Photo, @anuradisanayake
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரண்டு மூன்று நாட்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டமை தொடர்பான காணொளிக் காட்சிகள், செய்திக் காட்சிகள் மற்றும் ஊடக அறிக்கைகளைப் பார்த்த பின்னர், அது குறித்த விமர்சனங்களும் எதிர்வினைகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. சிலவற்றில் அரசியல் பொறாமையும் வெளிப்பட்டது. இவை நடந்த பின்னரும், ஜனாதிபதி அனுராதபுரம் வழியாக கொழும்புக்கு வந்த பின்னரும், யாழ்ப்பாணத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவரை கொழும்பில் சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. சில ஊடகங்களில் இருந்த எதிர்மறையான அறிக்கைகளை மனதில் வைத்துக்கொண்டு, ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பயணம் குறித்து அந்த அரசியல்வாதியின் அவதானிப்பு என்னவென்று கேட்டேன்.
அந்த அரசியல்வாதியின் பதிலில் இருந்த மூன்று வாக்கியங்கள் பின்வருமாறு: “AKDக்கு முன்னர் இருந்த அலை இப்போது வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது” என்பது முதலாவது. “சாதாரண மக்கள் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், முதியோர் அனைவரிடமும் அனுரவுக்கு நல்ல ஈர்ப்பு இருக்கிறது” என்பது இரண்டாவது. மூன்றாவது, “சாதாரண மக்கள் இந்த ஜனாதிபதியை நெருங்க முடியும், கை குலுக்க முடியும் என்று நினைக்கிறார்கள். தங்களுடைய ஒருவரைச் சந்திப்பது போல அவர்கள் நினைப்பதாகத் தெரிகிறது” என்பதாகும்.
ஜனாதிபதியின் வடக்குப் பயணத்துக்கு தெற்கிலிருந்து வெளிப்பட்ட கேலி மற்றும் எதிர்ப்பு விமர்சனங்களுக்கு அடிப்படையான அரசியல் அச்சத்தைப் புரிந்துகொள்வதன் மூலமும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரோ நண்பரோ அல்லாத அந்த அரசியல்வாதி கூறியதிலிருந்தும் ஏதோ ஒரு ஒளி தெரிகிறது.
ஜனாதிபதி அனுர வடக்கில் மக்கள் சந்திப்புகளில் ஆற்றிய உரைகளில், வடக்கின் தமிழ் மக்களுக்கு வழங்கிய முக்கிய செய்தியைப் புரிந்துகொள்ள தெற்கின் விமர்சகர்களும் முயற்சிக்க வேண்டும் என அந்த உரைகளின் பகுதிகளைக் கேட்டபோது எனக்குத் தெரிந்தது. அது புதிய செய்தி அல்ல. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களிலும் அந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கு தெற்கின் அரசியல்வாதிகளின் அல்லது அரசியல் விமர்சகர்களின் கவனம் போதுமான அளவு இன்னும் கிடைக்கவில்லை. எனினும், அது மறக்கக்கூடாத, கவனத்தில் எடுக்க வேண்டிய செய்தி என்பது எனது கருத்து.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒருமுறை முன்வைத்தது இலங்கையின் ‘தேசியப் பிரச்சினை’ என்று பாரம்பரியமாக விழிக்கப்பட்ட அரசியல் பிரச்சினைக்கு இனம் சாராத மாற்று தீர்வுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள பார்வையாகும். அந்தப் பார்வையை முன்வைத்து தேசியப் பிரச்சினை குறித்த பாரம்பரிய அணுகுமுறையின் முக்கிய குறைபாடாக அவர் வலியுறுத்தியது, அந்த அணுகுமுறை இலங்கை மக்களை இன அடையாளத்தின் அடிப்படையில் பிரித்து வேறுபடுத்துவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்ற விடயமாகும். ‘தேசிய ஒற்றுமைக்கு’ இன அடையாள