Photo, United Nation Sri Lanka

மலையக தமிழர்களின் இன அடையாளம் குறித்த விவாதம் இன்று புதிதாக உருவான ஒன்றல்ல. அது பல தசாப்தங்களாக அரசியல், சமூக மற்றும் வரலாற்று ரீதியாக தொடர்ந்து இடம்பெற்று வரும் ஒரு முக்கியமான அடையாளப் போராட்டமாகும்.

ஆரம்பத்தில் இருந்தே மலையக அரசியல் கட்சிகள், மலையக மக்களின் இன அடையாளம் “இந்திய தமிழர்” அல்லது “இந்திய வம்சாவழி தமிழர்” என்பதுதான் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தன. காலப்போக்கில் மலையக சிவில் சமூக அமைப்புகள், ஆய்வாளர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக “மலையக தமிழர்” என்ற அடையாளம் அரசியல் உரையாடல்களில் இடம்பெறத் தொடங்கியது. ஆனால், அது முழுமையான அரசியல் கொள்கையாகவோ, சட்டரீதியான அங்கீகாரமாகவோ அல்லது தொடர்ச்சியான அரசியல் போராட்டமாகவோ மாறவில்லை.

இன்றும் பெரும்பாலான மலையக அரசியல் கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றன. ஒரு புறம் “மலையக தமிழர்” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்; மறுபுறம் “இந்திய வம்சாவழி மலையக தமிழர்”, “இந்திய தமிழர்” போன்ற அடையாளங்களையும் தொடர்ந்து முன்னிறுத்துகின்றனர். இந்த முரண்பாடான அணுகுமுறை, மலையக தமிழர் என்ற தனித்துவமான தேசிய இன அடையாளத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளை பலவீனப்படுத்தியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை, தற்போதைய அரசியல் சூழலில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் கட்சியும் முழுமையான அர்ப்பணிப்புடன் “மலையக தமிழர்” என்ற தேசிய இன அடையாளத்தை முன்னெடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

* OCI (Overseas Citizenship of India) வழங்கப்பட்டுள்ளமை மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசியல் தாக்கங்கள்.

* மலையக அரசியல் கட்சிகளுக்கும் இந்திய அரசியல் மற்றும் ஆதரவு வட்டாரங்களுக்கும் இடையிலான உறவுகள்.

* இந்தியாவின் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் கொள்கைகள்.

* இலங்கை அரசின் அரசியல், பொருளாதார மற்றும் இராஜதந்திரத் தேவைகள்.

இந்தக் காரணிகள் அனைத்தும் இணைந்து மலையகத் தமிழர் என்ற சுயாதீனமான தேசிய இன அடையாளத்தை அரசியல் ரீதியாக முன்னெடுப்பதில் தயக்கத்தை உருவாக்குகின்றன.

அத்தோடு, மலையகத் தமிழர் என்ற இன அடையாளத்தை வலியுறுத்துவது, மலையக மக்களின் இந்திய வம்சாவழி வரலாற்றை மறுப்பது அல்ல. இலங்கையில் வாழும் பல சமூகங்களின் வரலாற்று வேர்கள் இந்திய துணைக்கண்டத்துடன் தொடர்புடையவை என்பது வரலாற்று உண்மை. எனவே “இந்திய வம்சாவழி” என்பது ஒரு வரலாற்றுப் பின்னணியை விளக்கும் சொல்; அது ஒரு சமூகத்தின் தற்போதைய தேசிய இன அடையாளமாக இருக்க முடியாது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்து, தனித்துவமான வாழ்வியல், கலாசாரம், மொழிப் பயன்பாடு, சமூக அமைப்பு, தொழிலாளர் வரலாறு, அரசியல் அனுபவம், சடங்குகள் மற்றும் கூட்டுச் சமூக நினைவுகளை உருவாக்கியுள்ள மலையக தமிழர்கள், இன்று தனித்துவமான ஒரு தேசிய இனமாக உருவெடுத்துள்ளனர். எனவே, அவர்களின் தற்போதைய அடையாளம் அவர்களின் வரலாற்றுத் தோற்றத்தால் மட்டுமே வரையறுக்கப்பட முடியாது.

