பட மூலம், Eranga Jayawardena, AP
எதிர்கால அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படுவதற்கான அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான இவ் அத்தியாயமானது நீதி அமைச்சின் நிபுணர் குழுவினால் புதிய அரசியல் யாப்பை வரையும் பொருட்டு யோசனைகளை வழங்குமாறு மக்களுக்கு விடப்பட்ட பொது அழைப்பின் அடிப்படையில்,
கலாநிதி. அசங்க வெலிக்கல (எடின்பரோ பல்கலைக்கழகம்),
கலாநிதி. தினேஷா சமரரத்ன (கொழும்புப் பல்கலைக்கழகம்),
கலாநிதி. கலன சேனாரத்ன (பேராதனைப் பல்கலைக்கழகம்),
கலாநிதி கிஹான் குணதிலக்க (ஹார்வார்ட் பல்கலைக்கழகம்)
கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் (ஒகஸ்போர்ட் பல்கலைக்கழகம்)
ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.
இத்திட்டமானது பின்வரும் அனுமானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்:
1. இப்புதிய அரசியலமைப்பானது ஓர் ஐக்கிய அரசு மீளப்பெற முடியாத, அர்த்தமுள்ள மற்றும் விரிவான அதிகாரப்பகிர்விற்கு உத்தரவாதம் அளிக்கும். அதற்கமைய எமது முன்மொழிவுகளில் உள்ள அரசு பற்றிய அனைத்துக் குறிப்புக்களும் – அரசாங்க, பகிரங்க அதிகாரிகளையும், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட அலகுகள் மற்றும் உள்ளூராட்சி அரசாங்கங்கள் உட்பட அரசின் அனைத்து உறுப்புக்களையும் குறிப்பனவாகும்.
2. நீதிமன்றங்கள் (பரவலாக்கப்பட்ட மட்டத்திலுள்ளவை உட்பட), சட்டம் மற்றும் நிறைவேற்று நடவடிக்கைகளின் மீது அவற்றின் செல்லுபடித்தன்மை பற்றி நீதிப்புனராய்வு செய்யும் விரிவான அதிகாரத்தைக் கொண்டிருப்பதுடன் மேன்முறையீட்டிற்கு உட்பட்ட வகையில் முன்மொழியப்பட்ட இவ்வத்தியாயத்தின் கீழ் நிதிப்பரிபாலனத்தைச் செலுத்தும் அதிகாரத்தையும், கடமையையும் கொண்டிருக்கும்.
3. முன்மொழியப்பட்ட இவ்வத்தியாயத்திலுள்ள மொழி தொடர்பான அடிப்படை உரிமைக்கு மேலதிகமாக 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் தற்போதுள்ள ‘மொழி’ தொடர்பான அத்தியாயத்தில் பிரதிபலிக்கப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளை உள்ளடக்கிய ‘மொழி’ பற்றிய தனியான அத்தியாயமும் இருக்கும்.
4. உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீதான மட்டுப்பாடுகள் (கீழே குறிப்பிட்ட உறுப்புரை 14ன் அடிப்படையில்) மனிதச் சுதந்திரமே விதிமுறை என்றும் அதன் மீதான வரம்புகள் விதிவிலக்கு என்ற அடிப்படையில் அனுமானிக்கப்பட்டவையாகும். ஒரு பொதுவான மட்டுப்பாடுகளை (ஒவ்வொரு உரிமை, சுதந்திரம் மீதான வரையறைகளை வெவ்வேறான காரணங்களின் அடிப்படையில் எண்ணிக்கையிடுவதற்குப் பதிலாக) விரிப்பதற்கான எங்கள் வாசகமானது இக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே நிறுவப்பட்டது. இவ்வணுகுமுறைக்கு அடிப்படைச் சுதந்திரங்கள் மற்றும் உரிமைகள் மீதான அனுமதிக்கப்பட்ட மட்டுப்பாடுகள் அரசியலமைப்பினூடாக வரையறுக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிசெய்தலும், அவ்வாறு அனுமதிக்கப்பட்ட மட்டுப்பாடுகள் அடிப்படைச் சுதந்திரங்கள் மற்றும் உரிமைகளின் சாரத்தை அணைக்கப் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிசெய்தலுமே காரணங்களாகும். அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் விதிக்கப்பட்டுள்ள வரையறைகளை நீதியானதென மெய்ப்பிக்கும் பொறுப்பு அரசுடையதாகும்.