அரசியலைக் கடந்த ‘பொது உடன்பாடு’ தேசிய மக்கள் சக்தியிடமிருந்து முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் முன்மொழிந்தார். தான் முன்மொழியும் இந்த ‘பொது உடன்பாடு’ என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்தாதது தேசிய மக்கள் சக்தியின் புதிய அணுகுமுறையில் உள்ள குறைபாடாகும். அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜனாதிபதி மிகவும் ஆர்வத்துடன் முன்வைக்கும் ‘தேசிய ஒற்றுமை’ குறித்த ‘புதிய நோக்கின்’ அரசியல் ஈர்ப்பு வரையறுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
பொது உடன்பாடு
ஜனாதிபதி இந்த முறை வடக்கில் ஆற்றிய உரைகளில் அந்த ‘பொது உடன்பாடு’ பற்றி மறைமுகமாக பல குறிப்புகள் முன்வைக்கப்பட்டதை அவதானிக்க முடிகிறது. எனவே, செய்ய வேண்டியது, மறைமுகமாக குறிப்பிட்ட அந்தக் குறிப்புகளை முறையாகவும் வலுவாகவும் தெளிவுபடுத்துவதாகும். அவரது உரைகளில் இருந்து அடையாளம் காணக்கூடிய அத்தகைய இரண்டு குறிப்புகள் உள்ளன. முதலாவது, வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களுக்கு அநீதிக்கும் அநியாயத்திற்கும் எதிராக போராடிய பொதுவான வரலாறு உள்ளது என்பதாகும். எனினும், கடந்த காலத்தைப் போல அந்தப் போராட்டங்களை தனித்தனியாக நடத்தாமல், புதிய பொதுவான தலைமையின் கீழ் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்கான புதிய வரலாற்று வாய்ப்பு திறந்துள்ளது என்பது இரண்டாவதாகும். கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இருந்து இந்த வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் உரைகளில் வலியுறுத்தப்பட்டது.
‘பிரபுத்துவமற்ற’ மக்கள் என அழைக்கப்படும் சாதாரண பொதுமக்கள் பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு எதிரான பொதுவான போராட்டத்தின் சம பங்காளிகளாக உள்ளனர் என்பதே ஜனாதிபதி வலியுறுத்திய வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கை இணைக்கும் ‘பொது உடன்பாடு’ ஆகும். ‘ஒடுக்கப்பட்ட வர்க்கம்’, ‘துன்பப்படும் மக்கள்’ போன்ற பாரம்பரிய இடதுசாரி அரசியல் மொழியின் சொற்களைப் பயன்படுத்தாமல், ஜனாதிபதி திசாநாயக்க முன்வைத்திருப்பது அதே இடதுசாரி கருத்தை மிகவும் சமகால மற்றும் முழுமையான மொழியில் முன்வைக்க முடியும் என்ற கருத்தாகும். ‘நாம்’ என்ற சொல்லை இலங்கையின் அனைத்து மக்கள் பிரிவினரையும் குறிப்பிடும்போது ஜனாதிபதி பயன்படுத்துகிறார், அதன் பொருள் ‘பொதுமக்கள்’ என்பதாகும். ‘பொதுமக்கள்’ என்பது ‘பிரபுத்துவமற்ற மக்கள்’, ‘ஆளப்படும் மக்கள்’, ‘ஒடுக்கப்படும் மக்கள்’, ‘அதிகாரமற்ற குடிமக்கள்’ போன்ற சொற்களால் குறிப்பிடப்படும் ‘சாதாரண மக்கள்’ ஆவர். கொழும்பு பிரபுத்துவ வர்க்க அரசியல்வாதி யாழ்ப்பாணம் சென்று தமிழ் மக்களை அணுகும்போது ஏற்படும் எதிர்வினையை விட அதிக ஈர்ப்பும் பிணைப்பும், பிரபுத்துவமற்ற சாதாரண மக்களின் பிரதிநிதியான ஜனாதிபதிக்கு தமிழ் சமூகத்தின் ‘பொதுமக்களிடமிருந்து’ கிடைப்பதில் அரசியல் முக்கியத்துவம் உள்ளது. எனவே, இன அடையாள அரசியலின் எல்லைகளைக் கடந்து செல்வதற்கான சாத்தியம் மற்றும் வரலாற்று தருணத்தை சாதகமாகப் பயன்படுத்துவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பாகவும் அமைகிறது.
