Photo, Youtube Screenshot 

மலையக மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவு கூறும் நிகழ்வுகள் பல்வேறு தரப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமையும். இவ்வருடம் முழுவதும் 200 வருட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமையினை அறிய முடிகின்றது. சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூகமட்ட அமைப்புகள், மத நிறுவனங்கள், தனிநபர்கள் என பலரும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துள்ளனர். கண்டியைத் தளமாக கொண்டு இயங்கும் சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் பல சிவில் அமைப்புகள் தொடர் நிகழ்வுகளை செய்ய திட்டமிட்டுள்ளன. புத்திஜீவிகள் என்ற வகையில் நாம் மலையக மக்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு கட்டுரைகளைப் பெற்று அவற்றை தொகுத்து தமிழில் நூல் ஒன்றினையும், அதேபோல் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் மலையக மக்கள் தொடர்பாக ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள, இச் சமூகம் தொடர்பாக ஆர்வம் கொண்டுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் புலமையாளர்களிடம் இருந்து கட்டுரைகளை சேகரித்து ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட உள்ளோம்.

மலையக மக்களின் சமூக – பொருளாதார அரசியல் பிரச்சினைகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்துவதானது அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அடையாளம் காண்பதற்கும் அவற்றை சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கி பரப்புரை செய்வதற்கும் பெரிதும் உதவும். கடந்த காலங்களில் ஆய்வுகள் ஊடாக பல முக்கிய பிரச்சினைகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டதுடன், அவை கொள்கை பரப்புரைகளுக்கு பெரிதும் உதவின என்பதில் ஐயமில்லை. இதற்கு மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான பிரச்சினைகள், பிரதேச சபை திருத்தச் சட்டம், சுகாதாரம், கல்வி, பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளின் விஸ்தரிப்பு என்பவற்றினை உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். அந்த வகையில் இக்கட்டுரையானது 200 வருட நிகழ்வுகள் வெறுமனே நிகழ்வுகளாக முடிந்துவிடாமல் மலையக மக்களுக்கான ஒரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்துவதாக அமைகின்றது. மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலை எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும், எத்தகைய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், 200 வருடத்தில் இச்சமூகம் எட்டிய அடைவுகள் என்ன? தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டிப்பிடிக்க இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் போன்ற விடயங்கள் இந்த 200 வருட நிகழ்வுகளில் முன்னிலைப்படுத்திப் பார்க்கப்பட வேண்டும்.

கடந்த 200 வருடத்தில் அடைந்த சாதனைகள் சில, அடைய வேண்டியவை பல என்பதில் சந்தேகமில்லை. 1980களின் இறுதிப்பகுதியில் குடியுரிமை படிப்படியாக வழங்கப்பட்டதன் பின்னரே இச்சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. கல்வித் துறையில் அடைந்துள்ள முன்னேற்றங்கள், சமூக நிலை, உட்கட்டமைப்பு, வீடு, சுகாதாரம் என குறிப்பிட முடியும். ஆனால், தேசிய ரீதியான அபிவிருத்தியுடன் ஒப்பிடும்போது இவை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆயினும், இச்சமூகத்தின் இன்றைய வளர்ச்சி சுமார் 30 வருடங்களில் அடைந்து கொண்டமையாகும். குடியுரிமை வழங்கப்பட்டமையானது இச்சமூகத்தினை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அரசியல் ரீதியாக சக்திப்படுத்தியது. இச்சமூகத்தின் குரல்கள் கொள்கை வகுப்பு அரங்குகளில் பலமாக ஒலிக்க ஆரம்பித்தது. அதனையொட்டிய வகையில் மலையக சிவில் அமைப்புகளின் மற்றும் புத்திஜீவிகளின் செயற்பாடுகளும் இச்சமூகத்தின் பிரச்சினைகள் தேசிய, சர்வதேச கவனத்தினைப் பெறுவதற்கு காரணமாக அமைந்தது.