5. இவ்வத்தியாயத்திலுள்ள உறுப்புரைகள் பல்வகைத்தன்மையான சட்ட அமைப்பின் சாரத்தைப் பேணும் வகையில் பொருட்கோடப்பட வேண்டும். இந்நாட்டின் இனமுறைச் சட்டங்களை ஒருபடித்தான சட்டத்தின்கீழ் ஒத்திசையச்செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் சட்ட அமைப்பின் பன்முகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறோம். நீதித்துறை உட்பட அரசால் இனமுறைச் சட்டங்களை இவ்வத்தியாயத்திற்கு இசைவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தனிநபர் சுதந்திரங்கள் மற்றும் உரிமைகள் மற்றும் சட்டப்பல்வகைமையின் நெறிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதையும், பாதுகாப்பதையும் முன்னேற்ற முயல்வதாக இருத்தல் வேண்டும்.
அத்தியாயம் …….
அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்
அத்திவாரம்
1. அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் குடியரசாகிய இலங்கையின் ஜனநாயகத்தின் அடித்தளமாக அமைவதுடன் அவை மனித மாண்பு மற்றும் தன்னாட்சி ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் அமைந்தவையாகும். அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அனுபவித்தல் அல்லது பிரயோகித்தல் மீது விதிக்கப்படும் மட்டுப்பாடுகள் இவ்வத்தியாயத்திற் குறிப்பிடப்பட்ட வரையறைக்குள் உட்பட்டதாகவே இருத்தல் வேண்டும்.
2. அனைத்து நபர்களுக்கும் மற்றைய நபர்கள் தொடர்பாகவும் தமது சமுதாயம் தொடர்பாகவும் கடமையும் இவ்வத்தியாயத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மேம்படுத்துவதற்கும், கடைப்பிடிப்பதற்கும் முயலுவதற்கான பொறுப்பும் உள்ளது.
அரசின் கடமைகள்
3. (1) சட்டவாக்கத்துறை, நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை உட்பட அனைத்து மட்டங்களிலுமுள்ள அரசின் சகல உறுப்புக்களும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மதித்து, பேணிப்பாதுகாத்து, மேம்படுத்தி, நிறைவேற்றுவதுடன் அவற்றின் மீறலையும் தடுக்க வேண்டும்.
(2) அடிப்படை உரிமைகளை மற்றும் சுதந்திரங்களை மதித்து, பாதுகாத்து, மேம்படுத்தி, நிறைவு செய்யவேண்டிய அரசின் கடப்பாடானது அவற்றிற்கு உகந்த கொள்கைகளை தழுவிக்கொள்ளுதல், போதுமான வளங்களை ஒதுக்கீடு செய்தல், மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அனைத்து வரவு செலவு சார்ந்த செயல் திட்டங்களை செவ்வன நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
(3) அரசானது இத்தகைய கடமைகளை உண்மை நபர்களுக்கும், சட்டமுறை நபர்களுக்கும் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கும். சட்டமுறை நபர்களைப் பொறுத்தமட்டில் அரசானது இத்தகைய கடமைகளைச் சம்பந்தப்பட்ட உரிமையின் அல்லது சுதந்திரத்தின் தன்மை மற்றும் சட்டமுறை நபரின் தன்மை ஆகியவற்றின் தேவைக்கேற்ற அளவிற்று நிறைவேற்றும்.
(4) அனைத்து நபருக்கும், அவர்களது அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும், தனியாரின் நடவடிக்கைகளால் மீறப்படுமாயின் அல்லது உடனடியாக மீறப்படவுள்ளதாயின் அவற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அரசானது செயல் விளைவுள்ள பரிகாரத்தை வழங்கும்.
(5) அரசும், அதன் அதிகாரிகள், முகவர்கள் மற்றும் பகிரங்க சேவையை அல்லது பகிரங்க இயல்புடைய அதிகாரத்தை பிரயோகிக்கும் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய அனைவரும் தமது தீர்மானங்களுக்கான காரணங்களை விரைவாக வழங்கும் கடமைப்பட்டவர்களாவர். இத்தகைய தீர்மானங்களால் பாதிக்கப்ட்டவர்கள் அம்முடிவிற்கான காரணத்தை எழுத்துமூலம் பெற்றுக்கொள்ள்ளும் உரித்துடையவராவர்.
முரண்படுதல்
4. (1) எழுத்திலான சட்டங்கள் மற்றும் எழுத்தில்லாச் சட்டங்கள் இவ்வத்தியாயத்திலுள்ள ஏற்பாடுகளுடன் ஒவ்வாதவிடத்து அச்சட்டங்கள் அத்தகைய ஒவ்வாத்தன்மையின் அளவிற்கு செல்லுபடியற்றவையாகும்.
(2) மாகாண மேல் நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இவ்வத்தியாயத்தின் கீழ் தமது அதிகாரத்தைப் பிரயோகிக்கையில் இவ்வாறான எத்தகைய சட்டங்களையும் இவ்வத்தியாயத்திற்கு ஒவ்வாதவை அல்லது முரண்பட்டவை என பிரகடனப்படுத்த முடியும்.