இலங்கையின் அனைத்து ‘ஒடுக்கப்பட்ட’, ‘உழைக்கும்’, ‘ஏழை வர்க்க’ மக்களை ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து பொதுவான ‘விடுதலைக்காக’ அரசியல் ரீதியாக அணிதிரட்டுவது இலங்கையின் இடதுசாரி இயக்கம் 1930களின் நடுப்பகுதியிலிருந்து எதிர்பார்த்த அரசியல் இலக்காகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் சிங்கள சமூகத்திலும் தமிழ் சமூகத்திலும் வளர்ந்த ‘தேசியவாதம்’ என்று அழைக்கப்பட்ட இன அடையாள அரசியல் பரவும்போது, இடதுசாரி இயக்கத்தின் முன்னோக்கு தொழிலாளர் வர்க்க தலைமையின் கீழும், இடதுசாரிக் கட்சியின் தத்துவார்த்த வழிகாட்டுதலின் கீழும் நடைபெறும் ‘வர்க்கப் போராட்டம்’ மூலம் அடையக்கூடிய ‘வர்க்க விடுதலை’ பற்றிய மாற்று யோசனையாக இருந்தது. இந்த மாற்று யோசனை பற்றிய நம்பிக்கை இலங்கையின் இடதுசாரி அரசியல் கருத்தியல் விவாதத்திலும் இன்னும் நிலவுகிறது. எனினும், அது அரசியலின் சிறிய நீரோட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தியின் முன்னோடியான மக்கள் விடுதலை முன்னணியும் தேசியப் பிரச்சினை குறித்து முன்வைத்த தீர்வில் இடதுசாரி பார்வை இருந்தது. தேசிய மக்கள் சக்தியால் வெளிப்படுத்தப்படுவது, இந்த இடதுசாரி அணுகுமுறையை, சமகால வரலாற்று மற்றும் அரசியல் சூழலில் புதுப்பித்து, இடதுசாரி அரசியல் மொழியில் சிக்கிக் கொள்ளாமல் மீண்டும் முன்வைப்பதாக பொருள்கோடல் செய்யலாம்.
பிரபுத்துவ-பிரபுத்துவமற்ற துருவமயமாக்கல் மற்றும் தேசியப் பிரச்சினை
இலங்கையின் தேசியப் பிரச்சினை புதிய வரலாற்றுச் சூழலுக்குள் நுழைந்துள்ளது என்ற கருதுகோளை சற்று ஆராய்வது முக்கியம். இந்தச் சூழலின் சிறப்பம்சம் என்னவென்றால், தேசியப் பிரச்சினையும், இலங்கை அரசுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையிலான உறவும் போருக்குப் பிந்தைய காலகட்டத்தால் போர்த்தன்மை நீக்கப்பட்டுள்ளது என்பதாகும். இந்தப் போருக்குப் பிந்தைய நிலைமை இனப் பிரச்சினையை ‘அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்கான’ புதிய வாய்ப்பை உருவாக்கியிருந்தாலும், இந்த வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்த அனைத்துத் தரப்பினரும் தோல்வியடைந்துள்ளனர். சிங்கள ஆளும் வர்க்கமும் தமிழ் சமூகத்தின் அரசியல் வர்க்கமும் இந்தத் தோல்வியின் பங்காளிகள் ஆவர்.
ஆயினும், கடந்த சில ஆண்டுகளில் அந்த தோல்வியின் எதிர்பாராத மற்றும் சாதகமான விளைவு ஒன்று வெளிப்பட்டுள்ளது. அதாவது, ‘தேசிய பிரச்சினை’க்கான தீர்வுகள் குறித்த அரசியல் கருத்தியல், உரையாடல் மற்றும் கலந்துரையாடலின் போதான மொழிப் பாவனை, புதிய தொடக்கத்திற்கும் வரலாற்று வெளி திறந்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, வடக்கு மக்களுக்கு இந்த வெளியில் உருவான புதிய அரசியல் பார்வையை முன்வைத்தார். இந்த முன்வைப்பில் அவர் ‘தேசிய பிரச்சினை’ பற்றிய வழக்கமான இடதுசாரி அல்லது தாராளவாத அரசியல் மொழியையும் பயன்படுத்தவில்லை. அதில் ஜே.வி.பி.