200 வருட வரலாற்றை நினைவு கூரும் தருணத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை இலங்கை சமூகத்தில் பெரிதும் அறியப்பட்ட ஒன்றாக காணப்படுகிறது. அரசியல் மற்றும் சிவில் சமூக மட்டத்தில் இது பேசப்படுகிறது. இவை முற்போக்கான அபிவிருத்தியாகும். மலையக மக்கள் தமது பிரச்சினைகளை, உரிமை மறுப்புகளை, கோரிக்கைகளை எல்லா இடங்களிலும் அச்சமின்றி முன்வைக்கின்றனர். இது குறித்து வாதபிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. ஏனைய சமூகங்களில் காணப்படும் முற்போக்கான சக்திகள் மலையக சமூகம் தொடர்பான கரிசனைகளைத் தொடர்ந்தும் வெளிக்காட்டி வருகின்றன. அத்துடன், இம்மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்குத் தயாராக உள்ளனர். இவை சாதகமான அபிவிருத்தியாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மத்தியில் (சிங்கள -பௌத்த அடிப்படைவாதிகள்)  மலையக மக்கள் தொடர்பாக ஒரு வகையான எதிர்ப்புணர்வு காணப்படுகின்றது என்பதையும் குறிப்பிட வேண்டும். இது இந்திய எதிர்ப்புவாதத்துடன் தொடர்புபட்டிருக்கிறது. இதனை மலையக மக்களுக்கான காணியுரிமையினை கோரும் போது அவதானிக்க முடியும்.

இவற்றுகப்பால், மலையக இளைஞர்கள் மத்தியில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அரசியல் ரீதியான ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பொது வெளிகளில்/ சமூக ஊடகங்களில் தீவிரமாக பேசி வருகின்றனர். இவர்களின் அரசியல் பங்கேற்பு, மனித உரிமைகள், கல்வி, சுகாதாரம், தொழில்துறை என்பவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் அடைய வேண்டிய விடயங்கள் பல. ஆகவே, இருநூறு வருட நிகழ்வுகள் அனைத்தும் ஒரு பொது வேலைத் திட்டத்தினை முன்வைத்து இடம்பெறுவது அவசியமாகும். தற்போதைக்கு இத்தகைய பொது வேலை திட்டம் ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. காணி மற்றும் வீட்டுரிமை எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்னுரிமை பெறுவது வரவேற்கத்தக்க விடயமாகும். ஆயினும், ஏனைய பிரச்சினைகள் குறித்த ஒரு பொது உடன்பாட்டினை உடனடியாக எட்ட வேண்டிய தேவை காணப்படுகிறது. அத்தகையதொரு பொது வேலை திட்டம் அல்லது நடவடிக்கை திட்டம் அல்லது வரைபடம் (Road Map) இச் சமூகத்தின் தேவைகள், சமூக பொருளாதார மற்றும் அரசியல் கோரிக்கைகள்  என்ன என்பதனை தெளிவாக வெளிப்படுத்த, அதனை தேசிய, சர்வதேச ரீதியாக பரப்புரை செய்வதற்கு உதவும்.

அத்தகையதொரு பொது வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் பேரம்பேசுவதற்கும், அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கவும், சர்வதேச கொடையாளர் நிறுவனங்களை நாடி அது தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் பெரிதும் அவசியமாகும். ஆகவே, 200 வருட நிகழ்ச்சிகளின் நோக்கமாக இது அமையலாம். அத்தகையதொரு பொது வேலை திட்டம் விரைவில் தயாரிக்கப்படுமாயின் அதனை சகல 200 வருட நிகழ்வுகளிலும், மக்கள்மயப்படுத்த, மக்களை அது தொடர்பாக அறிவூட்ட, பொது பிரகடனமாக வெளியிட முடியும்.

மலையகத்தவர் அல்லாத பிற சமூகங்களும் 200 வருடத்தினை முன்னிட்டு சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். அத்தகைய தரப்பினருக்கும் எமது பொது வேலைத் திட்டத்தினை வழங்கி அதற்கான ஆதரவினை சகல மட்டத்திலும் திரட்ட வேண்டும். பொது வேலைத்திட்டம் மலையக மக்களின் கல்வி, சுகாதாரம், வீடு, காணி, ஆட்சி நிறுவனங்கள், அரசியல் பிரதிநிதித்துவம், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், தொழில்வாய்ப்பு, பெருந்தோட்டம், கைத்தொழில், மனித உரிமைகள், வறுமை, வாழ்வாதாரம், கலை, கலாசாரம், இனத்துவ அடையாளம், உட்கட்டமைப்பு, சம்பளம் என சகல அம்சங்களையும் உள்வாங்கியதாக அமைய வேண்டும்.

