Photo, Anura Kumara Dissanayake fb

அநுர குமார திசாநாயக்க, இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவரது இந்த வெற்றி, நாட்டில் நிலவிய அரசியல் கலாச்சாரத்தில் ஏற்பட்ட ஒரு தெளிவான மாற்றத்திற்கான மக்கள் தீர்ப்பாகவே அமைந்தது. தனக்கு முன் இருந்தவர்களைப் போலன்றி, திசாநாயக்க எந்தவொரு அரசியல் பரம்பரையையும் சார்ந்தவர் அல்லர் அல்லது ஒரு உயர்குடிப் பின்னணியில் இருந்து வந்தவரும் அல்லர்.

அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஏழு வாரங்களுக்குப் பிறகு, இடதுசாரித் தோழமைக் கட்சிகளின் கூட்டமைப்பான தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான  பெரும்பான்மையைப் பெற்றது மட்டுமன்றி, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாணத்திலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இயல்பாகவே, திசாநாயக்க  மீதான எதிர்பார்ப்புகள் உயர்வாக இருந்தன.

அவரது அரசாங்கத்தின் செயல்பாடு எவ்வாறு இருந்தது என்பது குறித்து  ‘தி டிப்ளொமட்’ (The Diplomat) இதழின் தெற்காசிய ஆசிரியர் சுதா இராமச்சந்திரன்  மேரிலாந்தில் உள்ள சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் மோதல் பகுப்பாய்வு மற்றும் தகராறு தீர்வுத் துறையின் முன்னாள் தலைவரான பேராசிரியர் எஸ். ஐ. கீதபொன்கலனுடன் நேர்காணல் ஒன்றை நடத்தி கலந்துரையாடினார்.

பொருளாதாரக் களத்தில் ஜனாதிபதி திசாநாயக்க, “பாராட்டத்தக்க பணியை” செய்துள்ளதாகவும், ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த முயற்சித்துள்ளதாகவும் குறிப்பிட்ட பேராசிரியர், அதேவேளை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண்பதில் அவர் “மிகக் குறைந்த அளவிலேயே அல்லது எதுவுமே செய்யவில்லை” என்றும் சுட்டிக்காட்டினார். “மேலும், போர்க்கால அத்துமீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது குறிப்பிடத்தக்க சட்ட நடவடிக்கைகளோ அல்லது விசாரணைகளோ எதுவும் எடுக்கப்படவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

தவிர, தனது முக்கிய தேர்தல் பிரசார வாக்குறுதியான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்வதை நோக்கி திசநாயக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. “தனக்கு முன் இருந்த பல அரசாங்கங்களைப் போலவே, அவரின் அரசாங்கமும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் விரிவான அதிகாரங்களைப் புரிந்து கொண்டிருக்கலாம், மேலும் அரசியல் உறுதிப்பாட்டுக்கு  இந்த அதிகாரங்கள் அவசியம் என்று நம்பலாம்” என்றும்  அவர் கூறினார்.

பொருளாதாரத்தில் ரணிலின் மூலோபாயம்

கேள்வி: ரணில் விக்கிரமசிங்கவின் கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தைக் கடுமையாக விமர்சித்ததில்  திசாநாயக்கவும் அவரின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும்   முன்னணியில் இருந்தபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப்  பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதியாக அவர் அதே மூலோபாயத்தையே பின்பற்றினார். அவருக்கு முன் இருந்தவர்களின் ஆட்சிகளிலிருந்து அவரது ஜனாதிபதி ஆட்சி எவ்வளவு வித்தியாசமானது?

பதில்: இலங்கையில் இரண்டு அமைப்புகள் தங்களது கருத்தியல் நிலைப்பாடுகளிலும் இலக்குகளிலும் உறுதியாகக் கட்டுப்பட்டிருந்தன என்று நான் நம்பியிருந்தேன். ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள். மற்றையது  ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.).  தமிழீழக் கோரிக்கையில் தளராத உறுதிப்பாட்டைக் கொண்டிருந்தது, விடுதலைப் புலிகள் அழிந்ததற்கான ஒரு பகுதிக்  காரணமாகும்.

இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜே.வி.பி தனது கருத்தியல் நிலைப்பாடுகளில் எந்தளவுக்குத் நெகிழ்வுத்தன்மையையும் சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மையையும் காட்டியுள்ளது என்பது எனக்கு வியப்பளிக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைமைத்துவ சக்தியாக இருக்கும் ஜே.வி.பி. தற்போதைய யதார்த்தங்கள் மற்றும் அரசியல் கட்டாயங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஒரு சோசலிச அரசை நிறுவுவதற்காக ஜே.வி.பி இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்து தோல்வி கண்டது. இந்த வரலாற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அதிகாரத்திற்கு வந்த பிறகு அக்கட்சி தனது சோசலிசக் கருத்தியலை விட்டு எவ்வளவு எளிதாக விலகிச் சென்றது என்பதைக் கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். பாரம்பரியமாக அது கொண்டிருந்த இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மாற்றமும், இந்த கருத்தியல் நெகிழ்வுத்தன்மைக்கு மற்றொரு உதாரணமாகும்.

அதேபோன்று, எதிர்க்கட்சியாக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பைப் பெறுவதற்கும், அதனுடன் தொடர்புடைய பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட மூலோபாயத்தை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்தது. இருப்பினும், ஆட்சியைப் பிடித்தவுடன், அது  சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதாகத் தெரிகிறது, மேலும் அடிப்படையில் அதே மூலோபாயத்தைத் தொடர்ந்து வருகிறது.

தற்போதைய சர்வதேச நாணய நிதியத் திட்டம் 2027 மார்ச்சில் முடிவடைய உள்ளது. மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தைக் கோரினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இத்தகைய முடிவு, ஜே.வி.பி.யின்  பொருளாதாரக் கொள்கைப் போக்கின் குறிப்பிடத்தக்க மாற்றத்தை மேலும் வெளிப்படுத்தும்.

ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள்

இருப்பினும், நான் சில வேறுபாடுகளைக் காண்கிறேன், குறிப்பாக ஊழல் மற்றும் பிற துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட முன்னாள் அரசியல் தலைவர்களைத் தண்டிப்பதில் அரசாங்கத்தின் தெளிவான உறுதிப்பாடு. ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில், ‘அரகலய’ (போராட்டம்) மூலம் முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கிய குறைகளில் ஒன்றான ஊழல் பிரச்சினையை அவரால் சரிவர கையாள முடியவில்லை.

இருப்பினும், எனது பார்வையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெருமளவில் தனக்கு முன்னர் இருந்தவர்களின், குறிப்பாக விக்கிரமசிங்கவினால் பின்பற்றப்பட்ட கொள்கைகளையே தொடர்கிறது. எனவே, மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் அரசாங்கக் கொள்கையின் திசையில் இல்லை. மாறாக, ஜே.வி.பி. பல தசாப்தங்களாகப் பாதுகாத்து வந்த அதன் நிலைப்பாடுகளைக் கைவிட அல்லது மாற்றியமைக்கக் காட்டும் விருப்பத்திலேயே உள்ளது.

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு வாக்குறுதி

கேள்வி: திசாநாயக்க, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அரசியலமைப்பு மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பெரும்பான்மை பலம் நாடாளுமன்றத்தில் அவருக்கு உள்ளது. அப்படியிருந்தும், அவர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?

பதில்: இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து, நாடாளுமன்ற ஆட்சி முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தும் அரசியல் இயக்கம் ஒன்று இருந்தது. மேலும், அது தொடர்ந்து இயங்கியும் வருகிறது. பாரம்பரியமாக, அதன் தலைவர்களில் ஒருவராக ஜனாதிபதி திசாநாயக்க உட்பட,ஜே.வி.பி. இந்த இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்தது. அதனால்தான், அந்தக் கட்சி தனது 2024 தேர்தல் அறிக்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தது.

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றது. இருப்பினும், அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நோக்கி அது எந்தவொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, செப்டம்பர் 2026, உயர் நீதிமன்ற  நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் செய்தது. இது, அவசியமற்ற  ஒரு மாற்றமாகும்.