(3) அரசானது இவ்வகையான சட்டங்களை சட்டநீக்கம் அல்லது திருத்தம் செய்ய வேண்டியுள்ளதுடன், நீதிமன்றங்கள் இவ்வகையான சட்டங்களை இவ்வத்தியாயத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு இசைவானவை என உறுதிப்படுத்த தேவையான அளவிற்கு விருத்தியும், பொருட்கோடலும் செய்ய வேண்டும்.
உயிர் வாழ்வதற்கான உரிமை
5. ஒவ்வொருவருக்கும் இயற்கையாக அமையப்பெற்ற வாழ்வதற்கான உரிமையுண்டு. எந்தவொரு நபரின் உயிரும் நியாயமற்ற முறையில் பறிக்கப்படுதலோ அவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படலோ கூடாது.
சமத்துவத்திற்கான உரிமை
6. சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள். அத்துடன், அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள்.
பாரபட்சமின்மைக்கான உரிமை
7. (1) எந்தவொரு நபரும் இனம், மதம், இனப்பிரிவு, நிறம், பால், பாலியல் நோக்குநிலை, இயலாமை, மொழி, அரசியல் அல்லது வேறு கருத்துக்கள், உடைமை, வாழுமிடம் அல்லது வேறேதேனும் ஒத்த காரணத்தினடிப்படையில் பாகுபடுத்தப்படலாகாது.
(2) அனைத்துப் பாலினத்தினருக்கும் சமமான உரிமைகளும், வாய்ப்புக்களும் அரசால் வழங்கப்படவேண்டும். அனைத்துப் பாலினத்தவரும் சமமென்பதை உறுதிசெய்ய அரசு சகல நியாயமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
(3) அனைத்துப் பாலினத்தவருக்குமிடையே சமத்துவத்தை விரைவுபடுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சிறப்பேற்பாட்டு நடவடிக்கைகள் பாகுபாடுகாட்டலெனக் கொள்ளப்படா.
(4) அனைத்து நபர்களுக்கும், இனங்களுக்கும் இவ்வத்தியாயத்திலுள்ள உறுப்புரைகளுக்கு இயைபான அளவிற்குத் தம் பண்பாட்டை வளர்ப்பதற்கும், தமது மொழியை எவ்வித பாகுபாடுமின்றித் தனியிடத்திலும், பொதுவிடத்திலும் பயன்படுத்துவதற்கும், தமது இனச்சட்டங்களைப் பேணிப்பாதுகாப்பதற்கும், மற்றும் பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சியைத் தடையின்றித் தொடர்வதற்கும் உரிமையுண்டு.
(5) ஒவ்வொரு நபரும் பகிரங்க சேவையையும், உத்தியோகபூர்வத் தொடர்பாடலையும் தான் விரும்பும் மொழியியிற் பெற்றுக்கொள்வதற்கும், எந்தவொரு பகிரங்கசேவை அதிகாரி அல்லது நிறுவனத்துடன் தான் விரும்பும் மொழியில் தொடர்புகொள்வதற்கும் உரிமையுடையவராவார். அரசானது இத்தகைய உரிமையை உறுதிசெய்யத்தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சகலவித அடையாளங்களும் ஆவணங்களும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இருத்தல் வேண்டும்.
(6) எந்தவொரு நபரும் பந்தி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு காரணத்தின் அடிப்படையிலும் பொதுநிறுவனங்கள், கடைகள், பொதுவுணவுச்சாலைகள், விடுதிகள், பொதுக்களியாட்டவிடங்கள் மற்றும் பொது வழிபாட்டிடங்கள் என்பவற்றிற்குக் செல்லுதல் தொடர்பில் ஏதேனும் தகுதியீனத்திற்கு, பொறுப்பிற்கு, மட்டுப்பாட்டிற்கு, அல்லது நிபந்தனைக்கு உட்படுத்தப்படலாகாது.
குழந்தை அல்லது பிள்ளையின் சிறந்த நலன்களுக்காக
8. (1) பதினெட்டு வயதிற்கு உட்பட்ட யாவரும் சிறுவர் எனக் கொள்ளப்படுவர்.
(2) சிறுவர்கள் தொடர்பான சகல விடயங்களிலும், அவ்விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகள் பொது அல்லது தனியார் நிறுவனங்களினால், நீதிமன்றங்களினால், நிர்வாக அதிகாரிகளினால் அல்லது சட்டமன்றங்களினால் எடுக்கப்படுகின்றனவாயினும் சரி, சிறுவரின் சிறந்த நலனே முதன்மையாகக் கொள்ளப்படும்.
(3) எந்தவோரு சிறுவரையும் தடுத்துவைத்தல் உட்பட நிறுவனமயப்படுத்தும் நடவடிக்கையானது இறுதியாக எடுக்கப்படும் நடவடிக்கையாகவும், தேவையான மிகக்குறுகிய காலப்பகுதிக்குரியதாகவும், அச்சிறுவரின் சிறந்த நலனிற்காகவும் மட்டுமே எடுக்கப்படவேண்டும்.
