படம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR
ஊடகப்பரப்பிலும், காணாமல் போனவர்களைத் தேடியலையும் போராட்டக்கார்கள் மத்தியிலும் ஜெயக்குமாரி அக்கா என அறியப்பட்டவர்தான், ஜெயக்குமாரி பாலச்சந்திரன். இப்போதெல்லாம் எப்போதாவது நடக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களில் கூட ஜெயக்குமாரி அக்காவை காணமுடிவதில்லை.
“தர்மபுரம் பள்ளிக்கூடத்துக்கு முன்னால் போற ஒழுங்கையில இறங்கினா பக்கத்திலதான் வீடு. யாரைக் கேட்டாலும் காட்டுவினம்” ஜெயக்குமாரி அக்காவின் இருப்பு பற்றி யாரைக்கேட்டாலும் இப்படித்தான் சொல்வார்கள்.
“தர்மபுரம் பள்ளிக்கூடத்தடியில இறங்கி, அதுக்கு முன்னால போற காபெட் றோட்டால நேர வாங்கோ. காபெட் றோட் கொஞ்சத்தூரந்தான். பிறகு மண் றோட்டால வளைஞ்சு வளைஞ்சு வாங்கோ. இடையில கடைக்காரரிட்டயோ, ஆட்டோக்காரரிட்டயோ, சனங்களிட்டயோ விசாரிச்சிப்போடாதையுங்கோ” – முன்னெச்சரிக்கையோடு ஜெயக்குமாரி அக்கா இப்படித்தான் தன் வீட்டுக்கு வழிசொல்கிறார்.
உண்மையில் ஜெயக்குமாரி அக்காவின் வீட்டுக்கு முகவரி சொன்னது போல, தருமபுரம் பள்ளிக்கூடத்துக்கு முன்னால் எல்லாம் அவரின் வீடு இல்லை. பள்ளிக்கூடத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில், பற்றைக்காடுகளுக்குள்ளால் போகும் மண் வீதியின் முடிவிடத்தில் இருக்கும் மக்கள் குடியிருப்பில்தான் அவரின் வீடு இருக்கிறது. புளியம்பொக்கணை கிராமத்தின் தொடக்கம் அது. புவியியலமைப்பின் படி வறண்ட பற்றைக்காடுகளும், உவர் வெளியும் கலந்த நிலம். கடல் சூழலும், காட்டுச் சூழலும் சந்தித்துக்கொள்ளும் பறட்டை நிலம். அப்படியான நிலத்தில் இருக்கும், “குருகுலராஜா (வடக்கு மாகாண சபை கல்வி அமைச்சர்) திருத்திக்கொடுத்த வீட்டின்” தகரக் கதவடியில் நின்றுதான் ஜெயக்குமாரி அக்கா வரவேற்கின்றார்.
காணாமல் போனோர் தொடர்பிலான எத்தகைய போராட்டமாக இருந்தாலும் ஜெயக்குமாரி அக்காவையும், மகள் விபூசிகாவையும் பார்க்க முடியும். கையில், கறுப்பு – வெள்ளை நிறத்திலான புகைப்படம் ஒன்றைத் தாங்கியபடி, போராட்டக்காரர்களின் முன்னிலையில் நின்று கதறுவர். சர்வதேசத்திடம் நீதி கோருவர். அவர்கள் இருவரின் புகைப்படங்களையும் பிரசுரிக்காத ஊடகங்கள் இல்லை. பிரபலமான ஜனநாயக வழிப் போராட்டக்காரர்கள் அவர்கள். கடந்த ஆட்சிக்காலத்தில் அவர்களின் கண்ணீர் ஐ.நா. வரையில் பிசுபிசுத்தது.