இதன் விளைவாக, திசாநாயக்க ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், ஜே.வி.பியின் முன்னாள் பரம எதிரியான ஜனாதிபதி ஜே.ஆர்.  ஜெயவர்த்தனவால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பெரும்பாலும் மாற்றமின்றி அப்படியே உள்ளது. எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் அதிக ஆர்வம் காட்டும் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

இந்தத் தயக்கத்திற்கு இரண்டு சாத்தியமான காரணங்களை நான் காண்கிறேன். முதலாவதாக, தேசிய மக்கள் சக்தி  அரசாங்கமும், அதற்கு முன் இருந்த பல அரசாங்கங்களைப் போலவே, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையின் பரந்த அதிகாரங்களை உணரத் தொடங்கியிருக்கலாம். மேலும் அரசியல் உறுதிப்பாட்டுக்கு  இந்த அதிகாரங்கள் அவசியம் என்றும் அவர்கள்  நம்பலாம்.

இரண்டாவதாக, ஒரு முழுமையான அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயல்பாட்டைத் தொடங்குவது, அரசாங்கத்தை அரசியல் ரீதியாக சங்கடமான பல கேள்விகளை எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்தக்கூடும். அத்தகைய ஒரு கேள்வி, கடந்த காலத்தில் ஜே.வி.பி. தீவிரமாக எதிர்த்த மாகாண சபை முறையின் எதிர்காலம் பற்றியதாகும். இந்த முறையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமா, சீர்திருத்த வேண்டுமா அல்லது ஒழிக்க வேண்டுமா? இந்தத் தெரிவுகளில் எதுவுமே அரசாங்கத்திற்கு அரசியல் சிக்கல்களை உருவாக்கக்கூடும்.

தமிழர் பிரச்சினை தீர்வில் நகர்வில்லை

கேள்வி: தமிழ் மக்களின் மனக்குறைகளுக்கு  அரசியல் தீர்வைக் காண்பதில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார்?

பதில்: மிகக் குறைவான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டுள்ளன அல்லது எதுவுமே எடுக்கப்படவில்லை என்றே கூறலாம். பாரம்பரியமாக, ஜே.வி.பி. அமைப்பானது, பல சிங்கள தேசியவாத அமைப்புகளைப் போலவே, இலங்கையில் இனப் பிரச்சினை ஒன்று இருப்பதை அங்கீகரிக்கவில்லை அல்லது தமிழ் மக்கள் தங்களது சமூகத்திற்குரிய பிரத்தியேகமான குறைகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அக்கட்சியானது இந்தப் பிரச்சினையை பிரதானமாக பயங்கரவாதம் சார்ந்த ஒன்றாகவே பார்த்தது. எனவே, தமிழ் மக்களின் குறைகளுக்கு அரசியல் தீர்வைக் காண்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறைந்த அக்கறையையே காட்டியுள்ளது என்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. அத்தகைய தீர்வைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ் அரசியல் தலைவர்களுடன் எவ்வித அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை.

தனது 2024 தேர்தல் தேர்தல் விஞ்ஞாபனத்தில், நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்களை நடத்துவதாக திசாநாயக்க வாக்களித்தார். அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. 2024ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற ஆசனங்களை் வென்றதாலும், பாரம்பரிய வாக்களிப்பு முறைகளிலிருந்து விடுபட்டு தமிழ் வாக்காளர்கள் ஜே.வி.பி. சார்ந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்ததாலும் இது குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது.

மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் காட்டும் தயக்கம், இனவாதம் அல்லது இனப் பாகுபாட்டால் தூண்டப்பட்டது என்று நான் உறுதியாக நம்பவில்லை. மாறாக, அரசாங்கத்தின் அரசியல் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தோன்றுவதால், இந்தத் தருணத்தில் வாக்காளர்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயங்குகிறது என்றே நான் சந்தேகிக்கிறேன்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவது குறித்து தமிழ் சமூகத்திடமிருந்து அதிகளவு மக்கள் அழுத்தங்களை நான் காணவில்லை. பிரதான தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தை ஒரு முக்கிய மத்திய அரசியல் கோரிக்கையாக மாற்றத் தவறிவிட்டன. இதன் விளைவாக, அர்த்தமுள்ள அரசியல் பேச்சுவார்த்தைகள் அல்லது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியான அழுத்தங்கள் எதுவும் ஏற்படுவதில்லை.

பொறுப்புக்கூறல்

கேள்வி: உள்நாட்டுப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை, அத்துமீறல்களைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இந்த அரசாங்கத்தின் செயல்பாட்டை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?

பதில்: அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஊக்கமளிப்பதாக இல்லை. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மூலம் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான குறிப்பிடத்தக்க புதிய முயற்சிகள் எதையும் அது அறிமுகப்படுத்தவும் இல்லை.