(4) ஒவ்வொரு சிறாரும் உறுப்புரை (7) பந்தி (1)இல் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையிலான வேறுபடுத்தல் இல்லாமல் அவர்களுக்கு வீட்டிலும், சமுதாயத்திலும் மற்றும் அரசின் சார்பிலும் பராயமடையாதவர் எனும் அடிப்படையில் வழங்கப்படவேண்டிய பாதுகாப்பிற்கு உரித்துடையவராவர்.
(5) ஒவ்வொரு சிறுவருக்கும் பொதுவான சிறுவர்நலத் திட்டங்கள் உட்பட தகுந்த வழிமுறைகள் ஊடாகக் குறைந்தபட்ச வாழ்க்கைத்தர உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும்.
விசேட தேவையுள்ளோர்
9. விசேட தேவையுள்ளோர் இவ்வத்தியாயத்தின் கீழ் தங்கள் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பொருண்மையுள்ள வகையில் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
நடைமுறை ரீதியிலான உரிமைகள்
10. (1) கைதுசெய்யப்பட்டுள்ள அல்லது தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் கைதுசெய்யப்படும்போது அல்லது தடுத்துவைக்கப்படும்போது அக்கைதுக்கான அல்லது தடுப்புக்கான காரணம் கூறப்படவேண்டும். அத்துடன், எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் துரிதமாக அறிவிக்கப்படவேண்டும்.
(2) குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அல்லது தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் துரிதமாக நீதிபதிக்கு முன் அழைத்துவரப்படவேண்டும். அத்துடன், அந்நபர் தகுந்த காலப்பகுதிக்குள் நீதிமன்ற வழக்கிற்கு அல்லது விடுதலைக்கு உரித்துடையவராவார். வழக்கு விசாரணைக்காகக் காத்திருக்கும் நபர்கள் சிறைக்காவலில் தடுத்துவைக்கப்படலாகாது என்பது பொதுவிதியாகும்.
(3) கைதுசெய்யப்பட்டுள்ள ஒருநபருக்குப் பிணை வழங்குவது பொதுவிதியாகும். அத்துடன், பிணைமறுப்பு விதிவிலக்காகும்.
(4) கைதுசெய்யப்பட்டமையால் அல்லது தடுத்துவைக்கப்பட்டமையால் சுதந்திரத்தை இழந்துள்ள ஒவொருவரும், நீதிமன்றம் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையின் சட்டபூர்வத்தன்மை குறித்து தாமதமின்றித் தீர்ப்பு வழங்கும் பொருட்டும், அவ்வாறான தடுப்புக்காவல் சட்டத்துக்குப் புறம்பானதாயின் விடுதலைப் பெறும்பொருட்டும் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு உரித்ததுடையவராவர்.
(5) சுதந்திரத்தை இழந்துள்ள ஒவ்வொருஎநபரும் காலதாமதமின்றித் தமது உறவினர், வழக்கறிஞர் அல்லது தாம் விரும்பும் வேறொரு நபரால் சந்திக்கப்படுவதற்கும், அத்தகைய நபருடன் தொடர்பை மேற்கொள்ளவதற்கும் உரித்துடையவராவர்.
(6) குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும் பின்வரும் குறைந்தபட்ச உத்தரவாதங்களுக்கு உரிமையுடையவராவர்:
(அ) சட்டத்தின்படி குற்றவாளியென நிரூபிக்கப்படும்வரை குற்றத்தைச் செய்யாதவர் என்று கருதப்படுவதற்கான உரிமை;
(ஆ) தம்மால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் தமக்கெதிரான குற்றச்சாட்டின் தன்மை மற்றும் காரணம் குறித்து விரைவாகவும் விரிவாகவும் அறிவிக்கப்படுவதற்கான உரிமை;
(இ) தாம் முன்வைக்கவிருக்கும் எதிர்வாதத்தை முன்னேற்பாடு செய்வதற்குப் போதுமான காலம் மற்றும் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் உரிமை மற்றும் தமது சொந்த விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞருடன் தொடர்புகொள்ளும் உரிமை;
