படம் | கட்டுரையாளர்
“நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…”
மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த தகவல் இது.
இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த இராசநாயகம் லீலாவதி மீண்டும் 2012ஆம் ஆண்டளவில் கிளிநொச்சியில் மீள்குடியேறியபோது இந்தக் கடிதத் துண்டு கிடைக்கப் பெற்றுள்ளது.
“யுனிசெப்ல பொடியல் வந்திருக்கினம், அவங்கதான் இந்தத் துண்டு குடுத்திட்டு போயிருக்கினம். திருகோணமல ரெண்டாம் கட்டையிலதான் அவங்க இந்தத் துண்ட கண்டெடுத்திருக்கினம். அப்ப நாங்க இருந்தது வவுனியா முகாமுல.”
லெட்டர் ஒன்டும் இல்ல, சின்ன துண்டுல, பென்சிலால எழுதியிருந்தவர். அது அவர்ட கையெழுத்துதான்” என்று உறுதியாகக் கூறுகிறது லீலாவதியின் கண்கள்.
“நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க” – தகப்பன்ட பெயர், என்ட பெயரும் போட்டு வீட்டு எட்ரஸும் போட்டிருந்தது, அது மகன்ட கையெழுத்துதான்” – மீண்டும் உறுதிபடக் கூறுகிறார் லீலாவதி.
17 வயதான இராசநாயகம் நிரோஜன் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் வலுக்கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உள்ளானவர் என்றும், அவரை கடைசியாக 2008ஆம் ஆண்டு தான் சந்தித்தார் என்றும் லீலாவதி கூறுகிறார்.
“2008 பன்னிரெண்டாம் மாதம் 15ஆம் திகதி கடைசியா அவர உடையார்கட்டுப் பகுதியில வச்சுதான் கண்டு கதைச்சனாங்கள். “அம்மா, என்ன எதிர்பார்க்காதீங்க, நான் சரணடையப் போறன். நீங்க, தங்கச்சி, அக்காக்கள கூட்டிக்கொண்டு உள்ளுக்க போங்க” என்டுதான் சொன்னவர். கடைசியா அவ்வளவுதான் பேசினவர். அவரோட இருந்த நாலு பேர்ல ரெண்டு பொடியள மாத்தளன் ஆஸ்பத்திரியில வச்சி கண்டனான். காயப்பட்டிருந்தவ. மகன் ஆயுதத்தோட போய் சரணடைஞ்சதாதான் அவையளும் சொன்னவ” – அழுகைக் குரல் முந்திக்கொண்டு வர லீலாவதியின் கண்களில் கண்ணீர் வரவில்லை. காணாமல்போயுள்ள இரண்டு பிள்ளைகளையும் தேடியழைந்த கண்கள் எத்தனைக் காலம் கண்ணீர் சிந்தியிருக்கும். பிள்ளைகள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் எத்தனை பேரிடம் கதை கூறியிருப்பார். அந்த நீண்ட லிஸ்ட்டில் அடுத்ததாக நானும் சேர்ந்திருப்பதை வராத அவரது கண்ணீர் கூறுகிறது.
லீலாவதியின் மகன் மட்டுமன்றி அவரது நான்காவது மகளான இராசநாயகம் ஜென்சிகா என்பவரும் 2009 ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி காணாமல்போயுள்ளார். அப்போது அவருக்கு 15 வயதிருக்கும்.
“கடைசி நேரம்தான் மகள் காணாமல்போனவ, நாங்க இராணுவத்திட்ட போய் சேர ஒரு கிழமைக்கு முதல்ல.”
“இயக்கம் புடிச்சதா இராணுவம் புடிச்சதா, எதன்டு எங்களுக்குத் தெரியாது. கடற்கரை பக்கம் போனவ, அன்டயலயிருந்து அவ பத்தி ஒரு தகவலும் இல்ல. மாமாட மகன் ஒருத்தர் சொன்னவர், அவா காயப்பட்டு இருக்கா என்டு. நாங்க இராணுவத்திட்ட போறதுக்கு 2 நாட்களுக்கு முன்னம்தான் காயப்பட்டிருக்கா, தேடிப்பார்த்தனான். ஆனா அவ கிடைக்கல்ல. இங்க வந்த பிறகும்கூட அவ தொடர்பா எந்த தகவலும் இல்ல” என்று கூறும் லீலாவதி, ஆனால் மகன் உயிருடன் இருப்பதாக சிஜடியினரே நேரில் வந்து கூறினர் என்றும் கூறுகிறார் அவர்.
