மிக அண்மைய ஒரு சில அரசியல் நிகழ்வுகளை கவனிக்கின்றபோது குறிப்பாக வடக்கு கிழக்கில், இலங்கை அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் பின்வாங்காத நிலையில் சிங்கள – பௌத்த கூட்டு உளவியல் பெரும்பாண்வாதத்தில் பலப்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அரசாங்கம் தன்னை வெளிப்படையாகவே சிங்கள – பௌத்த அரசாங்கமாக அடையாளப்படுத்தி மற்றெந்த அரசுகளையும் விட – சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலை, சிங்கள – பௌத்த இலங்கை தேச – அரச கட்டுமானத்தை நோக்கி மிக வேகமாக நகர்த்திச் செல்கின்றது. டொனால்ட் ட்ரம்ப் வீழ்ச்சி கூட இந்த அரசாங்கத்திற்கு பட்டறிவைக் கொடுக்கவில்லையோ எனத் தோன்றுகின்றது.

நினைவுகூரல் தொடர்பில் ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினத்தை ஒட்டியும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தேசிய மயப்படுத்தும் அளவிற்கு இன்னும் கட்டமைக்க முடியாத நிலை வடக்குகிழக்கில் இருந்து கொண்டே இருக்கின்றது. தேசிய நினைவுகூரல்கள் கட்டமைக்கப்படாத வரைக்கும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய இயக்கமாதல் காலதாமதாமாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். நினைவுகூரல்களின் வகிபங்கு தமிழ்த்தேச கட்டமைப்பில் இன்றியமையாதது. நினைவுகூரல்கள் தேசிய நினைவுக்கூரல்கள். ‘ஈழத்தமிழ்’ அடையாள கட்டமைப்பில் நினைவுக்கூரல்களின் வகிபங்கு மிகவும் காத்திரமானது. அவ்வாறான தேசிய நினைவுக்கூரல்களை நாளாந்த தேசியத்தினூடு மக்கள் மயப்படுத்த வேண்டுமேயொழிய அரசியல் கட்சி மைய அணுகுமுறைக்குள் கொண்டு செல்லுதல் மிகக் குறுகிய அரசியலை நோக்கி நகர்த்துவதாகும். நினைவுக்கூரல்கள் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்திற்குச் சொந்தமானது. அரசியல் கட்சிகள் அவற்றை மக்களிடமிருந்து திசைமாற்றித் திருட (Hijack) முடியாது. கடந்த பதினொரு வருடங்களுக்கு மேலாக ஒரே சுழற்சிக்குள் தான் சிக்குண்டிருக்கின்றது நினைவுகூரல்கள். ஒவ்வொரு நினைவு கூரல் முடிவிலும் மக்களின் எழுச்சியை கட்சிகள் உரிமை கோருவது அபத்தமானது. இராணுவக் கெடுபிடிக்குள்ளும் நினைவுகூரல்களில் மக்களின் பங்கேற்பு என்பது, தமிழ்த்தேசியத்திற்கான மக்களின் அர்ப்பணிப்பு. இந்த நினைவுகூரல்கள் மக்கள் இயக்கமாக நிறுவனமயப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற வரலாற்றுக் கட்டாயம் பின்முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுத் தளத்தில் முன்வைக்கப்பட்டது. மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவு கூரல்கள் மட்டுமல்ல ஒவ்வொரு படுகொலையுமே நினைவு கூரப்பட வேண்டும், இன்னொரு படுகொலை நிகழாதிருப்பதற்காக.