(ஈ) தம்முன்னிலையில் வழக்கு நடவடிக்கைகள் காலதாமதமின்றி நடைபெறுவதற்கும், அவ்வழக்குகளில் தாமாகவோ அல்லது தம்மால் தெரிவுசெய்யப்பட்ட வழக்கறிஞர் ஒருவரினூடாகவோ எதிர்வாதம் செய்வதற்கும், அவ்வாறு ஒரு வழக்கறிஞரின் உதவியில்லாதவிடத்து அத்தகையதொரு உரிமை உண்டென அறிவிக்கப்படுவதற்குமான உரிமை;
(உ) நீதியின் நலன் வலியுறுத்தும்போது உதவிக்காக வழக்கறிஞர் ஒதுக்கப்படுவதற்கும், தம்மால் அவ்வுதவிக்குரிய கட்டணத்தைச்செலுத்தப் போதுமான வசதியில்லாதவிடத்து அவ்வுதவியைக் கட்டணமின்றிப் பெறுவதற்குமான உரிமை;
(ஊ) தமக்கெதிரான சாட்சியங்களைப் பரிசீலனை செய்வதற்கும் அல்லது அச்சாட்சியங்கள் பரிசீலனைசெய்யப்படுவதற்கும், அவ்வெதிரிச் சாட்சியங்கள் எந்நிலைமையில் வழங்கப்பட்டனவோ அதேநிலையில் தம்சார்பான சாட்சியங்களின் வருகைப்பதிவேட்டையும் பரிசீலனையையும் பெற்றுக்கொள்வதற்குமான உரிமை;
(எ) நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படுகின்ற மொழியை விளங்கமுடியாத அல்லது பேசமுடியாத நிலையிருப்பின் மொழிபெயர்ப்பாளரின் உதவியைக் கட்டனமின்றிப் பெறுக்கொள்வதற்கான உரிமை;
(ஏ) தமக்கெதிராகத் தாமே சான்றளிக்குமாறு அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு பலவந்தப்படுத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை;
(7) புரியப்பட்ட நேரத்தில் தவறொன்றாகவிருந்திராத ஏதேனும் செயல் அல்லது செயலாமை காரணமாக, எவரும் தவறொன்றிற்குக் குற்றவாளியாதலாகாது என்பதுடன், அத்தவறு புரியப்பட்ட நேரத்தில் வலுவிலிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டமெதுவும் அத்தகைய ஏதேனும் தவறுக்கு விதிக்கப்படுத்தலுமாகாது. இலங்கைக்குப் பொருந்துகின்ற, சர்வதேச வழக்காற்றுச் சட்டம் உள்ளடங்கலாக, சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றச்செயல் அல்லது செய்யாமை, அது புரியப்பட்ட நேரத்தின்போது குற்றவியலானதாக இருந்ததோ அச்செயலுக்காக அல்லது மேற்கொள்ளாதமைக்காக எவரேனும் நபரை வழக்கு விசாரணை செய்தலையும் அவருக்குத் தண்டனையளித்தலையும் இவ்வுறுப்புரையிலுள்ள எதுவும் பங்கப்படுத்தலாகாது.
முழுமையான சுதந்திரம்
11. (1) ஒவ்வொருவரும் சுதந்திரத்துடனும், இயற்கையாக அமையப்பெற்ற மீறவொண்ணாத மாண்புடனும் பிறந்தவராவார். தனிமனித சுதந்திரம் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாகும்:
(அ) உடல் ரீதியாகவோ அல்லது உளரீதியாகவோ சித்திரவதைக்கு அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படாமலிருப்பதற்கான சுதந்திரம்.
(ஆ) சட்டத்திற்குப் புறம்பாக அல்லது எதேச்சையாகக் கைது செய்யப்படாமலும், அல்லது தடுத்துவைக்கப்படாமலும் வேறு எந்த வகையிலும் சட்டத்திற்குப் புறம்பாக அல்லது எதேச்சையாகத் தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படாமலும் இருப்பதற்கான சுதந்திரம்.
(இ) ஒரு மதத்தை, நம்பிக்கையை அல்லது கருத்தை எவ்வித வற்புறுத்தலுமின்றித் தழுவுவதற்கான சுதந்திரம் உட்பட சிந்தனைசெய்யும் மற்றும் மனசாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம். அத்துடன்,
(ஈ) வலிந்து ஈடுபடுத்தப்படுகின்ற அல்லது கட்டாய வேலையிலிருந்து சுதந்திரம்.
(2) இவ்வுறுப்பையுரையில் குறிப்பிடப்பட்ட சுதந்திரங்கள் எந்தவொரு தலையீட்டிற்கும் அல்லது மட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படலாகாது.
