பட மூலம், @GotabayaR

ஜி.ஆர். – எம்.ஆர். – பி.ஆர். இன் பொதுஜன பெரமுன வெற்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், அந்த வெற்றி எவரும் கணிப்பிட முடியாததாக இருக்கிறது, கிட்டத்தட்ட அது இமாலய வெற்றி. ரணில் விக்கிரமசிங்கவும் பனிப்போர் துறவிகளால் (Cold War Monks) முன்னெடுக்கப்பட்ட அதிதேசியவாதமும் வெற்றியடைந்தன என தெரிவிப்பதை தவிர இந்தத் தருணத்தில் வேறு எதையும் தெரிவிப்பது  அர்த்தமற்றது.

முன்னையவரின் வர்க்க நலனும்,முழுமையான சுயநலமும் வங்குரோத்து அரசியலும் அவரது அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றியதுடன் மாத்திரமல்லாமல் அவரது கட்சியையும் அழித்துள்ளது. பௌத்த மதகுமாரின் ஆதரவுடனான அதிதீவிரதேசியவாத புத்திஜீவிகள் தேர்தலை வெல்வதற்கான வலுவான ஆயுதம் என்பது மீண்டும் புலனாகியுள்ளது. 2019இல் அவர்கள் வெற்றிபெற்றார்கள், 2020 இல் மீண்டும் அதனை சாதித்துக்காட்டியுள்ளார்கள்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அனேகமாக உள்ள நிலையில் (எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டால் எதிர்கட்சியில் உள்ள சந்தர்ப்பவாதிகள் அதனை நிரப்புவார்கள்) கோட்டபாய ராஜபக்‌ஷவின் அரசாங்கம், அதிகளவு பரப்புரை செய்த பாதுகாப்பான, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டபூர்வமான சமூகத்தினை ஏற்படுத்துமா? செழிப்பு மற்றும் அற்புதத்தை அது உருவாக்குமா? இதனை சாத்தியமாக்குவதற்கு மூன்று தடைகள் காணப்படுகின்றன.

முதலாவது: ஜனாதிபதி பிரதமர் என்ற இரு அதிகார மையங்கள் மத்தியில் அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பானது. இது ஜி.ஆர். – எம்.ஆர். மத்தியிலான நீண்ட மோதலாக மாறலாம். மூன்றாவது பி.ஆர். ஐயும் அது உள்வாங்கலாம். இடைவிடாத குடும்பச் சண்டையாக அது மாறலாம். அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை அரசமைப்பிலிருந்து அகற்றும் விடயம் மீதே எம்.ஆர். தனது அனைத்து நம்பிக்கையையும் முதலீடு  செய்துள்ளார். அவரது கனவை நனவாக்க அது அவசியமாகவுள்ளது.

இராணுவ ஒழுக்கவாதியான ஜி.ஆர். ஆடம்பர அரசியல்வாதியான எம்.ஆர். ஐ வெல்வாரா? அல்லது மாற்றீடாகவும் யதார்த்தபூர்வமாகவும் 19ஆவது திருத்தம் அகற்றப்படாத நிலையில் காலத்துக்குக் காலம் எழக்கூடிய பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து அதிகாரம் இருவர் மத்தியிலும் பகிரப்படும் நிலை காணப்படுமா? எவ்வாறாகயிருந்தாலும், அதிகாரத்தின் உச்சியில் உள்ள ஒரு குடும்பத்தின் வெற்றி இலங்கையின் அரசியலமைப்பு அதிகாரத்தில் புதிய மற்றும் புதிரான அத்தியாயத்தைத் திறந்துள்ளது.

இரண்டாவது: செழிப்பு மற்றும் மகிமை பற்றிய தொலைநோக்கு முற்றுமுழுதாக நாட்டினது பொருளாதாரத்தின் நிலைமை மற்றும் வளர்ச்சியில் தங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்கனவே முன்னைய ஆட்சியின் போது ஆரம்பமாகிவிட்டது. ஆனால், ஜி.ஆர். இன்  ஜனாதிபதி ஆட்சியின் கண்மூடித்தனமான நிதி நடவடிக்கையின் போதே அது கவனத்தை ஈர்த்தது. அதன் பின்னர் கொவிட்-19 இன் பொருளாதார விளைவுகளால் அது கவனத்தை ஈர்த்தது. உலக வங்கி ஏற்கனவே இலங்கையை குறைந்த வருமான நடுத்தர நாடு என்ற பட்டியலுக்குள் மீள சேர்த்துள்ளது. கொவிட்-19க்கு முந்தைய காலத்துக்கு பொருளாதாரம் திரும்புவது சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாக மிகவும் கடுமையானதாக –  மெதுவானதாகக் காணப்படப்போகின்றது. ‘வி’ வடிவத்தில் ‘யு’ வடிவத்தில் அல்லது ‘டிஸ்’ (Dish) வடிவத்தில் பொருளாதாரம் தற்போதைக்கு மாறும் என எதிர்வுகூறுவது கல்வியாளர் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்தாக மாத்திரம் காணப்படும்.

