படம், Ishara S. Kodikara/AFP/Getty Images

நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்தபோது சந்தித்த கனகசபை தேவதாசன், 64 வயதுடைய சிறைக் கைதி ஆவார். அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள்  கடந்து விட்டன. அந்தக் காலப்பகுதியில் பத்து வருடங்களுக்கு மேல் அவர் சிறைச்சாலையில் கழித்து விட்டார். 2021 ஜனவரி 6ஆம் திகதி தேவதாசன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். தமது வழக்கை துரிதப்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் பேசப் போவதாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஜனவரி 16ஆம் திகதி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். தாம் மூன்று வார காலம் தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அவர் அறிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக தேவதாசன் மேன்முறையீடு செய்து இருக்கிறார். அத்துடன், தனது வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி தமக்குப் பிணை வழங்குமாறு அவர் கோருகிறார். 1979ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் கதையும் தேவதாசனின் கதையைப் போன்றதுதான். தம்மை சிவில் உடை தரித்தவர்கள் கடத்தி, அங்கீகரிக்கப்படாத தடுப்பு நிலையத்தில் ஒரு வாரகாலம் தடுத்து வைத்து, சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கைச்சாத்திடுமாறு தம்மை நிர்ப்பந்தித்து, அதன் பின்னர் பொலிஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைத்திருந்ததாக சிவதாசன் கூறுகிறார். தாம் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 15 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த காலப்பகுதியில் தாம் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளானதாகவும் தேவதாசன் குறிப்பிடுகிறார். அவருக்கு சட்டத்தரணிகள் கிடையாது. அவர் தம் சார்பில் தாமே ஆஜராகிறார்.

ஒருவர் பாரதூரமான குற்றத்திற்காக கைது செய்யப்பட்டாலும், அதன் அடிப்படையில் அவரைக் கடத்தவோ, அங்கீகரிக்கப்படாத இடத்தில் தடுத்து வைக்கவோ, சித்திரவதை செய்யவோ, நிர்ப்பந்தத்தின் பேரில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறவோ முடியாது. ஒருவர் புரிந்த குற்றம் எந்தளவு தீவிரமானதாக இருந்தாலும், முறையான அடிப்படை விசாரணை நடைமுறைக்கான உரிமை அவருக்கு உண்டு. எனினும், பயங்கரவாத குற்றங்களைப் பொறுத்தவரையில், அடுத்தடுத்த தொடர்ச்சியாக வந்த அரசுகளும், பொது மக்களும், சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகளும் மாத்திரமன்றி, சட்டத்துறையில் வேலை செய்பவர்களும் இத்தகைய அடிப்படைக் கோட்பாடுகளை பொருட்படுத்துவது கிடையாது.

பயங்கரவாதிகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள்?

பயங்கரவாத குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்படுபவர்களை, பொதுவாக கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் இருந்தே குற்றவாளிகளாக அரசு சித்தரிக்கிறது. இதுவரை காலமும் பெரும்பாலும் தமிழர்களும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுமே இந்த நிலையை எதிர்கொண்டனர். ‘குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர்’ என்ற அடிப்படைக் கொள்கையில் குற்றவியல் நீதி முறைமை கட்டமைக்கப்பட்டிருந்தாலும், அந்த நீதிமொழியானது பயங்கரவாத குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் அடிப்படை உரிமையாக அல்லாமல், கைக்கெட்டாத விடயமாகவே இருக்கிறது. அமல் டி சிக்கேரா கூறுவதைப் போல, பயங்கரவாத குற்றங்களுக்காக கைது செய்யப்படும் ஒருவர், தாம் கைது செய்யப்படுவதாலும், தமது (இன, மத) அடையாளத்திற்காகவுமே முன்கூட்டியே குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு விடுவார். பயங்கரவாத குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்கள் நடத்தப்படும் விதமானது மனித உரிமை ஆர்வலர்களிடம் கூட அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தயக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தயக்கத்திற்குக் காரணம், தாமும் அரசாங்கத்தால் பயங்கரவாதி முத்திரை குத்தப்படுவோம், பொதுமக்களின் சீற்றத்திற்கு ஆளாவோம் என்ற அச்சம் தான்.

வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் தமிழர்கள், காலத்துக்குக் காலம் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டுமென கோருபவர்கள் ஆகியோர், எல்ரீரீஈயாக முத்திரை குத்தப்பட்டார்கள் அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சித்தரிக்கப்பட்டார்கள். நானும் கூட அத்தகைய முத்திரை குத்தலுக்கு ஆளாகியிருக்கிறேன். குரல் கொடுப்பவர்களைத் தண்டிக்கக் கூடிய எந்த ஒரு செயலையும் நியாயப்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் அவ்வாறு முத்திரை குத்தப்படுகிறது. சமகாலத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி கூட தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவராக முத்திரை குத்தப்படுகிறார். இதற்குக் காரணம் அவர் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமைக்காக குரல் கொடுத்தமையும் அரசாங்கத்தின் பாரபட்சம் இளம் தலைமுறையை கடும்போக்காளர்களாக மாற்றும் என்பதை சுட்டிக் காட்டியமையும் தான். பாரபட்ச செயற்பாடுகள் சமூகத்திற்குள் முரண்பாடுகள் மற்றும் வன்முறையை உண்டாக்கும் அல்லது முரண்பாடுகளை தீவிரம் பெறச் செய்யும் என்பது வரலாற்றில் இருந்து நாம் அறிந்த பாடம். அதில் இருந்து கற்றுக் கொள்வதற்குப் பதிலாக தற்போது அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன. அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கே ‘தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்’ என முத்திரை குத்தப்படுகிறது என்றால், அத்தகைய அதிகாரமோ சலுகையோ இல்லாத பிரஜையொருவரின் நிலை என்ன? இத்தகைய பின்புலத்தில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, “நீங்கள் ஒரு தடவை பயங்கரவாதி என்றால், எப்போதுமே பயங்கரவாதிதான். இதனையே நாம் நம்புகிறோம்” என்று கூறுவது, ஒரு மரணதண்டனைக்குச் சமமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

வர்க்கபேதம்: கண்ணுக்குத் தென்படுவது, ஆனால் ஏற்றுக் கொள்ளப்படாதது

மேலே குறிப்பிடப்பட்ட சூழமைவு காரணமாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்காக சட்டத்தரணிகள் ஆஜராகத் தயங்குவது வழமைக்கு மாறானது அல்ல. இத்தகைய சூழ்நிலைகளில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விசாரணை நடைமுறை சார்ந்த உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமெனக் கோரும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை. எனினும், ஹிஜாஸின் விவகாரமானது பயங்கரவாத குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் விடயத்தில் வர்க்க பேதம் எவ்விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பிரதிபலிக்கிறது. வர்க்கபேதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை அரசும், பொதுமக்களும் மாத்திரமன்றி, மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கூட எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப் பாதிக்கிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் சட்டத்திலும், நடைமுறையிலும் உள்ள குறைபாடுகள் மீதே கவனத்தைச் செலுத்துகின்றன. சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட குறிப்பிட்ட தனிநபர்களின் உரிமைகளுக்காக உரத்த குரல் எழுப்பப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை ஞாபகத்திற்கு வருகின்றது. ஹிஜாஸிற்கு அப்பால், செய்தியாளர் திஸ்ஸநாயகத்தின் விவகாரம் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தத் தனிநபர்களின் பெரும் சாதனைகளும், சமூக பங்களிப்பும் இவர்கள் மீது கவனம் செலுத்த அடித்தளமாக இருக்கின்றன. இது நியாயமானது. எனினும், இதன்மூலம் நாம் குரலெழுப்பி போராடுவதற்கு தகுதியானவர்கள் யார் என்பதை ஒரு படிநிலையின் அடிப்படையில் தீர்மானிக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வட மாகாணத்தின் சாவகச்சேரி நகர வீடொன்றில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐம்பதிற்கு மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த விவகாரம் பற்றி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு கனத்த மௌனம் நிலவியது. இத்தகைய படிநிலை இருப்பதற்கு இதுவே ஆதாரம்.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பல மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் குற்றம் புரியவில்லை என்பது தெரியவந்ததால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தற்கொலை அங்கியை வைத்திருந்தவருடன் தத்தமது நாளாந்த பணிகளுக்காக ஏதேனும் தொடர்பைப் பேணியமைக்காக பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நாணய பரிவர்த்தனை நிலையத்தில் காசாளராகவும், மற்றொருவர் மோட்டார் சைக்கிள் கடையின் உரிமையாளராகவும் இருந்தார். தடுப்புக் கட்டளைக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டிருந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களது முறைப்பாடுகளை ஆராய்ந்து, வழக்குகளை கவனித்து வந்தேன். இவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், தடுப்புக் காவலில் இருந்த காலப்பகுதியில் இவர்களது வாழ்க்கையும், வாழ்வாதாரங்களும், வர்த்தக முயற்சிகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட விதத்தை நான் அறிவேன். பயங்கரவாத குற்றங்களைப் பொறுத்தவரையில், முறையான விசாரணையின் மூலம் திரட்டப்படும் ஆதாரங்களின் அல்லது நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் கைதுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக, கைதுகளின் பின்னரே பெரும்பாலும் விசாரணைகள் தொடங்குகின்றன.