“இந்தா இந்த இடம்தான். இதிலதான் அது நடந்தது. என்ர பிள்ளை அவன். அவனும் அப்பிடித்தான் சொல்லுவான். நான் உங்கட மகன் அம்மா. தங்கச்சிய பள்ளிக்கூடத்தால ஏத்திவர, பரந்தனில் நிக்கிறன், இந்தா வாறன் எண்டு ஓடிவந்து, என்ர மகள ஏத்திக்கொண்டு வந்துவிடும் என்ர பிள்ள. அவன நினைச்சா நெஞ்சு வெடிக்குது. தாய்க்குக்கூட அவ்வள கவனமா இருந்திருக்கமாட்டான். எனக்கு அப்பன மட்டும்தான் தெரியும். கோபிய பற்றி ஒருநாள் கூட கதைச்சதோ, வந்ததோ, சாப்பாடு – தேத்தண்ணி குடுத்ததோ கூட இல்ல. பிரச்சினைக்குப் பிறகுதான் கோபிய பற்றி தெரியும். புலிகள், அது இது எண்டுதான் பிடிச்சவ, ஆனால் வேலையால வந்து கழற்றி போடுற சேட்டு ஜீன்ஸ தவிர அப்பனிட்ட ஒண்டுமே இருக்கேல்ல. நீங்கள் ஆர் எவரோ தெரியேல்ல. நீங்க ஆரெண்டா எனக்கென்ன. உண்மையத்தானே சொல்றன்” நம்பியும், நம்பாமலும் கண்டவுடனே கதையைச் சொல்லும் ஜெயக்குமாரியிடம், அனைவரின் மீதும் அதீத நம்பிக்கையீனம் தொற்றியிருக்கிறது. ஆனாலும் அவர் கடந்திருக்கும் துயரத்தின் அழுத்தம் மனதுடைத்துப் பொங்கியழ வைக்கிறது. வார்த்தைகளைத் தன்போக்கில் சிதறச் செய்கிறது.
ஜெயக்குமாரி அக்கா குறிப்பிடும் அப்பன், 2009 போர் முடிவின் பின்னர் அறிமுகமான ஏதேச்சயான உதவியாளர்களில் ஒருவர். 2011 ஆண்டில் மீள்குடியேற்றத்துடன், ஜெயக்குமாரி அக்கா இப்போதிருக்கின்ற வீட்டில் குடியேறுகின்றார். அங்கு குடியேறிய பின்னர் 2012இல் ஜெயக்குமாரி அக்காவின் கணவன் நோய்வாய்ப்பட்டு இறந்து போகின்றார். மிஞ்சியது ஜெயக்குமாரி அக்காவும், விபூசிகாவும்தான்.
அதன்பின்னர் ஒருநாள் பயண வழியில், எங்கேயோ பார்த்தவர் போன்ற சாயலுடையவரை ஜெயக்குமாரி அக்கா சந்திக்கிறார்.
“நீங்கள் அப்பன் தானே தம்பி?”.
“ஓம் அம்மா நான் அப்பன்தான்”.
“அப்பாவும் செத்துப்போனாரடா. நானும் தங்கச்சியும் தனிச்சிப்போனம். கஸ்ரப்படுறமடா“.
“நான் இங்கதான் அம்மா டிப்பர்ல மண், கல் ஏத்த வாறனான். நீங்கள் இங்க இருக்கிறது தெரியாது”.
“ஓமடா தம்பி, இங்கால வரேக்க இனி அம்மாவ பாத்திட்டுப்போ”
இதுவே அப்பனுக்கும் ஜெயக்குமாரி அக்காவுக்கும் இடம்பெற்ற முதல் உரையாடல் என நினைவுவைத்து சொல்கிறார் அவர். அதன்பின்னரான நாட்களில், மேலும் வறுமையையும், மகனைத் தேடியலையும் போராட்டங்களையும் ஜெயக்குமாரி அக்கா எதிர்கொண்டார்.
அப்படியான நாட்களில் அடிக்கடி அப்பன் ஜெயக்குமாரி அக்காவின் வீட்டுக்கு வந்து உதவிசெய்தார். வரும் நாட்களின் அங்கு தங்கிநின்றார். மூத்தமகனாகக் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டார். விபூசிகாவின் பாசமிகு அண்ணனாக இருந்தார். தன் மகன்கள் திரும்பி வந்துவிட்ட பெருநிம்மதியை ஜெயக்குமாரி அக்கா உணர்ந்தார்.
இப்பிடியிருந்த பொழுதொன்றில்தான் இலங்கை முழுவதும், தேடப்படும் “பயங்கரவாதிகளாக” அப்பன் மற்றும் கோபி ஆகியோர் அறிவிக்கப்பட்டார்கள். சுவரொட்டிகளில் அவர்களின் படங்கள் வந்தன.
