படம் | REUTERS PHOTO, Human Rights Watch

நீதி என்பது உண்மைகளை வெளிப்படுத்துவதையும் அவ் உண்மைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரத்தை அளிப்பதையும் நோக்காகக் கொண்டது. உண்மைகள் வெளிப்படுத்தப்படாமல் நீதியும் அதற்கான பரிகாரங்களும் கிடைப்பது சாத்தியமில்லை. இந்நிலையில் இலங்கைத் திருநாட்டில் பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான சூழல் நிலவுகிறதா? இந்தக் கேள்வி இலங்கையின் நீதித்துறையோடு தொடர்புடையது. இந்தக் கேள்விக்கான விடை எதிர்மறையாக அமைந்தால் அது நீதித்துறையை கேள்விக்குட்படுத்துவதாகவே அமையும். துரதிஷ்டவசமாக அது அப்படித்தான் அமைகிறது.

உண்மைகளைப் புதைத்தலின் முதலாவது அங்கத்தை அழகிய இந்தத் தீவின் அசிங்கங்களுக்கூடாக கூறமுடியும். தங்களால் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களை குழிதோண்டிப் புதைப்பதோடு அது ஆரம்பமாகிறது. அந்தப் புதைகுழிகள் பெரும்பாலும் காவலரண்களுக்குள் இருந்தன. அல்லது புதைகுழிகளை சுற்றி காவலரண்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும், புதைகுழியிலிருந்து உண்மைகள் காலந்தாழ்த்தியேனும் கட்டவிழ்ந்த போதும் அதற்காக கிடைத்த நீதியென்ன? பரிகாரம்தான் என்ன? அடுத்து அதன் தொடர்ச்சி, உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் மேல் தாவியது. அவர்கள் கடத்தப்பட்டார்கள்; காணாமலாக்கப்பட்டார்கள்; கைது செய்யப்பட்டார்கள்; அச்சுறுத்தப்பட்டார்கள்; கொல்லப்பட்டார்கள். உண்மையைச் சொல்லும் அரங்கு அகற்றப்பட்டது அல்லது அடக்கப்பட்டது. பின்பு கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டவர்களின் உடலங்களை மண்ணோடு மண்ணாக உக்கச் செய்யும் நிகழ்வாக மாற்றமடைகிறது. இது முன்னைய அனுபவத்தின் வெளிப்பாடு. மூச்சற்ற உடலங்களின் மீது அவர்கள் கொண்ட பயம் அது. இன்று அது புலனாய்வு நடவடிக்கையாய் தொடர்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் ஒரு அங்கம் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கானதாகவும், இன்னொரு அங்கம் அதை இருட்டடிப்பு செய்வதற்கானதாகவும் செயற்படுகிறதா? என்ற கேள்வி இந்த இடத்தில் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. இந்நிலை நீதித்துறைக்கும் பாதுகாப்புத்துறைக்குமான முரண்நிலையை விளக்குகிறது. இந்த இடத்தில் நீதித்துறையின் வலுவிழந்த தன்மையும் பக்கச்சார்பான போக்கும் வெளித் தெரிவதை உணரமுடியும். இலங்கைத்தீவின் நீதி என்பது ஆளுந்தரப்புக்கு அனுசரணையானது என்று அடித்துச் சொல்லமுடியும். இதை நான் முன்னாள் நீதியரசர் ஷிராணி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா முதலானோருக்கு கிடைத்த தீர்ப்பினடிப்படையில் சுட்டிக்காட்டுகிறேன். ஒரு அரசின் காலத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் இன்னொரு அரசின் காலத்தில் குற்றமற்றவர்களாகக் காணப்படும் விந்தையை இலங்கைத் தீவின் அதிசயமாக நாம் கொண்டாடலாமா? பாதிக்கப்பட்ட தரப்புக்கு கிடைக்கப் போகும் நீதியின் நம்பகத்தன்மை குறித்து இந்த இடத்திலிருந்துதான் நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

எந்தவொரு நாட்டின் மக்களும் தமது நாட்டின் புலனாய்வுத்துறையை வெறுப்பவர்களாய் இல்லை. பாதுகாப்பின் முதுகெலும்பாய் விளங்கும் அவர்கள் மீது அளவற்ற மரியாதை கொண்டவர்களாகவே காணப்படும் நிலையில் இந்நாட்டின் ஒரு தரப்பாகிய தமிழ்பேசும் மக்கள் மட்டும் இந்நாட்டின் புலனாய்வுத்துறை மேல் அளவு கடந்த வெறுப்பு கொள்ள காரணம் என்ன? அதுவும் திருக்குறளின் பாரம்பரியத்திற்கூடாக கட்டமைக்கப்பட்ட அதில் சொல்லப்படும் ஒற்றறிதலின் சிறப்பை உணர்ந்த மன்னர்களும் மாறுவேடம் பூண்டு ஒற்றறிந்த கதைகளை சிறுவயது முதல் படிக்கின்ற சமூகத்தின் வழிவந்த அவர்கள் இப்படி நினைப்பதற்கு காரணம் என்ன? இதன் மூலம் அவர்கள் கூற விழைவதுதான் என்ன? அது அவர்களுக்கானது அல்ல. அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவுமில்லை என்பதே.

இலங்கைத்தீவின் எல்லா கலந்துரையாடல்களும் உளவுத்துறையின் பிரசன்னத்தோடுதான் இடம்பெறுகிறது. நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வோடுதான் நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடலையும் நடத்தவேண்டியிருக்கிறது. இந்நிலையில், உண்மைகளை எவ்வாறு பகிரங்கமாகச் சொல்லமுடியும். பகிரங்கமாக பேசமுடியாத கலந்துரையாடல் நல்லிணக்கத்தை நோக்கி எவ்வாறு நகரமுடியும்? உண்மை பேசும் அரங்குகள் அழிக்கப்பட்ட சூழலில், பாதுகாப்புத்துறையால் கட்டுப்படுத்தப்படும் அதேவேளை பக்கச்சார்பானதாக இயங்குவதாய் கொள்ளப்படும் நீதித்துறையை கொண்ட ஒரு நாட்டில் உண்மை, நீதி, மற்றும் நல்லிணக்கம் என்பது வியாபாரிகளுக்கே உரியது. உண்மைக்குப் பதில் கற்றறிந்த பாடங்களை கொண்டுவந்து உண்மையைக் குழிதோண்டிப் புதைத்த தேசத்திலிருந்து கொண்டு நீதியிலிருந்து ஊற்றெடுக்கும் நல்லிணக்கத்தை எதிர்பார்த்து காத்திருத்தல் என்பது வேடிக்கையானதே.

செந்தூரன்