சுதந்திரம்
12. (1) ஒவ்வொருநபரும் பின்வருவனவற்றிற்கு உரித்துடையவராவார்:
(அ) உடல் மற்றும் உளம் சார்ந்த வன்முறைகளிலிருந்து சுதந்திரம்;
(ஆ) உடற்சீர்மையின் மீதான தலையீடுகளில் இருந்து சுதந்திரம்;
(இ) மதம் அல்லது நம்பிக்கையை ஓம்புதல், ஒழுகுதல் மற்றும் ஓதிப்பரப்பல் உள்ளடங்கலாக, ஒரு மதத்தை அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம்;
(ஈ) வெளிப்படுத்தலுட்பட பேச்சு சுதந்திரமும் மரணித்தோரை நினைவுகூர்வதற்கான சுதந்திரமும்;
(உ) இவ்வத்தியாயத்தில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு உரிமை அல்லது சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அவசியமான மற்றொருநபர் வைத்திருக்கும் தகவலையும் மற்றும் அரசின் கையிலிருக்கும் எந்தத் தகவலையும் பெறும் சுதந்திரம் உள்ளடங்கலாக தகவல் அறியும் சுதந்திரம்;
(ஊ) ஒருவரின் தனியிறைமை, குடும்பம், இல்லம் அல்லது தொடர்பாடல்களின் மீதான தலையீடுகளிலிருந்து விடுதலை;
(எ) ஏதேனும் சட்டமுறையான முயற்சியில், உயர்தொழிலில், வியாபாரத்தில், தொழிலில் அல்லது தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான சுதந்திரம்;
(ஏ) கல்வி நிறுவனங்களை நிறுவும் மற்றும் பராமரிக்கும் சுதந்திரத்தை உள்ளடக்கிய கல்விச்சுதந்திரம்;
(ஐ) அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம்;
(ஒ) தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கும், அவற்றில் இணைவதற்கும் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்குகொள்வதற்குமான சுதந்திரம் உள்ளடங்கலாக ஒன்றுசேர்வதற்கான சுதந்திரம்;
(ஓ) இலங்கை முழுவதும் தடையின்றி நடமாடுவதற்கும், தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்குமான சுதந்திரம். அத்துடன்,
(ஒள) தன் தேசிய இடத்திற்கு திரும்புவதற்கான சுதந்திரம்.
தரவுப் பாதுகாப்பு
13. (1) ஒவ்வொரு நபருக்கும் தமது தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் உரிமை உண்டு. அத்தகைய தரவுகள் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக நியாயமான முறையில் அந்த நபரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே செயல்முறைக்குள்ளாக்கப்படல் வேண்டும்.
(2) ஒவ்வொரு நபருக்கும் அவருடன் தொடர்புடைய தரவை அணுகவும் உரிமையுண்டு.
(3) ஒருவருடைய தனிப்பட்ட தரவுகள் இயைபற்றதாக, முழுமையற்றதாக அல்லது செம்மையற்றதாக இருக்கும் தருவாயில் அத்தரவுகளை காலதாமதமின்றி செம்மைப்படுத்துவதற்கோ அல்லது அழிப்பதற்கோ அல்லது தடுப்பதற்கோ அந்த நபருக்கு உரிமையுண்டு. செயல்முறை நோக்கத்தினையும் கருத்திற்கொண்டு ஒவ்வொருவருக்கும் குறைநிரப்பு அறிக்கையை வழங்கும் முறையினூடாகவும் அல்லது வேறேதும் முறையிலேனும் முழுமையடையாத தனியாள் தரவுகளை நிறைவு அடையச்செய்யும் உரிமை உண்டு.
மட்டுப்பாடுகள்
14 (1) உறுப்புரைகள் 12 மற்றும் 13 ஊடக அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் அல்லது சுதந்திரங்கள் மீதான மட்டுப்பாடுகள் கீழ்க்கண்டவாறு அமையவேண்டும்:
(அ) சட்டத்திற்கிணங்கும் வகையில்;
(ஆ) அவசியமாகவும், நியாயமானதாகவும், பேதம் விளைவிக்காததாகவும், திறந்த ஜனநாயக சமூகத்தில் மெய்ப்பிக்கத்தக்கதாகவும் இருத்தல்;
(இ) பொதுமக்கள் பாதுகாப்பு, அல்லது பொது சுகாதாரத்தின் நலன் கருதி, அல்லது முறையாக அங்கீகரிக்கப்பட்ட மற்றவர்களின் உரிமை மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் விதிக்கப்பட்டல்; மற்றும்
(ஈ) பந்தி (இ) இன்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நலன் அல்லது நோக்கானது குறைந்தளவான மட்டுப்பாட்டை விதிக்கும் நடவடிக்கையினுடாக முன்னெடுக்கப்படல்.
சொத்துக்கான அல்லது ஆதனத்திற்கான உரிமை
15. (1) அனைத்து உண்மை நபர்களுக்கும் சொத்துடைமைக்கும், சொத்தை மரபுவழியாகப் பெறுவதற்கும் உரிமையுண்டு.
(2) பொதுநோக்கத்திற்காக அல்லது அவசர தேவைக்காக மட்டுமே தனியார் உடைமைகள் அரசுடைமையாக்கப்படுத்தல் அனுமதிக்கப்படும். அத்துடன், அவ்வரசுடைமையாக்கலானது அதனால் பாதிக்கப்படும் அனைத்து நபர்களுக்கும் முழுமையான மற்றும் நியாயமான இழப்பீட்டை விரைவாகச் செலுத்த வேண்டும் எனும் நிபந்தனைக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படும்.
