Photo, Selvaraja Rajasegar

“கடந்த வருடம் தொடக்கம் இலங்கையில் நிலவும் நெருக்கடி பல வகைகளில் முன்னொருபோதும் இல்லாததொன்றாகக் காணப்படுகின்றது. எனினும், அது அந்நாட்டின் கொந்தளிப்பு மிக்க கடந்த காலத்துடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. இது இந்நாட்டின் சிறுபான்மையினர் மீது, விசேடமாக மலையகத் தமிழர்களை இலக்கு வைத்து பிரயோகிக்கப்படும் பாகுபாடு மிக்க சட்டங்கள் மற்றும் கொள்கைகளின் வெளிப்படுத்தலாகவே அமைகின்றது” எனக் கூறுகின்றார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணித நிபுணரும் சிவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மனித உரிமைகள் செயற்பாட்டாளராக நன்கு அறியப்பட்டவருமான ராஜன் ஹூல்.

அவருடன் த ஹிந்து பத்திரிகை மின்னஞ்சல் மூலம் மேற்கொண்ட நேர்காணல் ஒன்றில் தனது அண்மைய புத்தகமான ‘Democracy Stillborn’ தொடர்பில் எம்முடன் பேசினார். கிருபைமலர் ஹூல் இப்புத்தகத்தின் இணை ஆசிரியராக உள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற நூலகர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்புத்தகம் கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் செய்ல்பிஷ் அமைப்பினால் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இருந்து பிரித்தானியரால் இந்நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் உள்ள பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட மலையகத் தமிழ் சமூகம் இலங்கையினால் நடத்தப்படும் விதத்தில் கவனம் செலுத்தும் இப்புத்தகம் இந்நாட்டின் பாரிய ஜனநாயக ஓட்டத்தில் இச்சமூகத்தின் தொழிலாளர் வகுப்புகள் எதிர்கொள்ளும் சுரண்டல் மற்றும் பாகுபாட்டினை இணைத்து நோக்குகின்றது.

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைப்பின் யாழ்ப்பாணப் பிரிவின் பகுதியாக ஆரம்ப வருடங்களில் மேற்கொண்ட செயற்பாடுகளின் பின்னர் நீங்கள் முறிந்த பனை புத்தகத்தை உங்களின் சகபாடிகளுடன் இணைந்து எழுதியிருந்தீர்கள். அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளடங்கலாக பல விடயங்களில் எழுதியுள்ளீர்கள். ‘Democracy Stillborn’ என்ற இப்புத்தகத்தை எழுத உங்களை ஊக்கப்படுத்திய விடயம் எது?

ராஜன் ஹூல்: தனிமைப்படுத்தப்பட்ட மலையகத் தமிழ் மக்கள் சட்ட ரீதியாக இழிவாக நடத்தப்படல், அறியாமை மற்றும் அவமானப்படுத்தப்படல் என்பவற்றை நான் எனது இள வயதில் இருந்தே அவதானித்து வந்துள்ளேன். தமிழ் காங்கிரஸின் சந்தர்ப்பவாதத்தின் உதவியுடன் அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டமை அச்சமூகம் தன்னை தற்காத்துக்கொள்ள கொண்டிருந்த முக்கிய வழிகளை அதனிடம் இருந்து பறித்திருந்தது. இந்நிலையில் அச்சமூகத்தின் முன்னேற்றம் பற்றி யோசிக்கவே முடியாது.

முறிந்த பனை 1987 இல் காணப்பட்ட நிலை பற்றிப் பேசியது. இடதுசாரி சிந்தனை கொண்ட, அதன் இணை எழுத்தாளர்களான ராஜனி திரணகம, கோபாலசிங்கம் ஶ்ரீதரன், அத்துடன் தயா சோமசுந்தரம் ஆகியோர் அரசியல் அடித்தளங்கள் தொடர்பில் அதிக கூருணர்திறம் மிக்கவர்களாகக் காணப்பட்டனர். ராஜனி பின்வருமாறு எழுதியிருந்தார்: “பெரும்பான்மையான தமிழ் இடதுசாரி புத்திஜீவிகள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (சீன) இருந்தனர். பெருந்தோட்ட தமிழர்கள் இடையே உறுதியான அடித்தளத்துடன் உருவாக்கப்பட்ட முதலாவது இடதுசாரிக் கட்சியாகவும் அது அமைந்திருந்தது. இவ்விடயங்கள் அனைத்துக்கு மத்தியிலும், அது சிங்கள பேரினவாதத்தில் இருந்து முழுமையாக விடுபட்ட அமைப்பொன்றாக அமைந்திருக்கவில்லை. இந்நாட்டின் அரசியலில் காணப்பட்ட தேசிய பிரச்சினையின் முதன்மைத்துவத்தை அக்கட்சி புரிந்துகொள்ளத் தவறியதுடன் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை நடுத்தர தமிழ் தரப்புகளின் கைகளில் விட்டுச்சென்றது. வர்க்கப் போராட்டத்தை தேசிய பிரச்சினையுடன் இணைக்கும் பொருத்தமான சிந்தனைப் பாதைகளை அது கொண்டிருக்கவில்லை.”

