Photo, Selvaraja Rajasegar

“200 வருடங்களாக இலங்கைக்கு பாரியளவிலான பங்களிப்பை வழங்கி, பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிய எங்களுக்கு இந்த மண்ணுடன் – இலங்கையுடன் தொடர்புபட்ட ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்பது மலையக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகிறது. இங்கு வந்து குடியேறிய எல்லோரும் இந்தியாவிலிருந்துதான் வந்தார்கள் என்ற வரலாற்று உண்மை இருந்தாலும், 200 வருடங்களுக்குப் பின்னரும் இந்தியர்கள் என்று அடையாளப்படுத்துவதை விட மண்ணுடன் தொடர்புடைய ஒரு அடையாளம் இருக்கவேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்.

இலங்கையில் தனித்துவமிக்க ஒரு இனமாக பரிணமிப்பதாக இருந்தால், இலங்கையர் என்ற பொது அடையாளத்துக்குள் வரும்பொழுது நாங்கள் எந்த ஒரு தனித்துவமான அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பொது அடையாளத்துக்குள் வருகின்றோம் என்ற கேள்வி எழுகின்றது. அப்பொழுது, இந்தியர் என்ற அடைமொழியுடன் இருக்கின்ற அடையாளத்தையும் விட மலையகத் தமிழர் என்ற இலங்கையுடன் பொருந்திப்போகின்ற ஒரு அடையாளத்துடன் நாங்கள் இலங்கையராக முன்வருவது அவசியமானமொன்றாகும்” என்கிறார் சட்டத்தரணியும் சமூக ஆர்வலருமான கெளதமன் பாலசந்திரன்.

கடந்த வருடம் 2023ஆம் ஆண்டுடன் மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியாகிய போதிலும் இதுவரை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற அடைமொழியுடனே அவர்கள் அழைக்கப்பட்டு வருகிறார்கள். உத்தியோகபூர்வமாக இதுவே அவர்களது அடையாளமாகவும் இருந்துவருகிறது. ஆகவே, பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருந்துவரும் ‘மலையகத் தமிழர்’ என்ற இன அடையாளத்தை உத்தியோகபூர்மான முறையில் எதிர்வரும் மாதங்களில் நடாத்தப்படவிருக்கும் குடிசன மதிப்பீட்டில் உள்ளடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சட்டத்தரணியும் சமூக ஆர்வலருமான கெளதமன் பாலசந்திரன் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக கீழே பார்க்கலாம்.