கல்விக்கான உரிமை
16. (1) ஒவ்வொருநபருக்கும்; முதலாம் மற்றும் இரண்டாம் நிலைக்கல்வியைக் கற்பதற்கான உரிமை உண்டு. அரசானது அத்தகைய கல்வியை இலவசமாக வழங்கும்
(2) ஒவ்வொருநபரும் மூன்றாம் நிலைக் கல்விக்கு உரித்துடையவராவர். அரசானது அத்தகைய கல்வியை நியாயமான நடவடிக்கைகளினூடாக படிப் படியாக அனைவருக்கும் அடையத்தக்கதாக்குதல் வேண்டும்.
(3) அரசானது நியாமான நடவடிக்கைகளூடாக கல்வி நோக்கங்களுக்கு பொருத்தமான தொழிநுட்பங்களை படிப்படியாக அடையத்தக்கதாக்குதல் வேண்டும்.
(4) அரசானது புலமைச்சுதந்திரத்தையும், உயர் கல்வி நிறுவனங்களின் தன்னாதிக்கத்தையும் மதித்துப் பாதுகாக்கும்.
சுகாதாரம், உணவு, பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு என்பவற்றுக்கான உரிமை
17. (1) ஆளொவ்வொருவருக்கும் இனப்பெருக்கச் சுகாதார சேவைகள், மனநல சுகாதார சேவைகள், போதுமான உணவு, குடிநீர் மற்றும் துப்பரவு உள்ளிட்ட சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் உரிமை உண்டு.
(2) ஆளொவ்வொருவருக்கும் சமூக காப்புறுதிக்கான உரிமை உண்டு; அவ்வுரிமையானது, ஒருவரால் தனையும் தன்னில் தங்கியிருப்போரையும் ஆதரிக்க முடியாதவிடத்து பொருத்தமான சமூக உதவியைப் பெற்றுக்கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாகும்.
(3) அரசானது சுகாதாரப் பராமரிப்பின் அடையக்கூடிய மீயுயர்ந்த தரத்திற்கு உத்தரவாதமளிக்கும் பொருட்டும், இவ்வுறுப்புரையின் (1)ஆம் மற்றும் (2)ஆம் பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளைப் படிமுறை ரீதியாக அடையும் பொருட்டும், கிடைக்கக்கூடிய வள ஆதாரங்களுக்குள், அனைத்து விதமான சட்டவாக்க நடவடிக்கைகளையும் வேறு இதர பல நடவடிக்கைகளையும் கையாளும்.
(4) எந்தவொரு நபருக்கும் அவசரகால மருத்துவ சேவை மறுக்கப்படலாகாது.
(5) அரசானது இவ்வுறுப்புரையில் உள்ளடக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அனைத்துச் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களையும், அவற்றால் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளையும், மருந்துப்பொருட்கள் தயாரிப்பையும், அவற்றின் விநியோகத்தையும் நியாயமான முறையில் ஒழுங்குபடுத்த முடியும்.
வீட்டுவசதிக்கான உரிமை
18. (1) ஒவ்வொருவருக்கும் போதுமானதும் மதிப்பு வாய்ந்ததுமான வீட்டை பெறுவதற்கான உரிமை உண்டு.
(2) இவ்வுறுப்புரையின் (1)ஆம் பந்தியிற் குறிப்பிடப்பட்டுள்ள உரிமையைப் படிமுறை ரீதியாக அடையும் பொருட்டு அரசானது தனக்கு கிடைக்கக்கூடிய வளத்திற்குட்பட்டதான சகலவிதத்திலும் நியாயமான சட்டவாக்க நடவடிக்கைகளையும் அல்லது வேறேதேனும் நடவடிக்கைகளையும் கையாளும்.
(3) எந்தவொரு நபரும், அனைத்துப் பொருத்தமான சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டு, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவு இன்றியும், மாற்று வீடுகளுக்கான முன்னேற்பாடுகள் வழங்கப்படாமலும், எதேச்சையாக தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேற்றபடல் அல்லது அந்த நபரின் வீடு அழிக்கப்படும் நிலைக்கு உட்படுத்தப்படல் ஆகாது.
சுற்றுச்சூழல்
19. (1) ஒவ்வொரு நபருக்கும் சுகாதாரமான சுற்றுச்சூழலில் வசிப்பதற்கும், இயற்கைச்சூழலை முழுமையாக அனுபவிப்பதற்கும், அரசின் கைவசமிருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பிலான தகவல்களைச் சரியான நேரத்திற் பெறுவதற்கும் உரிமை உண்டு.