அம்பாறை மேய்ச்சல் தரை கையை விட்டு போன நிலையாகத் தோன்றுகின்றது. மிக அண்மையில் மேய்ச்சல் தரையிலிருந்து இளைஞரொருவர் தங்களைத் தாங்களே காப்பாற்ற வேண்டிய நிலைக்குள் மக்கள் தள்ளப்பட்டு விட்டதாகவும், சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக வன்முறைக்குள் தள்ளப்படுவதாகக் கூறி அக் காணொளி வெளிவந்திருந்தது. சிங்களம், தமிழர் காணியை கையகப்படுத்துவதற்கு அப்பால் அங்குள்ள தமிழர்களை ‘பிழைத்தெஞ்சி நிற்றல்’ (Survival) முறைக்குள் மக்களை வலிந்து திணிக்க முயலுகின்றது. மிக அண்மைய சிங்கள ஆக்கிரமிப்பு முயற்சி உத்திகள், கால்நடைகளைக் கொல்லுதல், காணிகளை வலிந்து கையகப்படுத்தல், தொடர் அச்சத்திற்குள் மக்களை தக்க வைத்தல், அங்குள்ள மக்களை தனிமைப்படுத்தல் போன்ற வேறு பல உத்திகளூடான கூட்டு மீட்டெழுச்சியை (Resilience) சிதைக்க முற்படுகின்றது. இவ்வாறு மாற்று வழி தென்படாத இளைஞர்களை வன்முறைக்குள் வலிந்து திணிக்கின்றது. வன்முறைக்குள் வலிந்து திணிப்பதன் மூலம் சூழ்நிலையை தனது கட்டுப்பாட்டுக்குள் இலகுவாக கொண்டு வருகின்றது. சிங்கள – பௌத்த அரசு இதை ஒரு மாதிரி (Model) முறைமையாக பின்பற்றுகின்றது. இம் மாதிரி உத்தியை இலங்கை அரசு உதிரிக்கும், கூட்டு குழுமத்திற்கும் பயன்படுத்துகின்றது. தற்போதைய நிலைமைகளை அவதானிக்கின்ற போது அரசு அதன் அடிவருடிகள் மூலம் மேய்ச்சல் தரையை ஒரு போராட்டக் களமாக மாற்ற முனைகின்றது. இதற்கான மாற்று போராட்ட வடிவ முறையை விரைந்து சிந்திப்பது அவசியமாகும். ஏனெனில், இம் மாதிரி உத்தி ஏனைய இடங்களுக்குமானது.

திருகோணமலையில் அரிசிமலை பிக்குவும் அவர் நிர்வகிக்கும் நம்பிக்கை நிதியமும் ஏறக்குறைய பதின்மூன்று இடங்களை அடையாளப்படுத்தி சமய வழிபாட்டிற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை அரசாங்கத்திடம் கோரி அதற்கான வர்த்தமான பத்திரிகையூடு அனுமதி பெறப்பட்டு விட்டது. தென்னவன்மரபு அடிக் கிராமத்திலிருந்து, திருகோணமலை மாவட்டத்தின் முல்லைத்தீவு மாவட்டத்துடனான எல்லை, கும்புறுபிட்டி வரைக்கும் இது நீண்டு செல்லுகின்றது. தொல்லியல், வனவளதிணைக்களம், மகாவலி அதிகார சபைகளின் நில அபகரிப்பை விட மேற்குறிப்பிட்ட நில அபகரிப்பு  Pooja Grant க்கூடாக மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் கண்ணியா, கோணேஸ்வரம் போன்றவற்றின் இருப்பு நீண்டகாலத்திற்கு ஈழத்தமிழ் இருப்பின் அடையாளமாகத் தக்க வைக்கப்படுமா என்ற அச்சம் இருக்கின்றது. காரணம், இராவணனை சுதேச சிங்கள அரசனாக உருவாக்குவதற்குரிய, கட்டமைப்பதற்குரிய புலைமைசார் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ் ஆய்வுப் பரப்பை சிங்கள அரசு விஸ்தரிக்கின்றது. மிக முக்கிய சைவ வழிபாட்டு யாத்திரை தலங்களுக்கு அண்மையில் பௌத்த விகாரைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன அல்லது ஏற்கனவே கட்டமைக்கப்பட்டு விட்டது. உதாரணத்திற்கு, திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், கன்னியா இன்னும் பல. சைவ சமய மைய (Centralised Structure) குவிவுக் கட்டமைப்பு தற்போது என்றுமில்லாதவாறு அவசியமாகின்றது. ஏற்கனவே இருப்பவற்றை தக்க வைப்பதற்காகவாவது.

