Photo, Selvaraja Rajasegar

இலங்கைத் தேயிலை (Ceylon tea) இலங்கைக்கு உலக வரைபடத்தில் அங்கீகாரத்தை வழங்கியது. ஆனால், தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் லைன் காமராக்கள் (line rooms) என்று அழைக்கப்படும் வாழிடங்களில், தொடர்ந்தும் அவர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார்கள். அதே சமயம் கல்வி, சமூக நல்வாழ்வு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்தும் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

வரலாற்று நினைவகத்தில் மிக ஆழமான நெருக்கடிகளில் ஒன்றாக, எம் நாடு நம் கண் முன்னே சரிந்து விழும் போது, ​​நமது இக்கட்டான நிலையை எந்தக் கோணத்தில் இருந்து நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்? கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் பொருளாதாரம் மலையகத் தமிழர்களின் துன்பங்களிலும் துயரங்களிலும், அவலங்களிலும், போராட்டங்களிலும் நங்கூரமிடப்பட்டுள்ளது. இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து அவர்கள் ஏமாற்றி அழைத்து வரப்பட்டனர். கோப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தொடங்கிய அவர்களின் வியர்வையும் இரத்தமும், பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ், நாட்டின் நவீன பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மையமாக இருந்தது. இருப்பினும், சமூகத்தில் அவர்களின் நிலைமையையும், வரலாற்றையும் எழுதுவது கூட புறக்கணிக்கப்பட்டது. இலங்கையில் 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை, இலவச சுகாதாரம், கல்வியின் சக்திவாய்ந்த பாரம்பரியம் ஆகியவற்றுடன் இலங்கையில் பெரும் ஜனநாயக மற்றும் சமூக நல முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இருந்தபோதிலும், மலைநாட்டு தமிழ் சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கை தொடர்ச்சியான நெருக்கடி காலங்களுக்கு மத்தியில் போராட்டத்தால் வகைப்படுத்தப்படுகிறது.

சிறைபிடிக்கப்பட்ட சுரண்டலின் கருந்துளை, சுதந்திரத்திற்குப் பிறகு அவர்களின் உரிமையை மறுதலித்தலின் கடுமையான அநீதி, தொடர்ச்சியான சமூக ஒதுக்கல் ஆகியவை நாட்டின் வரலாற்றில் மீளமுடியாத கறையாகவே இருக்கின்றன. மேலும், மலைநாட்டுத் தமிழர்கள் மீதான அரசியல் தாக்குதல்கள், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அது மிகப்பெரிய பொறுப்பின்மையின் ஒரு தருணத்தைக் குறிக்கிறது. அங்கு கட்டாயக் குடியேற்றம் என்ற வெறுக்கத்தக்க காலனித்துவக் கொள்கை பின்னர் இரண்டு பின்காலனித்துவ அரசுகளின் ஒப்பந்தத்தின் மூலம் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டது.