போரின் இறுதிக் கட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிகோரித் தங்களின் போராட்டங்களையும் விழிப்புணர்வுப் பிரசாரங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். எனக்குத் தெரிந்தவரையில், போர்க்கால அத்துமீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது குறிப்பிடத்தக்க சட்ட நடவடிக்கைகள்  (வழக்குத் தொடுத்தல் ) எதுவும் செய்யப்படவில்லை.

உதாரணமாக, நூற்றுக்கணக்கான மனிதர்கள் புதைக்கப்பட்டதாகக் நம்பப்படும் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழிகளிலிருந்து அண்மையில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இத்தகைய குற்றங்களை விசாரிப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் முறையான, போதுமான அதிகாரமளிக்கப்பட்ட ஒரு பொறிமுறையை இதுவரை உருவாக்கவில்லை.

இலங்கையில் யார் ஆட்சியில் இருந்தாலும், போரோடு தொடர்புடைய குற்றங்களை, குறிப்பாக முப்படையினரால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதும் தண்டனை வழங்குவதும் அரசியல் ரீதியாக மிகவும் கடினமானது. இத்தகைய ஒரு நடவடிக்கை எந்தவொரு அரசாங்கத்திற்கும் அரசியல் தற்கொலைக்குச் சமமாக அமையக்கூடும். எனவே, உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் நீண்டகாலமாகக் கோரி வரும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மிகக் குறைவாகவே உள்ளது.

கேள்வி: ஜனாதிபதி திசாநாயக்கவின் ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது?

பதில்: அரசாங்கம் இந்த விடயத்தில் பாராட்டும் படியான பணிகளைச் செய்துள்ளதாக நான் நினைக்கிறேன். இருப்பினும், 2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டு, ஓரளவு பொருளாதார உறுதித்தன்மையை மீட்டெடுத்ததற்கான பெருமை முக்கியமாக விக்கிரமசிங்கவிற்கே சேர வேண்டும். அவர் அறிமுகப்படுத்திய பெரும்பாலான பொருளாதாரக் கொள்கைகளையும் திட்டங்களையும் ஏற்றுக்கொண்டு தொடர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு விவேகமான முடிவை எடுத்தது. அந்த மூலோபாயம் பயனளித்துள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் உறுதியாகவே உள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் சொந்த முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது. உதாரணமாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2023ஆம் ஆண்டில் சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து, 2026 ஆகஸ்டில் சுமார் 7 பில்லியன்  டொலர்களாக உயர்ந்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இருப்பினும், தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் மீட்புத் திட்டம் 2027 மார்ச்சில் முடிவடைந்த பிறகே, அரசாங்கத்தின் பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்த ஒரு அர்த்தமுள்ள மதிப்பீட்டைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். தற்போதைய சர்வதேச நாணய நிதிய  ஏற்பாட்டிற்கு அப்பால் அரசாங்கம் எவ்வாறு பொருளாதாரத்தை நிர்வகிக்கிறது என்பது அதன் பொருளாதாரக் கொள்கைகளுக்கான முக்கியமான சோதனையாக இருக்கும்.

பயங்கரவாத தடைச்சட்டம்

கேள்வி: 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் உள்ளன. இன்று இலங்கையில் பயங்கரவாதப் பிரச்சினை உள்ளதா?

பதில்: 2009ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, விடுதலை புலிகள் இயக்கம்  தோற்கடிக்கப்பட்டதன் மூலம் பயங்கரவாதத் தடைச்  சட்டத்திற்கான முக்கிய நியாயம் இல்லாமல் போய்விட்டது என்று கூறி, உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் அதை நீக்குமாறு கோரத் தொடங்கின. ராஜபக்ச அரசாங்கம் கோரிக்கைகளை நிராகரித்தது, அதேவேளையில் மைத்திரிபால சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் வாக்குறுதியளித்த் சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தவறிவிட்டது.

இந்த பின்னணியில்தான், 2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பைக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரதான பயங்கரவாத தாக்குதலாகும். எனவே, இலங்கைக்கு எவ்வித பயங்கரவாத அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என்று நாம் வாதிட முடியாது. இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு பயனுள்ள கட்டமைப்புகள்/ இயங்குமுறைகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், இந்தக் கட்டமைப்புகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவோ அல்லது ஜனநாயகத்தைச் சீர்குலைப்பதாகவோ அமையக்கூடாது.