யின் பழைய அரசியல் மொழியும் இல்லை. தமிழ் அரசியல் கட்சிகளின் அரசியல் சொற்களஞ்சியமும் அதில் இல்லை. தேசிய மக்கள் சக்தியின் இந்தப் பார்வைக்கு ஆரம்பத்தில் எதிர்மறை எதிர்வினைகள் கிடைத்ததும், எதிர்வினைகள் கிடைக்காததும் இதனால்தான் இருக்கலாம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களும், மலையக தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஓரளவு இந்த ‘எதிர்கால நோக்கிற்காக’ ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, ஜனாதிபதியின் ‘எதிர்கால நோக்கு’ மிகத் தெளிவாகவும் நேரடியாகவும் கடந்த வாரம் வடக்கு விஜயத்தின் போதும் அனுராதபுரத்திலும் ஆற்றிய உரைகளில் முன்வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் தேசிய பிரச்சினை தொடர்பான புதிய பார்வை முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியில், அரசியல் ரீதியாக மிகவும் அர்த்தமுள்ள மற்றொரு வளர்ச்சியையும் நாம் அடையாளம் காணலாம். அதாவது இலங்கையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் மேலும் தீவிரமடைந்த பிரபுத்துவ-சாதாரண மக்கள் என்ற சமூக அரசியல் துருவமயமாக்கலாகும். இந்தப் பிளவு அரசியல் துறையில் மிகத் தீவிரமாக வெளிப்பட்டது.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948ஆம் ஆண்டு முதல் நாட்டை ஆண்ட பிரபுத்துவ வர்க்கங்கள் மற்றும் குடும்பங்களில் இருந்து வந்த அரசியல் தலைமை மீதான குடிமக்களின் நம்பிக்கை சரிவடைந்த செயல்முறை, 2022-2024 ஆண்டுகளில் வெளிப்பட்ட மிக முக்கியமான அரசியல் போக்காக இருந்தது. இது வர்க்க வேறுபாட்டின் அரசியலையும் உள்ளடக்கிய, அதைவிட விரிவான சமூக கட்டமைப்பைக் கொண்ட பிளவாகும். பொருளாதார மற்றும் சமூக பிளவுகளும் நிச்சயமாக இதற்கு அடிப்படையாக உள்ளன. எனினும், இந்தப் பிளவுகள் அரசியல் தளத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள இரு எதிர் முகாம்களைக் கொண்ட பிளவாக வெளிப்பட்டுள்ளன. ஆட்சியாளர் -ஆளப்படுபவர், அதிகாரம் உள்ளவர் – அதிகாரமற்றவர், அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டியவர் – அதிகாரத்திற்கு வர வேண்டியவர் என்ற வகையில் இந்த துருவமயமாக்கல் பல வடிவங்களில் இலங்கை சமூகத்தில் வெளிப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி இலங்கை முழுவதும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடமிருந்து பெற்ற முன்னெப்போதும் இல்லாத அரசியல் ஆதரவும், சமீபத்தில் யாழ்ப்பாண விஜயத்தின்போது ஜனாதிபதி பெற்ற வரவேற்பும் எதிர்வினையும் குறிப்பிடுவது என்னவென்றால், சாதாரண சமூக சக்தியின் அரசியல் பிரதிநிதியாக, ஜனாதிபதியாக இருக்கும் சிங்கள அரசியல் தலைவருடன் அடையாளப்படுத்திக்கொள்ள வடக்கின் சாதாரண/ பொது மக்கள் காட்டும் தயார் நிலையாகும். வடக்கின் தமிழ் மக்கள் தேசியவாதத்துக்குப் பிந்தைய அரசியலை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர் என்ற முடிவுக்கு வர இது போதுமான சான்றாக இல்லை.
எனினும் இலங்கையின் ‘தேசிய பிரச்சினையின்’ தன்மை மற்றும் இயக்கவியல் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் அரசியல் தலைவர்களின் பார்வைக்கும் கவனத்திற்கும் உட்படாமல், அந்த சமூகங்களின் ‘பொது மக்கள்’ முன்னெடுக்கும் புதிய மாற்றத்திற்கும் காலகட்டத்திற்கும் உட்பட்டுள்ளது. சிங்கள சமூகத்தின் பிரபுத்துவமற்ற மற்றும் பொதுமக்கள் அரசியல் தலைவர் ஒருவருக்கு இந்த மாற்றத்தையும், அது திறந்துவிட்டுள்ள மாற்றத்திற்கான அரசியல் வெளியையும் புரிந்துகொள்ள முடிவது, அந்த சமூகங்களின் பிரபுத்துவ அரசியல் தலைமைகளுக்கு தங்களது அரசியல் பொருத்தப்பாடு குறித்து சுய-விமர்சன ரீதியாக சிந்திக்க ஒரு அழைப்பாகவும் அமைகிறது.
பேராசிரியர் ஜயதேவ உயன்கொட
ජනාධිපතිවරයාගේ යාපන සංචාරයේ දේශපාලන පණිවුඩයේ අලුත් බව என்ற தலைப்பில் ‘அனித்தா’ பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்