படம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR
இலங்கைத்தீவின் நல்லிணக்கக் கதவுகளை திறப்பதற்கான அடித்தள வேலைகளை இலங்கை அரசும் அதன் நேச அணிகளும் ஆரம்பித்துவிட்டன. இதற்காக அவர்கள் என்ன விலை கொடுப்பதற்கும் தயாராகி விட்டார்கள். இனிமேல் இலங்கை அரசுக்கு எதிராகவோ, அதன் கொள்கைகளுக்கு எதிராகவோ எந்தவொரு தீவிரமான தரப்புகளும் மேலெழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. இதனால்தான் கோடிகோடியாய் கொட்டியேனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசு முயல்கிறது. நீதியால் முடிக்க வேண்டியதை நிதியினால் முடிப்பதற்கு கங்கணம் கட்டியிருக்கிறார்கள். ஆனால், முயற்சியின் அளவுக்கு அது பலன் தருமா? இம்முயற்சி இதயபூர்வமாக மேற்கொள்ளப்படுகிறதா? என்ற பலத்த சந்தேகங்கள் சாதாரண மக்கள் மத்தியில் எழாமலும் இல்லை.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் ஒரு அங்கமே நிலைமாறுகால நீதிக்கான தேசிய கலந்துரையாடல். இனங்களுக்கிடையிலான உரையாடலை தொடங்குவதன் மூலம் புரிந்துணர்வு அடிப்படையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஆரம்ப அங்கம் அது. இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனால், இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படும் முறையிலும் அது தரும் விளைவிலுமே வெற்றி தோல்வி தங்கியிருக்கிறது.
கலந்துரையாடல் ஒன்று தொடங்குவதற்கு முன்பு கலந்துரையாடலை மேற்கொள்பவர்களிடையே சம்பந்தி உறவு இல்லாவிட்டாலும், சமபந்தி உறவாவது வேண்டும். சுதந்திரமான கலந்துரையாடலானது சக சுதந்திர ஜீவிகளிடையேதான் ஏற்படுத்தப்பட முடியும். இலங்கைத் தீவின் எல்லா இனங்களும் ஏனைய இனங்களை சுதந்திர சக ஜீவிகளாக எண்ணத் தொடங்கிவிட்டார்களா? அவர்கள் எல்லோரும் எங்களைப் போல மற்றவர்களும் இந்த நாட்டிலே வாழ்கின்ற இந்த நாட்டை வடிவமைக்கும் சகசிற்பிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்களா? என்ற கேள்வியோடுதான் நல்லிணக்கத்தை நோக்கவேண்டியிருக்கிறது.
முதலில் நாங்கள் சிங்கள மக்களின் நல்லிணக்கத்திற்கான அடிப்படை தொடர்பில் பார்ப்போம். ஆயுத மோதலின் முடிவிற்குப்பின் தென்னிலங்கையிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமி தினமும் வகை தொகையாய் சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் வருகிறார்கள்; ஏ9 வீதி எங்கும் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் போரின் எச்சங்களை பார்வையிடுகிறார்கள்; இராணுவக்கடைகளில் உணவருந்துகிறார்கள்; பௌத்த மதத்தோடு தொடர்புடைய இடங்களுக்கு செல்கிறார்கள்; இராணுவ முகாம்களுக்கருகிலுள்ள விடுதிகளில் தங்குகிறார்கள்; இத்துடன் அவர்களின் யாழ்ப்பாண விஜயம் முடிவடைகிறது. அவர்கள் யாழ்ப்பாண மக்களோடு பேசத் தயாரில்லை. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்கத் தயாரில்லை. அவர்கள் இராணுவத்தின் நிழலிலேயே இன்னமும் வருகிறார்கள்; தங்களால் வெற்றிகொள்ளப்பட்ட நிலங்களையே பார்க்க வருகிறார்கள்.