பொருளாதார வீழ்ச்சியை சமாளிப்பதற்கு மூன்று துறைகளில் இந்த அரசாங்கம் நெருக்கடியைச் சந்திக்கும். முதலாவது – சர்வதேச பொருளாதார மந்தநிலை, இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதி சந்தைகள் வற்றிப்போன நிலையை உருவாக்கியுள்ளது. அவற்றிற்கு மாற்றீடான ஒன்றை கண்டுபிடிப்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை. சில நிபுணர்கள் தெரிவிப்பது போல புதிய ஏற்றுமதிக்கு மாறுவதற்கு வெளிநாட்டிலிருந்து மேலதிக வளங்கள் அவசியம், இது நாட்டின் மிகச்சிறிய வெளிநாட்டு இருப்புகளின் மீது  மேலும் சுமையை அதிகரிக்கும்.

இரண்டாவது – இலங்கைக்கு இலாபகரமான வெளிநாட்டு நாணயத்தை ஈட்டக்கூடிய சுற்றுலாப்பயணத்துறை சர்வதேச ரீதியில் காணப்படும் போக்குவரத்து கட்டுப்பாடுகளால் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. விமான தொழில்துறை 2024 வரை கொவிட்டிற்கு முந்தைய காலத்துக்கு திரும்புவது குறித்து நம்பிக்கையற்றதாக காணப்படுகின்றது. 100 வீதம் வெற்றியளிக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அன்றி செல்வந்த நாடுகளில் உள்ள சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் ஆர்வத்தை கொண்ட வயதினர், வெளிநாடுகளுக்குச் செல்வதன் மூலம் தங்கள் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த விரும்பமாட்டார்கள்.

மூன்றாவதாக – நாடு பெருமளவிற்கு வெளிநாட்டு வருவாய்க்கு நம்பியிருந்த மத்திய கிழக்கு தொழில்சந்தை, வெளிநாட்டு தொழிலாளர்களை நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் திருப்பி அனுப்ப ஆரம்பித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து திரும்பி வருபவர்கள் ஏற்கனவே இலங்கையில் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ள ஆயிரக்கணக்கானவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போகின்றனர். ஒட்டுமொத்தத்தில் ஏற்றுமதி, சுற்றுலாத்துறை வருமானம், வெளிநாட்டு நாணய வருவாய் ஆகியன குறைவடையத்தொடங்கியுள்ளன. புதிய அரசாங்கம் தனது செழிப்பு மற்றும் மகிமை பற்றிய அதன் தொலைநோக்கை முன்னெடுப்பதற்கு கடன் பெறுவதைத் தவிர வேறு எந்த வழிகளில் நிதிவளங்களை பெற்றுக்கொள்ளப்போகின்றது, நாடு மோசமான கடன்நெருக்கடியில் சிக்குண்டுள்ளது என்பதை நாங்கள் கருத்தில்கொள்ளவேண்டும்.

இங்கிருந்தே மூன்றாவது தடை உருவாகின்றது. அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதிகளை கடன்கள் மூலம் பெற்றால், அத்தகைய கடன்களை வாங்குவதற்கான செலவு கடன்களை தவறாமல் வழங்குவதற்கான சுமையை விட அதிகமாகயிருக்கும். கடன்களை வழங்குபவர்கள் குறிப்பாக அவர்கள் வெளிநாடுகளாகயிருந்தால் வட்டி மற்றும் அசலை விட அதிகமாக கோரப்போகின்றார்கள். ஏற்கனவே நாடு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்தியாவுடன் நாணய பரிவர்த்தனைக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே இடம்பெறுகின்றன. ஏன் இந்த விடயத்தில் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இது குறித்த பேச்சுவார்த்தைகளில் இன்னொரு முக்கிய சொத்து தொடர்புபட்டுள்ளதா? அமெரிக்காவுடனான மில்லேனியம் ஒப்பந்தம் குறித்தும் இதே கேள்வியை கேட்கலாம். கடன்பெறுபவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை தெரிவு செய்யமுடியாது.

இந்திய பெருங்கடலின் புவிசார் அரசியலின் சுழலிற்குள் இலங்கை சிக்குப்பட்டுள்ளது என்பது இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது அது கையாண்ட முட்டாள்தனமான தந்திரோபாயத்திற்காக அது செலுத்தும் விலையே. உதவி வழங்குபவர்கள் மற்றும் உதவி வழங்கும் சமூகத்திடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளின் போது அதன் பிராந்திய இறையாண்மை பேரம்பேசும் பொருளாகக் காணப்படுவதை இலங்கையால் தவிர்க்க முடியாது. அதிதீவிர தேசியவாதிகள் இதனை நிராகரிக்கலாம். ஆனால், எதிர்காலமே இறுதி நீதிபதியாக காணப்படும் .