தொழிலாளர் போராட்டமும் தொழிற்சங்க முன்முயற்சிகளும் மலைநாட்டுத் தமிழர்களின் காலனித்துவ தசாப்தங்களைக் குறிக்கின்றன. ஏனெனில், கடுமையான சமூக மற்றும் வேலை நிலைமைகள் முற்போக்கு சக்திகளால் ஒழுங்கமைக்க வழிவகுத்தன. எவ்வாறாயினும், தோட்டங்களில் தோன்றிய இடதுசாரி அரசியலுக்கு இது பெரும் அடியாக இருந்தது. அது அவர்களின் போராட்டங்களை நாட்டிலுள்ள ஏனைய உழைக்கும் மக்களுடன் ஒன்றிணைத்திருக்க முடியும். ஆனால், அவர்களின் குடியுரிமை உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டன. இறுதியில், குடியுரிமைப் பிரச்சினை பல தசாப்தங்களாக அவர்களின் மையப் போராட்டமாக மாறியது. அது பின்னர் அடுத்த தசாப்தங்களில் மெதுவாகத் தீர்க்கப்பட்டது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, இளைய தலைமுறையினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மலையக சமூகத்தின் மிக முக்கியமான கவலைகளாக வெளிப்பட்டுள்ளன. தோட்டங்களுக்குள் சாத்தியமான வேலை மற்றும் போதுமான வருமானம் கிடைக்காத மலையக இளைஞர்கள், நகர்ப்புறங்களில் குறைந்த ஊதியம் பெறும் முறைசாரா மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிகின்றனர். வசதி படைத்த வீடுகளில் வீட்டுப் பணியாளர்களாகவும் உணவகங்கள் மற்றும் கடைகளில் பணியாளர்களாகவும் உதவியாளர்களாகவும் பணிபுரிகின்றனர். அதேசமயம், தோட்டங்களில் அதிக ஊதியம் மற்றும் சிறந்த சமூக-பொருளாதார நிலைமைகள், குறிப்பாக வீட்டுவசதி மற்றும் பயிர்ச்செய்கைக்கான நிலம் ஆகியவற்றிற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தோட்டங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன. தோட்டங்களின் நீண்டகால எதிர்கால நம்பகத்தன்மை என்பன கேள்விக்குறியாகவே உள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில், தொற்றுநோய்க்கு முன்னும் பின்னும் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஒரு வலிமையான ஊதியப் போராட்டம் இன்றும் தொடர்கிறது. அரசு மற்றும் தோட்டக் கம்பனிகள் போலி வாக்குறுதிகளையே கூறிவருகின்றன. உண்மையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருமானம் பாதிக்கப்பட்டு, கொவிட்-19 நெருக்கடியுடனான இடையூறுகள் காரணமாக நாடு முடக்கப்பட்டதால், தோட்டங்களுக்கு நிதி வழங்குவதும் கடினமாகிவிட்டது. இலங்கையில் இப்போது நிலவும் பொருளாதார மந்தநிலை இந்தச் சமூகத்தை சீரழிக்கும் நிலை உருவாகி உள்ளது. தற்போதைய நெருக்கடியின் போது மலையகத் தமிழர்களின் துயரங்களை அரசு எவ்வாறு நிவர்த்தி செய்யப்போகிறது? என்பது நாட்டின் எதிர்கால சமூக நலனின் “லிட்மஸ் பரீட்சையாக” மாறப் போகிறது.

தொடர்ந்த இடப்பெயர்வு

மலையகத் தமிழ் மக்களின் சோகமான வரலாற்றுடன் எனது சமீபத்திய ஈடுபாடு மற்றொரு மறைக்கப்பட்ட பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது – இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படாத மலையகத் தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் – 1970 எழுபதுகளிலும் 1980 எண்பதுகளின் முற்பகுதியிலும் இடம்பெற்ற, வன்முறை மற்றும் படுகொலைகளினால் வட இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர். நாட்டின் தெற்கில் இடம்பெற்ற சிங்கள பௌத்த தேசியவாத அரசைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு அமைய பல வெகுஜன இடப்பெயர்வுகள் எற்பட்டன. இதற்கு நிகரானதாகவே வடக்கில் தமிழ்த் தேசியப் பிரிவினைவாதத் திட்டம் அமைந்தது. அங்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழ் மக்கள் நெல் பயிர்ச்செய்கைக்கு கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டனர். போரின் வன்முறையை எதிர்கொள்ள எல்லைப் பகுதிகளில் அவர்கள் குடியேற்றப்பட்டனர். அவர்களின் பிள்ளைகள் விடுலைப் புலிகளின் இராணுவ அபிலாசைகளுக்கு பீரங்கித் தீனியாக வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். போரின் அழிவுகளிலிருந்து, வடக்கின் போருக்குப் பிந்தைய அரசியல் பொருளாதாரம் நீண்டகாலமாக துன்பப்படும் இந்த மக்களுக்கு சில தெரிவுகளை வழங்குகிறது.

குறிப்பாக அவர்களின் பெண்கள் வருமானம் ஈட்டுதல், மலையக குடும்பங்களைப் பராமரித்தல் ஆகிய இரண்டு சுமைளையும் ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

கூலித் தொழிலாளர்களின் வரலாற்று வேர்களிலிருந்து, தோட்டங்களில் தேயிலை பறிப்பவர்களாகவும், வடக்கில் நீர்ப்பாசனம் இல்லாத குடியிருப்புகளில் கண்டிக்கப்பட்ட நிலமற்றவர்களாகவும் வாழ்கின்றனர். இளம் சந்ததியினரான பெண்களுக்கு ஒரு சில தெரிவுகளே உண்டு. அவர்கள் வடக்கில் சமீபத்தில் உருவான ஆடைத் தொழிற்சாலைகளில் இளமை ஆற்றலைப் பிழிந்து அவர்கள் சுரண்டப்படுகின்றனர். மற்றவர்கள் கண்ணிவெடி அகற்றும் ஆபத்தான வேலையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிலர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக அரசால் தொடங்கப்பட்ட இராணுவமயமாக்கப்பட்ட பண்ணைகளில் வேலை தேடுகின்றனர்.

