படம் | FOREIGN AFFAIRS
தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள் குறிப்பாக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (Economic and Technical Cooperation) தொடர்பில், மஹிந்த ஆதரவு எதிரணியினர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, இந்தியா தொடர்பான விவாதங்கள் மீண்டும் மேலெழுந்திருக்கின்றன. இவ்வாறான எதிரணி பிரச்சாரங்களுக்கு ரணில் கடும் தொனியில் பதிலளித்திருக்கின்றார். அதாவது, யார் எதிர்த்தாலும் இந்தியாவுடனும் சீனாவுடனும் உடன்பாடுகளில் கைச்சாத்திட்டே ஆகுவோம் என்றும் ரணில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் கொள்கைசார் தவறுகளை சரிசெய்வதையே பிரதான இலக்காகக் கொண்டிருக்கிறது. இதன் முதல் கட்டமாக முன்னைய அரசாங்கம் நிராகரித்த அனைத்தையும் புதிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் இந்தியாவினதும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினதும் நன்மதிப்பை பெறுவதில் அரசாங்கம் கணிசமானளவில் வெற்றிபெற்றிருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் இந்தியாவை திருப்திப்படுத்தும் அணுகுமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை திருப்திப்படுத்துதல் அல்லது இந்தியாவை கோபப்படுத்தாத வகையில் செயற்படுதல் என்பது இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறையில் ஒரு பிரதான போக்காகவே இருந்துவருகிறது. இதற்கு இலங்கை முன்னர் கற்றுக்கொண்ட பாடங்களும் ஒரு முக்கிய காரணமாகும். அதேவேளை, இலங்கையில் ஏதாவது திருப்புமுனைக்குரிய விடயங்கள் இடம்பெற்றால் உடனடியாகவே அதனை இந்தியாவுடன் தொடர்புபடுத்தி சிந்திப்பதும் கூட ஒரு பிரதான அரசியல் போக்காகவே இருந்து வருகிறது. இந்தப் போக்கு பாரபட்சமில்லாமல் சிங்கள, தமிழ் ஆகிய இரண்டு தரப்பினர் மத்தியிலும் காணப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததும், உடனடியாகவே தன்னுடைய தோல்விக்கு இந்திய உளவுத்துறைதான் (றோ) காரணம் என்றார். அதேபோன்று 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிர்மூலமாக்கப்பட்டு, அதன் ஆத்மாவாக கருதப்பட்ட வே.பிரபாரகரன் கொல்லப்பட்ட போது உடனடியாகவே தமிழ்த்தேசிய வாதிகள் என்போர் இந்தியாவின் மீதே குற்றம் சாட்டினர். இந்தியாவே பிரபாகரனை கொல்லும்படி உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டனர். விடுதலைப் புலிகளை அழித்தது இந்தியாதான் என்று ஆணித்தரமாக வாதிடுவோர் இப்போதும் தமிழ்ச் சூழலில் உண்டு. இதில் எது சரி? மஹிந்த ராஜபக்ஷ சொல்வதா அல்லது பிரபாகரன் விசுவாசிகள் சொல்வதா? ஒருவேளை மஹிந்த ராஜபக்ஷ சொல்லுவது போன்றும், பிரபாகரனின் விசுவாசிகள் சொல்லுவது போன்றும் அனைத்துக்கும் பின்னால் இந்தியாதான் இருந்தது என்றால், இந்தியாவை விரோதித்துக் கொண்டால் மீண்டும் அதுதானே நிகழும்!
