போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவித் திட்டமும் அரசால் வழங்கப்படுவதில்லை.
கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மனித குலத்துக்கு எதிரான போர் நடவடிக்கையின்போது காணாமல்போனோரின், உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, காயமடைந்தவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்றும் – அவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படவேண்டும் என்றும் – குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பாக போரால் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிவில் மக்கள் குறித்தோ அல்லது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் குறித்தோ எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவரும் நிரந்தர காயத்திற்கு உள்ளானவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியில்லாம் கஷ்டப்பட்டுவருகின்றனர்.
ஒருசிலர் வசதியோடு வாழ்ந்தாலும் அவர்கள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்னும் சிலர், நல்லுள்ளம் கொண்டவர்களால் ஒரு தொகை செலுத்தி வாங்கிக்கொடுக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் மாதாந்த தவணைப் பணத்தை செலுத்த முடியாமல் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் சிலர் தாங்கள் வருடக்கணக்கில் தங்கியிருக்கும் உறவினர்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்படும் தருவாயில் இருக்கின்றனர்.
முன்னாள் போராளியான ஒருவர் – இடுப்புக்குக் கீழ் இயங்காதவர் – புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்டவர், 5 வருடங்களுப் பின் மாற்றம் அரசின் கீழ் இயங்கும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைக்கப்பட்டிருக்கிறார்.
இன்னுமொரு முன்னாள் பெண் போராளி, அவருக்கும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளதால் இடுப்புகுக் கீழ் இயங்காது. தடுப்பிலிருந்து விடுதலையாகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ள கணவரின் தொலைப்பேசி இலக்கத்தைக் கேட்டு, அங்கவீனமானவர் என்று பார்க்காமல் இனந்தெரியாத மூவரால் தாக்கப்பட்டிருக்கிறார்.
ஆகவே, தெற்கில் போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு அனைத்து வசதிகளும், உரிமைகளும் வழங்கப்படுகின்றபோது, அதே போரில் காயமடைந்த தமிழ் மக்கள் மட்டும் ஏன் பாராமுகமாக நடத்தப்படுகின்றனர்?
அவர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்; தேவைகளும் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ தளம் போரில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான சிலரின் குரல்களை Microsoft’s new Sway platform ஊடாக பதிவு செய்துள்ளது. இது Microsoft நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட சமூக ஊடக தளமாகும். இது கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் போன் போன்றவற்றுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதொன்றாகும்.
கீழ் தரப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்வதன் மூலமாக Sway platform ஊடாக கட்டுரையை வாசிக்கலாம்.