“இந்த நேரம்தான் இருக்கும். இந்த இடம்தான். இந்தா இந்த இடம்தான். இதிலதான் அது நடந்தது. …..என்னை இந்த இடத்திலயே வச்சி சுட்டுப்போடுவம் எண்டு மிரட்டினாங்கள். அண்டைக்கு காலமதான் அப்பனையும் பிடிச்சதோ, சுட்டதோ எண்டாங்கள். எனக்கு என்னைச் சுற்றி என்ன நடக்குதெண்டே தெரியேல்ல. இந்த இடம் எல்லாம் ஒரே ஆமி. என்னைப் பரந்தன் பொலிஸ்காரர் கைதுசெய்து கொண்டு போயிற்றினம். மீண்டும் பயங்கரவாதம் தலையெடுக்க உதவிய குற்றச்சாட்டில் என்னைக் கொண்டு போனவ. இவ்வள பிரச்சினைக்கு பிறகும் யாரும் மீள உருவாக்குவினமா? எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் செய்யினம்?”
“அதுக்குப் பிறகு விசாரண……….. நான் சொல்லத்தேவயில்ல. மகிந்த என்ர குடும்பத்துக்கு செய்த அநியாயங்கள் எத்தின…. எல்லாம் உங்களுக்குத் தெரியும்தானே. 362 நாள் சிறைவாழ்க்க. என்ர மகள்….!” நீண்ட பெருமூச்சுடனாக அமைதியில் உறைந்திருக்கிறார் ஜெயக்குமாரி அக்கா. அவரின் நினைவுகள் விசாரணை அறைகளுக்குள் சென்றிருக்க வேண்டும். அந்த அறையின் நினைவுகளை, அந்த 362 நாள் வாழ்க்கையை அவர் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை.
”விடுதலைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தன். வீட்டில ஒண்டும் இருக்கேல்ல. மகள் சிறுவர் இல்லத்தில. என்னோட இருந்த நாய்க்குட்டி, பூனைக்குட்டி கூட காணாமல் போயிட்டுதுகள். எல்லாமே வெறுமையாகிட்டு. பாய் தலையணையக் கூட சனங்கள் விட்டு வைக்கேல்ல. எல்லாத்தையும் களவெடுத்திட்டுதுகள். பொலிஸ்காரன் வந்து கணக்குப் பாத்தவன். 4 லட்சம் பெறுமதியான சாமனுகள களவுபோயிருக்கு. இதைப்பற்றியெல்லாம் யார் கேட்கிறது? …ம்”
மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடுகிறார். உற்சாகம் பெறுவதற்காக அல்ல. கடந்தவைகள் அனைத்தையும் மறக்க மூச்சைப் பயன்படுத்துகிறார். ஆனாலும் அவரின் பெருமூச்சு படும் தொலைவில் இருக்கும் சுவரில் இரண்டு மகன்களின் படங்கள் மேலும் மேலும் நினைவைக் கிளறுகின்றன. அந்தப் புகைப்படங்களில் தெரிபவர்களின் முகங்கள் மிகுந்த பிஞ்சுத்தனத்துடன் இருக்கின்றன. அதையே பார்த்துக்கொண்டிருந்த ஜெயக்குமாரி அக்கா,
“இந்தப் பிள்ளைகளில் ஒண்டு என்னோட இருந்தாலும் இந்த நிலை எனக்கு வந்திருக்காது. மேல படத்தில இருக்கிறவன்தான் மூத்தவன். அப்ப நாங்கள் திருகோணமலையில் இருந்தனாங்கள். நான் யாழ்ப்பாணத்திலிருந்து கலியாணம் கட்டித்தான் திருகோணமலைக்கு போனனான். தகப்பன் ஒரே குடி. குடிச்சிட்டு வந்து பிள்ளைகளுக்கு அடிக்கும். அப்பிடி அடிச்ச கோவத்தில மூத்தவன் இயக்கத்துக்கு போயிற்றான். அங்க போய் 5 நாள் நிண்டான். வயசுகாணாது எண்டு திருப்பி அனுப்பீற்றாங்கள். வீட்டுக்கு வந்து கூலி வேலைகள்தான் செய்துகொண்டிருந்தவன். வேலைக்கு போகேக்க தான் மகன சுற்றி வளைச்சு சுட்டிட்டாங்கள்”
“…..அது நடந்து கொஞ்ச நாளில இளைய மகன கருணா குழு கடத்த வந்திட்டாங்கள். இரவு – பகல மறைச்சி வச்சிருந்தன். பொலிஸ்காரனே சொன்னான், இங்க உன்ர மகன வச்சிருந்தால் கடத்திப்போடுவாங்கள் எண்டு. அதுக்குப் பிறகுதான் 2007ஆம் அண்டு குடும்பத்தோட வன்னிக்கு வந்தன்.”