ஆனால், இப்படியெல்லாம் விவாதித்துக் கொண்டாலும் கூட சிங்கள தேசியவாதிகளும் தமிழ் தேசியவாதிகளும் ஒரு விடயத்தில் உடன்பட்டுக் கொள்கின்றனர். இந்தியாவை முற்றிலுமாக விரோதித்துக் கொள்ளக் கூடாது, ஏதோவொரு வகையில் ஒத்துத்தான் ஓட வேண்டும். இல்லாவிட்டால் அது எங்களுக்கு நிச்சயம் பாதகமாகவே அமையும். மஹிந்த ஆதரவு அணியாக தங்களை இனம்காட்டிக் கொள்ளுபவர்கள் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான ஒரு துருப்புச் சீட்டாகவே தற்போது இந்தியா தொடர்பான அச்சத்தை பரப்ப முற்படுகின்றனர். இது தொடர்பில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தற்போது இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக இலங்கை மாறிவருவதாக குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவோ சற்று மாறுபட்ட வகையில் ஒரு விடயத்தை வெளிப்படையாக கூறியிருக்கின்றார் – அதாவது, இந்தியாவை திருப்திப்படுத்த முடியாமல் போனமையே, மஹிந்தவின் தோல்விக்குக் காரணம் என்கிறார் கோட்டா.
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து வெளியாகும் சிலோன் டுடே பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்படி கருத்தை தெரிவித்திருக்கின்றார். கேள்வி கேட்பவர் இப்படிக் கேட்கின்றார்: ராஜபக்ஷ ஒரு சரியான வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்காமைதானா, அவரது தோல்விக்கான உண்மையான காரணம்? அதற்கு ஆம் என்று பதிலளிக்கும் கோட்டாபய, “துரதிஸ்டவசமாக தங்களால் இந்தியாவை திருப்திப்படுத்த முடியாமல் போய்விட்டது. சீனாவின் முதலீடுகள் மற்றும் அதன் பிரசன்னம் தொடர்பில் இந்தியா அச்சம் கொண்டிருந்தது. நாங்கள் இந்தியாவிற்கு தீங்கிழைக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டோம் என்று உறுதி கூறினோம். ஆனால், அதனை இந்தியா நம்பவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இந்தியாவின் ஆற்றலை மஹிந்த மிகவும் குறைவாகவே எடை போட்டிருந்தார். அந்த அடிப்படையிலேயே டில்லியை எரிச்சலூட்டும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இதன் உச்சமாகவே சீனாவின் நீர் மூழ்கிகள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டன. இதன் விளைவாகவே இந்தியா ராஜபக்ஷவை கையாள முடியாத ஒருவராக கருதியது. கையாள முடியாத ஒருவரை இல்லாமலாக்குதல் அல்லது அரங்கிலிருந்து அகற்றுதல் என்பதே பலம்பொருந்திய சக்திகளின் இறுதித் தெரிவாக இருக்கும். ஆனால், ஜனநாயகத்தை கவசமாகக் கொண்டு இயங்குபவர்களை, அதே ஜனநாயகத்தைப் பயன்படுத்தி அகற்றும் உபாயம் குறித்தே அவ்வாறான சக்திகள் சிந்திக்கும். அதுவே முதல் தெரிவாக இருக்கும். ராஜபக்ஷ விடயத்தில் முதல் தெரிவே வெற்றியை கொடுத்தது. அது ஒருவேளை தோல்வியடைந்திருந்தால் தெரிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கலாம். ராஜபக்ஷ தன்னுடைய தோல்விக்குப் பின்னால் இந்திய உளவுத்துறை இருப்பதாகக் கூறிய போது, அப்போது அது தொடர்பில் கோட்டாபய எந்தவொரு கருத்தையும் தெரிவித்திருக்கவில்லை. ஆரம்பத்தில் அவ்வாறு குறிப்பிட்ட மஹிந்த பின்னர் அமெரிக்க மற்றும் பிரித்தானிய வெளியக உளவுத்துறைகளும் கூட தன்னுடைய தோல்வியின் பின்னணியில் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