படிநிலையின் அடிப்படையில் எவரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கலாம் என்பது நிர்ணயிக்கப்படுவதற்கு இரண்டாவது உதாரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற கைதுகள். இதன்போது, முஸ்லிம் ஆண்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த நபர்கள் வெளிப்படையான ஆதாரங்கள் அல்லது நியாயமான சந்தேகமின்றி கைது செய்யப்பட்ட சமயத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூட மௌனம் காத்தமை படிநிலை இருப்பதற்கான வெளிப்படையான ஆதாரமாக அமைகிறது. தமது வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக கொஞ்சம் குளோரின், திருக்குர்ஆன் மற்றும் அரேபிய மொழியில் எழுதப்பட்ட ஆவணங்கள், பட்டாக்கத்தி, திறன்பேசியில் அல்லாஹ்வின் பெயரை உச்சரிக்கும் கஸீதா போன்றவற்றை வைத்திருந்தமைக்காக ஆண்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் சில முஸ்லிம்கள் குர்ஆனையும், அரேபிய மொழியிலான ஆவணங்களையும் தாம் எரித்ததை ஆதங்கத்துடன் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்.

பெரும்பாலும் தொழிலாளர் வர்க்க பின்புலத்தைச் சேர்ந்த முஸ்லிம் கைதிகளை பார்வையிட்டதுடன், அவர்களது குடும்பங்களையும் சந்தித்தேன். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கைதானவர்களில்தான் முழுக் குடும்பங்களும் வருமானத்திற்காக தங்கி இருந்ததை நான் அறிவேன். இந்த நிலையில், இவர்களது கைது குடும்பத்தவர்களுக்கு பெரும் கஷ்டத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருந்தது. தாம் எங்கே, எப்படி சட்ட உதவி பெறலாம் என்பது பற்றி அவர்களுக்கு போதிய புரிந்துணர்வு இருக்கவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு சட்ட ஆலோசனை பெறும் அளவிற்கு வசதி இருக்கவில்லை. சட்டத்தரணியை அமர்த்திக் கொள்ள வசதியிருந்தவர்கள் எண்ணற்ற தடைகளை எதிர்நோக்கினார்கள். தாம் கைதிகளுக்காக ஆஜராவதை பயங்கரவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சித்தரிக்கப்பட்டு, தாம் பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும் என்று சட்டத்தரணிகள் அச்சப்பட்டதால், அவர்கள் கைதிகளுக்காக ஆஜராக மறுத்தார்கள்.

மாரவில சட்டத்தரணிகள் சங்கம் போன்ற சில சங்கங்களில், சட்டத்தரணிகள் கைதிகளுக்காக ஆஜராக மறுத்தமைக்கு அப்பால், ஏனைய சட்டத்தரணிகள் கைதிகளுக்காக முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் அவர்களை சிலர் அச்சுறுத்த முயற்சித்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இது பற்றி, கைதானவர்களின் குடும்பத்தவர்கள், கைதானவர்களுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் ஆகியோரிடம் இருந்து கிடைத்த நம்பகத்தன்மை மிக்க, உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகளின் பிரகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கடிதம் எழுதியது. எனினும், “ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக முன்னிலையாவதைத் தவிர்க்குமாறு எந்தவொரு பிராந்திய சங்கத்திலும் எதுவித முறையான தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை” என சட்டத்தரணிகள் சங்கம் பதில் அளித்தது. இந்த விவகாரம் பற்றி முறையான விசாரணையை சங்கம் ஆரம்பிக்கவும் இல்லை. சங்கத்தின் பதில் கடிதமானது, அந்த சமயத்தில் நிலவிய முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வலைகள் பற்றி போதிய புரிந்துணர்வு இல்லாதிருந்ததை வெளிப்படுத்தியது. நியாயமான விசாரணைக்கான உரிமையின் மீது உத்தியோகபூர்வமற்ற சமூக செயற்பாடுகள், எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இச்சம்பவம் விளக்கியது.