ஒட்டுமொத்த இடதுசாரிக்கும் அது பிரயோகம் மிக்கதாகக் காணப்பட்டது. த சல்லன் ஹில்ஸ், ஜனவரி 1993 இல் மலையகத் தமிழர்களில் கதை (UTHR Sp. Rep. 4) என்ற அறிக்கையை உருவாக்க நாம் ஹட்டனில் தங்கியிருந்த வேளை நாம் எமது விடயங்களை சற்று இரகசியமாகவே மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இலங்கை தனது 75ஆவது சுதந்திர தினத்தை இவ்வருடம் கொண்டாடியது, பிரித்தானியரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களான மலையகத் தமிழர்கள் இலங்கைக்குக் அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தில் நடந்த விடயங்களை உள்ளடக்கும் உங்களின் புத்தகம் இலங்கை எதிர்கொள்ளும் சமகால சவால்களை இந்திய தொழிலாளர்களை இந்நாடு நடத்தும் வரலாற்றுடன் இணைக்க முற்படுகின்றது. மலையகத் தமிழர்களின் இன்றைய நிலையினை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

ஒரு தீவாக இருக்கின்ற இலங்கையில், இந்தியாவில் இருந்து புலம்பெயர்தல், குடியமர்தல் மற்றும் காலனித்துவ அடிமைத்துவம் என்பன உயர் மட்டங்களில் காணப்பட்டன. கட்டடப் பணிகள், வீதியமைப்பு மற்றும் பெருந்தோட்டங்களை ஆரம்பம் செய்ய இந்தியர்கள் இங்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களின் படையணியாக்கம் மற்றும் இலாபத்துக்காக சிங்களவர்களின் சுற்றயலில் இருந்து அவர்களை பிரித்து வைத்தமை என்பன அவர்கள் தமிழ் பேசும் தனியானதொரு அலகாக நிலைத்திருப்பதற்கு காரணமாக அமைந்திருந்தது. பிரித்தானியர் 1929ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய நன்மை பயக்கும் வாக்குரிமை வழங்கலின் தாக்கமொன்றாக சிங்கள தேசியவாதம் மற்றும் நவீனகால சந்தை முதலாளித்துவம் என்பவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுவொன்று சிலோன் தேசிய காங்கிரஸைக் கைப்பற்றியது. பெருந்தோட்ட தொழிலாளர்களை வெளியகற்றும் எதிர்த்தரப்பாக அடையாளப்படுத்தியதன் ஊடாக, அவர்களின் இருப்பை மறுக்கும் 20 வருட முயற்சியில் சிங்களத் தலைவர்கள் 1949ஆம் ஆண்டு வெற்றி கண்டனர். 1922ஆம் ஆண்டின் இந்திய குடியகல்வு சட்டத்தின் அடிப்படையில் காலனித்துவ இந்திய அரசாங்கங்கள் மற்றும் சிலோன் இடையான் ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குரிமை என்பன இணைந்து பெருந்தோட்டத் தமிழர்களின் சனத்தொகை வளர்ச்சியில் தாக்கம் செலுத்தின. அதற்கு முன்னர், பெருந்தோட்ட தமிழர்களின் பிறப்பு மற்றும் இறப்பு வீதங்கள் அவர்கள் இடையே வாழ்ந்த கண்டி சிங்கள மக்களின் வீதங்களுக்கு சமனாக இருந்தது. 1949 இல் அவர்கள் வாக்குரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்ட நிலையில் இவ்வீதங்கள் குறைவடைய ஆரம்பித்தன. பேரழிவு மிக்க 1970 களில் அதிகமான இந்தியத் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் சனத்தொகை வளர்ச்சி எதிர்மறையானதாக மாறியது. அனைவருக்கும் வாக்குரிமை உண்டு என அரசாங்கம் தற்போது கூறுகின்ற போதும் கிட்டத்தட்ட 40 வருடகால வாக்குரிமை மறுப்பு பாரிய அளவில் இச்சமுதாயத்தை பின் தள்ளியுள்ளது.

