஜூலை தொடக்கம் 1983 ஜூலை வரையும் பிறகு சம்பந்தன் 2015 டெப்டெம்பர் தொடக்கம் 2019 அக்டோபர் வரையும் அந்தப் பதவியை வகித்தனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த காலப்பகுதிக்குப் பிறகு உள்நாட்டுப்போர் மூண்ட அதேவேளை, போர் முடிவுக்கு வந்தததன் பின்னரான காலப்பகுதியில் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்தார். தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் வளர்ந்து கொண்டிருந்த நாட்களில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்ததும் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் செயலிழந்த பிறகு அந்தப் பதவியை சம்பந்தன் வகித்ததும் இருவருக்கும் இடையிலான வேறுபாடாகும்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இல்லாமல் சிறிசேன – ரணில் அரசாங்கத்தை ஆதரித்த ஒருவராகவே சம்பந்தன் நடந்துகொண்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை வரையும் செயன்முறையை முன்னெடுத்த காரணத்தால் அதற்கு ஒத்துழைத்து இனப்பிரச்சினைக்கு உருப்படியான அதிகாரப் பரவலாக்கம் மூலமாக அரசியல் தீர்வொன்றை காணும் நம்பிக்கையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால், அவருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. அவரது தலைமைத்துவம் நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு சிங்களத் தலைவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியது என்று நம்பியவர்கள் பலர். ஆனால், முன்னைய தமிழ் தலைவர்களுக்குக் கிடைத்த கவலைக்குரிய அனுபவமே சம்பந்தனுக்கும் கிடைத்தது.
எது எவ்வாறிருந்தாலும், சம்பந்தனின் மறைவு தமிழர் அரசியலில் ஏற்படுத்திய வெற்றிடம் அண்மைய எதிர்காலத்தில் நிரப்பப்படக்கூடிய வாய்ப்பு தொடர்பில் நம்பிக்கை வைப்பதற்குரிய அரசியல் சூழ்நிலை தமிழர்கள் மத்தியில் இன்று இல்லை. தமிழ் மக்களின் நலன்களில் அன்றி தங்களது கட்சி அரசியல் நலன்களிலும் ஆளுமைப் போட்டியிலும் அக்கறை காட்டுவதற்கே இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு நேரம் போதாமல் இருக்கிறது.
சர்வதேச ரீதியில் மதிக்கப்பட்ட பல தலைவர்களை ஒரு காலத்தில் கொண்டிருந்த இலங்கை தமிழ்ச் சமுதாயம் இன்று உள்நாட்டிலேயே உருப்படியாக மதிக்கப்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
வீரகத்தி தனபாலசிங்கம்