“சிஐடி வந்து இங்க விசாரிச்சவன், கிளிநொச்சி பொலிஸ்ல இருந்து வந்தும் விசாரிச்சவ. ரெண்டு பேர பத்தியும் விசாரிச்சவ. சிஐடியே சொன்னவர் உங்கட மகன் இருக்கிறான் என்டு. மகன பத்தி நாங்க சொல்ல முதல்லயே அத்தன தரவயும் அவன் சொல்லிட்டான். “நம்பியிருங்கோ, உங்கட மகன் வருவார், மகள பத்தி ஒருதகவலும் தெரியாது” என்று சிஐடிகாரர் சொன்னவங்க” – அரசாங்கமே கூறியது போன்றதொரு நம்பிக்கை லீலாவதிக்கு. எங்கேயாவது மகன் இருக்கிறான், எப்படியாவது தேடிக்கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கை அவரிடம்.
“மனித உரிமைகள் ஆணைக்குழுவுல என்ட மகன் பெயர் வந்தது, பூசாவுல ராசநாயகம் நிரோஜன் என்டு இருந்தது. அப்ப நான் வவுனியா பொலிஸ்லயும், ஜிஎஸ்கிட்ட லெட்டர் ஒன்டும் எடுத்துக்கொண்டு பூசாவுக்குப் போனனான். பூசாவுக்குப் போக, இல்லையெண்டுட்டான். நிரோஜன் என்டு ஒருத்தர் இருக்கிறார். ஆனா, அது உங்கட மகன் இல்லையெண்டுட்டான். காட்டமாட்டன் என்டும் சொன்னான்” என்று கூற குறுக்கிட்ட லீலாவதியின் கணவர் இராசநாயகம், “போனா உள்ளுக்க விடுவாங்களா? இல்லதானே…? அவங்க சொல்ற பதிலத்தானே நாங்க கேட்கனும். உள்ளுக்க வச்சுக்கொண்டு எத சொன்னாலும் கேக்கத்தானே வேணும்” – என்று கூறுகிறார். அவர் எதிலும் நம்பிக்கை அற்றவராக இருப்பதைக் காணமுடிகிறது.
“கடந்த அரசாங்கத்தால புள்ளகளுக்கு உத்தியோகம் தரலாம், கொடுப்பனவு தரலாம் என்டு சொல்லிக்கிட்ட வந்தவங்க. மரண செர்ட்டிபிகேட் எடுத்துக்கொண்டா ஒரு லட்சம் தரலாம் என்டு சொன்னவங்க. ஒரு லட்சம் இல்ல, பத்து லட்சம், ஒரு கோடி தந்தாலும் எங்களுக்கு தேவையில்ல. புள்ள படிச்சிருக்கு, படிப்புக்கு ஏற்ற மாதிரி தொழில் வந்தா வரட்டும், காணாமபோன புள்ளகளுக்காக காசு வாங்கிட்டு அதுல சாப்பிட்டு வாழுறதா…? நாங்க அப்படி இல்ல…” – இராசநாயகத்தின் வார்த்தையில் கோபம் வெளிப்படுகிறது.
“அந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் ஒன்டுதான். வித்தியாசம் இல்லை. அதுதான் ரணிலும் சொல்லிட்டாரே… ஒருத்தரும் இல்லையென்டு… அப்ப என்ன செய்றது?” – இராசநாயகம் இப்படிக் கூற லீலாவதி அழுகுரல் ஆரம்பிக்கிறது…
“எவ்வளவு சனம் செத்தது, அந்த சனத்தோடு நாங்களும் செத்து புள்ளகள் பிழைச்சிருந்தா சந்தோஷம். அப்படியொரு நிலமய கடவுள் தரல்லயே என்டு நினைக்கிறம். இல்ல, எல்லோரும் ஒன்டா செத்திருந்தாலும் பரவாயில்ல, எல்லாம் முடிஞ்சிருக்கும். இல்ல, என்ட கண்ணுக்கு முன்னாடி புள்ளக செத்திருந்தாலும் பரவாயில்ல, இனி என்ட புள்ள வராது… வராது… என்டு இருக்கலாம். இவ்வளவு சனம் செத்ததுதானே… நாங்க இருக்கலயா? அப்படி நடந்திருந்தா அத்தோட எல்லாம் முடிஞ்சிருக்கும். ஆனா, இப்ப சாகும் வரைக்கும் இதே யோசனதானே…? என்ட புள்ளக இருக்குதா? இல்லையா? நான் தேடுற மாதிரி அதுகளும் எங்கள தேடுதா?”