மேற்கூறிய துறைகளில் எமது தற்போதைய அடைவு, அது தொடர்பான புள்ளிவிபரங்கள், தேசிய ரீதியான அடைவுகளுடன் ஒப்பிடும் போது காணப்படும் வேறுபாடுகள் மற்றும் இந்த நிலையினை சரி செய்ய அவசியமான செயற்பாட்டுத் திட்டங்கள் எவை போன்ற விடயங்களை தெட்டத் தெளிவாக முன்வைப்பதாக பொது வேலைத்திட்டம் அமைய வேண்டும். இவை முன்னுரிமை அடிப்படையில் குறுங்கால, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்கள் என்ற அடிப்படையில் அமைய வேண்டும். உதாரணமாக காணிப் பிரச்சனையை எடுத்துக் கொண்டால் சுமார் 10% மலையக மக்களுக்கு மாத்திரமே காணியுரிமையுண்டு.

இப்பிரச்சினைக்கு குறுங்கால அடிப்படையில் செய்ய வேண்டியது யாதெனில் மலையகத்தில் காணப்படும் பயன்படுத்தப்படாத அல்லது கைவிடப்பட்ட காணிகள் தொடர்பான தரவுகள் உடனடியாக திரட்டப்பட வேண்டும். நடுத்தர அடிப்படையில் செய்ய வேண்டியது யாதெனில் அடையாளம் காணப்பட்ட காணிகளை காணியற்ற மலையக மக்களுக்கு வாழ்வாதார செயற்பாடுகளுக்காக நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் வழங்குதல், வாழ்வாதார செயற்பாடுகளுக்கு அவசியமான கடன் மற்றும் மானிய வசதிகளை வழங்குதல் என்பனவாகும். நீண்டகால செயற்பாடு எதுவாக இருக்க வேண்டுமெனில் வழங்கபட்ட காணிகளை இம் மக்களுக்கு சொந்தமாக்குவது, காணி உரித்தினை வழங்கி காணியுரிமையுள்ள சமூகமாக மாற்றுவதாகும்.

மேலும் காணிப் பிரச்சினையினை பிறிதொரு வழியிலும் தீர்க்க முடியும். மலையகப் பெருந் தோட்டங்களில் அல்லது அதனை அண்டி வாழும் மக்களில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தினர் காணியினை பணம் கொடுத்து கொள்வனவு செய்யும் இயலுமையினைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு காணியினை வழங்க முடியும். மேலும், பெரும் எண்ணிக்கையிலானோர் கடன் பெற்று காணியினை கொள்வனவு செய்யும் இயலுமையினைக் கொண்டுள்ளனர். அத்துடன், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் மிக மோசமான வறுமை நிலையில் இருப்பதனால் அவர்களுக்கு காணியினை இலவசமாக வழங்க வேண்டும். இத்தகையதொரு வேலைத்திட்டத்தை காணியுரிமை தொடர்பாக நாம் முன்வைக்க வேண்டும்.

வீட்டுரிமை தொடர்பில் நோக்கும் போது முதலாவதாக இதுவரை கட்டப்பட்டுள்ள 38,000 வீடுகளுக்கு காணி உறுதிப்பத்திரத்தை வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மலையக புதிய கிராமங்கள் அதிகார சபையின் கீழ் பிரத்தியேக நிதியம் ஒன்றினை அமைத்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நிதி திரட்ட வேண்டும். அரசாங்கம் வங்கி கடன் அடிப்படையில் வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். அத்துடன், 180,000 வீடுகளுக்கான தேவை காணப்படுகின்றது -ஆகவே அவற்றை சுமார் 15 ஆண்டுகளுக்குள் தீர்ப்பதற்கான திட்டம் ஒன்றினை வீட்டுத் தேவையின் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள திட்டங்களை வகுக்க வேண்டும்.