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று அதிக எண்ணிக்கையில் சிங்கள மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஆனால், அங்கே அவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது? அங்கே நடைபெறும் ஒவ்வொரு சமய விழாக்களிலும் அச்சமயம் சாராத ஏனைய மாணவர்களின் பங்கேற்பு எவ்வாறு இருக்கிறது. பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு இராணுவம் ஆட்டோவில் சாப்பாடு கொண்டுவந்து தருகிறார்கள். இவ்வாறு எங்கும் எதிலும் இராணுவத்தினருடனேயே சிங்கள மக்கள் காட்சியளிக்கும் படிமம் தமிழ் மக்கள் மத்தியில் படிந்துவிட்டது. இந்நிலையில், சிங்கள மக்களையும் இராணுவத்தினரின் இன்னொரு படைப்பிரிவாகவே தமிழ் மக்கள் கருதுகிறார்கள். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இராணுவத்தினர் அவர்களின் கதாநாயகர்கள். ஆனால், தமிழ் மக்கள் அவர்களை அப்படி கருதவில்லை. அதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. இந்நிலையில், தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் கலந்துரையாடத் துணிவார்களா? இந்தப் படிமம் உடைத்தெறியப்படாமல் இதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து பேச முடியுமா?
சாதாரண சிங்கள மக்கள் இவ்வாறிருக்க, தேரர்களின் நிலையை எடுத்தால் அது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உலகிலேயே புத்தரை விட நல்லிணக்கத்தைப் பற்றி சிறப்பாக சொன்னவர்கள் யாரும் கிடையாது. இன்று அப்புத்தர் வந்தால் அவரை சிறைப்படுத்த பொதுபலசேனாக்களும் இராவணபலயாக்களும் காத்திருக்கிறார்கள். புத்த மத வழிபாட்டுத்தலங்களில் இன்று அதிகமாக இனவிரோத கருத்துக்கள் விதைக்கப்படுகின்றன. சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சர்வமதப் பேரவை வெளியிட்ட இதழொன்றில் தேரர் வெளியிட்ட ஆசிச் செய்தி முழுவதும் இராணுவத்திற்கு நன்றி கூறுவதாகவே காணப்பட்டது. “அவன் ஏன் அப்படிச் செய்கிறான். அவன் எண்ணம் அப்படி உள்ளது” என்று ஆட்டோ ஒன்றின் பின்புறத்தில் எழுதப்பட்டிருந்த வசனம் என் நினைவுக்கு வருகிறது. நல்லிணக்கத்தின் செயற்பாடுகளை நாங்கள் எங்கிருந்து தொடங்கவேண்டும் என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.
ஆகப்பிந்திய தகவலின் படி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சிவில் சமூக கலந்துரையாடல் ஒன்றில் தமிழர்களுக்கு சமஸ்டி தருவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என சிங்கள சகோதரர்களை நோக்கி தாயொருவர் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில், தமிழ் மக்கள் இனிமேலாவது அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும் என்ற அறிவுரைதான்.
காணாமலாக்கப்பட்ட தன் பிள்ளையைத் தேடும் தாயொருத்தியிடம் நாங்கள் நல்லிணக்கத்தைப்பற்றியும் நிலைமாறுகால நீதியைப்பற்றியும் கதைக்க முடியுமா? அத்தகைய தாயொருத்தி எங்களிடம் கேட்டாள், “எனக்கொருக்கா திருகோணமலையில இருக்கிற வதை முகாமை காட்டிறிங்களே, அங்கை பிள்ளையள் இரத்தத்தாலை பெயரெழுதியிருக்குதுகளாம். என்ரை பிள்ளையின்ரை கையெழுத்து எனக்குத் தெரியும். நான் அதை ஒருக்காப் பார்க்கவேணும்”.
…. என்னால் மேலும் தொடரமுடியவில்லை. இப்படித்தான் நிலைமாறு கால நீதியைப்பற்றியும் நல்லிணக்கத்தைப்பற்றியும் போதிக்கச் செல்லும் முன் கூனிக்குறுகி நிற்கவும் சில சமயம் செவிப்பறை செயலிழந்தவன் போல் நிற்கவும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
செந்தூரன்