(2) நிகழ்கால மற்றும் எதிர்காலச் சந்ததியினரின் நலன்களையும், சூழல் தொடர்பாக முடிவெடுக்கும் செயல்முறையிற் பங்குகொள்வதற்கு ஒவ்வொரு நபருக்கும் இருக்கும் உரிமையையும் கருத்திலெடுத்துக்கொண்டு, அரசானது சூழற்பாதுகாப்பையும், இயற்கை வளங்களின் நீடிப்புத்திறப் பயன்பாட்டையும் உறுதிசெய்வதற்குஇ மற்றும் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நிலைப்பாடு
20. (1) வேறுநாட்டுக் குடிமக்கள் மற்றும் நாடற்றவர்கள் உட்பட, இலங்கையில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வசிக்கும் அனைவருக்கும் இவ்வத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் உள்ளன.
(2) ஒவ்வொருநபரும், இவ்வத்தியாயத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவருக்கு உரித்தான அடிப்படை உரிமை அல்லது சுதந்திரமானது அரச நடவடிக்கைகளால் மீறப்பட்டமை அல்லது உடனடியாக மீறப்படவுள்ளமை தொடர்பில் அல்லது இவ்வத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை அரசு நிறைவேற்றத் தவறியுள்ளமை தொடர்பில் மாகாண மேல் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கும் உரித்துடையவராவர். இவ்வுருப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் ஒருவர் பொதுமக்கள் நலனின் அடிப்படையில் மாகாண மேல் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிப்பதைத் தடுக்காது.
தீர்வுகளும் பரிகாரங்களும்
21. எவரேனுமொருவர், இவ்வத்தியாயத்திற் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் அடிப்படை உரிமை அல்லது சுதந்திரம் அரச நடவடிக்கையால் மீறப்பட்டுள்ளது அல்லது உடனடியாக மீறப்படவுள்ளதெனச் சாட்டுமிடத்து அல்லது அரசானது இவ்வத்தியாயத்திற் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டது எனச் சாட்டுமிடத்து, அத்தகைய மீறல் தொடர்பில் பரிகாரம் அல்லது குறைநிவர்த்தி வேண்டி, அவ்வேளையில் நடைமுறையிலுள்ள நீதிமன்ற விதிகளுக்கிணங்கித், தாமாகவோ அல்லது தமது பிரதிநிதி மூலமாகவோ, மாகாண மேல் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அத்தகைய விண்ணப்பம் தொடர்பாக மாகாண மேல் நீதிமன்றமானது, ஆட்கொணர்விப்பு, செயலுறுத்து, தடையுறுத்து, தகுதிவினவு மற்றும் நெறிமுறைக்கேட்பு ஆகிய இயல்பினவான பேராணைகளில் பொருத்தமான நீதிர்ப்பேராணை அல்லது கட்டளை உட்பட அத்தகைய பரிகாரத்தை அல்லது குறைநிவர்த்தியைஇ அல்லது நீதியானதும் ஒப்புரவானதும் என அது கருதக்கூடியவாறான அத்தகைய பணிப்புரைகளை வழங்க முடியும்.
அரச உத்தியோகத்தர்கள்
22. ஒருமுறையீடானது, பகிரங்க அதிகாரியின் அல்லது அரசாங்க நிறுவனத்தின் அடிப்படை உரிமை அல்லது சுதந்திரம், அவர்களின் உத்தியோகபூர்வச் செயல்நடவடிக்கைகளின்போது மீறப்பட்டுள்ளமை அல்லது உடனடியாக மீறப்படவுள்ளமை பற்றியதாக இருப்பின், அத்தகைய அதிகாரி அல்லது நிறுவனம் மாகாண மேல் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்க முன் சட்டத்தால் வழங்கப்படுகின்ற வினைத்திறனுள்ள வேறு அனைத்துப் பரிகாரங்களையும் இளைத்திருக்க வேண்டும்.
மேன்முறையீடு
23. மாகாண மேல் நீதிமன்றம் இவ்வத்தியாயத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஏதேனும் விண்ணப்பத்திற்கு வழங்கிய கட்டளையால் இடருற்ற எந்நபரும், அக்கட்டளை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றுமாத காலப்பகுதிக்குள் அக்கடளைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் உரிமையை உடையவராவார்.
பொருள்கொள்ளல்
24. நீதிமன்றம், இவ்வத்தியாயத்தின் எந்தவோர் ஏற்பட்டிற்கும் பொருட்கோடல் வழங்கும்போது:
(அ) சுதந்திரம் மற்றும் மக்களாட்சிச் சமூகத்தின் நெறிகளை மேம்படுத்த வேண்டும்;
(ஆ) அத்தகைய பொருட்கோடல் சர்வதேச சட்டத்தின்கீழ் இலங்கையின் கடப்பாடுகளுடன் இசைவு ஆனது என்பதை உறுதிசெய்ய வேண்டும் மற்றும்
(இ) அந்நியச்சட்டங்கள் மற்றும் சர்வதேச நீதிமன்றங்கள், நியாயசபைகள், அத்துடன் ஒப்பந்தங்களால் நிறுவப்பட்ட அமைப்புக்கள் ஆகியவற்றின் தீர்ப்புக்களையும் கருத்திற்கொள்ளலாம்.