2024 தேர்தலின் போது, தேசிய மக்கள் சக்தி தாராளவாத சிந்தனையுடைய வாக்காளர்கள் உட்பட பலரிடமும் ஆதரவுக்கு கோரிக்கை விடுத்ததுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை  நீக்குவதாகவும் வாக்குறுதியளித்தது. இருப்பினும், ஆட்சியைப் பிடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையிலும், அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது. மாறாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் போன்ற உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. மேலும், கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தற்போது, அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்  சட்டத்திற்கு பதிலாக அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டத்தைக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.  இருப்பினும், முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம், பயங்கரவாதம் என்பதற்கான அதன் பரந்த வரையறை மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தரப்பினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் அது வழங்கக்கூடிய விரிவான அதிகாரங்கள் காரணமாக, மனித உரிமைகள் அமைப்புகளிடமிருந்து ஏற்கனவே கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. எனவே, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்கள் என்ற கோணத்தில் பார்க்கும்போது, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம் குறிப்பாக நம்பிக்கை அளிப்பதாகத் தெரியவில்லை.

கேள்வி: திசாநாயக்கவிற்கு நாடாளுமன்றத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு உள்ளது. இலங்கை மக்கள் அவரது ஜனாதிபதி ஆட்சியில் திருப்தியடைந்துள்ளனரா?

பதில்: 2024 ஜனாதிபதித் தேர்தலில், திசாநாயக்க முதல் விருப்பத் தேர்தலில் சுமார் 42 சதவீத வாக்குகளைப் பெற்றார். பின்னர் அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி, 2024 நவம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய வாக்குகளில் சுமார் 61 சதவீதத்தைப் பெற்று நாடாளுமன்றத்தில் 159 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றது. இருப்பினும், 2025 மே உள்ளூராட்சித் தேர்தல்களில் அதன் தேசிய வாக்குகள் சுமார் 43 சதவீதமாகக் குறைந்ததால், கட்சியினால் இந்த வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது. அரசாங்கத்தின் செல்வாக்கு சரிவடைந்து வருவதை சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தச் சரிந்து வரும் செல்வாக்கே, அரசாங்கம் மேலதிக தேர்தல்களை, குறிப்பாக நீண்டகாலமாகத் தள்ளிப்போடப்பட்டுள்ள மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் பிரதான காரணங்களில் ஒன்று என நான் சந்தேகிக்கிறேன். அதிக வாழ்க்கைச் செலவு, கடுமையான வரி விதிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் போன்ற அழுத்தமான சமூகப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகாணத் தவறியமை போன்றவை அதிகரித்து வரும் மக்களின் அதிருப்திக்குக் பங்களித்துள்ளதாகத் தோன்றுகிறது.

ஞானசார விவகாரம்

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளரான ஞானசார தேரர் தொடர்பான தற்போதைய சர்ச்சை, அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான சிக்கல்களை உருவாக்கக்கூடும். கணிசமான சமய மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த துறவிகளின் காவி உடைக்கு பதிலாக, அந்தத் துறவியை சிறை உடையில் நீதிமன்றத்திற்கு பொலிஸார் அழைத்துச் செல்ல எடுத்த முடிவு, சிங்கள பௌத்த சமூகத்தின் சில பிரிவினரை, குறிப்பாக தேசியவாத வாக்காளர்களைக் கோபப்படுத்தியிருக்கலாம். இந்த சர்ச்சை இந்தக் குழுக்களிடையே அரசாங்கத்தின் செல்வாக்கை மேலும் சீர்குலைக்கக்கூடும்.

இருப்பினும், சரிவடையும் செல்வாக்கிற்கும் மக்கள் ஆதரவை முழுமையாக இழப்பதற்கும் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது முக்கியமாகும். தேசிய மக்கள் சக்தி இன்னமும் கணிசமான தேர்தல் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. எனது பார்வையில், அரசாங்கம் மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்கிறதா என்பது மட்டுமல்ல, அதன் ஆரம்பகால தேர்தல் வேகத்தில் எவ்வளவு தூரத்தை இழந்துள்ளது என்பதே மிக முக்கியமான கேள்வியாகும்.