கோட்டாபய இவ்வாறு கூறியிருக்கின்ற நிலையில், மஹிந்தவின் பிறிதொரு சகோதரரான பசில் ராஜபக்ஷவும் புதிய அரசாங்கம் இந்தியா தொடர்பில் கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். அனைவரும் இந்தியா தொடர்பில் பேசியிருப்பதற்கு பின்னால் தெற்கின் அரசியல் யதார்த்தம் ஒன்று தொக்கிநிற்கிறது. பொதுவாக தெற்கின் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் இந்தியா தொடர்பில் எப்போதுமே எதிர்மறையானதொரு பார்வையே உண்டு. ஒருவேளை இவ்வாறு பகிரங்கமாகக் குறிப்பிடுவதன் மூலம் தெற்கின் மஹிந்த ஆதரவு அணியினர் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை தோற்றுவிக்க முயற்சிக்கலாம். இந்த எதிர்மறையான பார்வையிலும் ஒரு விடயம் உண்டு. அதாவது, பொதுவாக இந்திய அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில்தான் தெற்கில் எதிர்மறையான பார்வைகள் உண்டு. அதாவது, இந்தியா ஏதோவொரு உள்நோக்கத்துடன்தான் இவற்றை செய்ய முயற்சிக்கிறது. இதன் ஊடாக தன்னுடைய ஆதிக்கத்தை இங்கு நிலைநிறுத்திவிடும் என்றவாறான பார்வையே சிங்கள தேசியவாதிகள் மத்தியில் காணப்படுகிறது. இந்த புரிதலை அரசாங்கத்தின் மீதான எதிர்பலையாக மாற்றும் நோக்கிலும் தற்போது இந்தியா தொடர்பான விடயங்களை தென்னிலங்கையின் தீவிர தேசியவாதிகள் கையிலெடுத்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசாங்கம் இந்தியா தொடர்பில் இழைத்த தவறுகளை சரிசெய்யும் நோக்கிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. ஆனால், அதேவேளை சீனாவுடனான தொடர்புகளையும் அரசாங்கம் துண்டிக்கப் போவதில்லை. இந்த இரண்டையும் சமப்படுத்திக் கொண்டு செல்லும் பயணத்தில் சறுக்கல்கள் ஏற்படுமா என்பதை தற்போதைக்கு எவராலும் ஊகிக்க முடியாது.
நான் மேலே குறிப்பிட்டவாறு இந்தியா தொடர்பில் இப்போதும் தமிழ் தரப்பினர் மத்தியில் எதிர்மறையான கருத்துக்கள் உண்டு. முதலில் அவ்வாறான கருத்துக்களை விடுத்து, யதார்தத்திற்கு திரும்புவது அவசியம். ‘பசுமரத்தாணி போல’ என்று ஒரு வழக்குச் சொல் உண்டு. சில விடயங்களை ஆழமாக மனதில் பதிய அனுமதித்துவிட்டால், பின்னர் அது ஒன்றுதான் சரியென்று வாதிட்டுக் கொண்டிருப்பதே ஒரு வகையான அரசியல் பொழுது போக்காவிவிடும். இந்தியா தொடர்பில் தமிழ் தேசியவாதிகள் என்போர் மத்தியில் காணப்படும் அபிப்பிராயங்களும் அவ்வாறானதொரு பொழுது போக்கின் விழைவே! நான் முன்னர் குறிப்பிட்டவாறு அனைத்துக்கும் பின்னால் இந்தியாதான் இருக்கிறது என்றால், அதனால் இனியும் அப்படியிருக்க முடியும். அது இனியும் அப்படித்தான் இருக்கும். தன்னுடைய நலன்களுக்கு குந்தகம் ஏற்படும் என்று கருதினால் அது நிச்சயம் தலையீடுகளை செய்து கொண்டேயிருக்கும். அதே போன்றுதான் அமெரிக்காவும். இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தெனின் தன்னுடைய அயல் நாடுகளின் மீது இந்தியாவால் இராணுவ நடவடிக்கைகளை கூட எடுக்க முடியும். இது வல்லரசுகளின் அரசியல் பண்பு. இதில் மாற்றங்களை எவரும் எதிர்பார்க்க முடியாது. எனவே, இங்கு கருத்தில் கொள்ள வேண்டியது, இவ்வாறான பலம்பெருந்திய சக்திகளின் நலன்கள் எவை என்பதை விளங்கிக் கொண்டு, அதனுடன் எங்களுடைய நலன்களை இணைப்பதற்கான வாய்புக்களை தேடிக் கொண்டிருப்பது ஒன்றேயாகும். இது ஒன்றைத் தவிர வேறு எந்தத் தெரிவுகளும் தமிழர் தரப்பிற்கு முன்னால் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், இது தமிழ்களின் ஆற்றலுக்கு எப்போதுமே எட்டாத ஒன்று.