இந்த நெருக்கடிகள் அனைத்தும் சேர்ந்த இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்கள் உட்பட சாதாரண இலங்கையர்களின் பொருளாதார வாழ்க்கை சகிக்க முடியாததாக மாறலாம். அடுத்த வரவு செலவுத் திட்டத்திலோ அல்லது அதற்கு அடுத்ததிலேயோ அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை அறிவிக்கவேண்டிய நிலையேற்படலாம். இதன் அர்த்தம் என்னவென்றால் வரிகளை அதிகரிக்கவேண்டியிருக்கும், ஏற்றுமதிகளை கட்டுப்படுத்தவேண்டியிருக்கும், பொதுசெலவீனங்களை கட்டுப்படுத்தவேண்டியிருக்கும் அல்லது தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுவதாக காணப்படும். குறிப்பாக கல்வி சுகாதார துறைகளுக்கான அரச செலவீனங்கள் இதன் காரணமாக பாதிக்கப்படும்.

இவை அனைத்தும் அதிகரிக்கும் வாழ்க்கை செலவீனங்களில் பிரதிபலிக்கும் வறுமை வருமான ஏற்றத்தாழ்வு என்பது மக்களின் எதிர்ப்பில் முக்கிய இடத்தை பெறும். மக்கள் மத்தியில் எழும் அதிருப்தி காரணமாக அரசாங்கம் ஏதேச்சாதிகாரமானதாக மாறலாம். தேர்தலில் பாரிய வெற்றி என்பது பொருளாதார பின்னடைவை கட்டுப்படுத்தாது,பனிப்போர் துறவிகள் தேர்தலில் வெற்றிபெறலாம்,ஆனால் பொருளாதாரத்தை அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியாது.

தீவிரமடையும் பொருளாதார நெருக்கடிகளை ஆக்குறைந்தது ஒரு விடயத்தினாலாவது  குறைக்க முடியும். அது தேசிய நல்லிணக்கத்தின் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதினாலாகும். நல்லிணக்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளமாகும். ஜனாதிபதி நினைப்பது போல வேறு வழியில் அதை அடைய முடியாது. அதிதீவிர புத்திஜீவிகளும் பனிப்போர் கால மதகுருக்களும் நல்லிணக்கத்திற்கான எந்த முயற்சியையும் தடுக்க முயலலாம். அவர்களது உறுதிப்பாடு பொருளாதார அழிவிற்கு வழிவகுக்கும். இந்தச் சக்திகளை அரசாங்கத்துக்குள் உள்ள நல்ல மனங்களால் முறியடிக்க முடியுமா? பொருத்திருந்துதான பார்க்கவேண்டும்.

ஆனால், ஒரு பக்கத்தில் ஐக்கியமும் நல்லிணக்கமும் இல்லாமல் மற்றைய பக்கத்தில் அதிகரித்த பொருளாதார நெருக்கடியும், வெளிநாட்டு அழுத்தங்களும் காணப்பட்டால் தீவிரவாதம் தனது ஆபத்தான தலையைத் தூக்கலாம். அதனால், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் அதற்கும் மேலதிக வருமானம் தேவைப்படும்.

இறுதியாக, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுனவிற்கான வாக்குகள் மாற்றமடையாமல் இருப்பதை கருத்தில்கொள்ளும்போது பெருமளவு ஆசனங்கள் கிடைத்துள்ளதை அரசாங்கத்திற்கான அதிகரித்த ஆதரவாகக் கருதக்கூடாது.

எதிர்க்கட்சிகள் சிதறுண்டவையாகக் காணப்படுகின்றன. ஆனால், முழுமையாக அவை பலவீனப்படவில்லை. இதன் அர்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் தேர்தல் கோட்டையை  அசைக்கவே முடியாது என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. கோட்டபாய ராஜபக்‌ஷவினதும் மஹிந்த ராஜபக்‌ஷவினதும் அரசாங்கத்தின் முதலாவது எதிரியாக பொருளாதாரமே காணப்படும். அவரது பாதுகாப்பான, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டபூர்வமான சமூகம் மற்றும் செழிப்பு மற்றும் மகிமைக்கான தொலைநோக்கு ஆகியன சில எதிர்பாராத அதிஸ்டவசமான சூழ்நிலைகள் உண்மையாக்கினால் அன்றி அவை வெறும் கானால் நீராகவே காணப்படும்.​

கலாநிதி அமீர் அலி

Electoral landslide cannot stop economic backslide என்ற தலைப்பில் டெய்லி எவ்டி இல் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.