Photos, SELVARAJA RAJASEGAR

‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இலங்கை அரச முப்படையினரால் படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான உறவுகளின் அழுகுரல்களால் முள்ளிவாய்க்கால் நிரம்பியது.

எந்தளவு கொடூரமாக அப்பாவி மக்கள் மீது போர் ஏவப்பட்டது என்பதற்கு சான்றாதாரங்களாக நினைவேந்தல் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலின் பின்னால் கொஞ்சம் நடந்துப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். பங்கர் அமைந்திருந்த இடங்கள், மக்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள், பாத்திரங்கள், காலனிகள், தற்காலிகமாக அமைத்திருந்த கிணறுகள் என்று அனைத்தும் பல கதைகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

போர் நிறைவடைந்து 15 வருடங்களானதை முன்னிட்டு நேற்றுமுன்தினம் கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினார்கள். கொல்லப்பட்ட தங்களுடைய அன்புக்குரியவர்களின் படங்களை வைத்து, மலர்களால் அலங்கரித்து, அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை படைத்து உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார்கள்.

நினைவுகூரலுக்கு அப்பால் கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த, காயமடைந்த அன்புக்குரியவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற ஒரே கோரிக்கையே அங்கு திரண்டிருந்த உறவுகளிடம் இருந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு’, “முள்ளிவாய்க்கால் என்பது பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல, அது அடக்குமுறையின் குறியீடும் கூட” என்று ‘முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2024’ இல் குறிப்பிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட உறவுகளை நினைக்கையில் அவர்கள் சுமந்து வந்த கனவுகளையும், இலக்குகளையும் நினைத்து, குருதி உறைந்து சிவந்து போன மண்ணிலிருந்து சபதம் எடுக்கின்றோம். எத்தடைவரினும் எமது இலக்கை அடைவோம் என்று எம் உறவுகளின் கல்லறைகள் மீது உறுதி எடுக்கின்றோம்.

தமிழினப்படுகொலையின் 15ஆவது நினைவேந்தல் நாளில் பின்வருவனவற்றை மீளவும் வலியுறுத்துகின்றோம்.

  1. நினைவுகூரல் கூட்டுரிமை சார்ந்தது மட்டுமல்ல பண்பாட்டு உரிமையும் கூட. ஆகவே, சிறிலங்கா அரசு தமிழினப் படுகொலை நினைவுகூரலைத் தடுக்க முடியாது.
  2. ஈழத்தமிழினம் தமிழினப் படுகொலைக்கான நீதியை சர்வதேச விசாரணைக்கூடாகவே கோரி வருகின்றது, அக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
  3. ஈழத்தமிழினம் ஒரு தனித்துவமான தேசத்திற்குரிய அலகுகளை தன்னகத்தே கொண்ட இனம்.
  4. கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கூடாக தமிழின இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. இதுவும் இனவழிப்புப் போரின் ஓர் அங்கமென நாம் கருதுகின்றோம்.
  5. தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும், தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், ஒருபோதும் பராதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்.

இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு ஐந்து கோரிக்கைகளை, ‘முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2024’ இன் ஊடாக வலியுறுத்துகின்றது.