இவை எதுவுமே நிரந்தரத் தெரிவுகள் அல்ல. இத்தகைய அபாயகரமான வேலைவாய்ப்பு மற்றும் சுரண்டலுக்கு மத்தியில், இந்தப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நிலம் மற்றும் பிற வளங்கள் இல்லாத காரணத்தாலும், பல தசாப்தங்களாகக் குவிப்பு வடிவில் குறைந்த அளவிலும் மாத வருமானத்தை நாடுகிறார்கள். மேலும் இதுபோன்ற கடினமான வேலைகள் கூட தமது தாய் அல்லது அத்தை போன்ற உறவினர்கள் தங்களைச் சார்ந்தவர்களை கவனித்துக் கொண்டு வீட்டை நடத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

வடக்கில் இத்தகைய சுரண்டலுக்கும் ஒதுக்கலுக்கும் மத்தியில், சில கிராமங்களில் சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்ததன் மூலம், சமூக நிலையங்கள், கூட்டுறவுகள் போன்ற சமூக நிறுவனங்களின் மீது சில நிலங்களையும் கட்டுப்பாட்டையும் பெறுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், தமிழ்த் தேசியவாதிகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட தமது தனித்துவ அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காக பெரும் திரளான மக்களை ஒழுங்கமைப்பதில் அவர்களின் முயற்சிகள் இன்னமும் பின்தங்கியே இருக்கின்றன. இந்த இடம்பெயர்ந்த சமூகங்களுக்கிடையில் முற்போக்கான இயக்கங்களுக்கான பிரச்சினைகள் நிலம், நீர், வேலைவாய்ப்பு, கல்வி முன்னேற்றம் மற்றும் பெண்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றிலிருந்து பல பிரச்சினைகள் எழுகின்றன. இவை அனைத்திற்கும் வளங்கள், மறுபங்கீடு மற்றும் சமூகத் தலைமை தேவை.

ஒரு தலைமுறையின் நம்பிக்கை

பெருந்தோட்டங்களில் மலையகத் தமிழர்களின் பரிதாபகரமான நிலையும், நாட்டின் ஏனைய பகுதிகளில் அவர்கள் மீது ஏவப்பட்டுள்ள சிதறடிக்கப்பட்ட ஒடுக்குமுறையும் முற்றிலும் அவநம்பிக்கையான நிலையை ஏற்படுத்தி உள்ளது எனக் குறிப்பிடலாம். ஆனால், தோட்டங்களைச் சேர்ந்த எனது பல பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து அவர்களின் சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான உறுதி காரணமாக நான் உத்வேகத்தைப் பெறுகிறேன். அண்மைய தசாப்தங்களில் கல்விச் சமூகத்தின் கவனம், அரசியல் உணர்வுள்ள இளைய தலைமுறைக்கு வழிவகுத்தது. அடுத்த தலைமுறையினரிடையே கல்வியை முன்னேற்றுவதற்கும், தங்கள் சொந்த சமூகத்தின் இக்கட்டான நிலையை ஆய்வு செய்து தீர்வுகளைத் தேடுவதற்குமான பாராட்டத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நமது பிந்தைய காலனித்துவ வரலாற்றின் போது நாம் மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டின் அவலங்களை நிவர்த்தி செய்வதற்கான வழிகளைக் கண்டறிவதற்கு விளிம்புநிலை சமூகங்களின் வரலாற்று சவால்களைக் கணக்கிடுவது மிகவும் முக்கியமானது. உண்மையில், மலைநாட்டுத் தமிழர்களின் இக்கட்டான நிலை, இலங்கையின் தற்போதைய நெருக்கடியுடன் நடந்து கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் பெரும் துன்பத்தின் மைய அம்சங்களான மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள், அடக்குமுறைச் சுரண்டல் மற்றும் சமூகப் புறக்கணிப்பு ஆகிவை நம்மை எதிர்கொள்கின்றன. இந்தப் பின்னணியில், நாட்டின் புற எல்லையில் உள்ள பிரச்சனைகள் முறையாகத் தீர்க்கப்படும்போதுதான், மையமும் முழு நாடும் முற்போக்கான மாற்றத்தின் நிலையான பாதையில் அமைக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அகிலன் கதிகாமர்

Hill-country Tamils and Crisis Times என்ற தலைப்பில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழ்மொழியாக்கம்.