தொல்லியல் இடங்களை அடையாளங்காணல், சிங்கள – பௌத்த பண்புகளுடன் இணைந்து தொல்லியல் சார்ந்தது அனைத்துமே சிங்கள பௌத்திற்கானது என்ற அறிவியல் சொல்லாடலை கட்டமைக்க முனைகின்றது. கலாச்சார/ பண்பாட்டு இனப்படுகொலையை தொல்லியலுக்கூடாக பின் முள்ளிவாய்க்கால் தளத்தில் மிக வேகமாக முடுக்கிவிட்டுள்ளது. கலாச்சார/ பண்பாட்டு இனப்படுகொலை பற்றி இனப்படுகொலை ஆய்வாளர்களுக்கிடையே பல்வேறுபட்ட விவாதங்கள் எழுகின்ற நிலையில், கலாச்சார/ பண்பாட்டு இனப்படுகொலையை இனப்படுகொலையின் விளைவாகப் பார்க்கின்ற தன்மையும், கலாச்சார/ பண்பாட்டின் அழிப்பு, ஒரு இனத்தின் இருப்பை அழிக்கின்ற உள்நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்படுகின்றது. கலாச்சார/ பண்பாட்டு இனப்படுகொலை அணுகுமுறையை தமிழ் இனப்படுகொலையின் இன்னொரு வடிவமாக இணைத்து விவரிப்பதற்கான ஆய்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை. கலாச்சார/ பண்பாட்டு இனப்படுகொலை ஒரு இனக்குழுமத்தின் கலாச்சார, சமய, அடையாள அழிவு தொடர்பிலானது. கலாச்சார/ பண்பாட்டு இழப்பு என்பது இனப்படுகொலையின் விளைவானது. ICTY இன்னும் ஆழமாக இதை வெளிக்கொணர்ந்தது. இலக்கு வைக்கப்பட்ட கலாச்சார/ பண்பாட்டு அழிவுகள் குற்றமிழைத்தவர்களின் ஒரு இனக் குழுமத்தை அடையாளத்தை மையமாகக் கொண்ட இனப்படுகொலை உள்நோக்கத்தை கொண்டிருப்பதாக ICTY நிரூபித்தது (Prosecutor v Karadzic and Mladic 1996).

முல்லைத்தீவில், கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் தெற்கு, செம்மலை கிழக்கு போன்ற ஆறு கிராம அலுவல பிரிவுக்குட்பட்ட காணி நிர்வாக அதிகாரத்தை பிரதேச செயலாளரிடமிருந்து பறித்தெடுத்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை குடிசன இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்திட்டத்தை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை பல வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது. அதனுடைய ஆகப் பிந்தைய வடிவமே இதுவாகும். மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் மேற்குறிப்பிட்ட காணிகள் கையளிக்கப்படுமாயின் அம்பாறை மாவட்டத்திற்கு ஏற்பட்ட நிலைமை, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏற்படுவதற்கு அதிக காலம் செல்லாது.

‘புதிய உலக ஒழுங்கில் இலங்கை – இந்திய உறவுகளை ஆழப்படுத்தல்’ என்ற தொனியில் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலில் Path Finder Foundation சார்பாக கலந்துகொண்ட அதனுடைய தலைமையதிகாரி திரு.பேனாட் குணதிலக குறிப்பிடும் போது 13ஆம் திருத்தச் சட்டம் இலங்கை – இந்திய உறவிற்கு இடையூறாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார். இவரது கருத்து சூழலுக்கு வெளியே இருந்து விவரிக்கமுடியாது. ஆனால், Path Finder Foundation னுடைய நிறுவுநர் இந்தியாவிற்கான அமைச்சுப் பதவி பெற்ற ராஜதந்திரியாக நியமிக்கப்பட்ட சூழலில் ஆராயப்பட வேண்டியது அவசியமாகும். 13ஆம் திருத்தச் சட்டத்தை தமிழர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு தொடக்கப்புள்ளியாக கருதாத நிலையிலும், 13ஆம் திருத்தச் சட்டம் இலங்கை – இந்திய உறவுகளுக்கு இடையூறாக இருப்பதாகக் குறிப்பிடுவது இலங்கை – இந்திய வெளியுறவுக் கொள்கை எத்திசையில் பயணிக்கப் போகின்றது என்பதை வெளிக்கொணருகின்றது. இலங்கையும், இந்தியாவும் ஒரே மாதிரியான ஜனநாயக உள்ளீட்டைக் கொண்டுள்ளவை. பெரும்பான்மைவாதம் (Majoritarianism) தான் அவர்களுடைய ஜனநாயகத் தன்மையை பெரும்பாலும் தீர்மானிக்கின்றது. மதத்தை (அடிப்படைவாத) மையப்படுத்திய ஒத்த கலாச்சாரத்தைக் கட்டமைப்பதே இரண்டினதும் நோக்கமாக உள்ளதால் இரண்டு நாடுகளுமே பரஸ்பரம் உதவி செய்து முட்டுக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. இந்தியாவினுடைய பிராந்திய ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக இந்தியா இலங்கையுடன் எந்த விலையை கொடுத்தாவது பயணிக்கத் தயாராகிவிட்டது. இந்தியா, இலங்கை அரசை பகைத்து தமிழருக்கு கைகொடுக்கும் என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லாமலே போகின்றன.​

வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசிய அரசியலை மையமாகக் கொண்ட அரசியல் கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் எந்தவிதமான முன்னேற்றமும் எட்டப்படவில்லை. தமிழ்த்தேசிய மைய அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகள் மைய அரசியலை மட்டுமே முன்னெடுக்கின்றன. தத்தம் அரசியல் கட்சிக்கு அப்பால் சிந்திக்க கூடியவர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு நிலைமை மோசமடைகின்றது. இவ்வாறானதொரு நிலையில் அரசியல் கட்சிகளின் பலமான கூட்டிணைவு என்பது சாத்தியமற்றதாகின்றது. கொள்கைகளை மையப்படுத்தி ஒன்றிணையக் கூடிய நிறுவனங்கள், ஒன்றாவதற்கான சூழலும் தென்படுவதாயில்லை. பிரச்சினைகளை மையப்படுத்தி ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளும் குதிரைக் கொம்பு தேடுவதாகப்படுகின்றது. இவற்றை ஒட்டுமொத்தத்தில் பார்க்கின்ற போது, இதற்கான காரணிகளை இயக்குகின்றவர்கள் இன்னொரு தமிழினப் படுகொலைக்கான ஆயத்தங்களை மேற்கொள்கின்றார்களா என எண்ணத் தோன்றுகின்றது.

புலம்பெயர் தேசங்களிலும் பலமான கூட்டிணைவு சாத்தியமுள்ளதாகத் தெரியவில்லை. பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்தாலும் கூட்டு முயற்சி என்பது எட்டாக் கனியாகப் போய்க் கொண்டிருக்கின்றது. உளவியல் போரின் மிக முக்கிய உத்திகளான நம்பிக்கையின்மையை, சந்தேக கொள்ளலை ஒருங்கிணைவிற்கு எதிரான பொறிமுறையாக இலங்கை அரசு பயன்படுத்துகின்றது. நாளாந்தம் எழுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுதலை பொறியாகக் கொண்டு இலங்கை அரசு ஈழத்தமிழர்களை எப்போதுமே மைய இலக்கிலிருந்து கவனத்தை திசை திருப்புகின்ற கருவியாகக் கைக்கொள்கின்றது.

நீண்டகால இலக்கை மையப்படுத்தி கூட்டிணைவோடு பலமான அமைப்பை கட்டியெழுப்பக்கூடிய, வேண்டிய வரலாற்றுச் சூழல் வாசலண்டை வந்து நிற்கின்றது. இலங்கை அரசு தமிழர் தரப்பை எப்போதுமே பலவீனமாக வைத்துக் கொண்டே தனது காய்களை நகர்த்திக் கொள்ளும். தமிழர் தரப்பில் பலமான கூட்டிணைவு எழாத வரைக்கும், பலமான கூட்டெதிர்ப்பு எழப்போவதில்லை என்பதில் இலங்கை அரசு தெளிவாகவுள்ளது. இப்பொறிமுறை அரசு பயன்படுத்தும் Counter Insurgency உத்தி.

தமிழர் தரப்பின் கூட்டிணைப்பின் அவசியம் பற்றி பல்வேறு தளங்களில் பலராலும் பேசப்படுகின்ற நிலையில் பூனைக்கு மணி கட்டுவது யாரென்பதில் அதிகாரப்போட்டி வேறு.

பன்முகப்படுத்தப்பட்ட, நீண்டகால இலக்கினைக் கொண்ட தமிழ்த்தேசிய செயற்திட்டத்தை கூட்டிணைந்து கட்டமைக்கத் தவறுகின்ற வரலாற்றுச்சூழலில் இன்னொரு தமிழினப் படுகொலை முயற்சியை முறியடிப்பதென்பது இயலாமற்போகலாம்.

எழில் ராஜன்


Photo: Tamilgurdian