அப்போதும் இப்போதும் உள்ள அரசியல் யதார்த்தங்களை பற்றி நீங்கள் பேசும் வேளை, உங்களின் புத்தகத்தில் நீதித்துறைக்கு குறிப்பிடத்தக்களவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய ஆட்சிகள் நாட்டின் அரசியல் தோற்றவடிவத்தை எவ்வாறு மாற்றியமைத்தன என்பது தொடர்பில் நீங்கள் பேசுகின்றீர்கள். உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில், விசேடமாக சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கையின் தற்போதைய நீதி முறைமையை நீங்கள் எவ்வாறு மீளாய்வு செய்கின்றீர்கள்?

சிலோனின் 1948ஆம் ஆண்டின் முதலாவது சுயாதீன அரசியலமைப்பை வரைந்த ஐவொர் ஜென்னிங்ஸ் 1920ஆம் ஆண்டின் வடக்கு அயர்லாந்து சட்டத்தில் காணப்பட்ட சலுகைக்கு அல்லது பிரதிகூல நிலைக்கு ‘நேரடியாக அல்லது மறைமுகமாக’ தகுதியடைய வைக்கும் உறுப்புரை 5(1) இனை நீக்கியமை சிலோனின் சிறுபான்மை மக்கள் கொண்டிருந்த அடிப்படை உரிமைகள் மீதான பாதுகாப்பை நலிவுறச் செய்திருந்தது. இந்நீக்கம் சிலோன் அரசாங்கம் பெருந்தோட்டத் தமிழர்கள் தமது வாக்குகளை அளிப்பதை மறைமுகமாக தடைசெய்ய வழிவகுத்திருந்தது. சுதந்திரம் கிடைத்து ஆறு மாதங்களில் பெருந்தோட்டத் தமிழர்களின் வாக்குரிமையை பறித்த குடியுரிமைச் சட்டம் 53 இற்கு 35 என்ற எளிய பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டது. பிரதம நீதியரசரின் நியமனத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகார தலையீட்டினால் நீதித்துறையின் சுயாதீனம் பாதிக்கப்பட்டது. சுதந்திரம் கிடைத்ததில் இருந்து எந்தவொரு உச்ச நீதிமன்றமும் இந்த குடியுரிமைச் சட்டம் ஒரு தவறான விடயம் எனக் கூறவில்லை. உண்மையில், இதற்கெதிரான நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று கோமறைப் பேரவைக்கு மேன்முறையீட்டுக்காக சென்ற வேளை, இவ்விடயம் மறைமுகமானது என்ற அடிப்படையில் கோமறைப் பேரவை அதனைத் தவறாகக் கண்டது. கொள்கையளவில், சட்டம் எதனைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதோ அதனை பேரவை அனுமதித்தது. எனினும், அதன் பின்னர் அது அனுமதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், 1964ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் உறுப்புரை 29 இல் உள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாப்பை மீறுவதாக உள்ளதாக O.L. டீ க்ரெட்ஸர் அதற்கு அனுமதி வழங்க மறுத்திருந்தார். எனினும், இந்த சவாலை முறியடித்த உச்ச நீதிமன்றம் திருமதி பண்டாரநாயக்கவின் குடியரசு அரசியலமைப்பை எதிர்ப்பை சம்பாதித்த சட்டங்களை ஒருங்கிணைக்க அனுமதித்தது. நாம் இன்னும் அதே நிலையில்தான இருக்கிறோம். நாடாளுமன்றத்தின் அவ்வாறான மேலதிக்கத்துக்கான சட்ட ரீதியான தீர்வுகள் எவையும் இல்லை.

நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைக் கருத்திற் கொள்ளும் வேளை, உங்கள் பார்வையில் மனித உரிமைகள் சார்ந்த செயற்பாடு எப்பாதையை பின்பற்ற வேண்டும்?