2024 மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் மலையகத் தமிழர் அடையாளமும்

2024 மக்கள் தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பின்படி, “Indian Tamil / Malaiyaha Thamilar” என தங்களைப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 600,360 ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.8% மட்டுமே. 2012ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 839,504 (4.1%) ஆக இருந்தது. அதாவது பன்னிரண்டு ஆண்டுகளில் சுமார் 239,000 பேர் குறைந்துள்ளதுடன், மக்கள் தொகைப் பங்கும் 4.1% இலிருந்து 2.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வீழ்ச்சி வெறும் மக்கள் தொகை மாற்றமல்ல. வெளிநாட்டு இடம்பெயர்வு, பிற இன அடையாளங்களில் பதிவு செய்தல், சமூக மாற்றங்கள் மற்றும் அடையாள அரசியல் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அதன் விளைவு ஒன்றே – மலையக தமிழர் என்ற தனித்துவமான இன அடையாளம் புள்ளிவிவர ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது.

ஒரு இனத்தின் எண்ணிக்கை குறைவது என்பது வெறும் புள்ளிவிவர மாற்றமல்ல. அது அரசியல் பிரதிநிதித்துவம், வள ஒதுக்கீடு, அரச கொள்கைகள், மொழி உரிமைகள், சமூக அபிவிருத்தி மற்றும் வரலாற்று அங்கீகாரம் ஆகிய அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் தங்களை “மலையகத் தமிழர்” என பதிவு செய்வது, வெறும் நிர்வாகச் செயல் அல்ல. அது ஒரு சமூகத்தின் அரசியல் இருப்பையும் எதிர்கால உரிமைகளையும் பாதுகாக்கும் ஜனநாயகப் பொறுப்பாகும்.

சட்டரீதியான அங்கீகாரத்தின் அவசியம்

இன்று ஜனாதிபதி உட்பட ஆளும், எதிர்க்கட்சி அரசியல்வாதியாகத் தலைவர்களும், அரசாங்கப் பிரதிநிதிகளும் பொதுமேடைகளில் “மலையகத் தமிழர்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இது வரவேற்கத்தக்க முன்னேற்றமாக இருந்தாலும், அது வெறும் வாய்வழி அங்கீகாரமாக மட்டுமே உள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள், அமைச்சரவை முடிவுகள், அரச கொள்கைகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களில் இன்னும் “இந்திய வம்சாவழி தமிழர்” என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. இந்த முரண்பாடு நீடிக்கக்கூடாது.

எனவே, தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் நிர்வாக ஆவணங்களில் பயன்படுத்தப்படும் “இந்திய வம்சாவழி தமிழர்” என்ற சொல்லை மறுபரிசீலனை செய்து, அதற்குப் பதிலாக “மலையகத் தமிழர்” என்ற பெயருக்கு அமைச்சரவை அங்கீகாரத்துடனும், நாடாளுமன்ற சட்டத் திருத்தங்களுடனும் சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

வாய்வழியில் “மலையகத் தமிழர்” என்று கூறிக்கொண்டு, சட்டத்தில் “இந்திய வம்சாவழி தமிழர்” என்று தொடர்வது உண்மையான அங்கீகாரமல்ல. உண்மையான அங்கீகாரம் சட்டத்திலும், அரச நிர்வாகத்திலும், கொள்கை ஆவணங்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.

மலையக தமிழர் என்ற அடையாளம் எந்த அரசியல் கட்சிக்கோ, தொழிற்சங்கத்திற்கோ, நிறுவனத்திற்கோ,  சொந்தமானதல்ல. அது ஒரு மக்களின் வரலாறு, போராட்டம், கலாசாரம், அரசியல் அனுபவம் மற்றும் சமூக இருப்பின் வெளிப்பாடாகும்.

எனவே, மலையகத் தமிழர் இன அடையாளத்தை பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் அரசியல் கட்சிகளிடம் மட்டும் விடப்பட முடியாது. அது சிவில் சமூகத்தின், ஆய்வாளர்களின், இளைஞர்களின், கல்வியாளர்களின், ஊடகங்களின் மற்றும் ஒவ்வொரு மலையகத் தமிழரின் கூட்டுப் பொறுப்பாகும்.

இன்று நமது இன அடையாளத்தை பாதுகாக்கத் தவறினால், நாளை நமது வரலாற்றையும், அரசியல் இருப்பையும், உரிமைகளையும் நிரூபிக்க வேண்டிய நிலை உருவாகலாம்.

எனவே, “மலையகத் தமிழர்” என்ற தேசிய இன அடையாளத்திற்கு அரசியல் அங்கீகாரம் மட்டுமல்ல; சட்டரீதியான, நிர்வாக ரீதியான மற்றும் அரசியலமைப்பு ரீதியான அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். அதுவே வரலாற்று நீதிக்கும், சமூக நீதிக்கும், ஜனநாயக சமத்துவத்திற்கும் ஏற்ற சரியான பாதையாகும்.

ஜீவரட்னம் சுரேஷ்