இவை ஒரு சில உதாரணங்களாகும். பொது வேலைத்திட்டம் ஒன்றினைப் பற்றி சிந்திப்பதற்கான ஆலோசனைகள் ஆகும். கடந்த காலத்தில் பத்தாண்டு திட்டமொன்று காணப்பட்டது. அது தற்போது செயற்பாட்டில் இல்லை. அத்துடன், அதில் காணப்படும் தரவுகள் மற்றும் திட்டங்கள் மாற்றத்திற்கு உள்ளாக வேண்டியவையாகும். உதாரணமாக, 2019ஆம் ஆண்டு 11 சதவீதமாக காணப்பட்ட தோட்டத்துறை வறுமை இன்று 31 சதவீதமாக (2023இல்) அதிகரித்துள்ளது. இவ்வாறு புள்ளிவிபர ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மலையக சமூகத்தின் தேவைகளும், பிரச்சினைகளும் மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி அவதானிக்கும் போது மலையக மக்களின் சமூக – பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெறுமனே அரசாங்கத்தை மாத்திரம் நம்பி எதுவும் நடக்கப் போவதில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. பொருளாதார நிலை சீராகுவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் செல்லலாம். ஆகவே, நாம் பொது வேலைத் திட்டத்தினை தீட்டி சர்வதேச கொடை நிறுவனங்களிடம் நிதி திரட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கு சிறந்த ஊடகமாக மலையக புதிய கிராமங்கள் அதிகார சபையினை பயன்படுத்த வேண்டும். மலையக மக்களின் சமூக – பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்கும் சகல அதிகாரங்களும் இச்சபைக்கு உண்டு என்பதனை அதிகாரச் சபை சட்டத்தின் ஊடாக அறிய முடிகின்றது.

இவற்றுக்கு எல்லாம் அப்பால், நாம் முன்வைக்கும் பொது வேலைத்திட்டம் பெரும்பான்மை சிங்கள மக்களை அச்சுறுத்துவதாக அல்லது ஐயத்தினைப் உண்டுபண்ணுவதாக அமைய கூடாது. காரணம் சிறுபான்மை மக்கள் இனத்துவ கோரிக்கைகளை முன்வைக்கும் போது அது பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. ஆகவே, மலையக மக்களுக்கான வேலைத்திட்டம் இவற்றை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். காலி முகத்திடலில் இடம்பெற்ற அரகலய மக்கள் போராட்டமானது சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை அச்சமின்றி பேசுவதற்கான ஒரு தளத்தினை வழங்கியுள்ளது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்கு தெற்கின் இளைஞர்களும், பல முற்போக்கு அரசியல், சமூக சக்திகளும் தயாராக உள்ளன. இப்போக்கினை அரகலயவிற்கு பின்னர் அவதானிக்க முடிகின்றது.

ஆகவே, இந்த வாய்ப்பினை மலையக சமூகம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு பொது வேலைத்திட்டத்தினை சகல தரப்பினரையும் உள்வாங்கி தயாரித்து அதற்கான மக்கள் அங்கீகாரத்தைப் பெற்று பெரும்பான்மை மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்களில் உள்ள முற்போக்குவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவது, விவாதிப்பது, ஊடகங்களில் பரப்புரை செய்வது, சர்வதேச கவனத்தினை ஈர்க்க உபாயங்களை வகுப்பது, அரசியல் கருத்தொருமைப்பாட்டை கட்டியெழுப்புவது என்பன ‘மலையகம் 200’ முழுமை பெற, ஒரு அர்த்தமுள்ள நிகழ்வாக நிறைவு பெற பெரிதும் அவசியம். காலம் கடந்த ஞானம் பயனற்றது என்பது போல் நாம் இப்போதே ஒருமித்து சிந்திக்க வேண்டும். மலையகம் 200 நிகழ்வுகளை திட்டமிடும் சகல தரப்பினரும் சிந்திப்பதற்கான ஓர் ஆலோசனையாக இது அமைகின்றது. இத்தகைய பொது வேலைத்திட்டத்திற்கான ஒரு சில ஆரம்ப வேலைகளை கட்டுரையாசியர் உட்பட தற்போது இலங்கை திட்டமிடல் மற்றும் நிர்வாக சேவையில் இருக்கும் மலையக பின்புலத்தினைக் கொண்ட சிலர் ஆரம்பித்துள்ளோம். அது இறுதி வடிவத்தினைப் பெறும் போது ஊடகங்கள் வாயிலாக வெளிவரும் – அது பொது கலந்துரையாடல் மற்றும் கருத்து பகிர்வுக்கான வாய்ப்பினை வழங்கும். அதனை ஆர்வமுள்ள தரப்பினர் பொது வேலைத்திட்டத்தினை தயாரிப்பதற்கான ஒரு வரைபடமாக அல்லது வழிகாட்டி ஆவணமாக கொள்ள முடியும்.

கலாநிதி இரா. ரமேஷ்