யுத்தம் நிறைவுற்ற நிலையில், பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்க்க முற்றுமுழுதாக தவறியுள்ளமை சர்வதேச அழுத்தம் கவனம் செலுத்தும் விடயமாக மாற்றமடையும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இனத்தை அல்லது மதத்தை ஒன்று திரட்டுவதில் தங்கியிருக்கும் நிலையின் தோல்வியை பொருளாதார சீர்குலைவு வெளிப்படுத்தியுள்ளது. ‘அரகலய’ இயக்கம் ராஜபக்‌ஷ ஆட்சியை வீழ்த்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது. தீவிரமான நிலைமாற்ற தொடர் செயன்முறைகளின் வெற்றிடம் தற்போதைய அரசு அந்தப் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கும், எதிர்ப்பை அடக்குவதற்கு சர்வாதிகார பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தவும் அத்துடன் எதேச்சதிகாரம் மற்றும் கடும்போக்குவாதத்தை நோக்கி நகரவும் அனுமதித்துள்ளது. எனவே, சுமைகள் சுமத்தப்பட சாத்தியமான ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் சமூக பொருளாதார உரிமைகளை வலுப்படுத்தும் மூலோபாயங்களை தமது செயற்பாடுகளில் ஒன்றிணைக்க வேண்டியது மனித உரிமைகள் சமுதாயத்தின் முதன்மைப் பணியாக உள்ளது. அத்துடன், ஜனநாயக தளத்தையும் பேண வேண்டியுள்ளது, இது மத மற்றும் இன மேலாதிக்கவாதத்துக்கு எதிராக போராடுவதில் இருந்து பிரிக்கப்பட முடியாத விடயமாகவுள்ளது.

மிகவும் பரந்த அடிப்படையில், சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாறு மற்றும் ஜனநாயகத்தின் போக்கிடம் பற்றிய உங்கள் பிரதிபலிப்புகள் எவை?  

குடியுரிமை சட்டம் தூண்டியுள்ள சட்டமற்ற நிலை மிகவும் ஆழமானது, பத்திரிகை சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் எவரும் சமூகப் பிரிவினையை தூண்டுகின்றார் என்ற தெளிவற்ற குற்றச்சாட்டின் தடுத்து வைக்கப்பட முடியுமான நிலை காணப்படுகின்றது. அவ்வாறானவர்கள் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளும் எக்காலம் வரையும் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்படலாம். 1948ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத குடியுரிமைச் சட்டத்தில் தகப்பன் சிலோனில் பிறந்தவர் என்பதற்கான சான்று தேவைப்படுத்தப்பட்டது. இதனை அதிகமான வதிவிட வாசிகளால் பூர்த்திசெய்ய முடியாமல் போன போதும் பெருந்தோட்ட தமிழ் மக்களுக்கு எதிராக மாத்திரமே இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 1949ஆம் ஆண்டின் வாக்குரிமைச் சட்டத்தில் தகப்பன் சிலோனில் பிறந்தவர் என்ற சான்று தேவைப்படுத்தப்பட்டு அம்மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இலக்கு வைக்கப்பட்டனர். தகப்பன் இலங்கையில் பிறந்தமைக்கான சான்றின் பின்னோக்கி செயற்படுத்தப்படும் தேவைப்பாட்டின் மூலமாக மறைமுகமான வகையில் அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இத்தேவைப்பாடு நிர்வாக ரீதியாக இந்தியத் தமிழர்களுக்கு மாத்திரம் பிரயோகம் மிக்கதாக அமைந்திருந்தது. பிரித்தானியாவின் கோமறைப் பேரவை இதனை அனுமதிக்கவில்லை. எனினும், கேள்விக்குரிய வகையில் இதனை பிரித்தானிய சட்டம் அனுமதித்ததன் மூலம் (மேலுள்ளவாறு) அந்நாட்டில் சட்டம் ஒரு கழுதை என்பது எடுத்துக்காட்டப்பட்டது. ஒவ்வொரு நபரும் தேசியம் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும் என பிரகடனப்படுத்தியதன் மூலமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனம் அவர்களைப் பாதுகாத்தது. எனினும், சிலோன் அரசாங்கம் எவ்விதக் காரணங்களும் இன்றி அவர்களை இந்தியக் குடிமக்கள் எனக் கூறியது. அதனை சவாலுக்கு உட்படுத்த முடியாத இந்தியா, அச்சுறுத்த ஆரம்பித்தது, இது வெட்ககரமான ஶ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தது. அக்காலகட்டத்தில் இலங்கையில் ஜனநாயகத்துக்கு உறைவிடம் எதுவும் காணப்படவில்லை.

மீரா ஶ்ரீநிவாசன்

In Ceylon, there was no tryst with democracy: Rajan Hoole என்ற தலைப்பில் The Hindu தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.