இந்த விடயத்தில் தமிழர் தரப்பு கூடுதல் கவனம் எடுப்பது ஒன்றே தற்போதைக்கு உகந்தது. இந்தியா வடக்கு – கிழக்கு பகுதியிலும் சில மூலோபாய ஆர்வங்களை கொண்டிருக்கிறது. முக்கியமாக திருகோணமலை துறைமுகமும் அதனை அண்டிய சில பகுதிகள், பலாலி விமான நிலையம் மற்றும் மன்னாரிலிருந்து இராமேஸ்வரம் வரையிலான நெடுஞ்சாலை திட்டம். இப்படியான திட்டங்கள் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் எல்லைகளுக்குள்தான் அடங்குகின்றன. எனவே, இது தொடர்பில் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பினர் கவனம் எடுப்பது அவசியம். உதாரணமாக, வடக்கில் ஒரு சர்வதேச விமான நிலையம் வருவது வடக்கு தமிழ் மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் நன்மையானது. இது தொடர்பில் கொழும்பு ஒரு வகையான இழுத்தடிப்புப் போக்கையே காண்பித்து வருகிறது. இத்தனைக்கும் அங்கு முன்னர் ஒரு விமான சேவை இருந்தது. அதே போன்று இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையும் முன்னர் இருந்த ஒன்று. இவ்வாறான கோரிக்கைகள் வடக்கு மாகாண சபையிலிருந்து எழ வேண்டும். ஏனெனில், இது வடக்கு மக்களுக்குரியது. இது தொடர்பில் வடக்கு முதலமைச்சர் கூடுதல் கவனம் எடுத்திருக்க வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அரசியல் விடயங்கள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதில் காண்பிக்கும் ஆர்வத்தை, வடக்கின் அபிவிருத்தியின் மீதும் காண்பிப்பது அவசியம். பொதுவாக வடக்கு மாகாண சபை அபிவிருத்தியின் மீது பெரியளவில் ஆர்வம் காண்பிப்பதில்லை என்னும் அபிப்பிராயம் இராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் நிலவுகிறது. குறிப்பாக அமெரிக்க, இந்திய மட்டத்தில் அவ்வாறானதொரு அபிப்பிராயம் காணப்படுகிறது.
இந்தியாவை திருப்திப்படுத்தும் கொள்கை ஒன்றை நோக்கி புதிய அரசாங்கம் நகருகின்ற போது அதற்கு சமாந்தரமாக தமிழர் தரப்பும் பயணிக்க வேண்டும். அவ்வாறில்லாது போனால், தமிழர் தரப்பு மீண்டும் தனிமைப்படவே நேரிடும். இன்று வடக்கிற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ரெஜினோல் குறே இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்தில் அதன் ஆதரவாளராக இருந்த ஒருவர். அப்போது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை கொள்கைரீதியாக ஆதரித்து நின்ற விஜயகுமார துங்கவுடன் (சந்திரிக்காவின் கணவர்) செயலாற்றிய ஒருவர். இதற்காக ஜே.வி.பியினால் இலக்கு வைக்கப்பட்ட ஒருவர். இவ்வாறான ஒருவர் வடக்கின் ஆளுனராக நியமிக்கப்பட்டிருப்பது கூட ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. இதன் மூலமும் அரசாங்கம் வடக்கிற்கு ஒரு செய்தியை சொல்ல முற்படுகிறது. இவை அனைத்தையும் கணித்து துல்லியமான அரசியல் மதிப்பீடுகளுடன் பயணிப்பதன் ஊடாகவே தமிழர் அரசியலை வலுவாக முன்னெடுக்க முடியும். தனிமைப்படவும் கூடாது. அதேவேளை, தமிழ் மக்களின் அடிப்படையான உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறானதொரு உபாயம் என்ன? அது சில விடயங்களை தற்போதைக்கு ஏற்றுக் கொண்டு பயணிப்பதாகவே இருக்க முடியும்.
யதீந்திரா