வந்தாரை வரவேற்றது வன்னி. ஜெயக்குமாரி அக்காவுக்கும் இடம்கொடுத்தது. ஆனாலும், போர் நெருங்க நெருங்க வறுமை பீடித்தது. ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கான போராட்டமே நீடித்தது.
ஆனாலும் இளையவன் படிக்க ஆசைப்பட்டான். எப்பிடியாவது படிச்சி என்ர குடும்பத்த பாக்க வேணும் எண்டு சொன்னான். கல்விக்கழகத்தில நிண்டு படிச்சவன். ஏ.எல் எடுத்திட்டு வீட்டுக்கு வந்து நிண்டான். அப்ப சரியான கஸ்ரம். என்ர பிள்ளைக்கு சாப்பாடு குடுக்கவே படாதபாடு படுவன். ஒருநாள் அவன் வீட்ட வீட்டு போயிற்றான். நானும் எல்லா இடமும் தேடி அலைஞ்சன். அதோட சண்டையும் வந்து முள்ளிவாய்க்காலுக்கு இடம்பெயர்ந்து போயிற்றம். காணுற இடம் எல்லாம் சனம் சொல்லும், என்ர மகன கண்டனாங்கள் எண்டு. அவன கடைசி வரைக்கும் கண்டிருக்கினம். நான் நேரில காணவேயில்ல.
ஆனா… அந்தப் புத்தகத்தில மகனின்ர படம் இருக்கு.”
உலகம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, மகிந்த அரசாங்கம் வெளியிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்த அறிக்கையில், “எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்படுகின்றது” என்ற தலைப்பின் மேலான புகைப்படத்தில் ஜெயக்குமாரி அக்காவின் இளைய மகன் இடம்பெறுகின்றான் என்கிறார். உடனடியாகவே அந்தப் புத்தகத்தையும் எடுத்து வந்து காட்டுகின்றார். அவர் காட்டும் படமும், வீட்டில் வைத்திருக்கும் படமும் முகச்சாயலளவில் ஒத்துப்போகின்றது.
“எனக்கு இவ்வள அநீதி நடந்திருக்கு. இதுக்கெல்லாம் இந்த அரசாங்கமும் ஒரு தீர்வு தராதா எண்டு அண்டைக்கு சிறீதரன் எம்பியிட்ட கேட்டன். அது போனது போனதுதான். வராதாம்.”
“இப்ப எனக்கு நடக்கவே முடியாதளவுக்கு நோய்வாய்ப்பட்டிருக்கிறன். முன்னம்போல எந்த வேலையும் செய்ய முடியேல்ல. அதுக்குள்ள கூப்பிடுற நேரமெல்லாம் கொழும்புக்கும், பதவியாவுக்கும் வழக்குக்கு வேற போகவேணும். கொழும்பில பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ வழக்கு நடக்குது… இனியும் ஏன் பயங்கரவாதத் தடைச்சட்டம்?”
“…பதவியா வழக்கு ஏன் நடக்குது, என்ன கதைக்கிறாங்கள் எண்டே எனக்குத் தெரியேல்ல. ஏதோ வெடிபொருள் எடுக்கிற சாமான கெப்பற்றிக்கொல்லாவயில வச்சி நான் களவெடுத்திட்டன் எண்டு பிடிச்சாங்கள். அது என்ன எண்டே எனக்குத் தெரியாது. என்னைய மட்டும் ஏன் இப்பிடி சோதிக்கிறாங்கள்…?!”
“இப்ப எல்லாம் யாரும் கதைக்கக் கூடப் பயப்பிடுகினம். போன்ல கதைக்கக்கூட பயப்பிடுகினம். வீட்டுக்கு வரவே ஆக்கள் பயப்பிடுகினம். முதல் உதவி செய்தவ எல்லாம் இந்தப் பிரச்சினைக்குப் பிறகு பாங்குக்கு (வங்கிக்கு) காசு போடக் கூட பயப்பிடுகினம். எனக்கு உதவி செய்தா தங்களுக்கு பிரச்சினை வரும் எண்டு சொல்லுகினம். எனக்கு உதவி வேணும் தம்பி.”
நோய் – வறுமை – வெறுமை – களைப்பு – சலிப்பு – விரக்தி – துயரம் – ஏமாற்றம் என அனைத்து இடர்களோடும் போரிட்டுத் தோற்ற மனதோடு தன் வீட்டு தகரக் கதவடி வரைக்கும் கதைத்துக்கொண்டே வருகிறார் ஜெயக்குமாரி அக்கா.
இன்டோசிறி தளத்துக்காக ஜெரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.