மன்னாரைச் சேர்ந்த கவிஞர் அஹ்னாவ் ஜஸீமின் விவகாரமும் முக்கியமானது. இவர் கடும்போக்குவாதத்தை தூண்டுவதாகக் கூறப்படும் கவிதை நூலொன்றுக்காக 2020ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரது கவிதைகள் உண்மையில் கடும்போக்குவாதத்தை இல்லாதொழிப்பதை ஆராய்ந்து, வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எத்தனையோ கைதுகள் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கவனத்தைப் பெறாமல் இருப்பதற்கு, இந்த விவகாரம் மற்றொரு உதாரணமாகும். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இந்தக் கைது பற்றி அறிவிக்கப்பட்டு, 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிருபர்களால் பகிரங்கப்படுத்தப்பட்ட போதிலும், அஹ்னாவ்வின் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக குறைவாகவே குரல் எழுப்பப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டவர்கள் அந்நியர்களாக இருந்தாலும், சட்டக் கோட்பாடுகள் எமக்கு அந்நியமானவை அல்ல

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பற்றி சிந்திக்கும் சமயத்தில், ‘அவரைப் பற்றி ஊடகங்கள் வரையும் சித்திரத்தை விமர்சனம் இன்றி ஏற்க வேண்டாம்’ என்று மக்களை வலியுறுத்தும் எனது சகாவான கிஹான் குணத்திலக்கவை கருத்தைப் புரிந்து கொண்டு, அதற்கு ஆதரவளிக்கிறேன். “இந்தச் சித்திரம் அவரைப் பற்றி நாம் அறிந்தவற்றுடன் எந்த வகையிலாவது ஒத்திருக்கிறதா என்று நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கிஹான் சகலரிடமும் கோருகிறார். எவ்வாறெனினும், தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றி பெரும்பாலும் நாம் எதனையும் அறிந்து வைத்திருப்பதில்லை. எனவே, அவர்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பதன் அடிப்படையில், அவர்களுக்காக பரிந்து பேச முடியாது.

“ஒருவரைப் பற்றி எந்தளவு குறைவாக அறிந்திருக்கிறோமோ, அந்தளவுக்கு அவரை கேலிச்சித்திர கோட்டோவியமாக வரைவது எளிது. முழுமையற்ற துணுக்குகளாக உள்ள தகவல்களைத் திரட்டி, மாறா-படிவுரு சிந்தனைகளைப் (Stereotype) பாவித்து, அவற்றை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வார்ப்புக்குள் இடுதலே நடக்கிறது” என்று அமல் கூறுகிறார். ஆனால், ஆளுமைகள் பற்றியும், கைதிகளின் தனிப்பட்ட கடந்த காலம் பற்றியும் எதனையும் தெரிந்து கொள்ளாதபோது, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் எவ்வாறு பரிந்து பேச முடியும்? எனவே, எமக்குள்ள ஒரே வழிமுறை, சட்டக் கோட்பாடுகள் மற்றும் மனித உரிமை தராதரங்களின் அடிப்படையில் எமது முயற்சிகளை மேற்கொள்வது தான்.

ஒருவரைப் பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்பதன் அடிப்படையில் அல்லது ஒருவரை அறிந்திருக்கிறோம் என்பதற்காக அல்லது அவர் ஒரே சமூக வட்டங்களைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்பதற்காக மாத்திரம் அவரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரக்கூடாது. மாறாக, ஒவ்வொருவரும், குற்றமற்றவராக இருந்தாலென்ன, குற்றவாளியாக இருந்தாலென்ன, முறையான விசாரணை நடைமுறையை அனுபவிக்கக் கூடிய உரிமை இருப்பதாலும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் குற்றம் அற்றவராக கருதப்பட வேண்டும் என்பதாலும், நாம் அவ்வாறு கோர வேண்டும். அந்த நபர் குற்றமற்றவர் என நம்புவதன் காரணமாகவோ, அவர் அத்தகைய குற்றத்தை செய்திருக்க மாட்டார் என நினைப்பதாலோ மாத்திரம் நாம் பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்துங்கள் என்று கூறக் கூடாது. இந்தச் சட்டம் அடிப்படை மனித உரிமை தராதரங்களை மீறுவதால், அதனைத் திருத்துமாறு கோர வேண்டும். ஹிஜாஸின் உரிமைகளுக்காக நாம் எந்த விதத்தில் குரல் கொடுக்கிறோமோ அதே மாதிரியாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சகலரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். இது கனகசபை தேவதாசன் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகலரினதும் உரிமைகளுக்காக நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் தராதரமாக அமைவது அவசியம்.

அம்பிகா சற்குணநாதன்