“கை கால் இல்லாம வந்திருந்தா கூட சாகும் வரைக்கும் என்ட புள்ளகள வச்சி பார்த்திருப்பன். கடவுள் அப்படிகூட கண்ல காட்டேல்ல…” – வற்றிப்போயிருந்த கண்ணீர் ஊற்றெடுக்கிறது. ஓவென அழ ஆரம்பிக்கிறார். திடீரென எழுந்து அறையினுள் சென்றவர் ஒரு பைலுடன் திரும்பி வருகிறார். தரையில் உட்கார்ந்தவாறு பைலில் இருந்த அனைத்தையும் காண்பிக்கிறார்.
முறைப்பாட்டுக் கடிதங்கள், ஜனாதிபதி ஆணைக்குழு கடிதங்கள், மனுக்கள், படங்கள் என தரை நிறைந்து கிடக்கிறது. அவை அனைத்திலும் தேடல், அலைச்சல், நம்பிக்கை, ஏமாற்றம், எதிர்காலம் புதைந்திருப்பதைக் காணமுடிகிறது.
பிள்ளைகளை இழந்து தவிக்கும் தன் போன்றவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில் நமது சமூகம் நடந்துகொள்வதாக லீலாவாதி குறை கூறுகிறார்.
“நாங்கெல்லாம் புண்ணியம் செஞ்சதாலதான் எங்கட புள்ளங்கள கடவுள் உயிரோட காப்பாற்றி கொண்டுவந்திருக்கான் என்டு எங்கட முன்னாடியே சனமே சொல்லுதுகள். எத்தனையோ பேர் சொல்லியிருக்கினம்… அப்ப எங்களுக்கு எவ்வளவு வேதனையா இருக்கும். அப்படியென்டா நான் பாவம் செஞ்சவலா… எங்கட சனமே இப்படி பேசுதுகள்…”
“புள்ளகள் காணாமல்போனதா உறுதிப்படுத்தி கடிதம் ஒன்ட தரச் சொல்லி ஜிஎஸ் கிட்ட சொன்னனான். அதுக்கு அவர், “வெளிநாடுகளல்ல புள்ளகள வச்சுக்கொண்டு காணாமல்போனது, காணாமல்போனது என்டு சொன்னா என்னென்டு உறுதிப்படுத்தித் தாரது? மீள்குடியேற்றத்துக்கு முன்ன இருந்தவங்க, மீள்குடியேற்றத்துக்கு பிறகு இல்லையென்டுதான் உறுதிப்படுத்தித் தருவோம்”.
“வெளிநாட்டுல வச்சுக்கொண்டு புள்ள காணாமல்போனதா எந்தவொரு தாயும் வந்து உங்ககிட்ட கேட்பாளா? ஜிஎஸ்மாரே இப்படிச் சொன்னா, நாங்க யார் கிட்ட போய் கேக்கிறது? சமாதான நீதிவான் கிட்ட போய் கேட்டா, நாங்க எப்படி அரசாங்கத்துக்கு எதிரா கடிதம் தாரது என்டு சொல்றார். அப்படியென்டா நாங்க யார் கிட்ட போய் நியாயம் கேக்கிறது? யார் எங்களுக்காக வாறது? அரசாங்கத்துக்கு எதிரா நாங்க கடிதம் கேக்கலயே, புள்ளகள் காணாமல்போனதாதான் கேக்கிறன்” – பிள்ளைகள் காணாமல்போனதையே உறுதிப்படுத்தி கடிதம் ஒன்றைத் தரமறுக்கும் அரசாங்கம், எப்படி பிள்ளைகளை மீட்டுத்தருவார்கள் என்று நம்பிக்கைக் கொள்வது என்று என்னுள் எண்ணம் தோன்றினாலும், அதை எவ்வாறு லீலாவதியிடம் தெரிவிப்பது. கடைசி வரைக்கும் மகன் வருவான், மகள் வருவாள் என்ற இலங்கை அரசாங்கங்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதுதான்…
கீழே பரப்பிக் கிடக்கும் காகிதங்களில் உள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சின்னங்கள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் (TID) வழங்கப்பட்ட சிறிய துண்டுகளுக்கு இடையே லீலாவதியின் காணாமல்போன இரு பிள்ளைகளும் எட்டிப் பார்க்கிறார்கள்…
செல்வராஜா ராஜசேகர்